திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகே உள்ள பிரகாஷ்நகர் விரிவாக்கம் சுதானா அவென்யூ பகுதியில் வசித்து வரும் கண்ணன். இவர் திருவெறும்பூர் பகுதியில் திருமண மண்டபம் மற்றும் காம்ப்ளக்ஸ் வைத்துள்ளார். இவரது கட்டிட பணிக்கு டைல்ஸ் வாங்குவதற்கு காட்டூர் கணேஷ்நகர் பகுதியில் டைல்ஸ் கடை நடத்தி வரும் பாஜக மாவட்ட மகளிர் அணி தலைவி ரேகா என்பவரை அணுகியுள்ளார்.
ரேகா குஜராத் கம்பெனியில் மலிவு விலையில் டைல்ஸ் வாங்கி தருவதாக கூறி கண்ணனிடம் கடந்த 2022-ம் ஆண்டு ரூ. 2 லட்சத்து 20ஆயிரம் பணம் வாங்கியுள்ளார். ஆனால் ரேகா, சொன்னபடி டைல்ஸ் வாங்கி தரவில்லை. ரேகாவிடம் இதுகுறித்து கண்ணன் கேட்க, ரேகா வாங்கிய பணத்திற்கு செக் கொடுத்துள்ளார். கண்ணன் செக்கை வங்கியில் டெபாசிட் செய்தபோது பணமின்றி செக் ரிட்டன் ஆகிவிட்டது.
இதனை தொடர்ந்து கண்ணன் பாஜக மாவட்ட மகளிர் அணி தலைவி ரேகா மீது காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதையடுத்து காவல்துறை, விசாரணையில் விரைவில் பணத்தை கொடுப்பதாக ரேகா கூறியுள்ளார். இந்நிலையில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாகியும் பணத்தை தராததால் நேற்றுமுன்தினம் திருச்சி காவல் கண்காணிப்பாளர் மற்றும் திருவெறும்பூர் துணை கண்காணிப்பாளர் ஆகியோரிடம் தனி தனியாக புகார் செய்தார். அதன் அடிப்படையில் நேற்று திருவெறும்பூர் காவல்துறை ரேகாவை அழைத்து விசாரணை செய்ததோடு இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து ரேகாவை கைது செய்தனர்.