உத்தரபிரதேசத்தின் வாரணாசியில் உள்ள கஜக்புரா பகுதியை சேர்ந்த உமா சங்கர் யாதவ். இவரது வீட்டுக்கு 1911-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி வழங்கப்பட்ட மின் இணைப்புக்கு ரூ.2.24 லட்சம் மின் கட்டணம் செலுத்த வேண்டும் என மின்வாரியம் ரசீது அனுப்பி இருந்தது. இதையடுத்து மின் கட்டணத்தை சரி பார்க்கும்படி அதிகாரிகளை அணுகிய யாதவுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இதுகுறித்து தகவல் அறியும் உரிமை ஆணையத்தை அணுகி உமா சங்கர் யாதவ் முறையிட்டார்.
இந்த விவகாரத்தில், “1911-ம் ஆண்டு வாரணாசியில் நுகர்வோருக்கு மின்சாரம் வழங்கப்பட்டதா? மின் கட்டணம் எதன் அடிப்படையில் கணக்கிடப்பட்டது? அப்போது ஒரு யூனிட்டுக்கான மின் கட்டணம் எவ்வளவு? எந்த நிறுவனம் மின்சாரம் வழங்கியது? உத்தரபிரதேச மின்வாரியம் அப்போது இருந்ததா?” என அடுக்கடுக்காக பல்வேறு கேள்விகளை மின்வாரிய அதிகாரிகளுக்கு அனுப்பியிருந்தனர்.
தகவல் அறியும் உரிமை ஆணையத்தின் இந்த கேள்விகளுக்கு பலமுறை சம்மன் அனுப்பியும் மின்வாரியம் பதிலளிக்கவில்லை. மின்வாரிய அதிகாரிகள் தகவல் அறியும் உரிமை ஆணையத்தின் கேள்விகளுக்கு பதிலளிக்காமல் வேண்டுமென்றே புறக்கணித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.