தூய்மை பணியாளரின் மகள் குரூப் 2 தேர்வில் வெற்றி பெற்று, திருத்துறைப்பூண்டி நகராட்சி ஆணையராக நேற்று பொறுப்பேற்று திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ அவர்களிடம் வாழ்த்து பெற்றார். திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி சத்தியமூர்த்தியை சேர்ந்த சேகர் மன்னார்குடி நகராட்சி தூய்மை பணியாளராக இருந்து இறந்து விட்டார். இவரது மனைவி செல்வி. வீட்டு வேலை செய்து வந்துள்ளார்.
இவர்களது ஒரே மகள் துர்கா. மன்னார்குடியில் உள்ள தூய வளனார் அரசு உதவி பெறும் பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் +2 வரை படித்தார். பின்னர் மன்னார்குடி ராஜகோபாலசாமி அரசு கலைக்கல்லூரியில் இளங்கலை இயற்பியல் பட்டம் பெற்றார். கடந்த 2015-ல் மதுராந்தகம் பகுதியை சேர்ந்த நிர்மல்குமார் என்பவரை துர்கா திருமணம் செய்துள்ளார். நிர்மல்குமார், வட்டாட்சியர் அலுவலகத்தில் தற்காலிக ஊழியராக உள்ளார்.
துர்கா கடந்த 2023-ல் குரூப் 2 தேர்வு எழுதி முதல்நிலை மற்றும் முதன்மை தேர்வுகளில் வெற்றி பெற்றார். இதைத்தொடர்ந்து, இந்த ஆண்டு நடைபெற்ற நேர்முகத் தேர்வில் 30க்கு 30 மதிப்பெண்கள் எடுத்து நகராட்சி ஆணையராக தேர்ச்சி பெற்றார். காவல்துறையின் முக்கிய பிரிவான எஸ்பிசிஐடியில் அதிகாரியாக பணியாற்றும் வாய்ப்பு வந்தும் தந்தை பணிபுரிந்த நகராட்சி துறையிலேயே பணிபுரிந்து அவருக்கு பெயரும், புகழும் சேர்க்க வேண்டும் என்பதே அவரது லட்சியமாக இருந்தது. இதனால் நகராட்சி ஆணையர் பதவிக்கு விருப்பம் தெரிவித்து அதை தேர்வு செய்தார்.
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி நகராட்சி ஆணையராக துர்காவுக்கு பணி நியமன ஆணையை சமீபத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். இதையடுத்து திருத்துறைப்பூண்டி நகராட்சி ஆணையராக துர்கா நேற்று பொறுப்பேற்றார். அவருக்கு, நகர்மன்ற தலைவர் கவிதாபாண்டியன் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர். இதையடுத்து, திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ அவர்களின் அலுவலகத்தில் துர்கா நேற்று சந்தித்து புத்தகம் வழங்கி வாழ்த்து பெற்றார்.