Champai Soren: ராஞ்சியில் ஆகஸ்ட் 30-ல் பாஜகவில் சம்பாய் சோரன் இணைகிறார்..!

ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவரும், அம்மாநில முதலமைச்சருமான ஹேமந்த் சோரன் பண மோசடி வழக்கில் அமலாக்கத் துறையால் கடந்த ஜனவரி மாதம் கைது செய்யப்பட்டார். அதையடுத்து அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். இந்நிலையில், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியைச் சேர்ந்த சம்பாய் சோரன் புதிய முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டார்.

ஹேமந்த் சோரனுக்கு ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியதையடுத்து கடந்த ஜூலையில் சம்பாய் சோரன் தனது பதவியை ராஜினாமா செய்தார். ஹேமந்த் சோரன் மீண்டும் முதலமைச்சராகும் வகையில் தனது பதவியை ராஜினாமா செய்த காரணத்தால் சம்பாய் சோரன் அதிருப்தியில் இருந்தார்.

இந்நிலையில், கடந்த 18-ஆம் தேதி ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியைச் சேர்ந்த 6 எம்எல்ஏக்களுடன் டெல்லியில் சம்பாய் சோரன் முகாமிட்டிருந்தார். அவர் பாஜகவில் இணைய இருப்பதாக அப்போது தகவல் வெளியாகி இருந்தது. இருப்பினும் இது குறித்து பேசிய அவர், “என்னுடைய தனிப்பட்ட வேலைகளுக்காக இங்கு வந்துள்ளேன். வதந்திகள் பரப்பப்படுவது குறித்து எதுவும் தெரியவில்லை” என்றார்.

ஆனால் அடுத்தடுத்த நிகழ்வுகள் அவர் பாஜகவில் இணைவார் என்ற ஊகங்களை வலுப்படுத்தியது. இந்நிலையில், வரும் 30-ஆம் தேதி அன்று ஜார்க்கண்ட் மாநில முன்னாள் முதலமைச்சர் சம்பாய் சோரன், பாஜகவில் இணைய உள்ளதாக ஹிமந்த பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார்.

“ஜார்க்கண்ட் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரும், தேசத்தின் ஆதிவாசி தலைவர்களில் ஒருவருமான சம்பாய் சோரன், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்தார். அதிகாரபூர்வமாக பாஜகவில் ஆகஸ்ட் 30-ஆம் தேதி அன்று அவர் இணைய உள்ளார். இது ராஞ்சியில் நடைபெற உள்ளது” என அந்த ட்வீட்டில் ஹிமந்த பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார்.