ரூ.50,000.. முதலமைச்சர் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம்..

மகளிர் முன்னேற்றத்திற்காகவும், பெண் குழந்தைகளின் பாதுகாப்புக்காகவும், முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் தலைமையிலான தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளையும், அறிவிப்புகளையும் முன்னெடுத்து வருகிறது.. அதில் ஒன்றுதான், பெண்கள் பாதுகாப்புத் திட்டமாகும். அதாவது, அரசின் நேரடி முதலீட்டின் மூலம், பெண் குழந்தைகளின் உரிமைகளை பாதுகாத்தல் மற்றும் அதிகாரம் அளித்தல் மூலம் பாலின பாகுபாட்டை தடுப்பதே இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

குறிப்பாக, பெண் குழந்தைகள் பள்ளியில் சேர்க்கை மற்றும் குறைந்தபட்சம் இடைநிலை வரையிலான கல்வியை உறுதி செய்தல், பெண் குழந்தைகளை 18 வயதுக்கு பிறகே திருமணம் செய்ய ஊக்குவித்தல், 2 பெண் குழந்தைகளுடன் குடும்பக் கட்டுப்பாடு நெறிமுறையை பின்பற்ற பெற்றோர்களை ஊக்குவித்தல், பெண் குழந்தைகளின் உரிமைகளைப் பாதுகாத்தல் மற்றும் பெண் குழந்தைகளுக்கு சமூக மற்றும் நிதி அதிகாரம் அளித்தல் போன்றவற்றை அடிப்படையாக கொண்டது.

ஒரு குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை மட்டுமே பிறந்திருந்தால், அந்த பெண் குழந்தையின் பெயரில் நிலையான வைப்புத்தொகையான ரூ.50,000/- தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்தில் முதலீடு செய்யப்படுகிறது. இந்த வைப்புத்தொகை ரசீது நகல் பெண் குழந்தையின் குடும்பத்திற்கு வழங்கப்படுகிறது.

ஒருவேளை, ஒரு குடும்பத்தில் 2 பெண் குழந்தைகள் மட்டுமே பிறந்திருந்தால், அந்த பெண் குழந்தைகளின் பெயரில் நிலையான வைப்புத்தொகையான தலா ரூ.25,000/- தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்தில் முதலீடு செய்யப்படுகிறது. இந்த வைப்புத்தொகை ரசீது நகல் பெண் குழந்தைகளின் குடும்பத்திற்கு வழங்கப்படுகிறது.

இந்த வைப்புத்தொகை ஒவ்வொரு 5 வருடங்களுக்கு ஒருமுறை புதுப்பிக்கப்பட்டு, 18 வயது நிறைவடைந்தவுடன், வட்டியுடன் சேர்த்து முதிர்வுத்தொகை பெண் குழந்தைக்கு வழங்கப்படும். ஆனால், இந்த பலனை பெற வேண்டுமானால், பெண் குழந்தைகள் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வெழுத வேண்டும். அப்போதுதான், முதிர்வு தொகையானது, பெண் குழந்தைகளின் உயர்கல்வியைத்தொடர உதவும். பெண் குழந்தைகளுக்கு கல்விச் செலவுகளை ஈடுகட்ட 6-வது ஆண்டு முதல் ஆண்டு ஊக்கத் தொகையாக ரூ.1800/- வழங்கப்படுகிறது.

கருணாநிதியின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம் குறித்து ஆகஸ்ட் 2023 முதல் 2024 ஜூன் வரை சிறப்பு முகாம்கள் ஒவ்வொரு மாதம் 2-வது செவ்வாய்க்கிழமைகளில் நடக்கவுள்ளது. இந்நிலையில், இதுகுறித்து மேலும் சில தகவல்கள் வெளியாகி உள்ளன.. அதாவது, சம்பந்தப்பட்ட குழந்தைகள், 10-ம் வகுப்பு தேர்வு எழுதி, 18 வயது வரை திருமணம் புரியாமல் இருக்கும்போது, அவர்களுக்கு வட்டியுடன் கூடிய வைப்பு தொகை, “முதிர்வு தொகை”யாக வழங்கப்படுகிறது.

கடந்த 2001 முதல் 2005ம் ஆண்டு வரை பதிவு செய்த, 1.40 லட்சம் பேருக்கு 350.28 கோடி ரூபாய் வழங்கப்பட்டு உள்ளது. மேலும், 1.50 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள், 18 வயது நிறைவடைந்தும், முதிர்வு தொகை பெற விண்ணப்பிக்காமல் இருக்கிறார்களாம். அவர்களுக்காக, கருணாநிதி நுாற்றாண்டு விழாவையொட்டி, அனைத்து மாவட்ட சமூக நலத்துறை அலுவலகங்களிலும், மாதந்தோறும் இரண்டாம் செவ்வாய்க்கிழமை, பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்ட சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது. தகுதியான அனைவரும், ஒரு மாதத்துக்குள் முதிர்வு தொகையை பெற்றுக்கொள்ளலாம் என்று தமிழக அரசு மீண்டும் அறிவித்துள்ளது. விண்ணப்பிக்க தகுதிகள்:

1. பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தின் கீழ் பயனடைய குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72,000/- க்குள் இருக்க வேண்டும்.

2. இரண்டாவது பெண் குழந்தை பிறந்து

3. வருடங்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

3. தமிழ்நாட்டில் பத்து வருடங்களுக்கு மேல் வசிப்பவராக இருக்க வேண்டும். 4

. பெற்றோரில் ஒருவர் 40 வயதுக்குள் குடும்ப கட்டுப்பாடு செய்து இருக்க வேண்டும்.

* இணையதளத்தின் வாயிலாக இ-சேவை மையத்தில் விண்ணப்பிக்க வேண்டும். கூடுதல் தகவல்களுக்கு: https://www.tnsocialwelfare.tn.gov.in/en/specilisationschild-welfare/chief-ministers-girl-child-protection-scheme