ரூ. 28 கோடி லஞ்சம் வழக்கில் வைத்திலிங்கம் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை..!

சட்ட விரோத பணப் பரிவர்த்தனை புகாரின் அடிப்படையில் அதிமுக முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்துக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத் துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை சட்டமன்ற உறுப்பினர்களுக்கான விடுதி, தஞ்சாவூர் – ஒரத்தநாடு பகுதியில் உள்ள அவரது வீடு, அவரது மகனின் வீடு ஆகிய இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

அடுக்குமாடி குடியிருப்புகள் கட்ட அனுமதி வழங்க ரூ.27.90 கோடி லஞ்சம் வாங்கியதாக வைத்திலிங்கம் மீது லஞ்ச ஒழிப்புதுறை வழக்கு பதிவு செய்த நிலையில், அமலாக்கத் துறையினர் தற்போது சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

2011 முதல் 2016 காலக்கட்டத்தில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சியில் வீட்டுவசதி மற்றும் நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சராக பொறுப்பு வகித்தார். சென்னை பெருங்களத்தூரில் 2016-ல் தனியார் நிறுவனம் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டுவதற்கு திட்ட அனுமதி கோரியபோது, அப்போது அமைச்சராக இருந்த வைத்திலிங்கத்துக்கு ரூ.27.90 கோடி லஞ்சம் வழங்கப்பட்டதாக, அறப்போர் இயக்கம் சார்பில் லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளிக்கப்பட்டது.

அதில், லஞ்சப் பணம் வைத்திலிங்கத்தின் மகன்கள் பிரபு, சண்முகபிரபு ஆகியோர் இயக்குநர்களாக இருக்கும் நிறுவனத்துக்கு கடனாக வழங்கப்பட்டது போல கணக்கு காட்டப்பட்டுள்ளது. அந்த பணத்தில் பல இடங்களில் சொத்துகளை வாங்கியுள்ளனர் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த புகாரின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்தி, முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம், அவரது மகன்கள் பிரபு, சண்முகபிரபு, தனியார் நிறுவனங்களைச் சேர்ந்த பன்னீர்செல்வம், ரமேஷ் உள்ளிட்ட 11 பேர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சிவகாசி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை..!

விருதுநகர் மாவட்டம், சிவகாசி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். காவல் துணைக் கண்காணிப்பாளா் ராஜூ தலைமையில் அலுவலகத்தின் அனைத்து வாயிற் கதவுகளும், ஜன்னல்களும் மூடப்பட்டு லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்தினர்.

மேலும் அலுவலர்கள், ஓட்டுநர் உரிமம் பெற வந்தவர்கள் உள்பட 30-க்கும் மேற்பட்டோரை பிடித்து சோதனை நடத்தி வருகின்றனர்.

அரசியல் பிரமுகர் வீட்டில் தேர்தல் பறக்கும் படை சோதனையில் ஒரு கோடி சிக்கியது..!

தமிழகத்தில் மக்களவை தேர்தல் வரும் 19-ம் தேதி நடைபெற உள்ள நிலையில், வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள் கொடுப்பதை தடுக்க பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், பொதுமக்களும், அரசியல் கட்சியினரும் ஆவணமின்றி 50 ஆயிரத்திற்கும் மேல் பணம் மற்றும் அதிக எண்ணிக்கையில் பரிசு பொருட்கள் எடுத்து செல்ல கூடாது என தேசிய நெடுஞ்சாலை, மாநகரின் முக்கிய பகுதிகள், மாவட்ட எல்லையில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் இரவு பகலாக சுழற்சி முறையில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

திருச்சி ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி எட்டரை பகுதி ஊராட்சி மன்ற தலைவர் திவ்யா அன்பரசன். இவரது அன்பரசன், அதிமுக முன்னாள் அமைச்சரும், திருச்சி அதிமுக வடக்கு மாவட்ட செயலாளர் பரஞ்சோதியின் தம்பி ஆவார். இந்நிலையில், திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அழைப்பு வந்தது. அதன் அடிப்படையில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் திருச்சி ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி எட்டரை பகுதிக்கு விரைந்தனர். அங்கே அரசியல் பிரமுகர் வீட்டில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்பொழுது அங்கு ஒரு கோடி ரூபாய் பணம் இருப்பது தெரியவந்தது.

இதனை‌ அடுத்து மாவட்ட தேர்தல் அதிகாரி பிரதீப் குமார் தகவல் கொடுத்து வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனைக்கு சென்றனர். தற்பொழுது வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.மேலும் எதற்காக ஒரு கோடி ரூபாய் இவர் வீட்டில் வைத்துள்ளார்? தேர்தல் பணம் பட்டுவாடா செய்ய இருந்த பணமா? என்பது குறித்து வருமானவரித்துறை அதிகாரிகள் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.