சீமான்: கோயில் கருவறை நாம் உருவாக்கியது..! தாயின் கருவறை நம்மை உருவாக்கியது..!

கோயிலில் ஒரு கருவறை இருக்கிறது அது நாம் உருவாக்கியது; தாயிடம் ஒரு கருவறை இருக்கிறது, அது நம்மையே உருவாக்கியது என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.

இதுகுறித்து சீமான் தனது எக்ஸ் பக்கத்தில், நாம் தமிழர் கட்சிநமக்கு உயிர் கொடுக்கும் தாய்மையை கொண்டாடும் விதமான அன்னையர் தினம் ஒவ்வொரு வருடமும் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், இந்தாண்டு அன்னையர் தின மே 11-ந் தேதி இன்று கொண்டாடப்படுகிறது.

சொர்க்கம் என்பது தாயின் காலடியில் இருக்கிறது!’ என்கிறார் நபிகள் நாயகம்!

ஒரு குழந்தையின் முதல் ஆசிரியர் தாய்தான்!

ஈன்ற தாய்க்கு ஒப்பாக இவ்வுலகில் எதுவுமே இல்லை!

எல்லோருடைய இடத்தையும் தாய் நிரப்பிவிடுகிறாள்!

ஆனால், தாயின் இடத்தை எவராலும் நிரப்பிவிட முடியாது!

மனிதனுக்கு மட்டுமல்லாது, உலகில் உள்ள எல்லா உயிரினங்களுக்கும் பொதுவானதாக இருக்கும் புனித உறவு தாய் மட்டும்தான்!

இந்த உலகில் நீ எவ்வளவு பெரிய உயரத்திற்குப் போனாலும் உன்னைக் கண்டு பொறாமைப்படாத ஒரேயொரு உயிர் உண்டென்றால், அது உன்னைப் பெற்ற தாய்தான்!

வார்த்தைகள் இல்லாமல் பேசினேன்!

கண்கள் இல்லாமல் பார்த்தேன்!

காற்று இல்லாமல் சுவாசித்தேன்!

கவலையில்லாமல் வாழ்ந்தேன்!

என் தாயின் கருவறையில்!

கோயிலில் ஒரு கருவறை இருக்கிறது அது நாம் உருவாக்கியது; தாயிடம் ஒரு கருவறை இருக்கிறது, அது நம்மையே உருவாக்கியது!

அதனால்தான் உலகப் பந்தங்கள் எல்லாவற்றையும் துறந்து, துறவியான பட்டினத்தடிகளார் கூட, தாய்ப்பாசத்தை மட்டும் துறக்க முடியாமல்,

‘ஐயிரண்டு திங்களாய் அங்கமெலாம் நொந்து பெற்றுப்

பையலென்ற போதே பரிந்தெடுத்துச் செய்ய இரு

கைப்புறத்தில் ஏந்திக் கனகமுலை தந்தாளை

எப்பிறப்பில் காண்பேன் இனி’ என்று உருகுகிறார்.

அன்னையைப் போலொரு தெய்வமில்லை;

அவர் அடிதொழ மறப்பவர் மண்ணில் மனிதரில்லை!

நேரில் நின்று பேசும் தெய்வம் பெற்ற தாயன்றி வேறு ஏது?

தாய்மையைப் போற்றுவோம்!

தாய்மையை வணங்குவோம்!

நம் தாய்மார்கள் அனைவருக்கும் அன்பு நிறைந்த அன்னையர் நாள் வாழ்த்துகள்! என சீமான் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

சிதம்பரம் நடராஜர் கோயில் நிலத்தை வித்துட்டாங்க ஆதாரங்களுடன் உயர் நீதிமன்றத்திற்கு ஓடிய தமிழக அரசு..!

சோழர்களால் கட்டப்பட்ட சிதம்பரம் நடராஜர் கோயிலில், புவியியல், கட்டிட அமைப்பு, அறிவியல், மருத்துவவியல் குறித்த ஆச்சர்யங்களை பெரும்பாலான மக்கள் சிதம்பர ரகசியம் என கூற இன்னும் ஒரு சிலர் சிதம்பரம் கோயிலுக்குள் யாருக்கும் தெரியாத விலைமதிக்க முடியாத பொக்கிஷங்கள் இருப்பதாகவும் அவையே சிதம்பர ரகசியம் என கூறி வருகின்றனர். இந்த வரிசையில் நடராஜர் கோயில் நிலங்களை தீட்சிதர்களை விற்பனை செய்த ரகசியத்தை ஆதாரங்களுடன் உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு அம்பலப்படுத்தி உள்ளது.

சிதம்பரம் நடராஜர் கோயில் நிர்வாகத்தை, கோயில் தீட்சிதர்கள் ஏற்று நிர்வகித்து வருகின்றனர். இதில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்று வருகிறது. கோயில் வருமானத்தை தீட்சிதர்கள் சரியாக காண்பிக்கவில்லை. கோயிலுக்கு வரும் பக்தர்களை தீட்சிதர்கள் மதிப்பதில்லை. கோயில் கணக்கு வழக்குகளில் முறைகேடு உள்ளது. கோயிலில் தேவாரம், திருவாசகம் பாட அனுமதிப்பில்லை என பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதுதொடர்பாக அவ்வப்போது நீதிமன்றத்தில் வழக்கும் தொடுக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

திருவிழா நேரங்களில் கோயில் கனகசபை மீது பக்தர்களை ஏற்றாமல், தீட்சிதர்கள் தங்களது குழந்தைகளுக்கு குழந்தை திருமணம் செய்வது போன்ற குற்றச்சாட்டுகளும் எழுந்து அதுகுறித்த வழக்குகளும் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் ராதாகிருஷ்ணன் என்பவர் ஒரு மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், ‘சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு சொந்தமாக தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களிலும், புதுச்சேரியில் காரைக்கால் மாவட்டத்திலும், 3 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் உள்ளது. இந்த நிலங்களை பொது தீட்சிதர்கள், முறையாக பராமரிக்கவில்லை என்பதால் அவற்றை மீட்டு பாதுகாக்க வேண்டும்.

இதுதொடர்பாக முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு புகார் அனுப்பி உள்ளேன். அந்த புகார் கடலூர் ஆட்சியருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில், மாவட்ட ஆட்சியர் விசாரணை கூட்டம் கூட்டிய போதும், அதன்பின் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு சொந்தமான நிலங்களை மீட்க உத்தரவிட வேண்டும்’ என்று குறிப்பிட்டு இருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி தண்டபாணி, மிகப்பெரிய அளவில் அதிர்ச்சியளிப்பதாகவும் கடந்த 2017-18 முதல் 2021-22 வரையிலான வரவு செலவு கணக்கு புத்தகங்களைத் தீட்சிதர்கள் தாக்கல் செய்ய வேண்டும்.

பக்தர்கள் அளிக்கும் காணிக்கைகள், செலவுகள் குறித்து கணக்கு வைப்பதற்கான நடைமுறையை உருவாக்கி, அதன் வரைவு அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும். கோயிலுக்குச் சொந்தமாக தற்போது எவ்வளவு ஏக்கர் நிலம் உள்ளது என்பது குறித்து தாசில்தார் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். அத்துடன் கோயிலுக்குச் சொந்தமான 2 ஆயிரம் ஏக்கர் நிலங்களைத் தீட்சிதர்கள் தனிநபர்களுக்கு விற்பனை செய்தது தொடர்பான விவரங்களை ஆவணங்களுடன் அறநிலையத்துறை அறிக்கையாகத் தாக்கல் செய்ய வேண்டும். கோயிலுக்கு சொந்தமான நிலங்களை மீட்கக் கடலூர் மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கடந்த 5-ஆம் தேதி உத்தரவிட்டார்.

மேலும், இந்த வழக்கு கடந்த 24-ஆம் தேதி மீண்டும் விசாரனைக்கு வந்தது. அப்போது அறநிலையத்துறையினர் சார்பில் சிதம்பரம் நடராஜர் கோயில் நிலத்தை தீட்சிதர்கள் விற்பனை செய்ததற்கான ஒரு அறிக்கை ஆதாரங்களுடன் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. நடராஜர் கோயிலுக்கு சொந்தமாக சுமார் 3 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பல்வேறு இடங்களில் உள்ளது. கடலூர் மாவட்டத்தில் அதிக அளவில் நிலங்கள் இருந்தாலும், வேறு சில மாவட்டங்களிலும் இந்த கோயிலுக்கு சொந்தமான நிலங்கள் இருக்கிறது. இந்த நிலங்களில் சிலவற்றைதான் தீட்சிதர்கள் விற்று விட்டதாக தற்போது இந்து சமய அறநிலையத்துறை ஆதாரங்களுடன் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

இந்து சமய அறநிலையத்துறை சார்பில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அந்த அறிக்கையில், சிதம்பரம் நடராஜர் கோயில் நிலங்கள் தொடர்பாக விசாரணை நடத்த 09.03.1976-ம் ஆண்டு சிறப்பு தாசில்தார் தமிழக அரசால் நியமிக்கப்பட்டார். அவர் விசாரணை நடத்தி 23.8.1979-ல் ஓர் அறிக்கை தாக்கல் செய்தார். அதில் 295.93 ஏக்கர் நிலம் இருந்ததாக கூறப்பட்டுள்ளது. பின்னர் பொது ஏலம் மூலம் குத்தகைக்கு விடப்பட்டு, ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த 215.65 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டது.

இதன்மூலம் 506.97 ஏக்கர் நிலம் தற்போது சிறப்பு தாசில்தாரிடம் உள்ளது. தற்போது கோயிலுக்கும் சொந்தமாக 3,489.58 ஏக்கர் நிலம் உள்ளது. இதில் நஞ்சை நிலம் 2,594.40 ஏக்கரும், புஞ்சை நிலம் 895.18 ஏக்கரும் உள்ளது. கோயிலுக்கு நிலத்தை தானமாக எழுதி கொடுத்தவர்களின் வாரிசுகள் வசம் உள்ள 1,267.09 ஏக்கர் நிலத்தில் இருந்து கிடைக்கும் வருமானம் கோயிலுக்கும், தர்ம காரியங்களுக்கும் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் மீதமுள்ள 271.97 ஏக்கர் நிலங்களின் மூலமாக கிடைக்கும் வருமானம் கோயிலுக்கு செலுத்தப்படுவதில்லை. எழுதி வைத்தவர்களின் வாரிசுகளே அந்த சொத்துகளை அனுபவித்து வருகின்றனர்.

சிதம்பரம் அறநிலையத்துறை ஆய்வாளர் தாக்கல் செய்த அறிக்கையில், 1984-ஆம் ஆண்டு 113 கட்டளைகள் இருந்தன. கட்டளை நிலங்களை கட்டளைதாரர்கள் நிர்வகிக்கின்றனர். இவர்கள் தீட்சிதர்களின் நேரடி கட்டுப்பாட்டில் செயல்படுகின்றனர். அதேபோல கட்டளைதாரர்கள் கோயிலுக்கு வழங்க வேண்டிய தொகையை தீட்சிதர்கள் வசம் அளிக்கின்றனர். அதற்கு எந்த முறையான கணக்கு விவரங்களும் இல்லை. இந்த தகவலை சிறப்பு தாசில்தார் விசாரணை நடத்தியபோது கட்டளைதாரர்கள் தெரிவித்தனர்.

இதுதொடர்பாக பதிலளிக்க தீட்சிதர்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டது. ஆனால், அவர்கள் இதுதொடர்பான வழக்கு கடந்த 2017-ஆம் ஆண்டு முதல் நிலுவையில் இருந்து வருவதாக தெரிவித்துள்ளனர். கோயிலுக்கு சொந்தமான நிலங்களில் 1221 பேர் குத்தகைதாரர்களாக உள்ளனர். அவர்களிடம் இருந்து கடந்த 8 ஆண்டுகளில் ரூ.36 லட்சத்து 41 ஆயிரத்து 191 வசூலிக்கப்பட்டு உள்ளது. இவர்களுக்காக மின்கட்டணம் கடந்த 8 ஆண்டுகளில் 26 லட்சத்து 29 ஆயிரத்து 763 ரூபாயை சிறப்பு தாசில்தாரே செலுத்தி உள்ளார்.

சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு சொந்தமான 18.52 ஏக்கர் நிலங்கள் கடந்த 1974, 1985 மற்றும் 1988-ஆம் ஆண்டுகளில் தீட்சிதர்களால் மூன்றாவது நபர்களுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதற்கான பத்திரப்பதிவு சேத்தியாதோப்பு மற்றும் சிதம்பரம் எண். 1 இணை சார் பதிவாளர் அலுவலகங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலங்களை மீட்க எடுக்கும் நடவடிக்கைகளுக்கு பொது தீட்சிதர்கள் ஒத்துழைப்பு அளிப்பது இல்லை என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

இந்து முன்னணி குற்றச்சாட்டு: கோயில் விழாக்களை திட்டமிட்டு தடுக்க தமிழக அரசு முனைகிறது..!

திருநெல்வேலி தசரா சப்பரத் திருவிழாவை தடுக்கும் நோக்கில் தமிழக மின்சாரத்துறை செயல்படுகிறது’’ என இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை வடக்கு உச்சி மாரியம்மன் கோயில் தசரா சப்பரம் வீதி உலா வரும்போது மின்சார கம்பிகளில் பட்டு ஏதேனும் விபத்து ஏற்பட்டால் அதற்கு எந்த வகையிலும் நாங்கள் பொறுப்பல்ல என்று மின்சார வாரியம் கடிதம் கொடுத்துள்ளது. மேலும், பல ஆண்டு காலமாக வரும் சப்பரத்தின் உயரத்தைக் குறைக்க வேண்டும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற தசரா திருவிழாக்களில் ஒன்றான பாளையங்கோட்டை தசரா திருவிழாவில் 12 கோயில்களை சேர்ந்த சப்பரங்கள் ஒரு சேர திருவீதி உலா வந்து சூரசம்ஹாரம் நிகழ்வு நடப்பது தொன்று தொட்டு நடந்து வரும் திருவிழாவாகும். கடந்த ஒன்றாம் தேதி தொடங்கி மிக விமர்சையாக வழக்கம் போல் அனைத்து கோயில்களிலும் திருவிழா நடந்து வரும் சூழலில் நேற்று பாளையங்கோட்டை வடக்கு உச்சி மாரியம்மன் கோயில் தலைவருக்கு மின்வாரியத்தில் இருந்து கடிதம் மூலம் சப்பரத்தின் உயரத்தை குறைக்க வேண்டும் என்றும் ஏதேனும் விபத்து நிகழ்ந்தால் அதற்கு எந்த வகையிலும் நாங்கள் பொறுப்பல்ல என்றும் தெரிவித்துள்ளனர்.

லட்சக்கணக்கான மக்கள் திரண்டு நடத்தும் திருவிழாக்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டியது அரசின் அடிப்படைக் கடமை. அரசின் அனைத்து துறைகளும் இணைந்து செய்ய வேண்டிய வேலையை இதற்கு நாங்கள் பொறுப்பாக மாட்டோம் என்று குறிப்பிடுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இந்துக்கள் ஒற்றுமையாக வழிபடும் திருவிழாவை திட்டமிட்டு மறைமுகமாக அரசு இதுபோல் தடுக்க நினைக்கிறதோ என்ற ஐயம் மக்களிடையே எழுந்துள்ளது.

இந்து விரோத திமுக அரசு பொறுப்பேற்றதில் இருந்து தமிழகமெங்கும் பல கோயில் திருவிழாக்களில் சுவாமி தேரும் சப்பரங்களும் விபத்துக்குள்ளாவது அதிகமாக எண்ணிக்கையில் நடைபெற்று வருகிறது. இதற்கு அரசு இயந்திரங்கள் ஒன்றிணைந்து செயல்படாததே முழுமுதற் காரணமாகும். அதுபோல் ஏதேனும் விபத்துக்கள் நேர்ந்தால் நாங்கள் முன்பே சொல்லி விட்டோம் என்று தங்களை காப்பாற்றிக் கொள்வதற்காக மட்டுமே அரசு அதிகாரிகள் தயாராக உள்ளனர். தவிர எவ்வாறு திருவிழாக்களை சிறப்பாக நடத்த வேண்டும் என்று திட்டமிடுவதற்கு தயாராக இல்லையே என்று சந்தேகமும் மக்கள் மனதில் எழுந்துள்ளது.

பல பகுதிகளில் திருவிழாவின்போது நடக்கும் சிறுசிறு பிரச்சனைகளை சுட்டிக்காட்டி அத்திருவிழாக்களுக்கே தடை விதிக்கும் போக்கும் திமுக அரசிடம் அதிகமாக உள்ளது. சிவகங்கை மாவட்டம் கண்டதேவி திருக்கோயிலில் இரண்டு முறை நீதிமன்றம் சொன்ன பின்பும் திருவிழாவை நடத்துவதற்கு மாநில அரசும் மாவட்ட நிர்வாகமும் எந்த முனைப்பும் எடுக்காத நிலையில் மாநில அரசை நீதிமன்றம் கடுமையாக விமர்சித்த பின்பே அத்திருவிழாவினை மாவட்ட ஆட்சியர் முன்னின்று நடத்தினார்.

தமிழகத்தில் குறிப்பாக தென் மாவட்டங்களில் பல கோவில் திருவிழாக்களை சட்டம் ஒழுங்கு காரணம் காட்டி சாதி ரீதியாக பிரச்சினைகள் உள்ளதாகச் சொல்லி திருவிழாக்களுக்கு அனுமதி மறுத்து பின்பு மக்கள் நீதிமன்றம் சென்று அனுமதி பெற்று திருவிழா நடத்தும் சூழல் நிலவி வருகிறது. எந்த சூழ்நிலையிலும் என்ன பிரச்சினைகளாக இருந்தாலும் அதற்கு தகுந்த பாதுகாப்பு வழங்கி திருவிழாவினை நடத்த வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பல ஆண்டுகளாக கோயிலின் சப்பரம் இதே திருவீதிகளில் தான் உலா வருகிறது. இதுவரையில் எந்த பிரச்சினைகளும் நடக்காத நிலையில் இவ்வாண்டு சப்பரத்தின் அளவை குறைக்கச் சொல்லி மின்வாரியம் நோட்டீஸ் வழங்கி மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. நீதிமன்ற உத்தரவின் படி அங்குள்ள சாலைகளை சீரமைக்கும் போது பழைய சாலைகளை அகற்றாமல் அதற்கு மேலேயே மீண்டும் மீண்டும் புதிய சாலைகள் போடுவதால் தான் சாலை உயர்கிறது. இம்மாதிரியான விபத்துக்கள் நிகழும் சூழ்நிலை ஏற்படுகிறது.

இதற்கு சாலையை சுரண்டி விட்டு சாலை போடாமல், சப்பரத்தின் உயரத்தை குறைக்க சொல்லும் திராவிடம் மாடல் அரசினை இந்து முன்னணி வன்மையாக கண்டிக்கிறது. சமீபத்தில் விமானப் படையின் வான் சாகச நிகழ்ச்சியில் அரசு துறை நிர்வாகம் இணைந்து பணி செய்யாமல் 5 பேர் உயிரிழக்க காரணமாக ஆனது என்பதை சுட்டிக் காட்டுகிறோம். எனவே அதனை கவனத்தில் கொண்டு இத்திருவிழா வழக்கம் போல் சிறப்பாக நடைபெற அரசின் அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து ஒத்துழைப்பு வழங்கிட தமிழக அரசு ஆணையிட இந்து முன்னணி வலியுறுத்துகிறது” என காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

H. ராஜா: கோயிலில் கிரிக்கெட் விளையாடினா என்ன தப்பு..!? கர்ப்பகிரகத்திலா விளையாடினார்கள்…!?

கோயிலில் கிரிக்கெட் விளையாடினால் என்ன தப்பு.. கர்ப்பகிரகத்திலா விளையாடினார்கள் என தமிழக பாஜக ஒருங்கிணைப்புக் குழு தலைவர் H. ராஜா பேசி மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிதம்பரம் நடராஜர் கோயிலில் தீட்சிதர்கள் கிரிக்கெட் விளையாடியதை செல்போனில் படம் பிடித்ததால் தாக்கப்பட்டதாக விசிக நிர்வாகி காவல் நிலையில் போலீஸில் புகார் அளித்ததை தொடர்ந்து தீட்சிதர்கள் 5 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சிதம்பரம் அருகே உள்ள வல்லம்படுகை கிராமத்தைச் சேர்ந்த இளையராஜா. இவர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வல்லம்படுகை முகாம் செயலாளராக உள்ளார். இவர், சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு திங்கள்கிழமை இரவு சுவாமி தரிசனம் செய்ய சென்றுள்ளார். அப்போது, தீட்சிதர்கள் சிலர் கோயிலுக்குள் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. இதைப் பார்த்த இளையராஜா அவரது செல்போனில் வீடியோ எடுத்துள்ளார்.

இதையடுத்து, இளையராஜாவிடம் இருந்து தீட்சிதர்கள் செல்போனைப் பறித்து, அவரை திட்டியதுடன் தாக்கியதாவும் கூறப்படுகிறது. இந்த தாக்குதலில் காயமடைந்த இளையராஜா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். பின்னர், இச்சம்பவம் குறித்து சிதம்பரம் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதைத்தொடர்ந்து, கோயில் தீட்சிதர்களை கைது செய்யக் கோரி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் காவல் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், தீட்சிதர்கள் 5 பேர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து தமிழக பாஜக ஒருங்கிணைப்பு குழு தலைவர் H. ராஜா செய்தியாளர்கள் கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது, ஏன் கிரிக்கெட் விளையாடினா என்ன தப்பு. கர்ப்பக்கிரகத்தில் விளையாடினாங்களா. கிரவுண்டுல விளையாடலாம் இல்லையா.

நான் உடற்கல்வி பேராசிரியரின் மகன். என் தகப்பானரின் மூன்று ஆராய்ச்சி சப்ஜக்ட் லெஸிம், லாட்டி, மால்கம். மால்கம் என்பது தூண் வைத்து உடற்பயிற்சி செய்வது, லாட்டி சிலம்பம், லெஸிம் சலங்கை வைத்து செய்வது. இதெல்லாம் கற்றுக்கொண்டது தவறு என்று கூறுவீர்களா. உடற்பயிற்சி, விளையாட்டு என்பது எல்லோரும் செய்ய வேண்டும். இதில் எந்தவொரு தப்பும் இல்லை என H. ராஜா கேள்வி எழுப்பி மேலும் இந்த விஷயத்தை பரப்பாக்கியுள்ளார்.