மும்பை காவல்துறை எனக் கூறி பெண் நீதிபதி மிரட்டல்..!

மும்பை காவல்துறை எனக் கூறி சென்னை உயர் நீதிமன்ற பெண் நீதிபதியை போனில் மிரட்டிய மர்மநபரை சென்னை மத்திய குற்றப்பிரிவில் உள்ள சைபர் கிரைம் தேடி வருகின்றனர். சென்னை அம்பத்தூர், விஜயலட்சுமிபுரத்தைச் சேர்ந்த கிருஷ்ணன் என்பவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தார். அதில், “சென்னை உயர் நீதிமன்ற பெண் நீதிபதி ஒருவரிடம் உதவியாளராகப் பணியாற்றி வருகிறேன்.

கடந்த 1-ஆம் தேதி, சம்பந்தப்பட்ட பெண் நீதிபதிக்கு போன் அழைப்பு ஒன்றுவந்தது. எதிர்முனையில் பேசிய நபர், தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் அலுவலகத்தில் இருந்து பேசுவதாக தெரிவித்துள்ளார். மேலும், நீங்கள் பயன்படுத்தும் செல்போன் எண்ணை தவறாக சட்ட விரோத விளம்பரங்களுக்கு பயன்படுத்தி உள்ளீர்கள்.

இது தொடர்பாக மும்பையில்உள்ள அந்தேரி காவல் நிலையத்தில் உங்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால், உங்களிடம் விசாரணை நடத்த வேண்டும் என கூறியுள்ளார். பின்னர், மற்றொரு நபர் வாட்ஸ்-அப் கால் மூலம் தொடர்பு கொண்டு, மும்பை அந்தேரி காவல் நிலைய அதிகாரி பேசுவதாகக் கூறி ஆதார் எண்ணை கேட்டு நீதிபதியிடம் மிரட்டி உள்ளார். எனவே, பெண் நீதிபதியை மும்பை காவலர் என்ற பெயரில் மிரட்டிய மர்ம நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என அந்த புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

Formula 4: எஃப்ஐஏ அனுமதி சுணக்கம்..! சென்னை உயர் நீதிமன்றம் சென்று பந்தயம் நடத்தல்..!

தெற்காசியாவிலேயே முதல் முறையாக 6 அணிகள் பங்கேற்கின்றன. 3.5 கிமீ தூரம் கொண்ட கார் பந்தயம் சென்னையில் இன்றிரவு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். இதில் 19 சாலை திருப்பங்கள் உள்ளன. இந்தியாவில் பார்முலா-4 இரவு நேர தெரு கார் பந்தயம் நடப்பது இதுவே முதல் முறையாகும். உலகளவில் இந்த பந்தயத்தை நடத்தும் 15-வது நகரம் என்ற பெருமை சென்னைக்கு கிடைத்துள்ளது.

இந்நிலையில், தெற்கு ஆசியாவில் முதன்முறையாக நடத்தப்படும் இரவு நேர சாலை ஃபார்முலா 4 கார் பந்தயம் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலம் சென்னை ஃபார்முலா ரேசிங் சர்க்யூட் போட்டி மற்றும் இந்தியன் ரேஸிங் லீக் கார் பந்தயம் நேற்று தீவுத்திடல் பகுதியில் பயிற்சிசுற்றுகளுடன் தொடங்கியது. இந்த பந்தயத்துக்காக 3.5 கிலோ மீட்டர் சுற்றளவு கொண்ட சர்க்யூட் தீவுத்திடல், போர் நினைவுச்சின்னம், நேப்பியர்பாலம், சுவாமி சிவானந்தா சாலை மற்றும் அண்ணா சாலை ஆகியவற்றில் அமைக்கப்பட்டுள்ளது. இது தெற்கு ஆசியாவிலேயே மிக நீளமான சாலை சர்க்யூட் என்பது குறிப்பிடத்தக்கது.

கார் பந்தய பயிற்சியை பிற்பகல் 2.45 மணி அளவில் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைப்பார் என தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் நேற்று முன்தினம் இரவு பெய்த மழை காரணமாக தொழில்நுட்ப ரீதியாக திட்டமிட்டபடி பயிற்சி பந்தயங்களை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.

இதுஒருபுறம் இருக்க சர்வதேச மோட்டார் கூட்டமைப்பு, சென்னை பந்தயத்துக்கான அனுமதி சான்றிதழை வழங்குவதில் சுணக்கம் காட்டியது. இதற்கு நேற்று முன்தினம் இரவு பெய்த மழை காரணமாக கூறப்பட்டது. எஃப்ஐஏ வழங்கும் அனுமதி சான்றிதழை, போட்டி அமைப்பாளர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் சமர்ப்பித்த பிறகே பந்தயத்தை நடத்த முடியும்.

இதனால் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது. நீதிமன்றம் தரப்பில் இரு முறை அவகாசம் வழங்கப்பட்ட நிலையில் மாலையில் 5.30 மணி அளவில் போட்டியை நடத்துவதற்கான சான்றிதழை எஃப்ஐஏ வழங்கியது. இதைத் தொடர்ந்து இரவு 7 மணி அளவில் ஃபார்முலா 4 கார்பந்தயத்தின் பயிற்சியை அமைச்சர் உதயநிதி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

பயிற்சியில் சுமார் 10 கார்கள் மின்னல் வேகத்தில் பறந்தன. சுமார் 200 கிலோ மீட்டர் வேகத்துக்கு மேல் சென்ற இந்த கார்களை பார்வையாளர்கள் உற்சாகமாக கண்டுகளித்தனர். முன்னதாக சாகசகார் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் இரு கார்கள் இரு பக்கவாட்டு சக்கரங்கள் மட்டுமே தரையில் இருந்தபடி அதிவேகத்தில் சென்றதை கண்டு ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

7 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க தேர்தல் நடந்தது..!

நூற்றாண்டு கண்ட சென்னை உயர் நீதிமன்றத்தில் பழமையான வழக்கறிஞர்கள் சங்கத்திற்கு 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தப்படுவது வழக்கம். ஆனால் கடந்த 2016-ம் ஆண்டு இந்த சங்கத்துக்கு தேர்தல் நடைபெற்றது. அதன்பிறகு பல்வேறு வழக்குகள் காரணமாக இந்த தேர்தல் தள்ளிப்போய் கொண்டே இருந்தது.

இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் இந்த தேர்தல் நடந்தபோது பிரச்சினை ஏற்பட்டதால் தேர்தல் பாதியில் ரத்து செய்யப்பட்டது. அதன்பிறகு இந்த சங்கத் தேர்தலை தேர்தல் நடத்தும் அலுவலராக மூத்த வழக்கறிஞர் கபீர் நியமிக்கப்பட்டு பலத்த பாதுகாப்புடன் நடத்த உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதன்படி எம்எச்ஏஏ வழக்கறிஞர் சங்கத்தில் பதிவு செய்துள்ள வழக்கறிஞர்களில் வாக்களிக்க தகுதியான 4,752 வழக்கறிஞர்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டு தலைவர், துணைத் தலைவர், செயலாளர், பொருளாளர், நூலகர், 6 மூத்த செயற்குழு உறுப்பினர்கள், 5 இளநிலை செயற்குழு உறுப்பினர்கள் என மொத்தம் 16 பதவிகளுக்கு தேர்தல் 7 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த தேர்தல் நேற்று நடைபெற்றது.

இந்தத் தேர்தலில் தலைவர் பதவிக்கு 9 பேரும், துணைத் தலைவர் பதவிக்கு 8 பேரும், செயலாளர் பதவிக்கு 10 பேரும், பொருளாளர் பதவிக்கு 9 பேரும், நூலகர் பதவிக்கு 11 பேரும், மூத்த செயற்குழு உறுப்பினர்கள் பதவிக்கு 42 பேரும், இளைய செயற்குழு உறுப்பினர் பதவிக்கு 35 பேரும் போட்டியிட்டனர்.

உயர் நீதிமன்றத்தி்ல் உள்ள எம்எச்ஏஏ சங்க கட்டிடத்தில் சிஐஎஸ்எப் மற்றும் தமிழக காவல்துறையினரின் ஐந்தடுக்கு பாதுகாப்புடன் காலை 10 மணி்க்கு தொடங்கிய வாக்குப் பதிவு மாலை 5 மணிக்கு நிறைவடைந்தது. தேர்தல் நடைமுறைகள் அனைத்தும் கட்டிடத்துக்கு வெளியே 2 பெரிய திரைகளில் நேரலையில் ஒளிபரப்பு செய்யப்பட்டது.

யானைகள் வழித்தடங்களில் அனுமதியின்றி கட்டப்பட்ட 12 விடுதிகளை இடிக்க உத்தரவு..!

நீலகிரி மாவட்டம், ஊட்டி தாலுகா மசினகுடி அருகே மாயார், சீகூர், சோலூர், முதுமலை, பொக்காபுரம், மாவனல்லா, வாழைத்தோட்டம் உள்ளிட்ட பகுதிகளில் காட்டு யானைகளின் வழித்தடங்களில் சொகுசு விடுதிகள் கட்டப்பட்டுள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதன் அடிப்படையில் முதுமலை புலிகள் காப்பகத்தின் வெளிமண்டல பகுதியான மசினகுடி கோட்டத்தில் உள்ள சீகூர் சமவெளியில் யானைகள் வழித்தடம் தொடர்பாக கடந்த 2010-ம் ஆண்டு கிராம வரைப்படத்துடன் கூடிய அரசாணையும் வெளியிடப்பட்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சொகுசு விடுதிகள் மற்றும் காட்டேஜ் உரிமையாளர்கள் சார்பில் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதைத்தொடர்ந்து கடந்த 2018-ம் ஆண்டு உச்சநீதிமன்றத்தில் யானைகள் வழித்தடம் தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது மசினகுடி, பொக்காபுரம், வாழைத்தோட்டம் உள்ளிட்ட பகுதிகளில் 309 அறைகள் கொண்ட 39 கட்டிடங்கள் யானைகள் வழித்தடங்களில் கட்டப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் அறிக்கை அளித்தது. இதன் அடிப்படையில் விதிமுறைகளை மீறிய கட்டிடங்களுக்கு சீல் வைக்க மாவட்ட நிர்வாகத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன் அடிப்படையில் விதிமுறைகளை மீறிய அனைத்து கட்டிடங்களுக்கும் சீல் வைக்கப்பட்டது.

இதில் 12 கட்டிட உரிமையாளர்கள் மட்டும் ஆட்சேபனைகள் தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்நிலையில் பொதுமக்கள் மற்றும் கட்டிட உரிமையாளர்கள் தரப்பில் ஆட்சேபனைகள் ஏதேனும் இருந்தால் தெரிவிக்க வசதியாக கடந்த 14-10-2020 அன்று காட்டு யானைகள் வழித்தடம் தொடர்பாக ஆராய ஓய்வு பெற்ற சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கே.வெங்கடராமன் தலைமை 3 நபர் கொண்ட விசாரணைக்குழு அமைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

யானைகள் வழித்தடம் குறித்து ஆட்சேபனைகள் உள்ளவர்கள் தங்கள் பாதிப்புகளையும், அதன் விபரங்களையும் குறிப்பிட்டு தங்களது கோரிக்கைகளுக்கு ஆதாரமாக உள்ள ஆவணங்களின் நகல்களை இணைத்து கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் முதல் 2021-ம் ஆண்டு பிப்ரவரி 14-ந் தேதி வரையிலான காலகட்டத்தில் விசாரணை குழுவிடம் வழங்கினர்.

இதைத்தொடர்ந்து 3 பேர் கொண்ட குழு விசாரணை நடத்தி வந்தது. இதில் ஆட்சேபனைகள் தெரிவித்த 12 கட்டிட உரிமையாளர்களின் கட்டிடங்களை ஆய்வு செய்த போது எவ்வித அனுமதியும் இன்றி சட்டவிரோதமாக செயல்பட்டு வந்தது கண்டறியப்பட்டது. இதனால் 12 கட்டிடங்களையும் இடித்து அகற்ற சீகூர் யானைகள் வழித்தட விசாரணை கமிட்டி உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்ற வரலாற்றில் முதல் பெண் தபேதார் நியமனம்…

நீதிபதிகள் தங்கள் அறையிலிருந்து, நீதிமன்ற அறைக்கு வரும்போது, அவர்களுக்கு முன், ‘தபேதார்’ என்பவர் கையில் ஒரு செங்கோலுடன் வருவது, காலம் காலமாக இருக்கும் வழக்கம். நீதிபதிகள் வரும் போது, முன்செல்லும் தபேதார்கள், வழியில் கூட்ட நெரிசல் இல்லாமல் வழி ஏற்படுத்தி தருவர். அதேபோல் நீதிமன்ற வளாகத்திற்குள் நீதிபதி எந்த வேலையில் ஈடுபட்டாலும், அவர் செல்லும்போது , நீதிபதி முன் தபேதார் செல்வர். இந்த தபேதார் பணியில், இதுவரை ஆண்கள் மட்டுமே நியமனம் செய்யப்பட்டு வந்தனர்.

இந்நிலையில் பெண்களை தபேதார் முதல் பதிவாளர் வரை அனைத்துப் பதவிகளிலும் நியமித்ததன் மூலம், சென்னை உயர் நீதிமன்றம் எல்லா வகையிலும் சம வாய்ப்பு அளிக்கும் இடமாக மாறியுள்ளது. 2007-ம் ஆண்டு முதல் மாவட்ட நீதிபதிகள் பிரிவில் இரண்டு பெண்கள் பதிவாளர் ஜெனரலாக பதவி வகித்திருந்தாலும், நீதிபதிகள் முன் செங்கோல் எடுத்து செல்லும் பணிக்கு பெண்கள் பணியமர்த்தப்படுவது இதுவே முதல் முறையாகும்.

கடந்த 2021-ம் ஆண்டு மார்ச் 14-ந் தேதி 40 தபேதார் மற்றும் 310 அலுவலக உதவியாளர்கள், ரூம் பாய், சமையல்காரர், நூலக உதவியாளர் , வாட்ச்மேன் உள்ளிட்ட காலி பணியிடங்களுக்கான அறிவிப்பை உயர்நீதிமன்றம் வெளியிட்டது. விண்ணப்பித்தவர்கள் அனைவரும் எழுத்துத் தேர்வு மூலமாகவும், பின்னர் நேர்காணல் வாயிலாகவும் தேர்வு செய்யப்படுவர். இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்ற வரலாற்றிலேயே, முதல் முறையாக திலானி என்ற பெண், தபேதாராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் தேர்வு செய்யப்பட்டு, நீதிபதி மஞ்சுளாவிடம் பணிபுரிந்து வருகிறார்.

இதுநாள் வரை ஆண் தபேதார்கள் வெள்ளை நிற சட்டை, பேன்ட் அணிந்து, இடுப்பில் சிவப்பு பட்டையுடன், தலையில் சிவப்பு தலைப்பாகை அணிவர். ஆனா பெண்களுக்கு தபேதாரின் சீருடையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பெண்களுக்கு வெள்ளை நிற சுடிதார் சீருடையாக வழங்கப்பட்டுள்ளது. மற்றபடி இடுப்பில் பட்டையும், தலையில் தலைப்பாகையையும் கொடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.