இந்து முன்னணி குற்றச்சாட்டு: கோயில் விழாக்களை திட்டமிட்டு தடுக்க தமிழக அரசு முனைகிறது..!

திருநெல்வேலி தசரா சப்பரத் திருவிழாவை தடுக்கும் நோக்கில் தமிழக மின்சாரத்துறை செயல்படுகிறது’’ என இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை வடக்கு உச்சி மாரியம்மன் கோயில் தசரா சப்பரம் வீதி உலா வரும்போது மின்சார கம்பிகளில் பட்டு ஏதேனும் விபத்து ஏற்பட்டால் அதற்கு எந்த வகையிலும் நாங்கள் பொறுப்பல்ல என்று மின்சார வாரியம் கடிதம் கொடுத்துள்ளது. மேலும், பல ஆண்டு காலமாக வரும் சப்பரத்தின் உயரத்தைக் குறைக்க வேண்டும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற தசரா திருவிழாக்களில் ஒன்றான பாளையங்கோட்டை தசரா திருவிழாவில் 12 கோயில்களை சேர்ந்த சப்பரங்கள் ஒரு சேர திருவீதி உலா வந்து சூரசம்ஹாரம் நிகழ்வு நடப்பது தொன்று தொட்டு நடந்து வரும் திருவிழாவாகும். கடந்த ஒன்றாம் தேதி தொடங்கி மிக விமர்சையாக வழக்கம் போல் அனைத்து கோயில்களிலும் திருவிழா நடந்து வரும் சூழலில் நேற்று பாளையங்கோட்டை வடக்கு உச்சி மாரியம்மன் கோயில் தலைவருக்கு மின்வாரியத்தில் இருந்து கடிதம் மூலம் சப்பரத்தின் உயரத்தை குறைக்க வேண்டும் என்றும் ஏதேனும் விபத்து நிகழ்ந்தால் அதற்கு எந்த வகையிலும் நாங்கள் பொறுப்பல்ல என்றும் தெரிவித்துள்ளனர்.

லட்சக்கணக்கான மக்கள் திரண்டு நடத்தும் திருவிழாக்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டியது அரசின் அடிப்படைக் கடமை. அரசின் அனைத்து துறைகளும் இணைந்து செய்ய வேண்டிய வேலையை இதற்கு நாங்கள் பொறுப்பாக மாட்டோம் என்று குறிப்பிடுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இந்துக்கள் ஒற்றுமையாக வழிபடும் திருவிழாவை திட்டமிட்டு மறைமுகமாக அரசு இதுபோல் தடுக்க நினைக்கிறதோ என்ற ஐயம் மக்களிடையே எழுந்துள்ளது.

இந்து விரோத திமுக அரசு பொறுப்பேற்றதில் இருந்து தமிழகமெங்கும் பல கோயில் திருவிழாக்களில் சுவாமி தேரும் சப்பரங்களும் விபத்துக்குள்ளாவது அதிகமாக எண்ணிக்கையில் நடைபெற்று வருகிறது. இதற்கு அரசு இயந்திரங்கள் ஒன்றிணைந்து செயல்படாததே முழுமுதற் காரணமாகும். அதுபோல் ஏதேனும் விபத்துக்கள் நேர்ந்தால் நாங்கள் முன்பே சொல்லி விட்டோம் என்று தங்களை காப்பாற்றிக் கொள்வதற்காக மட்டுமே அரசு அதிகாரிகள் தயாராக உள்ளனர். தவிர எவ்வாறு திருவிழாக்களை சிறப்பாக நடத்த வேண்டும் என்று திட்டமிடுவதற்கு தயாராக இல்லையே என்று சந்தேகமும் மக்கள் மனதில் எழுந்துள்ளது.

பல பகுதிகளில் திருவிழாவின்போது நடக்கும் சிறுசிறு பிரச்சனைகளை சுட்டிக்காட்டி அத்திருவிழாக்களுக்கே தடை விதிக்கும் போக்கும் திமுக அரசிடம் அதிகமாக உள்ளது. சிவகங்கை மாவட்டம் கண்டதேவி திருக்கோயிலில் இரண்டு முறை நீதிமன்றம் சொன்ன பின்பும் திருவிழாவை நடத்துவதற்கு மாநில அரசும் மாவட்ட நிர்வாகமும் எந்த முனைப்பும் எடுக்காத நிலையில் மாநில அரசை நீதிமன்றம் கடுமையாக விமர்சித்த பின்பே அத்திருவிழாவினை மாவட்ட ஆட்சியர் முன்னின்று நடத்தினார்.

தமிழகத்தில் குறிப்பாக தென் மாவட்டங்களில் பல கோவில் திருவிழாக்களை சட்டம் ஒழுங்கு காரணம் காட்டி சாதி ரீதியாக பிரச்சினைகள் உள்ளதாகச் சொல்லி திருவிழாக்களுக்கு அனுமதி மறுத்து பின்பு மக்கள் நீதிமன்றம் சென்று அனுமதி பெற்று திருவிழா நடத்தும் சூழல் நிலவி வருகிறது. எந்த சூழ்நிலையிலும் என்ன பிரச்சினைகளாக இருந்தாலும் அதற்கு தகுந்த பாதுகாப்பு வழங்கி திருவிழாவினை நடத்த வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பல ஆண்டுகளாக கோயிலின் சப்பரம் இதே திருவீதிகளில் தான் உலா வருகிறது. இதுவரையில் எந்த பிரச்சினைகளும் நடக்காத நிலையில் இவ்வாண்டு சப்பரத்தின் அளவை குறைக்கச் சொல்லி மின்வாரியம் நோட்டீஸ் வழங்கி மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. நீதிமன்ற உத்தரவின் படி அங்குள்ள சாலைகளை சீரமைக்கும் போது பழைய சாலைகளை அகற்றாமல் அதற்கு மேலேயே மீண்டும் மீண்டும் புதிய சாலைகள் போடுவதால் தான் சாலை உயர்கிறது. இம்மாதிரியான விபத்துக்கள் நிகழும் சூழ்நிலை ஏற்படுகிறது.

இதற்கு சாலையை சுரண்டி விட்டு சாலை போடாமல், சப்பரத்தின் உயரத்தை குறைக்க சொல்லும் திராவிடம் மாடல் அரசினை இந்து முன்னணி வன்மையாக கண்டிக்கிறது. சமீபத்தில் விமானப் படையின் வான் சாகச நிகழ்ச்சியில் அரசு துறை நிர்வாகம் இணைந்து பணி செய்யாமல் 5 பேர் உயிரிழக்க காரணமாக ஆனது என்பதை சுட்டிக் காட்டுகிறோம். எனவே அதனை கவனத்தில் கொண்டு இத்திருவிழா வழக்கம் போல் சிறப்பாக நடைபெற அரசின் அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து ஒத்துழைப்பு வழங்கிட தமிழக அரசு ஆணையிட இந்து முன்னணி வலியுறுத்துகிறது” என காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரேமலதா விஜயகாந்த்: காமராஜர் ஆட்சியில் அடிக்கல் நாட்டப்பட்ட ராசிமணல் அணை போர்க்கால அடிப்படை கட்டப்பட வேண்டும்..!

தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்ட அறிக்கையில், கடந்த 2 வாரங்களுக்கு முன் மேட்டூர் அணை நிரம்பிய பிறகு வெளியேற்றப்பட்ட காவிரி உபரிநீர் கடலில் கலப்பதை சாதகமாக்கிக் கொண்டு, உடனடியாக மேகேதாட்டு அணை கட்ட அனுமதி கோரி மத்திய அரசை, கர்நாடக அரசு நிர்ப்பந்தித்து வருகிறது.

தமிழகத்தில் மேட்டூர் அணைக்கு கீழே புதிய அணைகள் கட்டி, உபரி நீரைத் தேக்க இயலாது. முன்னாள் முதல்வர் காமராஜர் ஆட்சியில், ராசிமணல் அருகே புதிய அணை கட்டி 63 டிஎம்சி தண்ணீரைத் தேக்கும் திட்டத்துக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. இவ்வாறு தேக்கப்படும் நீரை மேட்டூர் அணை மூலமாகப் பாசனத்துக்குப் பயன்படுத்த முடியும்.

உபரி நீர் கடலில் கலப்பதை தடுக்கவும், மேகேதாட்டுவில் அணை கட்டும் கர்நாடகாவின் முயற்சியைத் தடுக்கவும் ராசிமணலில் அணை கட்ட வேண்டியது அவசியமாகும். இதற்கான பணிகளை தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும். அனைத்து கட்சிகளும் இதை வலியுறுத்த வேண்டும் என அந்த அறிக்கையில் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்து உள்ளார்.

தமிழக அரசு அறிவிப்பு: ஆதரவற்ற மகளிர் நலவாரியம் மூலம் 200 பேருக்கு ரூ.50,000 மானியம்..!

சமூக நலத்துறை செயலர் ஜெயஸ்ரீ முரளிதரன் வெளியிட்ட அரசாணையில், தமிழகத்தில் கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், நலிவுற்ற பெண்கள், ஆதரவற்ற பெண்கள், முதிர்கன்னிகள் உள்ளிட்டோர் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகளை களைந்து அவர்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்த, கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நலவாரியம் கடந்த 2022-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, கடந்த ஜூன் 21-ஆம் தேதி சட்டப்பேரவையில் சமூக நலத்துறை வெளியிட்ட அறிவிப்பில், “கைம்பெண்கள், நலவாரியத்தில் பதிவு செய்த கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்டவர்கள், ஆதரவற்ற, நலிவுற்ற பெண்கள், பேரிளம் பெண்களில் இருந்து வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள 200 பயனாளிகளுக்கு, நடமாடும் உணவகங்கள், பழங்கள் மற்றும் காய்கறிகள், சிற்றுண்டி கடைகள், நடமாடும் பழச்சாறு கடைகள், சலவைகடைகள் போன்ற சுய தொழில் செய்ய, நலவாரியம் மூலம் ஒரு பயனாளிக்கு ரூ.50 ஆயிரம் வீதம், 200 பயனாளிகளுக்கு ரூ.1 கோடி செலவில் மானியம் வழங்கப்படும்,” என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து, சமூக நல ஆணையர், ஆதரவற்ற மகளிர் நலவாரிய வங்கிக் கணக்கில் ரூ.1.61 கோடி இருப்பதாகவும், இதில் மானியம் வழங்க தேவைப்படும் ரூ.1 கோடியை செலவு செய்ய அனுமதியளிக்க கோரியதுடன், மானியம் பெறுவதற்கான தகுதியையும் நிர்ணயித்து அரசுக்கு கடிதம் அனுப்பினார். கடிதத்தை பரிசீலித்த தமிழக அரசு ரூ.1 கோடி மானியம் வழங்க ஒப்புதல் அளித்து உத்தரவிட்டுள்ளது.

இந்த மானியத்தை பெற, வாரியத்தில் பதிவு செய்து உறுப்பினராக இருக்க வேண்டும். வறுமைக் கோட்டுக்கு கீழ் இருப்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். 25 முதல் 45 வயதுக்குட்பட்டவராக இருத்தல் வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.1.20 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். ஒருவர் ஒருமுறை மட்டும் மானியம் பெற தகுதியுடையவராவார்.

மானியத்தைப் பெற, விண்ணப்பத்துடன், கைம்பெண், கணவனால் கைவிடப்பட்டவர், நலிவுற்றவர், ஆதரவற்றவர் மற்றும் பேரிளம்பெண் என்பதற்கான சுய அறிவிப்பு சான்று, வருவாய் சான்று, குடும்ப அட்டை நகல், ஆதார் அட்டை நகல், தற்போதைய வசிப்பிட முகவரிக்கான சான்று ஆகியவற்றை இணைத்து மாவட்ட சமூக நல அலுவலரிடம் வழங்க வேண்டும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.