ராகுல் காந்தி “ஜனநாயகம், அரசியல் சாசனத்தை காப்பதற்கான தேர்தல் இது…!”

காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி இன்று வயநாடு தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “நாட்டின் ஜனநாயகம் மற்றும் அரசியல் சாசனத்துக்கான போராட்டம்தான் இந்தத் தேர்தல். ஒருபக்கம் நாட்டின் ஜனநாயகத்தையும் அரசியல் சாசனத்தையும் அழிக்க நினைக்கும் சக்திகள் இருக்கிறார்கள். மறுபக்கம், நாட்டின் ஜனநாயகத்தையும் அரசியல் சாசனத்தையும் பாதுகாப்பதற்கான சக்தியாக நாங்கள் நிற்கிறோம்” என்று தெரிவித்தார்.

வேட்புமனு தாக்கலுக்கு முன்பாக, வயநாட்டில் ராகுல் காந்தி ரோடு ஷோ நடத்தினார். வாகனத்தில் இருந்தபடி ஊர்வலமாகச் சென்ற அவருக்கு, ஏராளமான தொண்டர்களும் பொதுமக்களும் உற்சாக வரவேற்பு அளித்தனர். பேரணியின்போது கூடியிருந்த மக்களிடம் பேசிய ராகுல் காந்தி, “உங்களின் நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பது எனக்கு கிடைத்த கவுரவமாக நினைக்கிறேன்.

உங்களை நான் வெறும் வாக்காளர்களாக கருதவில்லை. எனது சகோதரி பிரியங்காவை எப்படி நினைக்கிறேனோ, நடத்துகிறனோ அதைப் போலவேதான் உங்கள் அனைவரையும் கருதுகிறேன், நடத்துகிறேன். வயநாட்டின் வீடுகளில் எனக்கு சகோதரிகள், தாய்மார்கள், தந்தைகள், சகோதரர்கள் உள்ளனர். இதற்காக எனது இதயத்தின் அடியாழத்தில் இருந்து நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

இங்கு மனித – விலங்கு மோதல், மருத்துவக் கல்லூரி பிரச்சினை இருக்கிறது. அதற்கான போராட்டத்தில் நான் வயநாடு மக்களுடன் துணை நிற்கிறேன். மருத்துவக் கல்லூரி பிரச்சினையில் அரசுக்கு நாங்கள் அழுத்தம் கொடுக்க முயன்றோம். அது தொடர்பாக முதல்வருக்கு நான் கடிதம் எழுதினேன். துரதிருஷ்டவசமாக அவர்கள் எந்த முன்னெடுப்பையும் மேற்கொள்ளவில்லை.

மத்தியிலும், கேரளாவிலும் காங்கிரஸ் ஆட்சி அமையும்போது இந்த இரண்டு பிரச்சினைகளும் தீர்க்கப்படும். இங்கு நான் அரசியல் பேசவில்லை. கட்சிகள், சமூகம், வயது போன்றவற்றைக் கடந்து வயநாட்டில் உள்ள ஒவ்வொருவரும், எனக்கு அன்பும், ஆதரவும், மரியாதையும் தந்து என்னை அவர்களின் சகோதரனாக நடத்தியுள்ளனர்” என ராகுல் காந்தி தெரிவித்தார்.

ஜனநாயகத்தின் அடர்ந்த இருண்ட காலத்திலிருந்து இந்தியாவை மீட்டெடுத்து, மீண்டும் ஒரு விடுதலை வெளிச்சம் இந்தியா கூட்டணி

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கலைஞரின் உடன்பிறப்புகளுக்கு நேற்று எழுதியுள்ளார். அதில், பத்தாண்டுகால ஒன்றிய பாஜக ஆட்சியில் மாநிலங்களின் உரிமைகள் பலவும் பறிபோய்விட்டன. கல்வி உரிமை, மொழி உரிமை, நிதி உரிமை, சட்ட உரிமை என மாநிலங்களின் உரிமைகளை ஒன்றிய அரசு அபகரிக்கும் போக்கு தொடர்வதையும், ஜனநாயக நெறிமுறைகளுக்கு எதிரான அராஜகப் போக்கு மிகுவதையும் காண்கிறோம். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு போட்டியாக, நியமன பதவியில் உள்ள ஆளுநர்களை வைத்து அரசாங்கத்தை நடத்த நினைக்கும் எதேச்சாதிகார போக்கு என்பது மாநிலங்களுக்கு எதிரானது மட்டுமல்ல, இந்திய அரசியல் சட்டத்திற்கே எதிரானதாகும்.

ஆளுநர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட உயர்ந்த பொறுப்புக்கு சிறிதும் தகுதியில்லாதவர்களாக, மலிவான – தரம்தாழ்ந்த அரசியல் செய்யும் அவலத்தை இந்தியா இப்போதுதான் காண்கிறது. ஆன்மிக உணர்வுகளை அரசியலாக்கி மதவெறியை தூண்டுவது, இந்தி – சமஸ்கிருதத்தை திணித்து தமிழ் உள்ளிட்ட அவரவர் தாய்மொழிகளையும் அதன் பண்பாட்டையும் சிதைப்பது, திருவள்ளுவரில் தொடங்கி தெருவில் நடந்து போவோர் வரை எல்லார் மீதும் காவிச் சாயம் பூசுவது என்பதை ஒன்றிய ஆட்சியாளர்களே முன்னின்று செய்கின்ற மூர்க்கத்தனமான அரசியலை ஜனநாயக வழியில் முறியடிக்கும் வலிமை திமுகவிற்கு உண்டு.

அதை இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் முன்னெடுத்துச் செல்ல வேண்டிய அவசர – அவசிய தேவை இருக்கிறது என்பதை உணர்த்தக்கூடிய அளவில் சேலத்தில் திமுக இளைஞரணியின் இரண்டாவது மாநில மாநாடு நடைபெறவிருக்கிறது. சென்னையையும் பிற மாவட்டங்களையும் கடுமையாக பாதித்த மிக்ஜாம் புயல் – மழை காரணமாகவும், தென்மாவட்டங்களில் கடும் தாக்கத்தை ஏற்படுத்திய வரலாறு காணாத மழை – வெள்ளத்தினாலும் இரண்டு முறை ஒத்திவைக்கப்பட்ட இளைஞரணி மாநில மாநாடு, ஜனவரி 21-ல் சேலத்தில் எழுச்சியுடன் நடைபெறுவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் இளைஞரணி செயலாளரும் இளைஞர் நலன் – விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சருமான தம்பி உதயநிதி முன்னெடுத்து வருகிறார். இளைஞரணி நிர்வாகிகள் அனைவரும் அவருக்கு தோளோடு தோள் நின்று பணியாற்றுவதை காண்கிறேன்.

அதுபோலவே, சேலம் மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சராக உள்ள திமுக முதன்மை செயலாளர் – மாநாடுகளை சிறப்பாக நடத்திக்காட்டுவதில் வல்லவரான கே.என்.நேருவும், சேலம் மாவட்ட திமுக நிர்வாகிகளும் பந்தல் அமைப்பு தொடங்கி அனைத்து ஏற்பாடுகளையும் இரவு, பகலாக மேற்கொண்டு வருகிறார்கள். நான் வளர்த்து ஆளாக்கிய அணியின் இரண்டாவது மாநில மாநாட்டில் பங்கேற்பதில் ஒரு தாயின் உணர்வுடன் பெருமிதம் கொள்கிறேன். தொடர்ச்சியான பணிகள் காரணமாக, மாநாட்டிற்கு அழைப்பு விடுத்து ஒன்றிரண்டு கடிதங்களே என்னால் எழுத முடிந்தது.

எனினும், இளைஞரணியின் 25-ம் ஆண்டினையொட்டி 2007-ம் ஆண்டு நெல்லையில் நடைபெற்ற இளைஞரணியின் முதலாவது மாநில மாநாட்டின்போது, நம் உயிர்நிகர் தலைவர் கலைஞர் உடன்பிறப்புகளுக்கு எழுதிய 25 கடிதங்களை முரசொலியின் ஒவ்வொரு நாளும் முதல் பக்கத்தில் மீண்டும் வெளியிட்டு, இன்றைய தலைமுறையினருக்கு வரலாற்று பாடத்தைக் கற்றுத் தந்திருக்கிறது கழகம். மாநாட்டு நாள் நெருங்கி வரும் நிலையில், உங்களில் ஒருவனான நான் இந்த மடலை எழுதுகிறேன். நாடாளுமன்ற தேர்தலும் நெருங்கி வருகிறது.

ஜனநாயகத்தின் அடர்ந்த இருண்ட காலத்திலிருந்து இந்தியாவை மீட்டெடுத்து, மீண்டும் ஒரு விடுதலை வெளிச்சம் நிறைந்த காலத்தினை மக்கள் காண்பதற்கு இந்தியா கூட்டணியின் முன்னெடுப்புகள் தொடங்கியுள்ளன. இந்த பொருத்தமான சூழலில்தான், மாநில உரிமை மீட்பு முழக்கத்தினை மையமாக கொண்டு இளைஞரணியின் இரண்டாவது மாநில மாநாடு நடைபெறுகிறது. தம்பி உதயநிதி அழைக்கிறார். கழக உடன்பிறப்புகளே சேலத்தில் நடைபெறும் இளைஞரணி மாநாட்டில் திரண்டிடுவீர். நான் முன்பே சொன்னதுபோல கடல் இல்லாச் சேலம் மாவட்டம், கருப்பு – சிவப்பு கடல் ஆகட்டும். இந்தியாவின் ஒளிமிகுந்த புது வரலாற்றை இளைஞரணி படைக்கட்டும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.