உதயநிதி ஸ்டாலின்: பெண்கள் தான் தாலி கட்டிக்கொள்ள வேண்டும் என்று அவசியமில்லை..!

“திருமண பதற்றத்தில் ஒரு மணமகன் தனக்கு தானே தாலி கட்டிக் கொள்ள முயற்சி செய்தார். இது தவறு கிடையாது. பெண்கள் தான் தாலி கட்டிக்கொள்ள வேண்டும் என்று அவசியமில்லை.” பெரியார் சொன்னதுதான் என உதயநிதி ஸ்டாலின் பேசினார்.

சென்னை ஆர்.கே.நகரில் சென்னை வடக்கு மாவட்ட திமுக சார்பில், ‘எளியோர் எழுச்சி நாள்’ என்ற பெயரில் இன்று 48 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. இந்த திருமணத்தை தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமை தாங்கி 48 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைத்தார். இந்த திருமண விழாவில், 48 ஜோடிகளுக்கு தலா ரூ. 25 ஆயிரம் மொய், கட்டில், மெத்தை, பீரோ மற்றும் மிக்சி என 30 வகையான பொருட்கள் அடங்கிய சீர் வரிசைகளும் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலகலப்பாகப் பேசினார். உதயநிதி பேசுகையில், “இன்று அண்ணன் ஆர்டி சேகர் ஏற்பாட்டில் 48 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைக்கப்பட்டுள்ளது. எனக்கு 48 வயதாகிவிட்டது என மீண்டும் மீண்டும் நினைவுபடுத்திக் கொண்டே இருக்க வேண்டுமென்று அவசியமில்லை.

இங்கு நடைபெற்றுள்ள சில திருமணங்கள் காதல் திருமணங்கள் என்று சொன்னார்கள். இதற்காகவே ஆர்டி சேகர் அண்ணனை பாராட்ட வேண்டும். சரி காதல் பண்ணிட்டீங்க.. திருமணத்தை சிறப்பாக நடத்தி வைத்துவிட்டோம். இனிமேல் தான் நீங்கள் அதிகமாக காதலிக்க வேண்டும். ஒவ்வொருவரும் விட்டுக்கொடுத்து, நண்பர்களாக இருந்து வாழ வேண்டும். ஒரு மணமகன் 5 முடிச்சுகளைப் போட்டார்.

“என்னப்பா கட்டிக்கிட்டே இருக்க..?” எனக் கேட்டேன். ஸ்ட்ராங்கா கட்டடணும்ணே என்றார். திருமண பதற்றத்திலா, அவசரத்திலா எனத் தெரியவில்லை. இங்கு ஒரு சில மணமகன்கள் தனக்குத்தானே மாலை போட்டுக் கொண்டார்கள். ஒரு மணமகன் தனக்கு தானே தாலி கட்டிக் கொள்ள முயற்சி செய்தார். இது தவறு கிடையாது. பெண்கள் தான் தாலி கட்டிக்கொள்ள வேண்டும் என்று அவசியமில்லை. பெரியார் சொன்னதுதான்.

ஒரு ஜோடிக்கு திருமணம் செய்து வைக்கும்போது மணப்பெண் கண் கலங்கினார். “இப்பதானம்மா கல்யாணம் ஆச்சு.. ஏன்மா கண் கலங்குற என்று கேட்டேன். ” உடனே கலாநிதி வீராசாமி, “இதுதான் இந்தப் பெண் அழும் கடைசி நாள்.. இனி அந்தப் பையன் தான் அழப்போகிறார்” என்று நகைச்சுவையாகச் சொன்னார்” என கலகலப்பாக உதயநிதி ஸ்டாலின் பேசினார்.

பூசாரி கையால் தாலி கட்டிக்கொண்ட திருநங்கைகள்..!

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கூவாகம் கிராமத்தில் பிரசித்திப்பெற்ற பெற்ற கூத்தாண்டவர் கோயில் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் நடக்கும் சித்திரை பெருவிழாவில் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் மற்றும் திருநங்கைகள் கலந்து கொள்வது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு சித்திரை பெருவிழா கடந்த 9-ம் தேதி அங்குள்ள மாரியம்மன் கோயில் அருகே சாகை வார்த்தல் நிகழ்ச்சியுடன் துவங்கியது.

இதனைத் தொடர்ந்து ஏப்ரல் 10-ம் தேதி முதல் மகா பாரதம் சொற்பொழிவு மற்றும் சுவாமி வீதி உலாவும் நடைபெற்றது. ஏப்ரல் 12-ம் தேதி பீஷ்மர் பிறப்பு மற்றும், 14-ம் தேதி பாஞ்சாலி பிறப்பும், ஏப்ரல் 17-ம் தேதி கூத்தாண்டவர் பிறப்பு மற்றும் சுவாமி வீதியுலாவும், 21 -ம் தேதி கூத்தாண்டவருக்கு பாலாயம் நடைபெற்றது. நேற்று 22-ம் தேதி மாலை கம்பம் நிறுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை தொடர்ந்து சித்திரை பெருவிழாவின் முக்கிய விழாவான திருநங்கைகள் தாலி கட்டிக் கொள்ளும் நிகழ்ச்சி இன்று மாலை சுவாமி திருக்கண் திறத்தல் நிகழ்ச்சிக்கு பிறகு நடைபெற்றது.

இதில் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து வரும் ஆயிரக்கணக்கான திருநங்கைகள் கோயில் பூசாரி கையினால் தாலி கட்டிக் கொண்டு கோயில் அருகில் கற்பூரம் ஏற்றி கும்மி அடித்து விடிய விடிய ஆடிப்பாடி மகிழ்வார்கள்.