கீதா ஜீவன் விளக்கம்: மகளிர் உதவி எண் மைய பணிக்கான தகுதியில் தவறுதலாக பதிவேற்றம்..!

சமூக நலத்துறையின் பெண்களுக்கான கட்டுப்பாட்டு மைய பணிக்கான ஆட்சேர்ப்பு அறிவிக்கையில் தேவையான தகுதிகள் என தமிழ், ஆங்கிலம் மற்றும் இந்தி என தவறுதலாக பதிவேற்றம் செய்யப்பட்டது. அவ்விளம்பரம் உடனடியாக இணையதளத்தில் இருந்து நீக்கப்பட்டு தவறுதலாக இணையத்தில் பதிவேற்றம் செய்த இணை இயக்குநர் உடனடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டு, அவர் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது” என அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக கீதா ஜீவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் கீழ் இயங்கும், சமூக நல ஆணையரகம் மூலம் பாதிப்புக்கு உள்ளாகும் மகளிருக்கு உதவிட பெண்களுக்கான கட்டுப்பாட்டு மையம், “மகளிர் உதவி எண் 181 சென்னையில் செயல்பட்டு வருகிறது. மகளிர் உதவி எண் 181 பணியிடத்தில் ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்பிடும் பொருட்டு, விண்ணப்பங்கள் பெற்றிட tn.gov.in என்ற இணையதளத்தில் ஆட்சேர்ப்புக்கான அறிவிக்கை, சமூக நல ஆணையரக இணை இயக்குநரால் பதிவேற்றம் செய்யப்பட்டது.

அதில் “அழைப்பு ஏற்பாளர்” (Call Responders) என்று குறிப்பிடப்பட்டுள்ள பணியிடத்துக்கு தேவையான தகுதிகள் என தமிழ், ஆங்கிலம் மற்றும் இந்தி என தவறுதலாக பதிவேற்றம் செய்யப்பட்டது. இந்த ஆட்சேர்ப்புக்கான அறிவிக்கை தமிழக அரசின் கவனத்துக்கு வந்தவுடன், அவ்விளம்பரம் உடனடியாக இணையதளத்தில் இருந்து நீக்கப்பட்டு, தமிழ் மற்றும் ஆங்கிலம் தெரிந்த நபர்கள் விண்ணப்பிக்கலாம் என்று திருத்தப்பட்ட ஆட்சேர்ப்பு அறிவிக்கை உடனடியாக பதிவேற்றம் செய்யப்பட்டது. மேலும், தவறுதலாக இணையத்தில் பதிவேற்றம் செய்த இணை இயக்குநர் உடனடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டு, அவர் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தாய்மொழியாம் தமிழ் மொழியினை உயிருக்கும் மேலாய் மதிக்கும் தமிழக முதல்வர் தலைமையில், அனைத்து அரசுத் துறைகளிலும் தமிழ் மட்டுமே முக்கிய மொழியாக உள்ளது. நீதிமன்றம், மத்திய அரசுடனான கடிதப் போக்குவரத்து போன்றவற்றுக்கு மட்டுமே ஆங்கிலம் பயன்படுத்தப்படுகிறது.

தமிழ்த்தாய் வாழ்த்து, திருவள்ளுவருக்கு வள்ளுவர் கோட்டமும், 133 அடியில் வானுயர சிலையும் அமைத்தது, உலகத் தமிழ் மாநாடு நடத்தியது, தமிழுக்கு செம்மொழி சிறப்பு பெற்றுத் தந்தது என எண்ணிலடங்கா பெருமைகள் கொண்டது தான் திமுக வரலாறு. தமிழர் பெருமை கூறும் கீழடி அருங்காட்சியகம் அமைத்து, உலகத்தின் பார்வையை நம் மீது திருப்பியது அண்மைக் கால வரலாறு. மேலும், அரசுப்பணிகளில் தமிழ் மொழியில் பயின்றவருக்கு முன்னுரிமை அளித்து அரசாணை வெளியிட்ட அரசு, நமது திராவிட மாடல் அரசு.

தமிழக அரசுத் துறைகளில் உள்ள பணியிடங்கள் மற்றும் மாநில பொதுத்துறை நிறுவனங்களில் உள்ள பணியிடங்கள் அனைத்திலும் தமிழக இளைஞர்களை 100 சதவீதம் நியமனம் செய்யும் பொருட்டு, தேர்வு முகமைகளால் நடத்தப்படும், அனைத்து போட்டித் தேர்வுகளிலும் தமிழ் மொழி பாடத்தாள் தகுதித் தேர்வாக கட்டாயமாக்கப்பட்டது என தமிழ்மொழி வளர்ச்சிக்கான இவ்வரசின் பல்வேறு சாதனைகளை பட்டியலிட்டுக் கொண்டே போகலாம்.

ஒரு அரசு அலுவலர் செய்த தவறை வைத்துக் கொண்டு அரசியல் செய்யும் நிலையில் சிலர் உள்ளதைப் பார்த்தால் பரிதாபமாக உள்ளது. தமிழ் குறித்து எங்களுக்கு எவரும் பாடம் எடுத்து கூச்சல் போட வேண்டியதில்லை. இதனால் மக்கள் ஏமாறப் போவதில்லை. தமிழக முதல்வர் ஆட்சியில், தமிழ் மொழி மென்மேலும் சிறப்புகள் பெற்று வளர்ந்து வருகிறது. இதனைக் காண சகிக்காதவர்கள் தான் இப்போது கூக்குரல் இடுகிறார்கள். அதனை புறம் தள்ளி, எங்கள் தாய்மொழியாம் தமிழ் வழி பயணத்தை சிறப்புற தொடர்வோம்.” என கீதா ஜீவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“பிங்க் ஆட்டோ திட்டம்” சென்னை பெண் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு சூப்பர் வாய்ப்பு..!

சென்னையில் வசிக்கும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பிங்க் ஆட்டோ திட்டத்தை தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இந்த ஆட்டோக்களை பெண்கள் வாங்க 1 லட்சம் மானியம் வழங்கப்பட உள்ளது.

கடந்த ஜூன் மாதம் தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரில் துறை வாரியாக மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் அமைச்சர் கீதா ஜீவன் முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதில், சென்னை மாநகரத்தில் பெண்களின் பாதுகாப்பினை உறுதி செய்திடும் விதமாகவும், பெண்களுக்கான சுயதொழில் வேலைவாய்ப்பினை உருவாக்கும் விதமாகவும் அரசு மானியமாக தலா ரூ. 1 லட்சம் வீதம் 200 பெண் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு மானியம் வழங்கி, ரூ.2 கோடி செலவில் 200 பிங்க் ஆட்டோ திட்டம் செயல் படுத்தப்படும் என அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்தார்.

இத்திட்டம் குறித்து, தமிழ்நாடு அரசின் சமூக நலத் துறை சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. பெண்களின் பாதுகாப்பை வலுப்படுத்தும் வகையில் புதிய முன்னெடுப்பாக இளஞ்சிவப்பு ஆட்டோக்கள் தமிழக அரசு அறிமுகப்படுத்துகிறது. இத்திட்டத்தின் மூலம் பெண்கள் குழந்தைகள் பாதுகாப்பாக பயணிக்கும் வகையில், 250 ஆட்டோக்கள் சென்னை மாநகரில் இயக்கப்பட உள்ளன. இந்த ஆட்டோக்கள் பெண் ஓட்டுநர்கள் மூலமாக இயக்கப்படவுள்ளன. ஒவ்வொரு பிங்க் ஆட்டோவிலும் பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் காவல் துறை உதவி எண்களுடன் இணைக்கப்பட்ட GPS பொருத்தப்பட்டுள்ளன.

எமர்ஜென்சி காலங்களின்போது புகார் பெறப்பட்டவுடன் காவல்துறை விரைந்து நடவடிக்கை எடுக்கும் வகையில் GPS பொருத்தப்பட்டுள்ளன. பெண்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையிலும், சுயதொழில் செய்து பெண்கள் முன்னேறும் வகையில் ஊக்கப்படுத்தவும் இந்த பிங்க் ஆட்டோ திட்டம் பெண்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும். பிங்க் ஆட்டோ ஓட்டுவதற்கு பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படவுள்ளது. 25 முதல் 45 வயதுக்கு உட்பட்ட பெண்கள் விண்ணப்பிக்கலாம்.

பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், விண்ணப்பதாரர்கள் ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேம்டும். சென்னையில் குடியிருப்போராக இருக்க வேண்டும். CNG மற்றும் ஹைபிரிட் ஆட்டோ வாங்க சென்னையைச் சேர்ந்த 250 பெண்களுக்கு தமிழக அரசு தலா 1 லட்சம் ரூபாயை வழங்க உள்ளது. ஆட்டோ வாங்க தேவைப்படும் மீதி தொகைக்கு வங்கிகளுடன் இணைக்கப்படும்.

இத்திட்டத்தில் பயனடைய விரும்பும் தகுதியான பெண்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை சென்னை மாவட்ட சமூக நல அலுவலர், 8 ஆவது தளம், சிங்காரவேலர் மாளிகை, சென்னை 1 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். நவம்பர் 23 -ஆம் தேதி விண்ணப்பிக்க கடைசி நாள் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது