ஜம்மு – காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் முதலாவது அமைச்சரவைக் கூட்டத்தில் மத்திய பாஜக அரசு வாக்குறுதி அளித்தபடி மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என அதிரடியான தீர்மானம் நிறைவேற்றப்படும் என முதலமைச்சராக பொறுப்பேற்க இருக்கும் ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டுக் கட்சியின் துணைத் தலைவர் ஒமர் அப்துல்லா அறிவித்துள்ளார்.
ஜம்மு – காஷ்மீர் யூனியன் பிரதேச சட்டசபை தேர்தல் களத்தில் 370 – வது பிரிவு ரத்து, மாநில அந்தஸ்து உள்ளிட்டவை அதிகம் பேசப்பட்டன. 370-வது பிரிவு ரத்து செய்யப்பட்டதை பாஜக நியாயப்படுத்தியது. ஆனால் தேசிய மாநாட்டு கட்சி- காங்கிரஸ் கூட்டணியோ மீண்டும் 370-வது பிரிவைக் கொண்டு வர நடவடிக்கை எடுப்போம் என தெரிவித்தனர்.
ஆனால் மாநில அந்தஸ்து வழங்கும் விவகாரத்தில் அனைத்து கட்சிகளும் ஆதரவு தெரிவித்திருந்தன. பாஜகவோ முதலில் தேர்தல் முடிந்து ஆட்சி அமையட்டும்; மாநில அந்தஸ்து வழங்கப்படும் என்றது. இந்தியா கூட்டணி கட்சிகளோ மாநில அந்தஸ்து வழங்க மறுத்தால் போராடுவோம் என்றது. தற்போது தேர்தலில் இந்தியா கூட்டணியின் தேசிய மாநாட்டுக் கட்சி- காங்கிரஸ் வென்று ஆட்சி அமைக்க உள்ளது. இந்த கூட்டணியின் முதலமைச்சராக தேசிய மாநாட்டுக் கட்சித் துணைத் தலைவர் ஒமர் அப்துல்லா பொறுப்பேற்க உள்ளார்.
தேசிய மாநாட்டுக் கட்சி, காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கூட்டம் அடுத்தடுது கூட்டப்பட்டு சட்டசபை குழு தலைவர் தேர்வு செய்யப்படுவர். பின்னர் ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோருவர். இந்நிலையில் ஶ்ரீநகரில் இன்று செய்தியாளர்களை சந்தித்த ஒமர் அப்துல்லா, அரசாங்கத்தை அமைத்த உடன் கூடுகிற முதல் அமைச்சரவைக் கூட்டத்திலேயே ஜம்மு காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்க மத்திய அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்படும். இந்த தீர்மானத்துடனேயே பிரதமர் மோடியை டெல்லியில் நேரில் சந்திப்பேன் என்றார்.
மேலும் ஒமர் அப்துல்லா பேசுகையில், டெல்லி யூனியன் பிரதேசத்தையும் ஜம்மு காஷ்மீரையும் ஒப்பீடு செய்யக் கூடாது. டெல்லி எப்போதும் ஒரு மாநிலமாக இருந்ததே இல்லை. டெல்லிக்கு யாரும் மாநில அந்தஸ்து தருவோம் என வாக்குறுதியும் தரவும் இல்லை. ஆனால் 2019-க்கு முன்னர் வரை ஜம்மு காஷ்மீர் ஒரு மாநிலமாகவே இருந்தது. ஜம்மு காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்குவோம் என பிரதமர் நரேந்திர மோடி எங்களுக்கு உறுதி அளித்துள்ளார்.
அதேபோல மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட மத்திய அமைச்சர்களும் ஜம்மு காஷ்மீர் மக்களுக்கு வாக்களித்துள்ளனர். தொகுதி மறுசீரமைப்பு மற்றும் தேர்தல் முடிவடைந்த உடன் ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்கப்படும் என்பதுதான் மத்திய அரசின் வாக்குறுதி. அதனை நிறைவேற்றுவார்கள் என எதிர்பார்க்கிறோம்.
மத்திய பாஜக அரசுடன் நல்லுறவுடன் இருக்கவே விரும்புகிறோம். மத்திய பாஜக அரசுடன் மோதல் போக்கை கடைபிடிக்காத முதலமைச்சராகவே இருக்க வேண்டும். அதற்காக பாஜகவின் கொள்கைகளை ஏற்றுக் கொண்டுவிட்டோம் என்பது அர்த்தம் இல்லை. எப்போதும் நாங்கள் பாஜகவை எதிர்ப்போம். ஜம்மு காஷ்மீர் மக்களின் நன்மைக்காக மத்திய பாஜக அரசுடன் நல்லுறவை விரும்புகிறோம்.
மத்திய அரசுடன் மோதுவதற்காக மக்கள் எங்களுக்கு வாக்களிக்கவில்லை. மக்களுக்கு தேவை வேலைவாய்ப்பு, வளர்ச்சித் திட்டங்கள், மாநில அந்தஸ்து தகுதி, மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை தேவைகள்தான். எங்கள் கூட்டணியில் மக்கள் ஜனநாயகக் கட்சி இணைவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெறவில்லை. சூழ்நிலை உருவானால் அமர்ந்து பேசி முடிவெடுப்போம் என ஒமர் அப்துல்லா தெரிவித்தார்.