ரோஜா கேள்வி: சந்திரபாபு நாயுடு குஜராத் போய் தனியார் லேப்பில் ஏன் பரிசோதனை செய்ய வேண்டும்..!?

ஆந்திர அரசாங்கத்திற்குச் சொந்தமான டிடிடி லேப் பரிசோதனையில் வனஸ்பதி என வந்த ஆய்வு அறிக்கையைத் தாண்டி சந்திரபாபு நாயுடு குஜராத் போய் நெய்யைப் பரிசோதனை ஏன் செய்ய வேண்டும்? அதுவும் அரசாங்க லேப் இருக்கும் போது ஏன் தனியார் லேப் பரிசோதனைக்கு நாயுடு நெய்யை அனுப்பினார்? அதன் உள்நோக்கம் என்ன? என ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் ஆந்திர சுற்றுலா, கலாச்சாரம் மற்றும் இளைஞர் மேம்பாட்டு அமைச்சரான ரோஜா கேள்வி எழுப்பியுள்ளார்.

ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சியிலிருந்தபோது திருப்பதியில் கொள்முதல் செய்யப்பட்ட நெய்யில் மிருகத்தின் கொழுப்பு மற்றும் மீன் எண்ணெய் கலக்கப்பட்டுள்ளது என்ற ஒரு புதிய புகாரை ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தெரிவித்திருந்தார். அதற்கு முழுப் பொறுப்பு ஜெகன்மோகன் ரெட்டி தான் என சந்திரபாபு நாயுடு பேசியது நாடு முழுவதும் பெரிய சர்ச்சையைக் கிளப்பியது.

இந்த விவகாரம் குறித்து விசாரணை எதையும் நடத்தாமல் நாயுடு பேசியது பற்றி பலரும் கேள்வி எழுப்பி நிலையில் இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடத்தி வரும் உச்சநீதிமன்றம் லட்டின் ஆய்வு அறிக்கையில் மிருகத்தின் கொழுப்பு கலக்கப்பட்டதற்கான ஆதாரங்கள் தெளிவாக இல்லை என்றும் கூறி சந்திரபாபு நாயுடுவின் கருத்திற்குக் கண்டனம் தெரிவித்துள்ளது

இந்நிலையில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் ஆந்திர சுற்றுலா, கலாச்சாரம் மற்றும் இளைஞர் மேம்பாட்டு அமைச்சரான ரோஜா அவர்கள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவின் புகாரில் எவ்வளவு முரண்பாடுகள் உள்ளன என்பதைப் புட்டுப் புட்டு வைத்துள்ளார்.

மதுரையில் ரோஜா செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்தார். அப்போது, “நான் ஒரு மாதம் முன்பாக தான் திருப்பதி லட்டு சாப்பிட்டேன். நல்ல ருசியாக இருந்தது. கோயில் பிரசாதங்களில் திருப்பதி லட்டை அடித்துக் கொள்ளும் அளவுக்கு வேறு ஒன்றும் கிடையாது. லட்டை வைத்து சந்திரபாபு நாயுடு அழுக்கான அரசியலைச் செய்து வருகிறார்.

சந்திரபாபு நாயுடுவுக்குக் கடவுள் மீது நம்பிக்கை இல்லை. கடவுள் மீது பயம் இல்லை. அவர் சுயநலத்திற்காக யாரை வேண்டுமானாலும் பலி கொடுக்க தயாராக இருப்பார். இப்போது ஓட்டுப் போட்ட மக்களையே பலி கொடுக்க துணிந்துவிட்டார். அவர் ஆட்சிக்கு வந்து 100 நாட்கள் ஆகிவிட்டன. இதுவரை அவர் வாக்குறுதி அளித்த ஒரு திட்டத்தையும் நிறைவேற்றவே இல்லை. ஆந்திராவில் வந்த மழை வெள்ளத்தில் சிக்கி பலர் இறந்துவிட்டனர். அதற்கு சந்திரபாபு நாயுடுவின் அஜாக்கிரதையே காரணம்.

விசாகப்பட்டினத்தில் உள்ள இரும்பு தொழிற்சாலையைத் தனியாருக்குத் தர சந்திரபாபு நாயுடு இருக்கிறார். அதனால் ஆயிரக்கணக்கானவர்கள் வேலை இழக்க உள்ளனர். இதனால் சந்திரபாபு நாயுடு ஆட்சி மீது மக்கள் அதிருப்தியில் உள்ளனர். அதை மறைக்கத்தான் இந்த லட்டு நாடகம். அவர் பக்தி இல்லாதவர். எந்த பூஜை நிகழ்ச்சிகளிலும் ஷு போட்டுக் கொண்டுதான் பூஜை செய்வார். விஜயவாடாவில் கிருஷ்ணா புஷ்கரா என்று சொல்லிப் பல கோயில்களை உடைத்துத் தள்ளியவர் நாயுடு. அவர் நடத்திய துர்கா பூஜை பற்றி பெரிய சர்ச்சையே வந்தது.

திருப்பதியில் தயாரிக்கப்படும் லட்டு சில நாட்களில் விற்பனையாகிவிடும். எங்கள் ஆட்சி முடிந்து இத்தனை மாதங்களாகிவிட்டது. அப்போது நெய்யில் என்ன கலந்தார்கள் என்று இப்போது எப்படிக் கண்டுபிடித்தார் நாயுடு? ஜூலை மாதம் 17 -ஆம் தேதிதான் நெய் கண்டெய்னர் வந்தது. அதைச் சோதனைக்கு அனுப்பினார்கள். 23 -ஆம் தேதி அறிக்கை வந்தது. அந்த அறிக்கையில் லட்டில் வனஸ்பதி மாதிரி சைவ எண்ணெய்தான் கலக்கப்பட்டுள்ளது. அதனால் 2 நெய் கண்டெய்னரை திருப்பி அனுப்பிவிட்டோம் என்று நாயுடு அரசு சொல்லி இருக்கிறது.

ஜூன் மாதமே சந்திரபாபு நாயுடு முதலமைச்சராகப் பதவியேற்றுவிட்டார். அவர் ஆட்சியில் உடனே திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் நியமிக்கப்பட்டு விட்டனர். 2014 முதல் 19 வரை 15 முறை நெய் கண்டெய்னர் திருப்பி அனுப்பப்பட்டுள்ளது. ஜெகன்மோகன் முதலமைச்சராக இருந்தபோது 18 முறை நெய் லாரியை சோதனைக்குப் பின் திரும்ப அனுப்பி இருக்கிறோம். வனஸ்பதி ஆயில் அல்லது டால்டா எனச் சின்ன அளவில் கலப்படம் இருந்தால் கூட கோயில் நிர்வாகம் உடனடியாக அதை நிராகரித்துவிடும். இது வழக்கமான நடவடிக்கைதான்.

ஆந்திர அரசாங்கத்திற்குச் சொந்தமான டிடிடி லேப் பரிசோதனையில் வனஸ்பதி என வந்த ஆய்வு அறிக்கையைத் தாண்டி சந்திரபாபு நாயுடு குஜராத் போய் நெய்யைப் பரிசோதனை ஏன் செய்ய வேண்டும்? பல ஆண்டுகளாக இங்கேதானே பரிசோதனை நடக்கிறது? இந்தியாவில் பல லேப் உள்ளது. ஏன் குஜராத் போனார். அதுவும் அரசாங்க லேப் இருக்கும் போது ஏன் தனியார் லேப் பரிசோதனைக்கு நாயுடு நெய்யை அனுப்பினார்? அதன் உள்நோக்கம் என்ன? எனவே அது ஒரு பொய்யான அறிக்கை. என்னிடம் ஆந்திரா தனி மாநிலமாகப் பிரிக்கப்பட்டது முதல் நெய் கொள்முதல் செய்த அறிக்கை இருக்கிறது.

2014-இல் அக்டோபர் மாதம் மட்டும்தான் நந்தினி கம்பெனிக்கு நெய் ஒப்பந்தம் கொடுக்கப்பட்டுள்ளது. அப்போது முதலமைச்சர் நாயுடுதான். 2015-க்குப் பிறகு நந்தினி நிறுவனத்திடம் நாயுடு ஒருமுறை கூட நெய் கொள்முதல் ஒப்பந்தத்தைக் கொடுக்கவே இல்லை. ஆனால், இப்போது நந்தினியிடம் கொடுக்காமல் குறைந்த விலைக்கு ஜெகன்மோகன் ரெட்டி டெண்டர் விட்டதுதான் பிரச்சினை என ரோஜா தெரிவித்தார்.

மேலும் ரோஜா பேசுகையில், திருப்பதி ஏழுமலையான் தேவஸ்தானமே வனஸ்பதி கலந்த நெய்யைப் பயன்படுத்தவில்லை எனப் பத்திரிகை செய்தி வெளியிட்டு 2 மாதங்கள் கழித்து நெய்யில் மிருக கொழுப்பு கலந்துவிட்டது என முதலமைச்சர் நாயுடு சொல்கிறார்.

இது எவ்வளவு பெரிய பொய்? திருப்பதியில் லட்டு மட்டும் நெய்யில் தயாராகவில்லை. சர்க்கரைப் பொங்கல், சாம்பார் சாதம் எனப் பல பிரசாதங்களில் ஒரே நெய்தான் பயன்படுத்தப்படுகிறது. அதில் எல்லாம் ஏன் கொழுப்பு கலக்கவில்லை? நெய்க்கு மட்டும் எப்படி தனியாகப் போய் கலந்தது? ஒரு பொய்க்காக எத்தனை பொய் சொல்கிறார் நாயுடு?

இது முழுக்க முழுக்க திருப்பதி ஏழுமலையான் தேவஸ்தான கட்டுப்பாட்டில் உள்ள விசயம். அந்த நிர்வாகம் தனி என்று சந்திரபாபு நாயுடு மகன் லோகேஷ் கூறியுள்ளார். ஜெகன் ஆட்சியில் தவறு நடந்திருந்தால் உச்சநீதிமன்றத்தில் விசாரணை தேவை என எப்படி நாங்கள் கேட்போம்? சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று எப்படிக் கேட்க முடியும்?” போன்ற கேள்விகளை ரோஜா ஆதாரங்களுடன் அடுக்கி கொண்டே போனார்.

கடவுளை அரசியலில் இருந்து தள்ளிவையுங்கள்..! சந்திரபாபு நாயுடுவுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்

திருப்பதி ஏழுமலையான் லட்டில் விலங்கு கொழுப்பு கலக்கப்பட்டதாக கூறப்படும் விவகாரத்தில் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவுக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்தது. லட்டில் விலங்கு கொழுப்பு கலந்ததாக தெளிவான ஆதாரங்கள் இல்லாமல் குற்றம் சாட்டியது ஏன்? கடவுளை அரசியலில் இருந்து தள்ளிவையுங்கள் என்று நீதிபதிகள் கூறினர்.

ஆந்திர மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்களுக்கு வழங்கப்பட்ட லட்டு பிரசாதத்தில் முன்னாள் முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சி காலத்தில் விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்டதாக முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார். மேலும் விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்டதற்கான ஆதாரங்கள் வெளியான நிலையில் விவகாரத்தில் உண்மை தன்மையை கண்டறியக் கோரியும், உச்ச நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை குழு அமைக்க உத்தரவிடக்கோரி இதுவரை ஐந்து பொதுநல மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தனித்தனியாக தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மேற்கண்ட விவகாரத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அனைத்து மனுக்களும் உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் பி.ஆர் கவாய் மற்றும் கே.வி விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது சுப்பிரமணிய சாமி உட்பட மனுதாரர்கள் தரப்பு வாதத்தில்,” திருப்பதி லட்டு விவகாரம் என்பது பலகோடி பக்தர்களின் நம்பிக்கை சார்ந்தது ஆகும். அதில் விலங்குகளின் கொழுப்பு கலப்படம் செய்யப்பட்டுள்ளது என்று பொதுவெளியில் கூறுவது என்பது மதநல்லிணக்கத்தை கெடுக்கும் வகையிலானது.

உணர்வுபூர்வமான விவகாரம் தொடர்பாக பொதுவெளியில் இவ்வாறான பொறுப்பற்ற கருத்தை ஏன் கூற வேண்டும்?. பிரசாதம் தொடர்பாக சந்தேகம் இருந்தால் அது ஆய்வுக்கு உடபடுத்தப்பட வேண்டுமே தவிர, ஒரு உயர்ந்த பொறுப்புள்ள பதவியில் இருப்பவர் பொறுப்பற்ற ஒரு கருத்தை கூறுவது ஏற்புடையது கிடையாது.

நிராகரிக்கப்பட்ட பிரசாதம் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டதா?. இந்த விவகாரத்தில் அரசின் தலையீட்டை அனுமதிக்கலாமா? குறிப்பாக இந்த பிரசாதம் விவகாரத்தை விசாரிக்க சிறப்பு விசாரணைக்குழு அமைக்கபட்டுள்ள போது ஏன் பொது வெளியில் சென்று பத்திரிகைகளிடம் கருத்தை தெரிவிக்க வேண்டும். என தெரிவித்தார். அப்போது குறுக்கிட்ட மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, ‘‘ இந்த விவகாரம் என்பது நம்பிக்கை, உணர்வு சார்ந்த விவகாரம், எனவே இந்த குற்றச்சாட்டு தொடர்பாக விசாரிக்க வேண்டும் என பேசினார்.

ஆந்திர மாநில அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘‘திருப்பதி ஏழுமலையான் லட்டு தயாரிக்க பயன்படுத்தப்படும் நெய்யினை வாங்குவதற்காக தனியார் நிறுவனங்களிடம் ஒப்பந்தம் போடப்பட்டது. இதையடுத்து லட்டின் தரம் குறித்து தொடர்ந்து புகார்கள் வந்து கொண்டே இருந்தது. குறிப்பாக இந்த விவகாரத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள எந்த மனுக்களும் அனுமதிக்கபட்டவை கிடையாது. சுப்பிரமணிய சாமி எப்படி திருப்பதி ஏழுமலையான் தேவஸ்தானம் சார்பாக மனு தாக்கல் செய்ய முடியும்.

இதற்கு யார் அனுமதி கொடுத்தார்கள் என்பது தெரியவில்லை என பேசினார். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், ‘‘கலப்பட நெய் தான் பிரசாதம் தயாரிக்க பயன்படுத்தப்பட்டது என்பதை உறுதி செய்து விட்டீர்களா என்று மீண்டும் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு விசாரணை நடந்து கொண்டிருக்கிறது என்று ஆந்திரா அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. அப்போது கடும் அதிருப்தி அடைந்த நீதிபதிகள், அப்படி என்றால் அதற்குள் ஊடகங்கள் இடம் செல்ல வேண்டிய அவசியம் என்ன நீங்கள் மத நம்பிக்கைகளை உதாசீதன செய்துள்ளீர்கள் காட்டமாக கூறினார்கள்.

நீதிபதிகள் தொடர்ந்து பேசுகையில், இந்த விவகாரத்தில் சிறப்பு விசாரணை குழு முடிவு வெளிவரும் வரை பொறுமை காக்காமல் பத்திரிக்கையாளர் சந்திப்பில் தெரிவித்தது தவறானதாகும். இந்த விவகாரம் எனபது ஒரு லட்சம், இரண்டு லட்சம் பக்தர்களை சார்ந்த்து கிடையாது. கோடான கோடி பக்தர்களின் உணர்வுகளை சார்ந்ததாகும். எனவே இதில் அரசியல் செய்திருக்க கூடாது. நெய்யில் விலங்கு கொழுப்பு கலக்கப்பட்டது தொடர்பான ஆய்வகங்களில் ஆய்வறிக்கை தெளிவில்லாமல் இருக்கிறது.

அப்படி இருக்கும் போது, இப்படி ஒரு குழப்பத்தை ஏற்படுத்தக் கூடிய ஒரு விஷயத்தை ஊடகங்களுக்குச் சென்று இந்த சொல்ல வேண்டிய அவசியம் என்ன? மேலும் அந்த நெய் தான் பிரசாதம் தயாரிக்க பயன்படுத்தப்பட்டதா என்பதற்கு தற்போது வரையில் தெளிவு இல்லை. இது சம்பந்தமான ஆய்வு முடிவுகள் ஜூலை மாதத்தில் வந்த ஆய்வறிக்கையை, செப்டம்பர் மாதத்தில் ஊடகங்களில் முன்பு தெரிவித்தது ஏன்? இதற்கான உள்நோக்கம் என்ன?

அதுகுறித்த எதற்கும் தெளிவான பதில் இல்லையே. அப்படி இருக்கையில் ஆந்திர முதலமைச்சர் ஏன் இந்த தகவலை தெரிவிக்க வேண்டும் என்பது தான் எங்களது முக்கிய கேள்வியாக இருக்கிறது. இதுகுறித்த விளக்கம் எங்களுக்கு கட்டாயம் வேண்டும். எந்த ஆதாரமும் இல்லாமல் வைத்த குற்றச்சாட்டு தற்போது மிகப்பெரிய சிக்கல்களை ஏற்படுத்தி உள்ளது. . மேலும் இந்த விவகாரத்தில் பொதுவெளியில் கருத்து தெரிவித்தால் பக்தர்களின் உணர்வுகளை பாதிக்கும் என்பதை ஏன் ஆந்திர முதலமைச்சர் அறிந்திருக்கவில்லை. இதுபோன்ற செயல்பாடுகள் சிறப்பு விசாரணை குழுவின் புலன்விசாரணையை பாதிக்கும் என்பதை கூடவா அவர் தெரிந்திருக்கவில்லை. இது மிகவும் அதிர்ச்சியாக இருக்கிறது.

இருப்பினும் இந்த வழக்கை நாங்கள் வரும் 3-ஆம் தேதி அதாவது வியாழக்கிழமைக்கு ஒத்திவைக்கிறோம். அதற்குள் இந்த விவகாரத்தில் அரசு நியமித்துள்ள சிறப்பு புலனாய்வு விசாரணை நடத்த வேண்டுமா அல்லது வேறு குழு அமைக்க வேண்டுமா என்பது குறித்து மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரலின் கருத்து தெரிவிக்க வேண்டும். அதனைத்தொடர்ந்து வழக்கு குறித்து முடிவெடுக்கப்படும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

ஆந்திர தொடர் மழையால் 2 லட்சம் ஏக்கர் பயிர்கள் நாசம்..!

நமது அண்டை மாநிலமான ஆந்திர மாநிலத்தில் கடந்த 4 நாட்களாக பெய்து வரும் தொடர் மழையால் விஜயவாடா நகரம் வெள்ளத்தில் மூழ்கியது. மேலும், குண்டூர், பல்நாடு, பிரகாசம், விசாகப்பட்டினம், நந்தியாலம், கோதாவரி மாவட்டங்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் வெள்ள பாதிப்புகள் குறித்து ஆந்திர அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஆந்திர மாநிலத்தில் வெள்ளத்தில் சிக்கி இதுவரை 20 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் என்டிஆர் மாவட்டத்தில் மட்டும் 12 பேர் இறந்துள்ளனர். இதையடுத்து குண்டூர் மாவட்டத்தில் 7 பேரும் பல்நாடு மாவட்டத்தில் ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.

ஆந்திர மாநிலம் முழுவதும் 1,69,370 ஏக்கர் உணவுப் பயிர்கள் நாசம் அடைந்துள்ளன. 18,424 ஏக்கர் பரப்பளவில் பூச்செடிகள் நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. இதனால் 2.34 லட்சம் விவசாயிகள் நஷ்டம் அடைந்துள்ளனர். வெள்ளத்தால் 6.44 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 42,702பேர் 193 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களின் ஆட்சியர்கள் மற்றும் அதிகாரிகளுடன் முதல்மைச்சர் சந்திரபாபு நாயுடு நேற்று ஆலோசனை நடத்தினார். அப்போது சந்திரபாபு நாயுடு கூறுகையில், “வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களில் 24 மணி நேரமும் மருத்துவ முகாம் இருப்பது அவசியம். ஒவ்வொரு குடும்பத்துக்கும் இலவசமாக தலா 25 கிலோ அரிசி, ஒரு லிட்டர் பாமாயில், 2 கிலோ வெங்காயம், 2 கிலோ உருளைக்கிழங்கு மற்றும் ஒரு கிலோ சர்க்கரையை உடனடியாக வழங்கிட வேண்டும். வெள்ளத்தால் உயிரிழந்த குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சம் நிதியுதவி உடனே வழங்கிட வேண்டும்” என சந்திரபாபு நாயுடு தெரிவித்தார்.

ஆந்திரா கனமழை எதிரொலி ‘ஆரஞ்சு’ எச்சரிக்கை..! ஹெலிகாப்டர் மூலம் உணவு, மருந்து விநியோகம்..!

ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் கடந்த 3 நாட்களாக பெய்து வரும் கன மழையின் காரணமாக வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதன் காரணமாக, ஆந்திராவின் ல் விஜயவாடா வெள்ள மாறியுள்ளது. மேலும் பிரகாசம் அணையின் மதகு, வெள்ளத்தில் சேதமடைந்ததால் அணையில் இருந்து அதிக அளவு தண்ணீர் வெளியேறி வருகிறது. கனமழை காரணமாக செல்போன் டவர்கள் செயலிழந்தது மட்டுமின்றி மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. ஆகையால் பல லட்சம் பேர் வீடுகளை விட்டு வெளியே வரமுடியாத சூழலைக்கு தள்ளப்பட்டு, விஜயவாடா மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகள் அனைத்தும் இருளில் மூழ்கியுள்ளன.

மேலும் ஆந்திராவில் கிருஷ்ணா, பிரகாசம், குண்டூர், விசாகப்பட்டினம், நந்தியால், கோதாவரி மாவட்டங்கள் மழையால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. படகுகள் மூலம் தாழ்வான பகுதிகளில் இருந்து மக்கள் வெளியேற்றப்பட்டு, திருமண மண்டபங்கள், பள்ளி, கல்லூரிவளாகங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு அங்கு உணவு வழங்கப்படுகிறது. இந்நிலையில், நேற்று மேலும் ஆந்திராவின் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்தது. மீட்பு, நிவாரண பணிகள் போர்க்கால அடிப்படையில் நடந்து வருகின்றன.

நேற்று காலை முதல் இன்று அதிகாலை 2 மணி வரை ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு மீட்பு குழுவினருடன் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார். ஆந்திராவில் ஏற்பட்டுள்ள பெரும் வெள்ளத்தை தேசிய பேரிடராக அறிவித்து அதற்கான நிதி உதவியை மத்திய அரசு வழங்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

விஜயவாடா மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் சந்தித்த சந்திரபாபு நாயுடு, ‘‘கடந்த 5 ஆண்டு ஜெகன் ஆட்சியில் நடந்த அலட்சியப்போக்கும், முரண்பாடான ஆட்சியும்தான் இந்த வெள்ளத்துக்கு காரணம். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கடைசி நபரை மீட்டெடுத்து, இயல்பு வாழ்க்கை திரும்பும் வரை நான் ஆட்சியர் அலுவலகத்தில்தான் இருப்பேன். இதை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டுமென பிரதமர் மோடியிடமும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது’’ என தெரிவித்தார். வெள்ளத்தில் சிக்கிய மக்களுக்கு ஹெலிகாப்டர், ட்ரோன் மூலம் உணவு, மருந்து பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

மீண்டும் அண்ணா உணவகத்தை திறந்து வைத்த சந்திரபாபு நாயுடு..!

நாட்டின் 78-வது சுதந்திர தினம் நேற்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, பிரதமர் நரேந்திர மோடி செங்கோட்டையிலும் மற்ற முதலமைச்சர்கள் அவரவர் கோட்டையில் தேசிய கொடி ஏற்றினர். அதனைத்தொடர்ந்து, ஆந்திரா முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு ஒரு வேளைக்கு ரூ.5-க்கு உணவு வழங்கும் அண்ணா உணவகத்தை என்டிஆர் மாவட்டம், குடிவாடாவில் நேற்று திறந்து வைத்தார்.

சுதந்திர தினமான நேற்று ஆந்திர மாநிலம், என்டிஆர் மாவட்டம், குடிவாடாவில் அண்ணா உணவகத்தை முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு திறந்து வைத்தார். பின்னர், ஏழைகளுக்கு சந்திரபாபு நாயுடுவும், அவரது மனைவியும் உணவு பரிமாறினர். மேலும், அவர்களுடன் சந்திரபாபு நாயுடு, அவரது மனைவி புவனேஸ்வரி, அமைச்சர்கள், எம்பி, எம்எல்ஏக்கள், மாவட்ட ஆட்சியர், அதிகாரிகள் என அனைவரும் உணவருந்தினர்.

அப்போது, சந்திரபாபு நாயுடுவுடன் உணவருந்திய 10 ஏழை மக்களிடம் உள்ள பிரச்சினைகளை சந்திரபாபு நாயுடு கேட்டறிந்து, அவர்களுக்கு உடனடியாக உதவும்படி மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டார். ஆந்திர மாநிலம் முழுவதும் முதற்கட்டமாக 100 இடங்களில் அண்ணா உணவகங்கள் செயல்படும் என்றும், படிப்படியாக செப்டம்பர் இறுதிக்குள் ஆந்திராவில் 203 அண்ணா உணவகங்கள் செயல்படும் எனவும் சந்திரபாபு நாயுடு தெரிவித்தார்.

தமிழகத்தில் உள்ள அம்மா உணவகத்தை போல், ஆந்திராவிலும் அண்ணா உணவகங்களை அமைக்க வேண்டுமென விரும்பிய சந்திரபாபு நாயுடு, கடந்த 2014-ல் ஆட்சிக்கு வந்ததும் ஆந்திராவில் 203 இடங்களில் அண்ணா உணவகங்களை தொடங்கினார். இதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. ஆனால், சில மாதங்களிலேயே தேர்தல் வந்து, ஜெகன்மோகன் ரெட்டி முதல்வரானார். அவர் அண்ணா உணவகங்களை மூட உத்தரவிட்டார். அதையும் மீறி, யாராவது நடத்தினால், அவர்கள் மீது காவல் துறைநடவடிக்கை எடுத்தது. இதனால், ஆந்திராவில் அண்ணா உணவகங்கள் மூடுவிழா கண்டது.

சந்திரபாபு நாயுடு வாக்குறுதி: 50+ வயது பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு மாதம் ரூ.4,000’..!

ஆந்திர மாநிலத்தில் சட்டப்பேரவையில் மொத்தமுள்ள 175 சட்டசபைத் தொகுதிகள் மற்றும் 25 மக்களவைத் தொகுதிகள் ஒரே கட்டமாக மே 13-ம் தேதி வாக்குப்பதிவு தொடங்கி ஜூன் 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கை எண்ணப்படுகிறது. இந்நிலையில், தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு சமூக வலைதளத்தில், பிற்படுத்தப்பட்ட மக்களின் நலனுக்காக போராடி உயிர் துறந்தவர் மகாத்மா ஜோதிராவ் பூலே.

அவரின் 197-வது ஜெயந்தி விழாவையொட்டி, அவரது உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினேன். ஜோதிராவ் பூலேவின் கனவுகள் நனவாக, தெலுங்கு தேசம் கட்சி ஆட்சி அமைத்ததும், பிற்படுத்தப்பட்டோரின் நலன்களைக் காக்க பல்வேறு திட்டங்களை அமல்படுத்துவோம். 50 வயது நிரம்பிய பிற்படுத்தப்பட்ட மக்கள் அனைவருக்கும் மாதந்தோறும் ரூ.4,000 உதவித் தொகை வழங்கப்படும்.

ரூ.1.50 லட்சம் கோடியில் பி.சி. சப்-பிளான் திட்டம் அமல்படுத்தப்படும். சொந்த தொழில் புரிய 5 ஆண்டுகளில் ரூ.10 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்படும். சந்திரண்ணா பீமா திட்டம் மீண்டும் அமல்படுத்தப்படும். சட்டப்பேரவையில் பி.சி.க்கு 33 சதவீத இடஒதுக்கீடு அமல்படுத்தப்படும். பி.சி.க்கு நிரந்தர சாதி சான்றிதழ் வழங்கப்படும் என சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.

சந்திரபாபு நாயுடு தெலுங்கு தேசம் கட்சி கூட்டணி அமைத்தால் மட்டுமே ஆட்சி கட்டிலில் ஏறமுடியும்…!

தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு மங்களகிரியில் உள்ள தனது கட்சி அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகளுடன் நேற்று முன்தினம் ஆலோசனை நடத்தினார். இதில் எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரும் பட்சத்தில், தேசிய ஜனநாயக கூட்டணி அரசுக்கு ஆதரவாக வாக்களிக்கலாமா? அல்லது எதிராக வாக்களிக்கலாமா? என விவாதிக்கப்பட்டது. அப்போது, சந்திரபாபு நாயுடு பேசுகையில், ‘கடந்த 2019-ம் ஆண்டு நரேந்திர மோடி அரசு மீது முதன்முறையாக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்த கட்சி தெலுங்கு தேசம் கட்சிதான்.

ஆனால், தற்போது அவர்களுக்கு வலிய ஆதரவு கொடுத்தாலும் அவர்கள் நம்மை கண்டுகொள்ளாமல் புறக்கணிக்கின்றனர். அவர்களது நிலைப்பாடு தெளிவாக தெரியவில்லை. ஆந்திராவில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி வலுவாக உள்ளது. எனவே, தெலுங்கு தேசம் கட்சி கூட்டணி அமைத்தால் மட்டுமே ஆட்சி கட்டிலில் ஏறமுடியும். வரும் தேர்தலில் வெற்றி பெறாவிட்டால் அதன்பிறகு வரும் எந்த தேர்தலிலும் நிற்க மாட்டேன். 2024-ம் ஆண்டு நடைபெறும் தேர்தலில் கட்சி அரியணை ஏறாவிட்டால் இனி, எந்த தேர்தலிலும் தான் போட்டியிட போவதில்லை’ என்றார்.2024-ம் ஆண்டு நடைபெறும் தேர்தலில் தனது கட்சி அரியணை ஏறாவிட்டால் இனி, எந்த தேர்தலிலும் தான்போட்டியிட போவதில்லை என சந்திரபாபு நாயுடு தெரிவித்தார்.