துட்டுவாங்கி தானே ஓட்டு போட்ட…! அதிமுக கவுன்சிலர் அடாவடி..!

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் நகராட்சி 7-வது வார்டின் கவுன்சிலராக அதிமுகவை சேர்ந்த சுரேஷ் பதவி வகித்து வருகிறார். இந்த வார்டுக்குட்பட்ட பகுதி பிலால் நகர் உள்ளது. அப்பகுதியில் சிமெண்ட் சாலையுடன் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இதில் சாலையின் இருபுறமும் கழிவுநீர் கால்வாய் அமைத்து தர அப்பகுதியினர் நேற்று அங்கு வந்த கவுன்சிலர் சுரேஷிடம் கோரிக்கை விடுத்தனர்.

அதற்கு பதிலளித்த அதிமுக கவுன்சிலர் சுரேஷ், அப்பகுதியினருக்கு உரிய பதில் தராமல் பொதுமக்களிடம் துட்டுவாங்கினு தானே ஓட்டு போட்ட என அலட்சியமாக பதில் அளித்துள்ளார். இதுகுறித்த வீடியோ தற்போது ஆம்பூர் மற்றும் சுற்றுபகுதியில் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

கல்லூரி வாகனங்களில் வசூல் வேட்டை… போலி போக்குவரத்து அதிகாரி கைது!

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி பகுதியில் இயங்கி வரும் இஸ்லாமியா பெண்கள் கலைக் கல்லூரிக்கு, வக்கணம்பட்டி என்ற பகுதியில் இருந்து மாணவிகளை ஏற்றிகொண்டு வாணியம்பாடி நோக்கி வந்த கல்லூரி பேருந்தை 2 பேர் வழியில் நிறுத்தினர். பின்னர் அவர்களில் ஒருவர் தன்னை வட்டார போக்குவரத்து அலுவலர் என்றும், வாகனங்களை சோதனை செய்ய சிறப்பு அலுவலராக அரசு நியமித்துள்ளதாகவும் கூறி பேருந்தை சோதனை செய்துள்ளனர். பின்னர் அந்த பேருந்துக்கு அபராதம் விதிப்பதாக கூறியுள்ளனர்.

இதனை தொடர்ந்து பேருந்து ஓட்டுநர் கல்லூரி நிர்வாகத்திற்கு அவர்களுடைய புகைப்படத்துடன் தகவல் அனுப்பியுள்ளார். இந்த தகவலை கல்லூரி நிர்வாகம் வாணியம்பாடி வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அங்கிருந்து சென்ற 2 பேரும் வாணியம்பாடி அருகே உள்ள சின்னகல்லுபள்ளி பகுதியில் இயங்கி வரும் தனியார் பள்ளிக்கு சென்று, வட்டார போக்குவரத்து அலுவலர் என்று அறிமுகம் செய்து கொண்டு, பள்ளி பேருந்துகளை சோதனை செய்ய வேண்டும் என்று கூறி பள்ளி வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த பஸ்களை சோதனை மேற்கொண்டனர். இதுபற்றி தகவலறிந்த வாணியம்பாடி வட்டார போக்குவரத்து அலுவலர் ராமகிருஷ்ணன், மோட்டார் வாகன ஆய்வாளர் வெங்கட்ராகவன் ஆகியோர் அந்த பள்ளிக்கு சென்றனர்.

அதற்குள் ஒருவர் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டார். வட்டார போக்குவரத்து அலுவலர் என்று கூறிய நபரிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர் மதுரை பகுதியை சேர்ந்த செல்வகுமார் என்பதும், வட்டார போக்குவரத்து அலுவலர் என்ற பெயரில் கல்வி நிறுவனங்களின் வாகனங்களை சோதனை செய்ததும் தெரிய வந்தது. அதைத்தொடர்ந்து வாணியம்பாடி தாலுகா காவல்துறை வரவழைத்து அவரை ஒப்படைத்தனர். மேலும் தப்பி ஓடியவர் குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆட்டு வியாபாரியை காரில் கடத்தி ரூ.25 லட்சம் பறிப்பு..!

திருப்பத்தூர் மாவட்டம் புலியனேரி பகுதியை சேர்ந்த சரவணன் ஒரு ஆட்டு வியாபாரி. இவர் வடமாநிலங்களில் ஆடுகளை மொத்தமாக வாங்கி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடைபெறும் பல்வேறு வாரச்சந்தைகள் மற்றும் இறைச்சி கடைகளில் சில்லறை விலைக்கு விற்பனை செய்து வருகிறார். நேற்று முன்தினம் இவர் காவேரிப்பட்டணம் சுற்று வட்டார பகுதிகளில் ஆடுகளை விற்பனை செய்த வகையில் 13 பேரிடம் ரூ.25 லட்சத்தை வசூல் செய்தார்.

பின்னர், அங்கிருந்து பேருந்து மூலம் ஓசூர் அருகே பத்தலப்பள்ளிக்கு வந்து, அங்கு ஆடுகளை விற்றவர்களிடம் பணத்தை வசூலிப்பதற்காக நடந்து சென்றார். அப்போது, அந்த பகுதியில் நம்பர் பிளேட் இல்லாத காரில் வந்த மர்ம நபர்கள் 4 பேர் சரவணனிடம் காவல்துறை எனக்கூறி கஞ்சா விற்பனை செய்கிறாயா? உன்னை விசாரிக்க வேண்டும்? என மிரட்டி கடத்தி சென்றனர். பின்னர் அந்த நபர்கள் சரவணன் பையில் வைத்திருந்த ரூ.25 லட்சத்தை பறித்து கொண்டு உத்தனப்பள்ளி அருகேயுள்ள அகரம் என்ற கிராமத்தில் இறக்கி விட்டு தப்பி சென்றுவிட்டனர்.

அப்போதுதான், தன்னை காவல்துறை அழைத்து செல்லவில்லை, மர்ம நபர்கள் பணத்தை பறிக்க கடத்தி சென்றுள்ளனர் என தெரிய வந்தது. இந்த பணம் பறிப்பு சம்பவம் குறித்து அவர் ஓசூர் அட்கோ காவல் நிலையத்தில் புகார் செய்தார்.அதன் பேரில் காவல் துறை அப்பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றி மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

மருத்துவம் படிக்காமல் சிகிச்சை அளித்த போலி மருத்துவர் கைது

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அருகே மிட்டாளம் பகுதியில் மருத்துவ படிப்பு படிக்காமல் பொதுமக்களுக்கு ஒருவர் சிகிச்சை அளிப்பதாக ஆம்பூர் அரசு மருத்துவமனை மருத்துவர் உமராபாத் காவல்துறைக்கு புகார் அளித்தார். அதன்பேரில் அப்பகுதியில் காவல்துறை விசாரணை நடத்தினர்.

அப்போது மருத்துவ படிப்பு முடிக்காமல் மருத்துவகம் வைத்து பொதுமக்களுக்கு மருத்துவம் பார்த்த வாணியம்பாடியை அடுத்த பள்ளிப்பட்டு பகுதியை சேர்ந்த நாகராஜ் என்பவரை காவல்துறை கைது செய்தனர். மேலும் மருத்துவகத்தை பூட்டி சீல் வைத்து காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.

உதவி ஆய்வாளருக்கு கொலை மிரட்டல்.. பாஜக நிர்வாகி வினோத் கைது..

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அருகே உள்ள வெள்ளக்குட்டை என்ற பகுதியைச் சேர்ந்த வினோத் என்பவர் திருப்பத்தூர் மாவட்ட பா.ஜ.க இளைஞரணி துணை அமைப்பாளராக உள்ளார். இவர் கடந்த 2014 -ம் ஆண்டு ஆலங்காயம் பகுதியில் சிலருடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். இது தொடர்பாக வினோத் மீது அடிதடி வழக்கு பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பான வழக்கு விசாரணை திருப்பத்தூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கு நேற்று திருப்பத்தூர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கின் விசாரணைக்காக நீதிமன்றத்தில் வினோத் ஆஜர் ஆனார். இந்த வழக்கில் விசாரணை அதிகாரியான ஆலங்காயம் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றிய ஜெகநாதனும் ஆஜராகி வாக்குமூலம் அளித்துள்ளார். அப்போது எனக்கு எதிராகவே சாட்சி சொல்ல வருகிறாயா? என நீதிமன்ற வளாகத்தில் வைத்தே உதவி ஆய்வாளர் ஜெகநாதனுக்கு வினோத் கொலை மிரட்டல் விடுத்ததாக சொல்லப்படுகிறது.

இது தொடர்பாக உதவி ஆய்வாளர் ஜெகநாதன் திருப்பத்தூர் நகர காவல் நிலையத்தில் வினோத் மீது புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல்துறை பாஜக நிர்வாகி வினோத்தை தேடிவந்த நிலையில், ஆலயங்காயத்தில் வைத்து வினோத்தை காவல்துறை கைது செய்துள்ளனர்.