தன் உயிரையும் பொருட்படுத்தாமல் சாதுரியமாக பேருந்தை ஓட்டி பயணிகளை காப்பாற்றிய ஓட்டுநர்..!

கோவை – திருப்பூர் இடையே நாள்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வேலைக்கும், மாணவ, மாணவிகள் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு சென்று வருகின்றனர். இதற்காக நூற்றுக்கணக்கான அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கடந்த அக்டோபர் 1-ஆம் தேதி திருப்பூரில் இருந்து கோவை நோக்கி சென்ற ASM என்ற தனியார் பேருந்து புறப்பட்டு சென்றது. அந்த ASM என்ற தனியார் பேருந்தை தொண்டாமுத்தூரை சேர்ந்த ஓட்டுநர் சுரேந்திரன் என்பவர் அன்று ஓட்டி வந்தார். அந்த பேருந்தில் 60-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்து வந்தனர்.

திருப்பூர் அவிநாசி தேசிய நெடுந்சாலையில் பேருந்து செல்லும் போது, காற்று பலமாக வீசியதால் பேருந்தின் முன்பக்க கண்ணாடி சுக்குநூறாக உடைந்தது ஓட்டுநர் சுரேந்திரன் மீது கண்ணாடி துண்டுகள் தலை, கை மற்றும் கால் போன்ற பகுதிகளில் பட்டு காயம் ஏற்பட்டது.

இதனை சுதாரித்துக்கொண்ட சுரேந்திரன், பயணிகளின் உயிரை பாதுகாக்க தனக்கு ஏற்பட்ட படுகாயங்களை பொருட்படுத்தாமல் பேருந்தை லாவகமாக இயக்கி சாலையோரம் நிறுத்தி, பயணிகளின் உயிரை காப்பாற்றினார். இந்த சம்பவத்தை கண்ட பேருந்தில் பயணம் செய்த பயணிகள் அவரை பாராட்டி, அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

இந்நிலையில் பேருந்தில் பொருத்தப்பட்டு உள்ள கண்காணிப்பு கேமராவில் கண்ணாடிகள் நொறுங்கி விழும் காட்சிகளும், ஓட்டுநர் சுரேந்திரன் ரத்தக்காயத்துடன் பேருந்தை இயக்கி, பயணிகளை காப்பாற்றிய காட்சிகளும் பதிவாகி இருந்தது. தற்போது அந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பல மாநில காவல்துறையால் தேடப்பட்ட கொள்ளையன் கைது

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அருகிலுள்ள தேர்பட்டியில் பாண்டியன் என்பவர் வீடு கட்ட வேண்டி பணம் எட்டு லட்சத்தை தனது பொலிரோ காரில் எடுத்து கொண்டு புதிய வீட்டின் முன்பு நிறுத்தி இருந்தார். ஆனால் பாண்டியன் புதிய வீட்டிற்கு சென்று காருக்கு திருப்பிய போது காரில் இருந்த ரூபாய் எட்டு லட்சம் காணமால் போனது கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே பாண்டியன் அருகிலுள்ள அலங்கியம் காவல்  நிலையத்திற்கு சென்று நடந்ததை கூறி புகார் அளித்தார்.

அந்த புகாரின் அடிப்படையில் திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாமிநாதன் அவர்களின் உத்தரவின்பேரில் தாரபுரம் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் கலையரசன் மேற்பார்வையில், திருப்பூர் மாவட்டம்  தாராபுரம் காவல் ஆய்வாளர் மணிகண்டன் அவர்களின் தலைமையில்  காவல் உதவி ஆய்வாளர் முத்துக்குமார், சுந்தரராஜ்  காவலர்கள் கார்த்திக், கலைச்செல்வன்ம், பாலசுப்பிரமணியன், ராமர், ராமலிங்கம் ஆகியோர்  அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளியை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

முதல் கட்டமாக CCTV கேமரா ஆய்வு செய்தனர் அப்போது பழங் குற்றவாளியின் புகைபடம் ஒப்பிடு செய்த போது கர்நாடக மாநிலம், ஷிமோகா மாவட்டம், மல்லகுப்பாத்தை சேர்ந்த முத்தப்பா மகன் சின்னராஜ் என்பது தெரியவந்தது. இவன் கர்நாடகா, மத்திய பிரதேசம் மற்றும் மும்பை போன்ற பகுதிகளில் கைவரிசை செய்தது தெரியவந்தது. சின்னராஜியை கைது செய்த தனிப்படை அவனுடன் இருந்த பணத்தை கைப்பற்றி சிறையில் அடைத்தது.

உலக சாதனைக்காக கும்மியாட்டம்

திருப்பூர் உலக சாதனைக்காக உடுமலைப்பேட்டையில் பவளக்கொடி கும்மியாட்டம் நிகழ்ச்சி நடந்தது. தமிழகத்தின் நாட்டுப்புறக்கலைகளில் ஒன்றான கும்மியாட்டக்கலை தற்போது கோவில் திருவிழாக்கள், பாரம்பரிய ஆர்வலர்களால் மீட்டெடுக்கப்பட்டு மீண்டும் மறுமலர்ச்சி பெற்று வருகிறது. உடலுக்கு ஆரோக்கியத்தை அள்ளித்தந்து நோய் நொடி இல்லாத நீண்ட வாழ்வை அளிக்கக்கூடிய ஆடல் பாடலுடன் கூடிய பழமை வாய்ந்த இந்த கும்மியாட்ட கலை மேற்கு மண்டல மாவட்ட மக்களால் பரவலாக பாடப்பட்டு வந்த நிலையில் நாளடைவில் மெல்ல மெல்ல மக்களிடம் இருந்து மறையத்தொடங்கியது.

இந்நிலையில் அழிந்து வரும் கும்மியாட்டக் கலையை மீட்டெடுக்கும் முயற்சியாக கொங்கு மண்டலத்தில் நாமக்கல், கரூர், திண்டுக்கல், திருப்பூர், கோயம்புத்தூர், ஈரோடு, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் பவளக்கொடி கும்மியாட்ட கலை பயிற்சியை அனுபவம் வாய்ந்த ஆசிரியர்கள் அளித்து வருகின்றனர். உலக சாதனை நிகழ்வு அந்த வகையில் சக்தி கலைக்குழுவின் பொன்விழா அரங்கேற்ற நிகழ்வாக 2 ஆயிரம் பேர் கலந்து கொண்ட பவளக்கொடி கும்மியாட்டம் நேற்று இரவு உடுமலைப்பேட்டை அடுத்த மலையாண்டிகவுண்டனூர் கிராமத்தில் மின்னொளியில் நடைபெற்றது.

எஸ்.பி. பொன்ராமு ஆய்வு உலக சாதனை நிகழ்வு, 50-வது பொன்விழா அரங்கேற்றம், கும்மியாட்ட நூல் வெளியீட்டு விழா என முப்பெரும் விழாவாக ஆசிரியர் மகாலிங்கம் தலைமையில் நடைபெற்றது. இதை கொங்கு நாடு தேசிய மக்கள் கட்சி நிறுவனர் ஈஸ்வரன் எம்.எல்.ஏ., மடத்துக்குளம் முன்னாள் எம்.எல்.ஏ. ஜெயராமகிருஷ்ணன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். அதைத்தொடர்ந்து உலக சாதனை அதிகாரிகள் முன்னிலையில் கும்மியாட்டம் தொடங்கியது.

இதில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் உற்சாகத்தோடு கலந்துகொண்டு நாட்டுப்புறப்பாடல், பாரதியார், பாரதிதாசன் பாடல்கள், திரைப்பட தத்துவ பாடல்களை பாடியவாறு நான்கு மணி நேரம் மனதை கொள்ளை கொள்ளும் வகையில் ஆட்டத்தை மெய்சிலிர்க்கும் வகையில் அரங்கேற்றினார்கள். இந்த ஆட்டத்தை சுற்றுவட்டாரத்தை சேர்ந்த திரளான பொதுமக்கள் பார்த்து ரசித்ததோடு தங்களது செல்போனில் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்தும் சமூக வலைதளங்களில் வெளியிட்டும் மகிழ்ந்தனர்.