நாட்டின் பதினெட்டாவது மக்களவைத் தேர்தல் 2024 -ஆம் தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி அதாவது 7 கட்டமாக நடைபெற்று ஜூன் 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இந்நிலையில் உத்தரபிரதேசத்தில் உள்ள 80 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு ஏப்ரல் – 19, ஏப்ரல் -26, மே -4, மே -13, மே -20, மே -25, ஜூன் -1 தேதி முதல் ஏழு கட்டங்களிள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. உத்தரபிரதேச மாநிலத்தில் வரவிருக்கும் நாடளுமன்ற மக்களவைத் தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி தனித்து போட்டியிடப் போவதாக அக்கட்சியின் தலைவர் மாயாவதி குமாரி அறிவித்திருந்தார். இந்நிலையில், உத்தரப் பிரதேசத்தில் உள்ள 80 தொகுதிகளில் 11 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை பகுஜன் சமாஜ் கட்சி அறிவித்துள்ளது.
அதன்படி, வாரணாசி மக்களவைத் தொகுதியில் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக பகுஜன் சமாஜ் கட்சி அதர் ஜமால் லாரியை களமிறக்கியுள்ளது. மேலும் புடான் தொகுதியில் முஸ்லிம் கானை நிறுத்தியுள்ளது. பரேலியில் சோட்டலால் கங்வார் கட்சி வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். உதய் ராஜ் வர்மா சுல்தான்பூர் தொகுதியிலும், கிராந்தி பாண்டே ஃபரூகாபாத் தொகுதியிலும் போட்டியிடுகிறார்கள். மெயின்புரி தொகுதியில் சிவபிரசாத் யாதவுக்கு சீட்டு வழங்கப்பட்டுள்ளது.
பண்டா மக்களவைத் தொகுதியில் பிஎஸ்பி வேட்பாளராக மயங்க் திவேதியும், துமரியகஞ்ச் தொகுதியில் குவாஜா ஷம்சுதினும் போட்டியிடுகின்றனர். பல்லியா தொகுதியில் லல்லன் சிங் யாதவ் மற்றும் ஜான்பூரில் வேட்பாளராக ஸ்ரீகலா சிங் ஆகியோர் களமிறங்கியுள்ளனர்.
அதே வேளையில், காஜிபூரில் சமாஜ்வாதி கட்சியின் அப்சல் அன்சாரியை எதிர்த்து உமேஷ் குமார் போட்டியிடுகிறார். முஸ்லிம் சமூகத்தின் ஆதரவை எதிர்பார்த்து பிஎஸ்பி வாரணாசியில் லாரியை களமிறக்கியுள்ளதாக பலர் கூறுகின்றனர். இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய அதர் ஜமால் லாரி, “பகுஜன் சமாஜ் கட்சிக்கும் பாஜகவுக்கும் இடையேதான் போட்டி இருக்கும்” என தெரிவித்தார்.