விருதுநகர் மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் மாணிக்கம் தாகூரை ஆதரித்து, விருதுநகரில் மூளிப்பட்டி அரண்மனை அருகே திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது, ”இந்த தேர்தல் மிக முக்கியமான தேர்தல். யார் பிரதமராக வர வேண்டும் என்பதை தீர்மானிப்பதைவிட யார் வரக்கூடாது என்பதை தீர்மானிக்க வேண்டும். 2-வது சுதந்திரப் போராட்டம் இந்த தேர்தல். பாஜக வெற்றி பெற்றால், அப்படி ஒரு விபத்து நடந்தால் இதுதான் இந்தியாவின் கடைசி தேர்தல். சர்வாதிகாரம் மட்டும்தான் தலைவிரித்தாடும்.
நாடாளுமன்றத்தில் மக்கள் பிரச்சினைகளுக்காக கேள்வி எழுப்பியதற்காக மாணிக்கம் தாகூர் பல முறை சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். அதானி பற்றி ராகுல் காந்தி தொடர்ந்து பேசுகிறார் என்பதால் பதவியிலிருந்தே நீக்கம் செய்யப்பட்டார். தேர்தல் நேரத்தில் காங்கிரஸின் அனைத்து வங்கிக் கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளன. 2 முதல்வர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பாஜக ஆட்சிக்கு வந்ததும் எதிர்க்கட்சியினர் மீதுதான் 80 சதவிகித வழக்குகள் போடப்பட்டுள்ளன. உரிமைக்காக போராடிய விவசாயிகள் மீது ஒரு அமைச்சரின் மகன் காரை ஏற்றி 4 பேரை கொலை செய்தார். ஆங்கிலேயர் நமது பணம், பொருள், உரிமைகளை பறித்தார்கள். இன்னொரு ஆங்கிலேயர் ஆட்சிதான் இங்கு நடக்கிறது. நமது உரிமைகள் பறிக்கப்படுகிறது. சிறுபான்மை மக்களுக்கு எதிரான சட்டங்கள் கொண்டு வரப்படுகின்றன.
இதுவரை வராத மோடி தற்போது தேர்தல் வந்ததும் தமிழகத்தை சுற்றி சுற்றி வருகிறார். அவருக்கு ஒட்டு விழாது, தமிழக மக்கள் தெளிவாக உள்ளார்கள் என்பது அவருக்கு தெரியவில்லை. இங்கு உள்ள ஆளுநர் எல்லாம் தெரிந்ததுபோல் பேசுகிறார். அண்ணாமலை இப்போது என் மண், என் மக்கள் என்கிறார். கர்நாடகத்தில் இருந்தபோது நான் தமிழன் இல்லை. கன்னடகாரன். கடைசி மூச்சுவரை கன்னடக்காரன்தான் என அழைக்க வேண்டும் என்று கூறினார். ஆனால், இப்போது ஏன் கோவை தொகுதியில் போட்டியிடுகிறார் எனத் தெரியவில்லை.
நாம் போராடி பெற்ற தமிழ்நாடு என்ற பெயரை கூறக் கூடாது என ஆளுநர் ரவி கூறுகிறார். அவருக்கு என்ன உரிமை இருக்கிறது. தேர்தல் வந்தவுடன் தமிழ் மீது பிரதமர் மோடிக்கு பற்று வந்துவிட்டது. தேர்தலுக்குப் பிறகு நல்ல தமிழாசிரியரை முதல்வர் அனுப்பிவைப்பார். நமது வங்கிக் கணக்கில் குறைந்த அளவு தொகை இருப்பு இருந்தால் அதற்கும் பணம் பிடிக்கிறார்கள். ஆனால், இண்டியா கூட்டணி ஆட்சி வந்த பிறகு இந்த பழக்கம் நிறுத்தப்படும். காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் வழங்கப்படும். வரவில்லையெனில் மாணிக்கம் தாகூரை கேளுங்கள். தமிழ்நாட்டை வளப்படுத்தும் ஆட்சி மத்தியில் உருவாகும்.
தமிழகத்துக்கு வரவேண்டிய நிதியும், நிவாரணமும் வரும். விருதுநகரில் ஆனைக்குட்டம் அணையில் ஷட்டர்களை பழுதுபார்க்க ரூ.29 கோடியில் ஒப்பந்தப்புள்ளி விடப்படும். ரூ.447 கோடியில் தாமிரபரணி கூட்டுக் குடிநீர்த் திட்டப் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. நமது ஆட்சி அமைந்ததும் மக்களை கஷ்டப்படுத்தாத முறையில் ஜிஎஸ்டி மாற்றி அமைக்கப்படும். உங்கள் கோரிக்கைகள் நிறைவேற, நாட்டை காப்பாற்ற, குழந்தைகளின் எதிர்காலத்தை பாதுகாக்க மாணிக்கம் தாகூருக்கு கை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும்” என கனிமொழி பேசினார்.