அரசு வேலை வாங்கித் தருவதாக பண மோசடி செய்த ஆயுதப்படை காவலர் கைது..!

வேலை வாங்கித் தருவதாக கூறி பணமோசடியில் ஈடுபட்ட கடலூர் ஆயுதப்படை காவலரை கைது செய்து சிறையில் அடைத்தனர். விழுப்புரம் அருகே திருவெண்ணெய்நல்லூரை சேர்ந்த சம்பத் வழுதரெட்டியைச் சேர்ந்த கடலூர் ஆயுதப்படை முதல்நிலை காவலராக பணியாற்றி வரும் பாண்டியன் என்பவரிடம் அறிமுகமாகியுள்ளார்.

இந்நிலையில் பாண்டியன் தனக்கு அரசியல்வாதிகள் மற்றும் அரசு அதிகாரிகள் நல்ல பழக்கம் உள்ளதால் யாருக்காவது அரசு வேலை கேட்டால் சொல்லுமாறு சம்பதிடம் தெரிவித்து இருந்தாராம். இதையடுத்து சம்பத் தனது மகன் ஞானவேல் BE முடித்துள்ளதாகவும் அவருக்கு அரசு வேலை கேட்டு பாண்டியனிடம் அணுகியுள்ளார்.

அப்போது, பாண்டியன் உங்கள் மகனுக்கு நான் வேலை வாங்கி தருகிறேன் என்று கூறி மேலும் சில அரசு பணி நியமன உத்தரவுகளை காண்பித்தும், ஆசை வார்த்தைகளை கூறி உள்ளார். இதனை நம்பிய சம்பத் தெரிந்தவர், தெரியாதவர் என அங்கும் இங்கும் கடனை வாங்கி பாண்டியன் வங்கி கணக்கில் ரூ.4.50 லட்சம் செலுத்தி உள்ளார். பணத்தை பெற்றுக் கொண்டு பாண்டியன் வேலை வாங்கித் தராமல் இன்று, நாளை என இழுக்கடித்து உள்ளார்.

இதனால் மனம் நொந்துபோன சம்பத் வேலை இல்லாவிட்டாலும் பரவாயில்லை பணத்தையாவது திருப்பி கொடுங்கள் என கேட்டுள்ளார். ஆனால் பணம் வரவில்லை ஆகையால் விழுப்புரம் குற்றப்பிரிவில் புகார் சம்பத் கொண்டார். இது குறித்து சம்பத் அளித்த புகாரின்பேரில் பாண்டியன் மீது விழுப்புரம் குற்றப்பிரிவு காவல்துறை வழக்கு பதிவு செய்து நேற்று இரவு அவரை கைது செய்து நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி கடலூர் சிறையில் அடைத்தனர்.

ரூ.1 லட்சம் பேசி ரூ.60 ஆயிரம் முடிச்சா.. சார்பதிவாளர் மற்றும் பத்திர எழுத்தர் கைது..!

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே கண்டனூர் ரோட்டை சேர்ந்த வைரவேல் தனக்கு சொந்தமான 4 இடங்களை விற்பனை செய்துள்ளார். அதனை பத்திரப்பதிவு செய்வதற்காக பத்திர எழுத்தாளர் புவனபிரியாவிடம் பத்திரம் எழுத கொடுத்தார். அப்போது, சம்பந்தப்பட்ட இடங்களை பத்திரப்பதிவு செய்வதற்காக பொறுப்பு சார்பதிவாளர் முத்துபாண்டி ரூ.1 லட்சம் பணம் கேட்பதாக பத்திர எழுத்தாளர் புவனபிரியா தெரிவிக்க, அதற்கு வைரவேல் மறுப்பு தெரிவித்துள்ளார். இத்தனை தொடர்ந்து கடந்த 13-ஆம் தேதி பத்திரத்தை பதிவு செய்தனர். ஆனால் அதனை வைரவேலிடம் வழங்காமல் இழுத்தடித்தனர். பல்வேறு கட்ட பேச்சு வார்த்தைக்குபின் ரூ.60 ஆயிரம் பணம் கேட்டுள்ளனர்.

இதுகுறித்து வைரவேல், சிவகங்கை லஞ்ச ஒழிப்புதுறையில் புகார் கொண்டுள்ளார். லஞ்ச ஒழிப்புதுறை அறியுறுத்தலின் பேரில், ரசாயனம் தடவிய பணத்தை சார்பதிவாளர் முத்துபாண்டியிடம் வழங்குவதற்காக பத்திர எழுத்தர் புவனபிரியாவிடம் கொடுத்தார். அப்போது மறைந்திருந்த சிவகங்கை லஞ்ச ஒழிப்புதுறையினர் புவனபிரியா கையும் களவுமாக பிடித்தனர். இதுதொடர்பாக பொறுப்பு சார்பதிவாளர் முத்துபாண்டி, பத்திர எழுத்தர் புவனபிரியா ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெட்ரோல் குண்டு வீச்சு..! இந்து முன்னணியினர் கைது..!

பெட்ரோல் குண்டு வீசப்பட்ட திரையரங்கை பார்வையிட வந்த இந்து முன்னணி அமைப்பினரை காவல்துறை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மேலப்பாளையத்தில் பிரதான சாலையில் உள்ள அலங்கார் திரையரங்கில் ‘அமரன்’ திரைப்படம் திரையிடப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த சில நாட்களுக்கு முன் SDPI கட்சியினர் முற்றுகை போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு இருந்தனர்.

இந்நிலையில், இன்று அதிகாலையில் திரையரங்க வளாகத்தில் அடையாளம் தெரியாத இருவர் பெட்ரோல் குண்டுகளை வீசிவிட்டு தப்பி ஓடியதால், திருநெல்வேலியில் பரபரப்பு ஏற்படுத்தியது. இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து காவல்துறை விசாரணை நடத்தி வரும் நிலையில், திரையரங்கம் சுற்றி காவல்துறையினர் பாதுகாப்பை பலப்படுத்தினர்.

இதைத்தொடர்ந்து, சம்பவம் நிகழ்ந்த திரையரங்கில் இந்து முன்னணியின் மாநில துணைத் தலைவர் ஜெயக்குமார் ஆய்வு செய்வதற்காக, தனது ஆதரவாளர்களுடன் அங்கு வந்திருந்தார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த திருநெல்வேலி மாநகர காவல்துறை துணை ஆணையர் விஜயகுமார் தலைமையிலான காவல்துறையினர், சம்பவம் நிகழ்ந்துள்ள இடம் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு இருப்பதாகவும், வெளிநபர்கள் உள்ளே சென்றால் தடயங்கள் பாதிக்கப்படும் என்று கூறி இந்து முன்னணி அமைப்பினரை திரையரங்கினுள் செல்ல அனுமதிக்கவில்லை.

இதனால், இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து சட்டம் ஒழுங்கை கருத்தில் கொண்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, இந்து முன்னணி அமைப்பின் மாநில துணைத் தலைவர் ஜெயக்குமார் மற்றும் அவருடைய ஆதரவாளர்களை காவல்துறை கைது செய்தனர்.

நக்கீரன் கோபால் வழக்கில் அர்ஜுன் சம்பத் மகன் ஓம்கார் பாலாஜி நள்ளிரவில் கைது..!

கோயம்புத்தூரில் நக்கீரன் வார பத்திரிக்கையை கண்டித்து நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் பேசியதாக இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத்தின் மகன் ஓம்கார் பாலாஜி நள்ளிரவில் கைது செய்யப்பட்டதாகக் கூறி இந்து மக்கள் கட்சி சார்பில் போராட்டம் அறிவித்து இருந்த நிலையில், ஓம்கார் பாலாஜியை கைது செய்யவில்லை என்று கூறி காவல்துறை விடுவித்துள்ள சம்பவம் கோயம்புத்தூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோயம்புத்தூர் மாவட்டம், மேற்குத் தொடர்ச்சி அடிவாரத்தில் அமைந்துள்ள ஈஷா யோகா மையம் குறித்து தொடர்ந்து செய்திகளை வெளியிட்டு வரும் நக்கீரன் வார இதழை கண்டித்து கடந்த 27 ஆம் தேதி கோயம்புத்தூர் தெற்கு வட்டாச்சியர் அலுவலகம் முன்பாக இந்து மக்கள் கட்சியின் மாநிலத் தலைவர் அர்ஜுன் சம்பத் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில், அர்ஜுன் சம்பத்தின் மகனும், அக்கட்சியின் இளைஞர் அணி தலைவருமான ஓம்கார் பாலாஜியும் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது நக்கீரன் ஆசிரியர் கோபால் குறித்தும், அவரது நாக்கை அறுத்து விடுவதாகவும் ஓம்கார் பாலாஜி பேசியிருந்தார்.

இது தொடர்பாக, திமுகவைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் அளித்த புகாரின்பேரில், பந்தய சாலை காவல் துறையினர் ஓம்கார் பாலாஜி மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில், கோயம்புத்தூர் கெம்பட்டி காலனி பகுதியில் உள்ள வீட்டில் இருந்த ஓம்கார் பாலாஜியை இன்று அதிகாலை ரேஸ்கோர்ஸ் காவல்துறை பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல், குற்ற நோக்குடன் செயல்படுதல் என்ற இரு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து அதிரடியாக கைது செய்தனர்.

இதைத்தொடர்ந்து, இந்து மக்கள் கட்சியின் இளைஞர் அணித் தலைவர் ஓம்கார் பாலாஜியை காவல் துறையினர் கைது செய்துள்ளதைக் கண்டித்து இன்று காலை போராட்டம் நடத்த அக்கட்சி தலைமை அழைப்பு விடுத்திருந்தது. இந்நிலையில், ஓம்கார் பாலாஜியிடம் விசாரணை மேற்கொள்ள அழைத்துச் சென்றதாகவும், கைது செய்யப்படவில்லை என்றும் காவல்துறை விளக்கம் அளித்துள்ளனர்.

இதுகுறித்து இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்து மக்கள் கட்சியின் இளைஞர் அணியின் மாநில தலைவர் ஓம்கார் பாலாஜி அவர்கள் ஈஷா யோகா மையத்திற்கு ஆதரவாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் நக்கீரன் கோபால் குறித்து மிரட்டும் தொனியில் பேசியதாக கூறி காவல் துறையினர் வழக்கு பதிவு செய்திருந்தனர். ஓம்கார் பாலாஜி தனது வழக்கறிஞர் மூலம் நியாயம் கிடைக்க வேண்டி நீதிமன்றத்தை நாடி இருந்தார். சென்னை உயர்நீதிமன்றம் ஓம்கார் பாலாஜியை வருகிற புதன்கிழமை அன்று நேரில் ஆஜராக உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் நேற்று நள்ளிரவில் திரு ஓம்கார் பாலாஜியை காவல்துறையினர் அத்துமீறி கைது செய்தனர். இது முற்றிலும் தவறான முன்னுதாரணம் ஆகும். நீதிமன்ற அவமதிப்பு ஆகும். ஓம்கார் பாலாஜிக்கு அவகாசம் அளித்துள்ளதை மீறி நள்ளிரவில் அத்துமீறி காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சட்டவிரோத காவலில் வைத்துள்ளனர். இதனை கண்டிக்கும் விதமாக இந்து மக்கள் கட்சி நிர்வாகிகள் சார்பில் தமிழக முழுவதும் இன்று காலை 11 மணியளவில் ஓம்கார் பாலாஜி அவர்களை விடுதலை செய்யக்கோரி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்த அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இன்று காலை 8 மணி முதல் கோவை C 2 ரேஸ்கோர்ஸ் காவல் நிலையம் முன்பாக இந்து மக்கள் கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் கூட்டம் கூட ஆரம்பித்தனர். தமிழகம் முழுக்க இன்று நடைபெற இருந்த ஆர்ப்பாட்டம் திட்டமிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து காவல்துறை அதிகாரிகள் இமக நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி ஓம்கார் பாலாஜியை விடுதலை செய்தனர். எனவே நடைபெறவிருந்த ஆர்ப்பாட்டம் கைவிடப்படுகிறது என அர்ஜுன் சம்பத் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

சென்னை அண்ணா சாலையில் இந்து மக்கள் கட்சியினர் கைது..!

சென்னை அண்ணா சாலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற இந்து மக்கள் கட்சியினரை காவல்துறையினர் கைது செய்தனர். கனடா நாட்டில் கோயில் மீதும், இந்து பக்தர்கள் மீதும் காலிஸ்தான் தீவிரவாத குழுவினர் நடத்திய தாக்குதலைக் கண்டித்து இந்து மக்கள் கட்சி சார்பில் அதன் தலைவர் அர்ஜுன் சம்பத் தலைமையில் சென்னை அண்ணா சாலை தாராப்பூர் டவர் எதிரில் நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடைபெற இருந்தது.

இதற்காக அர்ஜுன் சம்பத் தலைமையில், நிர்வாகிகள் அங்கு வரத் தொடங்கினர். அப்போது, காவல்துறை அவர்களை தடுத்து நிறுத்தி, தடையை மீறி ஆர்ப்பாட்டம் செய்ய இருந்ததாக கைது செய்து அருகில் உள்ள சமுதாய நலக் கூடத்தில் அடைத்தனர்.

திடீர் தர்ணாவில் ஈடுபட்ட அதிமுக சி.வி.சண்முகம் கைது..!

விழுப்புரம் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு சி.வி.சண்முகம் தான் அளித்த புகார்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிந்து கொள்வதற்காக வந்திருந்தார். அவர் வந்த சமயத்தில் அலுவலகத்தில் காவல் கண்காணிப்பாளர் இல்லாததால் அவ முன்னாள் அமைச்சரும், எம்பியுமான சி.வி.சண்முகம் இன்று காலையில் விருக்காக பார்வையாளர்கள் அறையில் காத்திருந்தார். நீண்ட நேரமாகியும் காவல் கண்காணிப்பாளரை சந்திக்க முடியாமல் போனதால் மதியம் 12 மணியளவில் விழுப்புரம் ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தின் நுழைவாயிலில் முன்பு சி.வி.சண்முகம் தர்ணாவில் ஈடுபட்டார்.

அப்போது, சி.வி.சண்முகம் செய்தியாளர்களிடம் பேசுகையில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விசிக நடத்திய மது மற்றும் போதைப் பொருள் ஒழிப்பு மாநாட்டில் அதிமுக சார்பில் நான் கலந்துகொள்ளப் போவதாகவும் அதுகுறித்து, அதிமுகவின் அதிகாரபூர்வ தொலைக்காட்சியான நியூஸ் ஜெ சேனலில் செய்தி வெளியானதாகவும் ஒரு தவறான தகவல் சமூகவலைதளங்களில் பரப்பப்பட்டது.

இது முழுக்க முழுக்க பொய்யான தகவல். திட்டமிட்டு எனது பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் பரப்பப்பட்ட பொய்ச் செய்தி என்பதால் நியூஸ் ஜெ சேனலும் மறுப்புச் செய்தி வெளியிட்டது. இந்தச் சம்பவத்தை குறிப்பிட்டு, சமூக வலைதளங்களில் பரப்பப்படும் வதந்திகள் குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரளித்தேன்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தல், விக்கிரவாண்டி இடைத் தேர்தல் சமயங்களிலும் இதுபோல எனக்கு எதிராக அவதூறு பரப்பினர். இது தொடர்பாக திமுக ஆட்சி பொறுப்பேற்றது முதல் இதுவரை தொடர்ந்து 23 புகார்கள் அளித்துள்ளேன். எந்த புகாரின் மீதும் நடவடிக்கையில்லை. என் மீது இந்த அரசு வழக்குப் பதிவுசெய்வதில் காட்டும் முனைப்பை, நான் அளிக்கும் புகார் மீது நடவடிக்கை எடுப்பதில் காட்டுவதில்லை. நான் காவல் கண்காணிப்பாளரை சந்திக்க முன்கூட்டியே அனுமதி வாங்கி இருந்தும் அவர் திட்டமிட்டு என்னைச் சந்திக்காமல் தவிர்த்துள்ளார்.

முன்னாள் அமைச்சரும், வழக்கறிஞரும், மாநிலங்களவை உறுப்பினருமான நான் அளிக்கும் புகார்கள் மீதே நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றால் பொதுமக்களின் நிலை என்ன? இது தமிழ்நாடா அல்லது கருணாநிதியின் குடும்ப நாடா?,” என்று அவர் கேள்வி எழுப்பினர். பின்னர், விழுப்புரம் தாலுகா ஆய்வாளர் செல்வவிநாயகம், மாவட்ட குற்றப்பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் ராமலிங்கம் ஆகியோர் சி.வி.சண்முகத்திடம் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினர்.

ஆனால், அந்த சமாதானத்தை எல்லாம் ஏற்காத அவர், “காவல் கண்காணிப்பாளரை நேரில் வரும் வரை தர்ணா போராட்டம் தொடரும்,” எனக்கூறி போராட்டத்தை தொடர்ந்தார். இதனை தொடர்ந்து பிற்பகல் 1 மணிக்கு விழுப்புரம் தாலுகா காவல்துறை அனுமதியின்றி தர்ணா போராட்டம் நடத்தியதாக சி.வி.சண்முகம் கைது செய்யப்பட்டார்.

சைபர் கிரைம் வேண்டுகோள்: பயத்தை விடுங்கள் சார்..! ஆன்லைனில் யாரையும் கைது செய்ய முடியாது..!

ஆன்லைனில் யாரையும் கைது செய்ய முடியாது. எனவே நீங்கள் கைது செய்யப்பட இருப்பதாக யாராவது தொலைபேசி மூலம் கூறினால் தயவு செய்து பீதி அடைய வேண்டாம் என தமிழக சைபர் கிரைம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

தமிழ்நாடு சைபர் கிரைம் மூலம் இணைய நிதி மோசடிகள், கிரிப்டோகரன்சி மோசடிகள் என ஆன்லைன் மோசடிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அந்த வகையில், கடந்த ஜனவரி முதல் செப்டம்பர் 30 வரையிலான 9 மாதங்களில் 91 ஆயிரத்து 161 பேரிடம் சிபிஐயில் இருந்து பேசுவதாகவும், கிரிப்டோகரன்சி என பல்வேறு ஆன்லைன் மோசடிகள் மூலம் 1,116 கோடியை சைபர் குற்றவாளிகள் பறித்துள்ளனர்.

இதுகுறித்து மாநில சைபர் கிரைம் பிரிவில் அளிக்கப்பட்ட புகாரின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை மூலம், சைபர் குற்றவாளிகளின் வங்கி கணக்கில் உள்ள ரூ.526 கோடி முடக்கக்கப்பட்டுள்ளது. மேலும், மோசடி நபர்களிடம் இருந்து பாதிக்கப்பட்ட நபர்களுக்கு கடந்த 9 மாதங்களில் ரூ.48 கோடி திரும்ப பெற்று தரப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் யாரும் ஆன்லைன் மோசடி நபர்களிடம் ஏமாறக் கூடாது. பொதுவாக ஆன்லைனில் யாரையும் கைது செய்ய முடியாது.

எனவே நீங்கள் கைது செய்யப்பட இருப்பதாக யாராவது தொலைபேசி மூலம் கூறினால் தயவு செய்து பீதி அடைய வேண்டாம். பணம் செலுத்த வேண்டாம். உங்கள் நண்பர்கள் அல்லது உறவினர்களால் பரிந்துரைக்கப்பட்டாலும், டெலிகிராம் மற்றும் வாட்ஸ் அப் மூலம் தெரியாத குழுக்களில் சேர வேண்டாம். அப்படி யாரேனும் மோசடி செய்தால் உடனே சைபர் ஹெல்ப் லைன் எண் 1930 தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாநில சைபர் கிரைம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

ரூ. 35 ஆயிரம் லஞ்சம் கேட்ட சார்பதிவாளர் கைது..! காரில் இருந்து கட்டு கட்டாய் ரூ.13 லட்சம் பறிமுதல்

கோயம்புத்தூர் சித்தாபுதூர் தனலட்சுமி நகரைச் சேர்ந்த கருப்பசாமி தான் பதிவு செய்த நிலத்தின் உண்மை ஆவணங்களை கேட்டு விண்ணப்பம் செய்திருந்தார். அந்த விண்ணப்பத்தை பரிசீலனை செய்த சார்பதிவாளர் நான்சி நித்யா கரோலின், ரூ.35 ஆயிரம் கொடுத்தால் தருவதாக கூறியுள்ளார். மேலும் அந்தப் பணத்தை நீங்கள், சிங்காநல்லூர் பதிவுத்துறை அலுவலகத்தில் உதவியாளராக உள்ள பூபதிராஜாவிடம் கொடுக்கும்படியும் கூறியுள்ளார்.

ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத கருப்பசாமி, இது குறித்து லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் செய்தார். பின்னர் லஞ்ச ஒழிப்புத்துறை ஆலோசனையின் பேரில், கருப்பசாமி, ரசாயனம் தடவிய ரூ. 35 ஆயிரம் பணத்தை நேற்று மாலையில் எடுத்துக் கொண்டு பதிவுத்துறை உதவியாளர் பூபதிராஜாவிடம் பணத்தைக் கொடுத்தார்.

அப்போது, மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு பூபதி ராஜாவை கையும் களவுமாக பிடித்தனர். அதன்பின்னர் பூபதி ராஜா மற்றும் நான்சி நித்யா கரோலின் ஆகியோரை கைது செய்தனர். மேலும் நான்சி நித்யா கரோலினியின் காரை சோதனையிட்டபோது அதில் ரூ. 13 லட்சம் ரொக்கப் பணம் இருந்ததை லஞ்ச ஒழிப்புத்துறை கைப்பற்றினர். விசாரணையில், 15 நாட்களுக்கு முன்னர் சிங்காநல்லூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு சோதனை நடத்தி பணத்தை பறிமுதல் செய்தனர். பணம் பறிமுதல் செய்யப்பட்டதால், நான்சி நித்யா கரோலின் மாற்றப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் நான்சி நித்யா கரோலின் மாற்றப்படவில்லை. ஆகையால், லஞ்ச ஒழிப்பு சோதனை நடத்தியதால், தினமும் வரும் லஞ்சப் பணத்தை நான்சி நித்யா கரோலின் வாங்காமல், பத்திர எழுத்தர்களிடம் வாங்கி வைக்கும்படி கூறியுள்ளார். நேற்று இதுவரை ரூ.13 லட்சம் வசூலாகியிருப்பது தெரிந்ததால், அதை தனது காரில் வைக்கும்படி பத்திர எழுத்தர்களிடம் கூறியுள்ளார்.

அவர் காரில் பணத்தை வைத்திருப்பது தெரியவந்தது. அவற்றை லஞ்ச ஒழிப்பு பறிமுதல் செய்தனர்.அதைத் தொடர்ந்து சார்பதிவாளர் நான்ச நித்யா கரோலின் மற்றும் உதவியாளர் பூபதி ராஜா ஆகியோரை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

40 பவுன் ஆட்டைய போட்ட பெண் யோகா மாஸ்டர் கைது..!

சென்னை வடபழனி, ஏவிஎம் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து சங்கர் வளசரவாக்கத்தில் சொந்தமாக ஐ.டி நிறுவனம் நடத்தி வருகிறார். சங்கர் கடந்த மாதம் 3-ஆம் தேதி பீரோவில் இருந்த 40 பவுன் தங்க நகைகள் மயமானதை தொடர்ந்து சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் தெரிவித்தார்.

இந்த புகார் குறித்து உரிய விசாரணை நடத்த கே.கே.நகர் காவல் நிலைய குற்றப்பிரிவு காவல்துறைக்கு உத்தரவிடப்பட்டது. அதன்படி, உதவி ஆய்வாளர் ராஜேந்திரன் விசாரணை மேற்கொண்டார். இந்நிலையில், புகார் குறித்து விசாரிக்க, உதவி ஆய்வாளர் ராஜேந்திரன், அவரது நண்பர் எண்ணுக்கு ரூ.20 ஆயிரம் லஞ்சமாக அனுப்ப கேட்டுக் கொண்டதாகவும், அதன்படி, சங்கர் அனுப்பியதாகவும் கூறப்படுகிறது.

ஆனால், லஞ்சப் பணத்தை பெற்றுக் கொண்டும், உரிய விசாரணை நடத்தாமல் புகார்தாரரை, உதவி ஆய்வாளர் அநாகரிகமாகப் பேசியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த உயர் அதிகாரிகள் இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டனர்.

அதன்படி, வடபழனி காவல் சரக உதவி ஆணையர் நேற்று முன்தினம் விசாரணை மேற்கொண்டார். இந்நிலையில், புகாருக்கு உள்ளான உதவி ஆய்வாளர் ராஜேந்திரனை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில், வடபழனி ஏவிஎம் ஸ்டூடியோ பகுதியை சேர்ந்த யோகா மாஸ்டர் காயத்ரி, கடந்த 2 மாதமாக யோகா கற்றுக் கொடுக்க சங்கர் வீட்டுக்கு வந்து சென்றுள்ளார். கடந்த மாதம் சங்கர் வீட்டுக்கு வந்தபோது, நகை இருந்த அறை திறந்து கிடந்துள்ளது.

அதைப் பார்த்த காயத்ரி, பீரோவில் இருந்து 40 பவுன் நகைகளை எடுத்துள்ளார். அதில் ஒரு பகுதியை விருகம்பாக்கத்தில் உள்ள பிரபலமான நகைக்கடை ஒன்றில் விற்று ரூ.3 லட்சத்து 81 ஆயிரம் மதிப்பில் வைர செயின் வாங்கியது காவல்துறை விசாரணையில் தெரியவர யோகா மாஸ்டர் காயத்ரி கைது செய்தனர்.

கல்லூரி மாணவியிடம் ஆசைவார்த்தை கூறி உல்லாசம் அனுபவித்து ரூ.1.4 லட்சம் பறித்தவர் கைது..!

திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி கல்லூரி மாணவியை ஏமாற்றி உல்லாசமாக இருந்துவிட்டு, ரூ.1.40 லட்சத்தை பறித்து ஏமாற்றிய வாலிபரை தனிப்படை காவல்துறை கைது செய்தனர்.

சென்னை, பெரம்பூர் பகுதியைச் சேர்ந்த 19 வயது கல்லூரி மாணவி, அதே பகுதியில் உள்ள கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பட்டப்படிப்பு படித்து வருகிறார். இவர் பேஸ்புக் மூலமாக அறிமுகமான காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகம் வெங்கடேஸ்வரா நகரை சேர்ந்த நரேந்திரன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் அந்த பழக்கம் காதலாக மாறியுள்ளது. இதனையடுத்து, நரேந்திரன் திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தை கூறி மாணவியிடம் இருந்து ரூ.1.40 லட்சம் வாங்கியதோடு, செலவுக்கும் அடிக்கடி பணம் வாங்கியுள்ளார்.

இதுமட்டுமின்றி நரேந்திரன் தனியார் விடுதிகளில் அறை எடுத்து தங்கி ஆசை வார்த்தைகூறி மாணவியுடன் உல்லாசமாக இருந்துள்ளார். அதன்பின்பு திருமணம் செய்துகொள்ள மறுத்து நரேந்திரன் பிரச்னை செய்து வந்துள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட மாணவி புளியந்தோப்பு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதுகுறித்து புளியந்தோப்பு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து நரேந்திரனை தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று காலை அவரது ஊரில் வைத்து தனிப்படை காவல்துறை நரேந்திரனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.