கோவில்களில் திருப்பணிகளுக்கு அரசு நிதிக்கான வரைவோலைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கல்..!

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்து புதிய உத்வேகத்துடன் இந்து சமய அறநிலையத் துறையானது தனது கட்டுப்பாட்டிலுள்ள திருக்கோயில்களில் திருப்பணிகள் மேற்கொண்டு, குடமுழுக்குகள் நடத்துதல், பக்தர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்துதல், திருக்கோயிலுக்கு சொந்தமான சொத்துக்களை ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்டெடுத்தல் போன்ற பல்வேறு பணிகளை சீரிய முறையில் மேற்கொண்டு வருகிறது. மேலும், சட்டமன்றத்தில் வெளியிடப்பட்ட அறிவிப்புகளையும் தொடர்ந்து நிறைவேற்றி வருகிறது.

மேலும் 2021 – 2022 -ஆம் ஆண்டிற்கான இந்து சமய அறநிலையத்துறை சட்டமன்ற மானியக் கோரிக்கையில், கிராமப்புறத் திருக்கோயில்கள் மற்றும் ஆதிதிராவிடர் / பழங்குடியினர் வசிக்கும் பகுதியிலுள்ள திருக்கோயில்களின் திருப்பணிக்கு வழங்கப்பட்டு வந்த நிதியுதவி தலா ஒரு லட்சத்தை 2 லட்சம் ரூபாயாக உயர்த்தியும், அதன் எண்ணிக்கையை தலா 1,000- லிருந்து 1,250 ஆக உயர்த்தியும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, 2021-2022 மற்றும் 2022-2023 ஆகிய நிதியாண்டுகளில் 2,500 கிராமப்புறத் திருக்கோயில்கள் மற்றும் 2,500 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வசிக்கும் பகுதியிலுள்ள திருக்கோயில்களின் திருப்பணிக்கு தலா 2 இலட்சம் ரூபாய் வீதம் மொத்தம் 100 கோடி ரூபாய்க்கான வரைவோலைகள் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களால் ஏற்கனவே வழங்கப்பட்டது.

இவற்றில் 1,085 கிராமப்புறத் திருக்கோயில்கள், 1,070 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வசிக்கும் பகுதியிலுள்ள திருக்கோயில்கள் என 2,155 திருக்கோயில்களில் திருப்பணிகள் நிறைவு பெற்றுள்ளன. இதர திருக்கோயில்களில் திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்து சமய அறநிலையத்துறையின் நிர்வாக கட்டுப்பாட்டிலுள்ள நிதி வசதி குறைவாக உள்ள ஒரு கால பூஜை கூட செய்திட இயலாத திருக்கோயில்களுக்கு உதவும் வகையில் செயல்படுத்தப்பட்டுள்ள ஒரு கால பூஜைத் திட்டத்தில் ஏற்கனவே வைப்பு நிதியாக ஒவ்வொரு திருக்கோயிலுக்கும் வழங்கப்பட்டிருந்த ஒரு இலட்சம் ரூபாயை 2 லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் மூலம் 17,000 திருக்கோயில்கள் பயன்பெற்று வருவதோடு, முதன் முறையாக அதன் அர்ச்சகர்களுக்கு மாதந்தோறும் ஊக்கத்தொகையாக ரூ.1,000/- வழங்கப்பட்டு வருகிறது. மேலும், 2024-2025 ஆம் நிதியாண்டிற்கு கூடுதலாக 1,000 திருக்கோயில்களுக்கு இத்திட்டம் விரிவுபடுத்தப்படுவதோடு, வைப்பு நிதியை ரூ. 2 லட்சத்திலிருந்து ரூ.2.50 இலட்சமாக உயர்த்தி வழங்கிட அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து, 2023-2024 -ஆம் நிதியாண்டிற்கு தேர்வு செய்யப்பட்டுள்ள 1,250 கிராமப்புறத் திருக்கோயில்கள் மற்றும் 1,250 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வசிக்கும் பகுதியிலுள்ள திருக்கோயில்களில் திருப்பணிகள் மேற்கொள்ள தலா 2 லட்சம் ரூபாய் வீதம், மொத்தம் 50 கோடி ரூபாய்க்கான வரைவோலைகளை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திருக்கோயில்களின் நிர்வாகிகள் மற்றும் பூசாரிகளிடம் வழங்கினார்.

இதன்மூலம் அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோயில்கள் மட்டுமின்றி, கட்டுப்பாட்டில் இல்லாத திருக்கோயில்களிலும் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு புதுப்பொலிவு பெற்றிடும். தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 27.02.2024 அன்று நடைபெற்ற இந்து சமய அறநிலையத்துறை ஆலோசனைக் கூட்டத்தில், கிராமப்புறத் திருக்கோயில்கள் மற்றும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வசிக்கும் பகுதியிலுள்ள திருக்கோயில்களில் திருப்பணிகள் மேற்கொள்ள வழங்கப்பட்டு வரும் தலா 2 இலட்சம் ரூபாய் நிதியுதவியினை ரூ.2.50 லட்சமாக உயர்த்திட தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்..! “ரூ.6.64 லட்சம் கோடி முதலீடு…, 26.90 லட்சம் வேலை வாய்ப்புகள்…”

சென்னை வர்த்தக மையத்தில் “உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2024” நிறைவு விழா திங்கள்கிழமை நடைபெற்றது. இந்த நிறைவு விழாவில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், “திராவிட மாடல் அரசின் இந்த உலக மூதலீட்டாளர் மாநாட்டின் மூலமாக, தமிழ்நாட்டினுடைய 20 ஆண்டுகால வளர்ச்சிக்கு அடித்தளம் அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக உங்கள் எல்லோருக்கும் தமிழ்நாட்டின் முதலமைச்சராக என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

இந்த மாநாட்டை உலகமே வியக்கும் வகையில் நடத்தி, இந்தியாவே வியக்கும் வகையில் முதலீட்டை ஈர்த்து, என் இதயத்தில் நீங்காத இடத்தை பெற்றுவிட்டார் அமைச்சர் டி.ஆர்.பி ராஜா. தொழில்துறை அமைச்சர் பொறுப்பை ஏற்றுக் கொண்ட குறுகிய காலத்திலேயே இமாலயச் சாதனையைச் செய்திருக்கும் அவரைப் பாராட்டுகிறேன். இவ்விழாவில் கண்ணும் கருத்துமாய் இருந்த தலைமை செயலாளர் உள்ளிட்ட அனைத்து அரசு அலுவலர்களுக்கும் எனது பாராட்டையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

நாங்கள் ஆட்சிப் பொறுப்புக்கு வந்த பிறகு, ”முதலீட்டாளர்களின் முதல் முகவரி தமிழ்நாடு” என்ற பெயரில் நடத்தப்பட்ட முதலீட்டாளர்கள் மாநாடுகள் மூலமாக, ஒரு லட்சத்து 90 ஆயிரத்து 803 கோடி ரூபாய்க்கான முதலீடுகள் ஈர்க்கப்பட்டு, 2 லட்சத்து 80 ஆயிரத்து 600 பேருக்கு வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தபட்டது. நான் ஐக்கிய அரபு நாடுகள், சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டு, 17 ஆயிரத்து 371 பேருக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்துகிற வகையில், 7 ஆயிரத்து 441 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடுகளை பெற்றோம். அதோடு, நான் தொடர்ந்து இந்த முதலீடுகள் செயல்வடிவம் பெறுவதை கண்காணிப்பேன்.

அந்த வகையில், ஆட்சிக்கு வந்ததில் இருந்து இதுவரை 44 தொழிற்சாலைகளுக்கு அடிக்கல் நாட்டியிருக்கிறேன். 27 தொழிற்சாலைகள திறந்து வைத்திருக்கிறேன். இது மூலமாக 74 ஆயிரத்து 757 இளைஞர்கள் மற்றும் மகளிர்க்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. அந்த நம்பிக்கையோடு சொல்கிறேன், இந்த மாநாடு தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சியில் பெரும் பாய்ச்சலாக அமையும். தமிழ்நாட்டின் வரலாற்றில் நிச்சயம் இது நினைவு கூரப்படும். இந்த மாநாட்டினுடைய தனித்துவமும் புதுமைத்துவமும் என்றென்றும் பேசப்படும். நான் அதிகாரிகளுக்கு ஆரம்பத்திலேயே ஒரு அன்புக்கட்டளை இட்டேன். உலக அளவில் முதலீட்டுக்கான சிறந்த மாநிலமாக தமிழ்நாட்டை முன்னேற்ற வேண்டும். இந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்துவதற்கான முக்கியக் காரணமாக அதுதான் இருக்க வேண்டும் என்று தெரிவித்தேன்.

எங்களுடைய அயராத உழைப்பு மற்றும் உங்களுடைய பங்களிப்பு காரணமாக, இந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின்போது, இறுதி செய்யப்பட்ட மொத்த முதலீடுகள் முன்னெப்போதும் இல்லாத அளவாக, 6 லட்சத்து 64 ஆயிரத்து 180 கோடி ரூபாய் என்பதை, இந்தியாவே உற்றுநோக்கும் இந்த அவையில் பெரும் மகிழ்ச்சியோடு அறிவிக்கிறேன். இந்த முதலீடுகள் மூலம், நேரடி வேலைவாய்ப்பு என்ற வகையில், 14 லட்சத்து 54 ஆயிரத்து 712 நபர்களுக்கும், மறைமுக வேலைவாய்ப்பு என்ற வகையில், 12 லட்சத்து 35 ஆயிரத்து 945 நபர்களுக்கும் என மொத்தம் 26 லட்சத்து 90 ஆயிரத்து 657 வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.

மேம்பட்ட மின்னணுவியல் உற்பத்தி, பசுமை எரிசக்தி, தோல் அல்லாத காலணிகள், வாகனங்கள் மற்றும் மின் வாகனங்கள், வான்வெளி மற்றும் பாதுகாப்பு, தரவு மையங்கள், திறன்மிகு மையங்கள் தகவல் தொழில்நுட்ப சேவைகள் போன்ற பலதரப்பட்ட துறைகள் மூலமாக இந்த முதலீடுகள் வந்திருக்கிறது. ஈர்க்கப்பட்டுள்ள மொத்த முதலீடுகளில், உற்பத்தித் துறையில், அதாவது தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பாக, 3 லட்சத்து 79 ஆயிரத்து 809 கோடி ரூபாய் முதலீடுகள், எரிசக்தித் துறை சார்பாக 1 லட்சத்து 35 ஆயிரத்து 157 கோடி ரூபாய் முதலீடுகள், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை சார்பாக 62 ஆயிரத்து 939 கோடி ரூபாய் முதலீடுகள், தகவல் தொழில்நுட்பத் துறை மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை சார்பாக 22 ஆயிரத்து 130 கோடி ரூபாய் முதலீடுகள், பெருந்தொழிற்சாலைகளுக்கு வலுவான விற்பனையாளர் தளத்தை வழங்கும் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை சார்பாக 63 ஆயிரத்து 573 கோடி ரூபாய் முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளது.

சீரான, பரவலான வளர்ச்சியை உறுதிப்படுத்துகின்ற விதமாக, இந்த முதலீடுகள் எல்லாம், மாநிலம் முழுவதும் பரவலாக மேற்கொள்ளப்பட இருக்கிறது. 2030-ம் ஆண்டுக்குள், தமிழ்நாடு ஒன் டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதார வளர்ச்சி பெற்ற மாநிலமாகவும், இந்தியப் பொருளாதாரத்துக்கு மிக முக்கியப் பங்களிக்கின்ற மாநிலமாகவும் சிறந்திட, பெரும் இலட்சிய இலக்கை நிர்ணயித்து நாங்கள் செயல்பட்டு வருகிறோம். இந்த இலக்கை விரைவில் அடைந்திட இந்த புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பெரும் துணை நிற்கும் என்பதில் சந்தேகமில்லை.

தொலைநோக்குப் பார்வையோடு தொழில் கொள்கைகளை வடிவமைத்து, அதன்மூலம் தொழில் மற்றும் பொருளாதார மேம்பாட்டை முன்னெடுத்துச் செல்வதுதான் ஒரு மாநிலத்தின் வளர்ச்சிக்கு உகந்த பாதை. 20-க்கும் மேற்பட்ட கொள்கைகளை வெளியிட்டு, அந்தத் துறைகளில் உற்பத்தி மட்டுமில்லாமல், ஏற்றுமதியையும் வெகுவாக பெருக்கிடும் வகையில் முதலீடுகளை கணிசமாக ஈர்த்து, அதன்மூலம் வேலைவாய்ப்புகளை வெகுவாக அதிகரித்து வருகிறோம்.இதன் தொடர் நடவடிக்கையாகத்தான், தொடக்க விழா நாளில், மின்னணு உற்பத்தி மற்றும் செமி கண்டக்டர் கொள்கையை வெளியிட்டேன். இது, இந்தத் துறைகளில் முதலீடுகளை ஈர்த்து, வளர்ச்சியை மேலும் துரிதப்படுத்தும்.

மிகப்பெரும் உட்கட்டமைப்புத் திட்டங்கள் மேற்கொள்ளப்படும் போது, அதற்கான முதலீடுகள் முழுவதையும் அரசே மேற்கொள்வது கடினம். கூட்டு முயற்சியில், தனியார் துறைகளோடு இணைந்து செயல்படுவதுதான் நடைமுறையில் சாத்தியம். அந்த வகையில், அப்படிப்பட்ட முதலீடுகளை ஈர்க்க, தனியார் மற்றும் அரசுத் துறைகளின் சிறந்த நடைமுறைகளை இணைத்து, பொது-தனியார் கூட்டாண்மைக் கொள்கையையும் (Public – Private Partnership Policy) வெளியிட்டிருக்கிறோம். தமிழக அரசின் புத்தொழில் மற்றும் புத்தாக்க ஊக்குவிப்பு நிறுவனமான STARTUP தமிழ்நாடு உருவாக்கியுள்ள டேன்-ஃபண்ட் மூலம் பன்னாட்டுத் துணிகர முதலீட்டு நிறுவனங்களை (Venture Funds) தமிழ்நாட்டின் புத்தொழில் நிறுவனங்களோடு இணைப்பதற்கான தளம், இன்றைக்கு தொடங்கி வைக்கப்பட்டிருக்கிறது.

நமது Startup தமிழ்நாடு, உலகளாவிய புத்தாக்கச் சூழல்களை ஆராயும் தரவு மற்றும் ஆலோசனை நிறுவனமான ஸ்டார்ட்அப் ஜினோம் ஆகியவற்றுக்கிடையே ஒத்துழைப்புக்கான ஒப்பந்தம் மேற்கொள்ளபட்டிருக்கிறது. புத்தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டில் சுமார் 200-க்கும் மேற்பட்ட புத்தொழில் துணிகர முதலீட்டாளர்கள், துறை சார்ந்த நிபுணர்களுடனும் புத்தொழில் நிறுவனங்களுடனும் கலந்துரையாடினார்கள். வாங்குவோர் – விற்பனையாளர் சந்திப்பில் 20-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த ஏற்றுமதியாளர்கள், 500-க்கும் மேற்பட்ட உள்நாட்டு விற்பனையாளர்களுடன் கலந்துரையாடல்கள் மேற்கொண்டனர்.

இதன் மூலமாக, ஏற்கெனவே, ஏற்றுமதியில் முன்னணி மாநிலமாக விளங்குகின்ற தமிழ்நாடு, தன்னுடைய போட்டித்திறனை நன்கு அதிகரிக்க முடியும். வான்வெளி மற்றும் பாதுகாப்புத் துறை நிறுவனங்களுக்கான விற்பனையாளர் – வாங்குவோர் சந்திப்புக்கும் ஏற்பாடு செய்திருந்தோம். வளர்ந்து வரும் இந்தத் துறையை செம்மைப்படுத்தி, இந்தத் துறையை மேலும் வளர்க்க, இப்படியான முயற்சிகள் மிகச் சரியான உத்வேகத்தை எங்களுக்கு கொடுத்திருக்கிறது. இந்த நிகழ்ச்சியின் மற்றொரு சிறப்பம்சமாக, ஒன்பது பங்காளர் நாடுகள் பன்னாட்டு அரங்கம் அமைத்து, இந்த மாநிலத்தின் மீது தங்களின் ஆழமான மற்றும் நீண்டகால ஈடுபாட்டை வெளிப்படுத்தினார்கள். சிறப்பு அரங்குகள் மூலம் தமிழ்நாட்டின் தொழில் வலிமை மற்றும் பன்முகத்தன்மையை பல்வேறு அரசு நிறுவனங்கள் வெளிப்படுத்தியிருக்கிறது.

இந்த மாபெரும் நிகழ்வின்போது நடைபெற்ற வேறு சில முக்கிய நிகழ்வுகளையும் இங்கே குறிப்பிட விரும்புறேன். திட்டங்களுக்கான தொடக்க விழாக்கள் மற்றும் அடிக்கல் நாட்டு விழா, துறை மற்றும் நாடுகளுக்கான அரங்குகள், புத்தொழில்களுக்கான களங்கள், பல்வேறு தலைப்பிலான கலந்துரையாடல்கள், அனுபவங்கள் பகிரும் சந்திப்புகள், கண்கவர் கலை நிகழ்ச்சிகள் – ஆகியவை நடந்திருக்கிறது. இவை எல்லாம் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்திருக்கிறது. இவை எல்லாம் ஆக்கபூர்வமாக நடந்திருக்கிறது.

மாநிலத்தில் உள்ள கல்லூரிகள் மூலமும், “நான் முதல்வன்” திட்டம் மூலமும் மாணவர்கள் அதிக அளவில் இந்த மாநாட்டில் பங்கேற்றுப் பயனடைய வாய்ப்பளிக்கப்பட்டு இருந்தது. நாளைய உலகத்துக்கு இன்றே வழிகாட்டுகிற வகையில், அவர்கள் இந்த பெரும் முதலீட்டாளர்களின் ஆழமான அனுபவங்களை கேட்டறிந்தது, தமக்கான பாதையை வகுத்திட அவர்களுக்கு இது பெரிதும் உதவும். சுமார் இருபதாயிரம் பிரதிநிதிகள் மற்றும் 39 லட்சம் மாணவர்கள், இதில் எல்லாம் கலந்துகொண்டு பயனடைந்துள்ளார்கள்.

Our partner countries, have contributed to make the Global Investors Meet a grand success. I also thank the Diplomatic community for their co-operation.முக்கியமாக, நான் உங்களுக்குத் தெரிவிக்க விரும்புவது, எங்கள் அரசு மீதும், எங்கள் கொள்கைகளின் மீதும் வைத்திருக்கிற உங்கள் நம்பிக்கையை காப்பாற்றுவது, எங்களுடைய தலையாய கடமை. எங்களுடைய அரசை பொருத்தவரைக்கும், நீங்கள் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து போடுவதில் இருந்து உங்களுடைய எல்லா செயல்களுக்கும், அதாவது நீங்கள் உங்கள் தொழிற்சாலையை முழுமையாக கட்டி முடித்து, உற்பத்தியை தொடங்குவதில் இருந்து, அதற்கு பிறகும்கூட, உங்களுக்கு நாங்கள் உறுதுணையாக இருப்போம். உங்களுக்கு தேவையான எல்லா க்ளியரன்சும் – சிங்கிள் விண்டோ சிஸ்டம் மூலமாக, விரைந்து வழங்கப்படும் என்று நான் உறுதிகூற விரும்புறேன்.

அதேபோல இந்த புரிந்துணர்வு ஒப்பந்தங்களை நடைமுறைப்படுத்த, தொழில்துறை அமைச்சர் தலைமையில் ஒரு சிறப்புக்குழு அமைக்கப்படும். அதில் தொழில்துறை அலுவலர்கள், Guidance அலுவலர்கள் ஆகியோர் பங்கேற்பார்கள். ஒவ்வொரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தையும் தொடர்ந்து கண்காணித்து, அதை ஒரு முழுமையான தொழிற்சாலையாக மாற்றுவதற்கு, அவர்கள் எல்லா முயற்சிகளையும் எடுப்பார்கள். உங்களுக்கு எந்த தருணத்திலும், என்னிடம் ஏதாவது தகவல் தெரிவிக்க வேண்டும் என்றால், என்னோட அலுவலகத்தை, நீங்கள் எப்போது வேண்டும் என்றாலும் தொடர்பு கொள்ளலாம். இந்த உறுதிமொழியை நான் தொழிற்துறை அமைச்சர் மற்றும் அரசு அலுவலர்கள் முன்னிலையில் வழங்குகிறேன். அதனால் நீங்கள் நம்பிக்கையுடன் இருக்கலாம்.

நிறைவாக, இந்த மாநாட்டில் முதலீடுகள் மேற்கொண்டுள்ள எல்லோருக்கும் மீண்டும் மீண்டும் என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன். இதுவரை, இங்கே முதலீடு செய்யாதவர்களும், எங்கள் மாநிலத்தில் முதலீடு செய்ய முன்வாருங்கள் என்று அன்போடு அழைக்கிறேன். உங்கள் எல்லோரையும் நான் தொழில்முனைவோராத மட்டுமில்ல, தமிழ்நாட்டின் நல்லெண்ணத் தூதுவர்களாக பார்க்கிறேன். எனவே, தமிழ்நாட்டை உலகுக்கு அறிமுகம் செய்யுங்கள். உலக நாடுகளை தமிழ்நாட்டுக்கு அழைத்து வாருங்கள்” என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார்.

‘சமாதான்’ திட்டம் தொடர்பான சட்டத் திருத்த மசோதாவை அமைச்சர் மூர்த்தி அறிமுகம்

தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் வெளியிட்ட அறிவிப்பில், தமிழக அரசுக்கு வணிகர்கள் செலுத்த வேண்டிய வரி நிலுவைதொடர்பாக 2.11 லட்சம் வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதில் சம்பந்தப்பட்ட வணிகர்கள், நிறுவனங்களின் எண்ணிக்கை 1.42 லட்சம். நிலுவையாக உள்ள தொகை ரூ.25 ஆயிரம் கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. இதனால், வணிகவரி துறையின் பணிச்சுமை அதிகரிப்பதுடன், வணிகர்களும் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகின்றனர். அரசுக்கு வரவேண்டிய வருவாயும் பெருமளவில் நிலுவையாக உள்ளது.

இதில் பெரும்பான்மை வழக்குகள் தமிழ்நாடு வணிகவரி சட்டம், மதிப்புக்கூட்டு வரி சட்டம் ஆகியவற்றின்கீழ் நிலுவையில் உள்ளவை. இந்த சட்டங்கள் மற்றும் பல இதர சட்டங்களையும் உள்ளடக்கி, கடந்த 2017 ஜூலை 1-ம் தேதி முதல் நாடு முழுவதும் ஜிஎஸ்டி சட்டம் அறிமுகம் செய்யப்பட்டு, நடைமுறையில் உள்ளது. இருப்பினும், ஏற்கெனவே வழக்கில் இருந்த வரிச்சட்டங்களின்கீழ் அரசுக்கு செலுத்த வேண்டிய வரி, அதன் மீதான வட்டி மற்றும் அபராதம் ஆகியவை இன்னமும் பல வணிகர்களின் பெயரில் நிலுவையில் இருந்து வருகின்றன.

நிலுவையை திருப்பி செலுத்துவதில் சலுகைகள் வழங்கப்பட்டு, இந்த பிரச்சினைக்கு முடிவு காண வணிகர்கள் நீண்ட நாளாக முன்வருகின்றனர். இதைகவனமாக பரிசீலித்து, நிலுவை தொகையை வசூலிப்பதில் ஒரு சமாதான திட்டத்தை செயல்படுத்த அரசு முடிவெடுத்துள்ளது. இதுபோல கடந்த காலங்களில் பல சமாதான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டாலும், புதிய அணுகுமுறை, கூடுதல் சலுகைகளுடன் இத்திட்டம் தற்போது வடிவமைக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தில், வரி மதிப்பீட்டு ஆண்டில் ரூ.50 ஆயிரத்துக்கு குறைவான வரி, வட்டி, அபராதம் செலுத்த வேண்டிய வணிகர்களுக்கு நிலுவை தொகை முற்றிலும் தள்ளுபடி செய்யப்படும். ஒவ்வொரு வரி மதிப்பீட்டு ஆண்டிலும், ரூ.50 ஆயிரத்துக்கு உட்பட்ட நிலுவை இனங்களுக்கு வரி செலுத்துவதில் இருந்து முழு விலக்கு அளிக்கப்படும்.

தமிழக வரலாற்றில் சிறு வணிகர்களுக்கு முழுமையாக வரி நிலுவை தள்ளுபடி செய்யப்படுவது இதுவே முதல்முறை. அரசின் இந்த முடிவால் 1.40 லட்சம் வழக்குகளில் சம்பந்தப்பட்ட 95,502 வணிகர்கள் நிலுவை தொகை தள்ளுபடியால் பயனடைவார்கள். இவர்களை தவிர, இதர வணிகர்கள், நிறுவனங்கள் ரூ.50 ஆயிரம் முதல் ரூ.10 லட்சம் வரை, ரூ.10 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை, ரூ.1 கோடி முதல் ரூ.10 கோடி வரை, ரூ.10 கோடிக்கு மேல் நிலுவை என 4 வரம்புகளின்கீழ் கொண்டு வரப்படுவார்கள்.

இந்த 4 வரம்புகளில், முதலில் உள்ளவர்கள் மொத்த நிலுவையில் 20 சதவீதம் அல்லது நிலுவையில் உள்ள வணிகவரி, வட்டி, அபராதத்தில் ஒரு குறிப்பிட்ட சதவீத தொகையை செலுத்தி, வழக்கில் இருந்து வெளிவரலாம். இதர 3 வரம்புகளில் உள்ள வணிகர்கள் நிலுவையில் உள்ள வணிக வரி, வட்டி, அபராதத்தில் குறிப்பிட்ட சதவீதத்தை கட்டினால் வழக்கில் இருந்து வெளிவரும் வகையில் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

மேலும் ஒரு முக்கிய சலுகையாக, நிலுவை தொகையை வணிகர்கள் கட்ட முன்வரும் நாள் வரைஅவர்கள் கணக்கில் ஏற்றப்படக்கூடிய திரண்ட வட்டித் தொகையும் (Accrued Interest) முழுவதுமாக தள்ளுபடி செய்யப்படும். இந்த சமாதான திட்டம் அக்.16-ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும். 4 மாதங்களுக்கு, அதாவது 2024 பிப்.15-ம் தேதி வரை நடைமுறையில் இருக்கும். அரசின் முயற்சியை வணிகர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார். ‘சமாதான்’ திட்டம் தொடர்பான சட்டத் திருத்த மசோதாவை அமைச்சர் மூர்த்தி அறிமுகம் செய்தார். நேற்றே இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது.