ஜம்மு காஷ்மீர் யூனியன் சட்டசபை தேர்தலை அனைத்து கட்சிகளும் வாழ்வா? சாவா? என எதிர்கொண்டு நிற்கின்றன. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை 2 துண்டாக பிரித்து யூனியன் பிரதேசங்களாக்கியதுடன் சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370- வது பிரிவை ரத்து செய்த பாஜக, தாம் செய்தது நியாயம் என பிரசாரம் செய்கிறது. ஜம்மு காஷ்மீரை பாஜக வேட்டையாடிவிட்டதாக காங்கிரஸ்- தேசிய மாநாட்டுக் கட்சி கூட்டணி பதிலடி தருகிறது.
ஜம்மு காஷ்மீர் தேர்தல் தொடர்பான கருத்து கணிப்புகளோ, காங்கிரஸ்- தேசிய மாநாட்டுக் கட்சி கூட்டணிக்கு சாதகமாக உள்ளது. இந்நிலையில் தேசிய மாநாட்டுக் கட்சியின் துணைத் தலைவரான அம்மாநில முன்னாள் முதலமைச்சர் உமர் அப்துல்லா கந்தர்பால் தொகுதியில் வேட்பு மனுத் தாக்கல் செய்தார். அங்கு வேட்பு மனுவைத் தாக்கல் செய்த கையோடு தேர்தல் பிரசாரத்தையும் தொடங்கினார். கந்தர்பால் தொகுதியில் உமர் அப்துல்லா பிரசாரம் செய்து கொண்டிருந்த போது திடீரென தமது தலையில் இருந்த தொப்பியைக் கழற்றினார்.
அதனை இரு கைகளில் ஏந்தியபடி, இந்த தொப்பியின் கவுரவம், என்னுடைய கவுரவம் அனைத்தும் நீங்கள் வாக்களிப்பதில்தான் இருக்கிறது. எனக்காக ஒரே ஒரு முறை கடைசி முறையாக வாக்களியுங்கள். மக்களுக்காக சேவை செய்ய எனக்கு கடைசியாக ஒரு வாய்ப்பு தாருங்கள் என கண்ணீரும் கம்பலையுமாக கெஞ்சி வாக்கு உமர் அப்துல்லா சேகரித்தார்.