Prakash Raj:: ‘நோட்டா’ கட்சியான பாஜகவுடன் ஏன் கூட்டணி..? அதிமுகவுக்கு தன்மானமே இல்லை..?

அதிமுகவுக்கு தன்மானம், கொள்கை என்பது எல்லாம் எதுவுமே கிடையாதா? நோட்டாவுக்கு கிடைக்கக் கூடிய ஓட்டுகள் கூட இல்லாத பாஜகவுடன் ஏன் கூட்டணி? என பிரகாஷ் ராஜ் சரமாரியாக கேள்வி எழுப்பி உள்ளார். சன் நியூஸ் டிவி சேனலில் அதன் தலைமை செய்தியாளர் மு.குணசேகரன் அவர்கள் பிரகாஷ் ராஜூடன் நடத்திய உரையாடலில், காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவு ரத்து செய்யப்பட்டதால் அமைதி திரும்பிவிட்டது என்றனர். இப்போது வலியைத் தரக் கூடிய ஒரு பயங்கரவாத தாக்குதல் நடந்துள்ளது.

பாதுகாப்பில் எப்படி குறைபாடுகள் ஏற்பட்டன என யாரும் கேள்வி கேட்பது இல்லை? இப்பதான் ஜம்மு காஷ்மீரில் இயல்பு நிலை திரும்பி சுற்றுலா பயணிகள் செல்லலாம் என்கிற நிலைமை இருக்கும் போது.. 2,000 பேர் கூடுகிற ஒரு சுற்றுலா தலத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகளே இல்லை என்கிற போது கேள்வி எழுகிறது.. இவ்வளவு ராணுவம் இருக்கிறது.. உளவுத்துறை தோல்வி அடைந்துவிட்டதா? இந்தியாவும் பாகிஸ்தானும் காஷ்மீருக்கு உரிமை கொண்டாடுகின்றன.. ஆனால் காஷ்மீர் மக்களுக்கு என்னதான் வேண்டும் என யாரும் கேட்கவில்லையே.. பயங்கரவாதத்தையே ஒழித்துவிட்டோம் என்கிறீர்கள்.. பொதுமக்களையே பாதுகாக்க முடியவில்லையா? ஆகையால் மத்திய அரசுதான் பதில் சொல்ல வேண்டும்.

காஷ்மீரில் அமைதி திரும்பிவிடக் கூடாது என்பதில் அரசியல்வாதிகளும் ஜிஹாதிகளும் உறுதியாக இருக்கின்றனர். இதுதான் வரலாறு. சரி.. அப்படியான சூழ்நிலையில் இந்திய ராணுவம் என்ன நடவடிக்கை எடுத்தது? நாம் அரசியலைப் பேச வேண்டாம்.. அரசாங்கம் என்ன செய்கிறது என்பது பற்றி பேச வேண்டும். உள்துறை அமைச்சரின் பாதுகாப்புக்கு 80 பேர் போகத் தெரிகிறது இல்லையா.. அந்த பாதுகாப்பு ஏன் மக்களுக்கு இல்லை? பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.. சரி.. அதை தடுக்க நீங்கள் என்ன செய்தீர்கள்? புல்வாமா தாக்குதலுக்குப் பிறகும் கூட நாம் யோசிக்காமல் இருக்கிறோமே..

ஆகையால்,  அரசாங்கத்தில் இருப்பவர்களை நோக்கி நாம் கேள்வி எழுப்புகிறோம். லோக்சபா தேர்தலில் பிரதமர் மோடி வெற்றி பெறவில்லை. சந்திரபாபு நாயுடு, நிதிஷ்குமார் போன்றோரை சேர்த்துதான் பிரதமர் மோடி மெஜாரிட்டியை நிரூபிக்க முடிகிறது.பிரதமர் மோடி வீழ்ந்து கொண்டு இருக்கிறார் என்பதைத்தான் தேர்தல் முடிவுகள் தெரிவித்தன. பாஜக வென்றதாக சொல்லப்படும் 240 தொகுதிகளிலும் கூட சில தொகுதிகளில் ஊழல் செய்துதான் வென்றுள்ளது. பாஜகவால் 200 தொகுதிகளில் வெற்றி பெற முடிந்திருந்தாலே பெரிய விஷயம்தான். கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்கிற கதையாகத்தான் இருக்கிறது. அயோத்தி, ராமர்கோவில் கட்டிய இடத்திலேயே கூட பாஜகவால் ஜெயிக்க முடியலையே..

தொகுதி மறுசீரமைப்பு தேவை இல்லை என யாரும் சொல்லவில்லை. தமிழ்நாடும் சொல்லவில்லை. தொகுதி மறுசீரமைப்பால் எங்களது பிரதிநிதித்துவம் பாதிக்கப்படுகிறது என்பதுதான் தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களின் குரலாக இருக்கிறது. ஆனால் தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக விவாதம் தொடங்குவதற்கு முன்னரே புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை தொகுதி மறுசீரமைப்புக்கு ஏற்ப கட்டி வைத்தால் எப்படி சொல்வது.. தொகுதி மறுசீரமைப்பால் பெரும்பான்மைக்கு வட இந்தியாவில் பெறும் தொகுதிகள் எண்ணிக்கையே போதும் என்கிற நிலைமை உருவாகும்.

மன்மோகன்சிங் ஆட்சிக் காலத்தைவிட அதிகமாக நிதி தருகிறேன்; இங்கே அழுகிறார்கள் என பிரதமர் மோடி பேசுகிறார். மன்மோகன் சிங் காலத்து விலைவாசியா இப்போது இருக்கிறது? நீங்கள் யார் கொடுப்பதற்கு? அது மக்களின் பணம்.. மக்களுக்கு என்ன தேவை என்பதை உணர்ந்து கொடுப்பதற்குதான் பிரதமர் பதவி. அதைவிட்டுவிட்டு நான் கொடுத்தேன்.. நான் கொடுத்தேன் என பேசுவது எப்படி சரியாகும்?

பாஜக, எந்த முஸ்லிம்களை மிக கடுமையாக எதிர்க்கிறதோ அதே முஸ்லிம்களுக்காகவே வஃபு சட்டம் கொண்டு வந்ததாக பாஜக சொல்வதை எப்படி நம்புவது? 300 ஆண்டுகளுக்கு முந்தைய சொத்துகளுக்கு எங்கே போய் ஆவணங்களைத் தேடுவது? அதற்கான பத்திரங்கள் இருக்கின்றனவா? திருப்பதி தேவஸ்தான நிர்வாகத்தில் முஸ்லிம்கள் அனுமதிக்கப்படுவார்களா? மடங்களின் சொத்துகளில் அரசாங்கம் தலையிடுமா? இன்றைக்கு முஸ்லிம்களின் சொத்துகள்; நாளைக்கு கிறிஸ்தவர்களின் சொத்துகள் என்றுதான் வருவார்கள்.

அதிமுக ஒரு மாநிலக் கட்சிதானே.. பாஜக என்ன செய்கிறது என தெரியும்தானே..நாட்டை, வரலாற்றை, மொழியை என்ன செய்கிறது பாஜக என தெரியும்தானே.. இதை எல்லாம் மிதிக்கனும் என நினைக்கிற பாஜகவுடன் எப்படி கூட்டணி சேர முடியும்? தொகுதி மறுசீரமைப்பால் தமிழகத்துக்கான பிரதிநிதித்துவம் குறையப் போகுதே.. இப்பவும் பாஜகவுடனா சேரப் போகிறது அதிமுக?

பாஜக, உன் தோளில் கை போடுகிறது எனில் உன்னை அமுக்கப் போகிறது என்றுதான் அர்த்தம். காசு, பணம், அதிகாரம் தேவை எனில் பாஜகவுடன் கூட்டணிக்கு போகலாம்.. ஆனால் என் நாட்டை விற்றுப் போக நான் அனுமதிக்கமாட்டேன். என் நாட்டை கொள்ளையடிக்கிறது பாஜக தமிழ்நாட்டு நலனுக்கான திமுக கூட்டணி கட்சிகளை இணைத்துக் கொள்வதில் எந்த தவறுமே இல்லை.

ஆனால் அதிமுக யாருடன் கூட்டணி வைத்துள்ளது? தமிழ்நாட்டு கட்சியுடனா வைத்துள்ளது? உங்களை கொள்ளையடிக்கிறவர்களிடம் கூட்டணி வைத்துக் கொள்வதை எப்படி ஏற்க முடியும்? கூட்டணி வைப்பது பிரச்சனை அல்ல.. யாருடன் கூட்டணி என்பதுதான் பிரச்சனையே. நீ யாருடன் வேண்டுமானாலும் கூட்டணி சேர்ந்து கொள்.. ஆனால் நான் என் நாட்டை விற்கவிடமாட்டேன்.. நீ என் வேலையை செய்ய விட வேண்டும். என் தமிழ்நாட்டை, என் தென்னிந்தியாவை அசிங்கப்படுத்த விடமாட்டேன்.

அதிமுக- பாஜக கூட்டணியை எதிர்க்கிறோம் என்பதைவிட எதிர்த்துதான் ஆக வேண்டும். என் வீட்டிலேயே கொள்ளையடிக்கிற பாஜகவை எதிர்க்காமல் நான் வேறு யாரை எதிர்க்க வேண்டும்? பாஜக என்பது ஒரு அரசியல் கட்சியாக மட்டும் பார்க்கவில்லை.. பாஜகவுக்கு பின்னால் இருக்கிற இந்துத்துவா- மனுவாதி ஒரே நாடு ஒரே தேர்தல்- சித்தாந்தத்தைப் பார்க்க வேண்டும். காந்தியை கும்பிடுகிற பாஜகவுக்குள் கோட்சேக்குள் இருக்கின்றனர் என்பதை மறக்க கூடாது.

நோட்டாவுக்கு கிடைக்கக் கூடிய ஓட்டுகள் கூட இல்லாத பாஜகவுடன் ஏன் கூட்டணி? அதிமுகவுக்கு தன்மானம், கொள்கை என்பது எல்லாம் எதுவுமே கிடையாதா? மாநிலக் கட்சிதானே அதிமுக.. பாஜகவுடன் ஏன் கூட்டணி வைக்கனும்? என்ன காரணத்துக்காக பாஜகவுடன் அதிமுக கூட்டணி அமைக்க வேண்டும்? 2026 தேர்தலின் மைய பிரச்சனையே இதுதான் 2026 தமிழக சட்டசபை தேர்தலானது என் நாட்டுக்கு துரோகம் செய்கிறவங்களுக்கு ஓட்டா? என் மாநிலத்தின் உரிமைகளுக்காக குரல் கொடுக்கிறவங்களுக்கு ஓட்டா? என்பதாகத்தான் இருக்கப் போகிறது. தமிழ்நாட்டுக்கு விரோதிகள் யார்? தமிழ்நாட்டுக்கு நன்மை செய்தவர்கள் யார்? என்பதுதான் 2026 தேர்தலின் முக்கியமான மையமான பிரச்சனையாக இருக்கும். என பிரகாஷ் ராஜ் தெரிவித்தார்.

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்: பா.ஜ.க.வும் அண்ணாமலையும் ஜீரோ..! நாடாளுமன்ற தேர்தலில் பாஜக முதலில் நோட்டாவை வெல்லட்டும்..!

வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலையொட்டி அ.தி.மு.க.,வில் தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்காக உருவாக்கப்பட்டுள்ள குழு, மண்டலம…மண்டலம் வாரியாக சென்று பொதுமக்களிடம் கருத்துகளை கேட்கிறது. அதன்படி, கள்ளக்குறிச்சி அடுத்த மாடூர் புறவழிச்சாலையில் உள்ள ஏ.என்.பி., திருமண மண்டபத்தில் கருத்து கேட்பு கூட்டம் இன்று நடைபெறுகின்றது.

இந்த கூட்டத்திற்கு, முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், உதயக்குமார், வளர்மதி, நத்தம் விஸ்வநாதன், செம்மலை, பொன்னையன், ஜெயராமன், சண்முகம், மணியன், மற்றும் வைகைச்செல்வன் பங்கேற்கின்றனர். அப்போது செய்தியாளார்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், இலவு காத்த கிளியாக இருக்க வேண்டிய அவசியம் அதிமுகவினரும் இல்லை. தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக முதலில் நோட்டாவை வெல்லட்டும் அதாவது பா.ஜ.க.வும் அண்ணாமலையும் ஜீரோ என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம் செய்துள்ளார்.