தீபாவளி சிறு சேமிப்பு திட்டத்தில் ரூ.1.5 கோடி ஆட்டைய போட்ட பாஜக நிர்வாகி..!

தீபாவளி சிறு சேமிப்பு திட்டத்தில் ரூ.1.5 கோடி மோசடி செய்த பாஜக நிர்வாகி கைது செய்யப்பட்டார். திருப்பூர், ஊத்துக்குளி ரோடு, பாளையக்காடு பகுதியை சேர்ந்த திருப்பூர் வடக்கு தொழில் பிரிவு மண்டல பாஜக செயலாளரான பிரதாப் சிங். திருப்பூர் மண்ணரை சத்யா காலனி பகுதியை சேர்ந்த பாஜக வடக்கு தொழில் பிரிவு மண்டல செயலாளர் செந்தில்குமார் என்பவர் நடத்திய சிட் பண்ட் நிறுவனத்தில் தீபாவளி சிறு சேமிப்பு திட்டத்தில் சேர்ந்தார். பிரதாப் சிங் 53 வாரங்களுக்கு வாரம் ரூ.200 வீதம் மொத்தம் ரூ.10,600 செலுத்தினார்.

மேலும் பிரதாப் சிங்கின் உறவினர்களும் தீபாவளி சிறு சேமிப்பில் சேர்ந்து ரூ.2.39 லட்சம் செலுத்தியுள்ளனர். இதேபோல் 100-க்கும் மேற்பட்டோர் இந்த தீபாவளி சிறு சேமிப்பு திட்டத்தில் சேர்ந்து ரூ.1.5 கோடி வரை பணம் செலுத்தியதாக தெரிகிறது.

இந்நிலையில், இந்த பணத்தை திரும்ப கேட்டபோது செந்தில்குமார் இழுத்தடித்து அலுவலகத்தை காலி செய்துவிட்டு தலைமறைவானார். இது குறித்து பிரதாப் சிங் மாநகர மத்திய குற்றப்பிரிவில் புகார் அளித்தார். காவல்துறை வழக்குப்பதிவு செய்து செந்தில்குமாரை நேற்று முன்தினம் கைது செய்தனர். இந்த தீபாவளி சிறு சேமிப்பு திட்டமோசடி சம்பவத்தில் வேறு நபர்களுக்கு தொடர்பு உள்ளதா என விசாரணை நடைபெற்று வருகின்றது.

ரூ. 25 லட்சம் மோசடி செய்த பாஜக நிர்வாகி நண்பனுடன் கைது

செங்கல்பட்டு மாவட்டம், சின்ன செங்குன்றம் பகுதியை சேர்ந்த சுகுமாரன். இவரது நண்பரும் காஞ்சிபுரம் மாவட்ட பாஜக ஓபிசி பொது செயலாளருமான ஜானகிராமன் என்பவர் ஸ்ரீ பெரும்புதூர் அருகே காட்ராம்பாக்கம் பகுதியில் வசித்து வருகிறார். சில மாதங்களுக்கு முன்பு திருவள்ளூர் மாவட்டம், மதுரவாயல் அடுத்த வானகரம், பிள்ளையார் கோயில் பகுதியை சேர்ந்த வானகரத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வரும் வினோத்குமாருக்கு சுகுமாரனும், ஜானகிராமனும் அறிமுகமாகினர்.

அப்போது, இருங்காட்டுகோட்டை பகுதியில் இயங்கி வரும் பல்வேறு தனியார் தொழிற்சாலைகளில் இருந்து குறைந்த விலைக்கு பழைய இரும்பு பொருட்கள் வாங்கி தருவதாக வினோத்குமாருக்கு சுகுமாரும் ஜானகிராமனும் ஆசைவார்த்தை கூறியுள்ளனர். இதை வினோத்குமார் நம்பி, இதையடுத்து நடைபெற்ற பேச்சுவார்த்தைக்கு பிறகு, வினோத்குமாரிடம் இருந்து ரூ.25 லட்சம் இருவரும் வாங்கியுள்ளனர். ஆனால் அவர்கள் கூறியபடி, தனியார் தொழிற்சாலைகளில் இருந்து குறைந்த விலைக்கு பழைய இரும்பு பொருட்கள் வினோத்குமாருக்கு வாங்கி கொடுக்கவில்லை.

ஆகையால் வினோத்குமார் கொடுத்த பணத்தை, திரும்ப கேட்டுள்ளார். ஆனால் இருவரும் வாங்கிய பணத்தை திருப்பி கொடுக்காமல் ஏமாற்றினர். இதுகுறித்து மதுரவாயல் காவல் நிலையத்தில் வினோத்குமார் புகார் கொடுத்துள்ளார். மதுரவாயல் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, மோசடியில் ஈடுபட்ட பாஜக நிர்வாகி ஜானகிராமன், அவரது நண்பர் சுகுமார் ஆகியோரை கைது செய்து, இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.