மிக்ஜாம் புயல் காரணமாக ஏற்பட்ட மழை வெள்ளத்தில் சென்னை உட்பட 4 மாவட்டங்கள் தத்தளித்தன. தமிழக அரசு, வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்க பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்தது. அதேசமயம், தொலைத்தொடர்பு சேவைகள் முடங்கியதால் ஏராளமானோர் தொடர்பு கொண்டு அரசின் உதவிகளைப் பெற முடியவில்லை. சென்னையின் பல்வேறு பகுதிகளிலும் தன்னார்வலர்கள் ஏராளமானோர், மீட்பு பணிகளை ஒருங்கிணைத்தனர்.
மேலும், உதவி கோரி வரும் கோரிக்கைகளை, அதிகாரிகள், அமைச்சர்கள், தொண்டு நிறுவனங்களின் கவனத்திற்கு எடுத்துச் சென்று உதவிகளைப் பெற்றுத் தரவும் ஏராளமானோர் செயலாற்றினர். மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் தன்னார்வலர்களின் முயற்சிகள் பெரும் பாராட்டைப் பெற்றன. இந்நிலையில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தன்னார்வலர்களை நேரில் அழைத்து பாராட்டியுள்ளார்.
இது தொடர்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் டிசம்பர் முதல் வாரத்தில் பெய்த கனமழை, பல்வேறு இடங்களில் வெள்ள பாதிப்புகளை ஏற்படுத்தியது. அத்தகைய பேரிடர் நேரத்தில், மக்களை காக்க அரசுடன் கைகோர்த்து களத்தில் இறங்கி மீட்பு – நிவாரணப் பணிகளை மேற்கொண்ட தன்னார்வலர்களை இன்று நேரில் சந்தித்து பாராட்டினோம்.
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் டிசம்பர் முதல் வாரத்தில் பெய்த கனமழை, பல்வேறு இடங்களில் வெள்ள பாதிப்புகளை ஏற்படுத்தியது.
அத்தகையப் பேரிடர் நேரத்தில், மக்களை காக்க அரசுடன் கைகோர்த்து களத்தில் இறங்கி மீட்பு – நிவாரணப் பணிகளை மேற்கொண்ட தன்னார்வலர்களை இன்று நேரில் சந்தித்து பாராட்டினோம்.
தங்களின் உயிரைப் பணயம் வைத்து வெள்ள நிவாரணப் பணிகளை செய்த போது, களத்தில் அவர்கள் பெற்ற அனுபவங்களை நம்மோடு பகிர்ந்து கொண்டனர். அவர்களுக்கு என் வாழ்த்துகள்.
தன்னார்வலர்களின் நற்பணிகள் தொடரட்டும்! மனிதநேயம் தழைக்கட்டும்! எனத் தெரிவித்துள்ளார்.