மும்பை காவல்துறை எனக் கூறி பெண் நீதிபதி மிரட்டல்..!

மும்பை காவல்துறை எனக் கூறி சென்னை உயர் நீதிமன்ற பெண் நீதிபதியை போனில் மிரட்டிய மர்மநபரை சென்னை மத்திய குற்றப்பிரிவில் உள்ள சைபர் கிரைம் தேடி வருகின்றனர். சென்னை அம்பத்தூர், விஜயலட்சுமிபுரத்தைச் சேர்ந்த கிருஷ்ணன் என்பவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தார். அதில், “சென்னை உயர் நீதிமன்ற பெண் நீதிபதி ஒருவரிடம் உதவியாளராகப் பணியாற்றி வருகிறேன்.

கடந்த 1-ஆம் தேதி, சம்பந்தப்பட்ட பெண் நீதிபதிக்கு போன் அழைப்பு ஒன்றுவந்தது. எதிர்முனையில் பேசிய நபர், தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் அலுவலகத்தில் இருந்து பேசுவதாக தெரிவித்துள்ளார். மேலும், நீங்கள் பயன்படுத்தும் செல்போன் எண்ணை தவறாக சட்ட விரோத விளம்பரங்களுக்கு பயன்படுத்தி உள்ளீர்கள்.

இது தொடர்பாக மும்பையில்உள்ள அந்தேரி காவல் நிலையத்தில் உங்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால், உங்களிடம் விசாரணை நடத்த வேண்டும் என கூறியுள்ளார். பின்னர், மற்றொரு நபர் வாட்ஸ்-அப் கால் மூலம் தொடர்பு கொண்டு, மும்பை அந்தேரி காவல் நிலைய அதிகாரி பேசுவதாகக் கூறி ஆதார் எண்ணை கேட்டு நீதிபதியிடம் மிரட்டி உள்ளார். எனவே, பெண் நீதிபதியை மும்பை காவலர் என்ற பெயரில் மிரட்டிய மர்ம நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என அந்த புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

போலி ஆவணம் தயாரித்து மூதாட்டியின் ரூ.4 கோடி மதிப்பிலான நிலத்தை ஆட்டையை போட்ட 5 பேர் கைது

சென்னை சாலிகிராமத்தை சேர்ந்த லைசா ஜோன்பின் என்பவர், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்று அளித்திருந்தார். அதில், அம்பத்தூர் அடுத்த கொன்னூர் கிராமத்தில் எனக்கு சொந்தமான 3,544 சதுர அடி காலி வீட்டு மனை உள்ளது. இந்த இடத்தை, எனது தந்தை வேளாங்கண்ணி கடந்த 1965-ம் ஆண்டு எனக்கு கிரையம் செய்து கொடுத்தார்.

கடந்த 1979-ம் ஆண்டு எனது தந்தை இறந்த நிலையில், மேற்கண்ட வீட்டு மனை எனது கட்டுப்பாட்டில் இருந்தது. காலி மனையாக இடம் இருந்ததால் சிலர் எனது இடத்தை போலி ஆவணம் மூலம், ஆள்மாறாட்டம் செய்து, அபகரித்துள்ளனர். எனவே அவர்களிடம் இருந்து எனது இடத்தை மீட்டு தர வேண்டும், என்று தெரிவித்து இருந்தார். இதுகுறித்து உரிய விசாரணை நடத்த மத்திய குற்றப்பிரிவு காவல்துறைக்கு காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவிட்டார்.அதன்படி, அப்பிரிவு துணை ஆணையர் ஆரோக்கியம் மேற்பார்வையில் ஆய்வாளர் முருகேஷ்வரி விசாரணை நடத்தினார்.

அதில், அரும்பாக்கம் எம்.எம்.டி.ஏ காலனியை சேர்ந்த பாபு, திருவேற்காடு அயப்பாக்கத்தை சேர்ந்த முருகப்பன், மற்றும் அன்பு நகர் 3-வது தெருவை சேர்ந்த முத்து, வில்லிவாக்கம் ராஜமங்கலம் 3வது தெருவை சேர்ந்த நாகராஜ், தி.நகர் வடக்கு உஸ்மான் ரோடு விவேகானந்தா தெருவை சேர்ந்த குருசாமி, ஆகியோர், கூட்டாக சேர்ந்து லைசா ஜோஸ்பினுக்கு சொந்தமான ரூ.4 கோடி மதிப்புள்ள 3,544 சதுரடி நிலத்தை போலி ஆவணம் தயாரித்து, ஆள்மாறாட்டம் செய்து, இடத்தை அபகரித்தது தெரியவந்தது.

அதை தொடர்ந்து காவல் ஆய்வாளர் முருகேஸ்வரி தலைமையிலான காவல்துறை, மோசடியில் ஈடுபட்ட பாபு, முருகப்பன், குருசாமி, நாகராஜ், முத்து ஆகியோரை நேற்று முன்தினம் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து போலி பத்திரங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, அவர்களை நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர். மேலும் அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகின்றனர்.