நாகப்பட்டினம் மாவட்டத்தில் திமுக, நாம் தமிழர் கட்சியினர் தவெகவில் இணைந்தனர்..!

நாகப்பட்டினம் பகுதியைச் சார்ந்த நூற்றுக்கணக்கான நாம் தமிழர் கட்சியின் தொண்டர்கள் அக்கட்சியில் இருந்து விலகி தவெகவில் இணைந்துள்ளனர். நாகப்பட்டினத்தில் மாற்றுக் கட்சிகளைச் சேர்ந்தோர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணையும் நிகழ்வு தமிழக வெற்றிக் கழக நாகப்பட்டினம் மாவட்ட செயலாளர் சுகுமாறன் தலைமையில் நடைபெற்றது.

இதில் நாகப்பட்டினம் ஒன்றியத்துக்கு உட்பட்ட வடக்கு பொய்கை நல்லூர், தெற்கு பொய்கை நல்லூர், செல்லூர் ஆகிய ஊர்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான நாம் தமிழர் கட்சியினர் மற்றும் செல்லூரைச் சேர்ந்த திமுக-வை சேர்ந்தவர்கள் பலரும் அக்கட்சிகளில் இருந்து விலகி, தங்களை தமிழக வெற்றிக் கழகத்தில் இணைத்துக் கொண்டனர்.

தமிழக வெற்றிக் கழகத்தில் புதிதாக இணைந்த முக்கிய பொறுப்பாளர்கள் மற்றும் இளைஞர்களை வரவேற்ற, நாகப்பட்டினம் மாவட்டச் செயலாளர் சுகுமாறன், அவர்களுக்கு சால்வை அணிவித்து அக்கட்சியில் இணைத்துக் கொண்டார். இந்நிகழ்ச்சியில் தமிழக வெற்றிக்கழக மாவட்ட பொறுப்பாளர்கள், நகர செயலாளர், வழக்கறிஞர் அணியினர், மகளிரணியினர் உள்ளிட்ட பலரும் திரளாக கலந்து கொண்டனர்.

கூட்டுக் குடிநீர் திட்ட ராட்சத குடிநீர் குழாயில் ஓட்டை போட்டு தண்ணீர் திருடிய எடையத்தங்குடி ஜி.எஸ்.பிள்ளை தன்னாட்சி பொறியியல் கல்லூரி..!

கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்ட ராட்சத குடிநீர் குழாயில் ஓட்டை போட்டு, அதிலிருந்து குழாய் இணைத்து முறைகேடாக தண்ணீர் திருடிய தனியார் கல்லூரிக்கு ரூ.2 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. நாகப்பட்டினத்தில் இயங்கி வரும் எடையத்தங்குடி ஜி.எஸ்.பிள்ளை தன்னாட்சி பொறியியல் கல்லூரி இயங்கி வருகின்றது.

இந்த கல்லூரி அருகில் கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்ட ராட்சத குடிநீர் குழாய் அமைந்துள்ளது. ராட்சத குடிநீர் குழாயில் ஓட்டை போட்டு, அதிலிருந்து குழாய் இணைத்து முறைகேடாக தண்ணீரை எடையத்தங்குடி ஜி.எஸ்.பிள்ளை தன்னாட்சி பொறியியல் கல்லூரி திருடுவதாக தகவல் தெரிய வந்தது. அந்த தகவலின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வில் எடையத்தங்குடி ஜி.எஸ்.பிள்ளை தன்னாட்சி பொறியியல் கல்லூரி தண்ணீர் திருடியது கண்டுபிடிக்கப்பட்டது.
இத்தனை தொடர்ந்து இந்த எடையத்தங்குடி ஜி.எஸ்.பிள்ளை தன்னாட்சி பொறியியல் கல்லூரிக்கு ரூ.2 கோடி அபராதம் விதிக்க மாவட்ட நிர்வாகம் முடிவு எடுத்துள்ளது.

விசிக கொடிக் கம்பத்தை அகற்றல்..! ஆளூர் ஷா நவாஸ் தலைமையில் சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம் ..!

நாகப்பட்டினம் அருகேயுள்ள காமேஸ்வரம் என்னுமிடத்தில் அண்மையில் விசிக கொடியேற்று விழா நடைபெற்றது. அனுமதியின்றி ஏற்றப்பட்டதென வருவாய்த்துறை அதிகாரி வட்டாட்சியர் காவல்துறை அதிகாரிகளின் துணையோடு அக்கொடிக்கம்பத்தை அகற்றியுள்ளனர்.

அங்கே பிற கட்சிக் கொடிக்கம்பங்கள் எப்படி நிறுவப்பட்டுள்ளனவோ அப்படியே விசிக கொடிக்கம்பமும் நிறுவப்பட்டது. ஆனால், ஒரு சில அதிகாரிகள் வன்மத்துடன் விசிக கொடிக்கம்பத்தை மட்டும் அப்புறப்படுத்தியுள்ளனர்.

இச்செயலைக் கண்டித்து இன்று சிறுத்தைகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சட்டமன்ற உறுப்பினரும் கட்சியின் துணை பொதுச்செயலாளருமான ஆளூர் ஷா நவாஸ் தலைமையில் நூற்றுக்கணக்கான தோழர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.

அண்ணன் ஆட்சியில் அண்ணா, கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா சமாதிகளை கோடாரி, கடப்பாரை.. கொண்டு இடிக்கிறோம்..!

நாகப்பட்டினம் மாவட்டத்தில், வேதாரண்யத்தில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சி பொதுக் கூட்டத்தில் சீமான் பேசுகையில், உலகின் 2-வது பெரிய கடற்கரையில் ஆளுக்கு இரண்டரை ஏக்கரில் படுத்துகிடக்கிறார்களே.. அவர்கள் என்ன செய்தார்கள்? நாம் தமிழர் ஆட்சி அமையும்.. எப்படி கர்நாடகா அரசு, தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தும் போது அமைதி காக்கிறதோ அதேபோல, மெரினா கடற்கரையில் உள்ள சமாதிகளை கடப்பாரை கொண்டு இடிப்பார்கள்.. அங்கே இருக்கும் எலும்புகளை எடுத்துக் கொண்டு போய் எங்கேயெனும் வைத்துக் கொள்.. அண்ணன் அரசு அமைதியாக இருக்கும்.

கர்நாடகாவில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உருவப் படத்துக்கு காலணி மாலை அணிவிக்கிறார்கள். அவர் இறந்தது போல தூக்கி செல்கிறார்கள். எனக்கு துடிக்கிறது. வலிக்கிறது.. ஏன் எனில் அவர் ‘தமிழ்நாட்டு’ முதலமைச்சர் என்பதால். ஆனால் திமுகவில் யாரும் உயிருடன் இல்லாததால், மானம் ரோஷம் இல்லை என்பதால் வாய் திறக்கவில்லை. அதற்கும் நாம் தமிழர்தான் பேச வேண்டியதிருக்கிறது.

தமிழ்நாடு முதலமைச்சர் சொல்லட்டும்..: கர்நாடகா மக்களின் போராட்டத்தை தடுக்க முடியாது என்கிறார் அம்மாநில முதலமைச்சர் சித்தராமையா. அதேபோல, தமிழ்நாட்டு மக்களின் உணர்வெழுச்சியை தடுக்க முடியாது என தமிழ்நாட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சொல்லிவிட்டு அமைதியாக இருக்கட்டும். நாங்க பார்த்து கொள்கிறோம். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பட அவமதிப்பு என்பது 8 கோடி தமிழ் மக்களுக்கு அவமானம். ஒரு பேரினத்துக்கு ஏற்பட்ட பெருத்த அவமானம்.

எனக்கு நீ ஒருமுறை அதிகாரத்தைக் கொடு. சிங்களவன் ஒரு மீனவனைத் தொட முடியுமா? அப்படி ஒரு மீனவனைத் தொட்டுவிட்டால் நான் முதலமைச்சர் பதவியில் இருந்து ராஜினாமா செய்துவிடுவேன். எங்கே என் மீனவனை தொடச் சொல்லுங்க பார்ப்போம். இந்திய ராணுவம் ஒரு மீனவரைக் கூட காப்பாற்றவில்லையே.. என் ராணுவம் என்னைக் காப்பாற்றி இருந்தால் நான் ஏன் நெய்தல் படை கட்ட வேண்டும்? என் மீனவர்கள் மீதான தாக்குதல்கள், ஈழத் தமிழர் படுகொலை காட்சிகள் என் ஆழ்மனதில் இருக்கின்றன.

இதற்கு ஒருநாள் பதில் சொல்லாமல் ஒரு சிங்களவனும் தப்பிக்க முடியாது. நான் வன்மம் கொண்ட மிக மோசமான மிருகம். நாம் தமிழர் கட்டும் நெய்தல் படையில் கையெறி குண்டுகளும் துப்பாக்கிகளும் கொடுத்து அனுப்புவோம். சிங்களவன் தொட்டல் அடித்து தாக்கு என்போம். வெறுமனே கடலுக்குள் சாவதற்கு பதில் சிங்களவனை கொன்றுவிட்டு செத்துப் போகலாம் என சீமான் தெரிவித்தார்.

பணம் இரட்டிப்பாக தருவதாக கூறி ரூ.8.14 கோடி மோசடி..!

நாகப்பட்டினம் மற்றும் காரைக்கால் பகுதியைச் சேர்ந்த 9 பேர் சேர்ந்து ‘ரியல் ட்ரீம்ஸ் குழுமம்’ என்ற பெயரில் 2013-ம் ஆண்டு நிதி நிறுவனம் தொடங்கியுள்ளனர். இதன்மூலம், நாகப்பட்டினம் மாவட்டத்தில் மீனவ கிராமங்களில் உள்ள மீனவர்களிடம் நிதி வைப்பு சேமிப்பு திட்டங்களை நடத்துவதாகவும், 5 ஆண்டுகள் மாதந்தோறும் ரூ.500 அல்லது ரூ.1,000 கட்டினால், 5 ஆண்டுகள் முடிவில் இரட்டிப்புத் தொகை கிடைக்கும் என கூறி, 2013-ம் ஆண்டு முதல் 2017-ம் ஆண்டு வரை ரூ.8.14 கோடி வசூல் செய்துள்ளனர்.

அதன்பின், 5 ஆண்டுகள் முடிந்து இரட்டிப்பு தொகையை கேட்டபோது, அவர்கள் உரிய பதிலளிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால், நாகப்பட்டினம் அக்கரைப்பேட்டை திடீர் குப்பத்தைச் சேர்ந்த எம்.தட்சிணாமூர்த்தி உள்ளிட்ட 13 பேர், பண மோசடி செய்த நிதி நிறுவனத்தைச் சேர்ந்த நிர்வாக இயக்குநர் மற்றும் இயக்குநர்கள் 9 பேர் மீது சட்ட நடவடிக்கை எடுத்து, தங்களுடைய முதலீட்டு பணம் ரூ.8.14 கோடியை மீட்டுத்தர வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இதையடுத்து, பண மோசடியில் ஈடுபட்ட 9 பேரையும் கைது செய்து, உரிய விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யும்படி உயர் நீதிமன்றம் காவல்துறைக்கு உத்தரவிட்டது. உயர் நீதிமன்ற உத்தரவின்பேரில், நாகப்பட்டினம் வெளிப்பாளையம் போலீஸார் ஆகஸ்ட் 8-ம் தேதி வழக்குப் பதிவு செய்தனர்.

தொடர்ந்து, ரியல் ட்ரீம்ஸ் குழுமத்தின் நிர்வாக இயக்குநர் புதுச்சேரியைச் சேர்ந்த முகமது அலி, இயக்குநர்கள் நாகப்பட்டினத்தைச் சேர்ந்த பி.ஆறுமுகம். ஆர்.கோவிந்தராஜ், தமிழ்வாணன் மற்றும் காரைக்காலைச் சேர்ந்த கா.பிரபாகரன், வி.பழனிவேல், பி.கலியபெருமாள், சி.கனகராஜ், ஜி.ராஜாமூர்த்தி ஆகிய 9 பேரை காவல்துறை தேடி வருகின்றனர்.