ஆதி குடிகளை இழிவுபடுத்தும் ‘காலனி’ என்ற சொல் அரசு ஆவணங்களில் இருந்தும், பொதுப்புழக்கத்தில் இருந்தும் நீக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். தமிழக சட்டசபைக் கூட்டத் தொடர் கடந்த மாதம் 14-ந்தேதி தொடங்கியது. அன்றைய தினம் பட்ஜெட்டும், அதற்கு மறுநாள் வேளாண் பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டது.
அதன் பிறகு இரு பட்ஜெட் மீதான விவாதம் 5 நாட்கள் நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக மார்ச் 24-ந் தேதி முதல் சட்டசபைக் கூட்டம் தொடர்ந்து நடந்து வருகிறது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு துறை மானியக் கோரிக்கை தாக்கல் செய்யப் பட்டு அதன் மீது விவாதமும் அமைச்சர்களின் பதிலுரையும் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் தமிழக சட்டசபைக் கூட்டத் தொடரின் கடைசி நாளான இன்று சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.
அப்போது, காலனி’ என்ற சொல் அரசு ஆவணத்தில் இருந்து நீக்கப்படும். ஆதிக்கம், தீண்டாமையின் அடையாளமாக உள்ள காலனி என்ற சொல் பொதுவழக்கத்தில் இருந்தும் நீக்கப்படும். ‘காலனி’ என்ற சொல்லை நீக்க வேண்டும் என VCK எம்.எல்.ஏ. சிந்தனை செல்வம் கோரிக்கை வைத்திருந்த நிலையில், ஆதி குடிகளை இழிவுபடுத்தும் ‘காலனி’ என்ற சொல் அரசு ஆவணங்களில் இருந்தும், பொதுப்புழக்கத்தில் இருந்தும் நீக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.