கீதாஜீவன்: “பெண்கள் 1 டிரில்லியன் பொருளாதார இலக்கை எட்டுவதில் பெரும்பங்கு வகிப்பார்கள்”

“தமிழகம் 1 டிரில்லியன் பொருளாதார இலக்கை எட்ட பெண்கள் பெரும்பங்காக இருப்பார்கள்,” என அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்தார். ஜவுளித்துறை சார்ந்த பணியிடங்களில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், தனியார் அமைப்புடன் இணைந்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, அவிநாசி அருகே திருமுருகன் பூண்டியில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதாஜீவன் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது, “திருப்பூர், கோவை, ஈரோடு, கரூர், நாமக்கல் மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் பணிபுரியும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், தனியார் நிறுவனத்துடன் இணைந்து 3 ஆண்டுகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவே இந்த ஒப்பந்தம் போடப்பட்டு, தற்போது திருப்பூரில் துவங்கப்பட்டுள்ளது.

சமூகத்தில் பெண்களுக்கு சம வாய்ப்பை உருவாக்கும் வகையில், பணியிடத்தில் ஆண்களுக்கு நிகராக பெண்களும் போற்றப்படும் போது, உலக பொருளாதாரத்தில் 20 சதவீதம் உயரும் என உலக வங்கியின் பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். பெண்கள் பணியாற்ற தடையாக இருப்பவற்றை அடையாளம் கண்டு அவற்றை அகற்ற தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. வீட்டைவிட்டு வெளியூரில் பணியாற்றும் பெண்களுக்காக தோழி விடுதி திட்டம், கட்டணமில்லா பேருந்துப் பயணம் உள்ளிட்ட திட்டங்களால் பெண்கள் அந்த தொகையை சேமித்து தங்கள் குழந்தைகளின் எதிர்காலத்துக்கு பயன்படுத்துவதாக மாநில அரசின் திட்டக்குழு ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.

வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு குடும்பத்தில், சமூகத்தில் மதிப்பு உயர்கிறது. மாதந்தோறும் மகளிர் உரிமைத் தொகை, புதுமைப்பெண் திட்டம், பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமைகள் தடுக்கும் நடவடிக்கைகள் உள்ளிட்ட திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. போக்சோ சட்டப்பிரிவுகளின் கீழ் தமிழ்நாடு முழுவதும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. பெண்கள் வேலை செய்யும் பணியிடங்களில் உள்ளக புகார் குழுக்கள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் 22 ஆயிரத்து 345 அரசு மற்றும் தனியார் பணியிடங்களில், இந்த புகார் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. திருப்பூர் மாவட்டத்தில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் இங்குள்ள தொழில் நிறுவனங்கள் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்கின்றன. பாலின சமத்துவம் பற்றி சமூகத்தில் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். பெண்களுக்கு கவுன்சலிங், சட்ட உதவி உள்ளிட்டவையும் வழங்கப்படுகிறது.

பெண்களுக்கு எதிரான வன்முறை, வன்கொடுமை இல்லாத சமுதாயத்தை நாம் உருவாக்க வேண்டும். ஜவுளித்துறையை மேம்படுத்திக் கொண்டே, சமூகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பை நாம் வளர்த்துக் கொள்ளலாம். முதலமைச்சரின் கனவான 2030-ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் 1 டிரில்லியன் பொருளாதார இலக்கை, எட்ட பெண்கள் முக்கிய அங்கமாக இருப்பார்கள்,” என கீதாஜீவன் பேசினார்.

கிராமப்புற பெண்கள் பெரிய அளவில் பயன்பெறும் …. ’தோழி விடுதி’ ஹைலைட்ஸ்?

பெண்களுக்குச் சொத்துரிமைக்கொடுத்த மாநிலம், மருத்துவக் காப்பீட்டுத் திட்டங்களை வழங்கியது, வண்ணத் தொலைக்காட்சி கொடுத்தது தொடங்கி மாநிலம் தமிழ்நாடுதான் முன்னோடி மாநிலம். அதன் வரிசையில் இன்றைக்கு இந்தியாவிலேயே பெண்கள் தங்குவதற்கான ‘விடுதி’களை அரசு சார்பில் கட்டிக் கொடுத்திருப்பது தமிழ்நாடுதான். பெண்கள் தங்குவதற்காகத் திருச்சி, திருநெல்வேலி, சேலம், பெரம்பலூர், விழுப்புரம், வேலூர், தஞ்சாவூர், செங்கல்பட்டு ஆகிய 9 மாவட்டங்களில் 11 தங்கும் விடுதிகளைத் தமிழ்நாடு அரசு தொடங்கி உள்ளது. அதற்கு அழகாக ‘தோழி விடுதிகள்’ என்று பெயரையும் அரசு சூட்டி உள்ளது.

இந்த விடுதிகளில் அறையை புக் செய்ய நேரில் வரவேண்டும் என்பதில்லை. https://www.tnwwhcl.in/ இணைய தளத்தின் மூலமாக ஆன்லைன் புக்கிங் செய்துகொள்ளலாம். சமூக நலத்துறையின் கீழ் செயல்பட்டுவரும் தமிழ்நாடு பணிபுரியும் மகளிர் விடுதிகள்’ என்ற நிறுவனத்தின் சார்பில், சென்னையில் மட்டும் 16 கோடியே 49 லட்சம் ரூபாய் செலவில் இந்த விடுதிகளை அரசு கட்டித் தந்துள்ளது. இதில் 7 புனரமைக்கப்பட்ட விடுதிகள், 2 புதிய விடுதிகள் எனச் சேர்த்து மொத்தம் 9 ‘தோழி விடுதிகள்’ சென்னையில் மட்டும் கட்டப்பட்டுள்ளன. “இதற்காக இந்தியாவிலேயே ‘TamilNadu Working Women’s Hostels Corporation’ என்ற நிறுவனத்தினை முதன்முறையாகத் தமிழ்நாடுதான் தொடங்கியுள்ளது.

பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் புதிய முயற்சியை இதன்மூலம் தமிழ்நாடு அரசு கையில் எடுத்துள்ளது” என்கிறார் சமூக நலத்துறை செயலாளர் அமுதவல்லி. இவர் சொல்வதை உறுதி செய்கிறார் சென்னை உள்ள தோழி விடுதி ஒன்றின் மேலாளர் கங்காதேவி. அவர், “விடுதியில் சிசிடிவி வசதி, கை ரேகை மூலம் இயங்கக் கூடிய கதவுகள், காவல்துறை தினந்தோறும் வந்து பாதுகாப்பை உறுதி செய்யும் நடைமுறை, 24X7 செக்யூரிட்டி வசதி, துணிகளைத் துவைப்பதற்கான சலவை எந்திர வசதி, குளிர்சாதன வசதி, ஆர்.ஓ. முறையில் குடிநீர் வசதி, குளிர்சாதனப் பெட்டி வசதி, இலவச வை ஃபை வசதி, பார்கிங் வசதி, நடைப்பயிற்சி மேற்கொள்வதற்கான வசதி என இன்றைய தலைமுறை விரும்பக் கூடிய சகல வசதிகளையும் அரசு உருவாக்கி தந்துள்ளது” என்கிறார்.

இது குறித்து சமூகநலம் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், “இந்த அரசு விடுதியில் தனியார் விடுதிகளைவிடக் கட்டணம் குறைவு. அதேசமயம் தனியார் விடுதியில் உள்ள அதே வசதிகள் இங்கே வழங்கப்பட்டுள்ளன. கட்டணம் குறைவது என்பது பெண்கள் சேமிப்பதற்கு உதவும். அதைவிட அரசு விடுதி என்பதால் பாதுகாப்பு உத்தரவாதம் கிடைக்கிறது. ஒருவர் 5 நாள்கள் தங்கலாம். 15 நாள்கள் கூட தங்கலாம். 5 வருடங்கள் கூட தங்கலாம். அது அவரது விருப்பத்திற்கு ஏற்ப செய்துதரப்பட்டுள்ளது. ஆன்லைனிலேயே பதவி செய்து கொள்ளலாம். ஒருவர் ஊரிலிருந்து கிளம்பும் போதே பதிவுசெய்து வரலாம்” என்கிறார்.

திமுக செய்தி தொடர்பாளர் ஆண்டாள் பிரியதர்ஷினி, “பெண்களுக்கு என்று சில நாசூக்கான பிரச்சினைகள் இருக்கின்றன. அதைப் புரிந்து செயல்படுவதற்கு ஒரு தனித் தலைமைப் பண்பு வேண்டும். அதோடு தனி மனதும் வேண்டும். இவை இரண்டு நம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் இருக்கின்றன. தமிழ்நாட்டில் பெண்களுக்கு இருக்கின்ற கல்வி சுதந்திரம், பொருளாதார சுதந்திரம், சிந்தனைச் சுதந்திரம் என்பது இந்தியாவில் வேறு மாநிலங்களில் எங்கேயும் இல்லை. அந்தளவுக்குப் பெண்களுக்குச் சுதந்திரம் கொடுத்து வருகிறது தமிழ்நாடு. அதில் நாம்தான் முன்னோடி. ஏறக்குறை பெண் சுதந்திரம் என்பது நீதிக்கட்சி காலத்திலேயே தொடங்கியாயிற்று. அதன் தொடர்ச்சியாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அதை மேலும் விரிவுபடுத்தி வருகிறார்.

அதுதான் உண்மை. ‘பேட்டி படாவ், பேட்டி பச்சாவ்’ என்று சிலர் உதட்டளவில் சொல்லி வருகிறார்கள். ஆனால், பெண்களைப் படிக்கவைக்க வேண்டும் என்றால் தடுக்கிறார்கள். பெண்களை நிர்வாணப்படுத்தி மானபங்கம் செய்கிறார்கள். அப்படி பிறமாநிலங்களைப் போல் இல்லாமல், தமிழ்நாடு தனித்துத் தெரிகிறது. பெண் கல்விக்கு ஊக்கத்தொகை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கொடுக்கிறார். குடும்ப பெண்களுக்கு உரிமைத் தொகைமுதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கொடுக்கிறார். பெண்களுக்குக் கட்டணம் இல்லாத பேருந்து வசதியை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது அவர்தான். அதன் தொடர்ச்சியாக இப்போது ‘தோழி விடுதிகளை’ திறந்துள்ளார். இதனால் கிராமப்புற பெண்கள் பெரிய அளவில் பயன்பெறுவார்கள். நகரங்களில் உள்ள பெண்களுக்குப் பிரச்சினை இல்லை.

ஆனால், கிராமத்திலிருந்து நகரம் நோக்கி வேலை பார்க்க வருகின்ற பெண்களுக்குப் பல்வேறு தடைகள் உள்ளன. அதில் குறிப்பாகத் தங்குவதற்குப் பாதுகாப்பான இடங்கள் கிடைப்பதில்லை. ஆகவே அவர்கள் மனதில் ஒரு அச்சம் ஏற்படுகிறது. முதன்முறையாகப் பெரிய நகரங்களுக்கு வேலை செய்ய வருகின்ற பெண்களுக்குப் பயம் இருக்கும். எங்கே செல்வது? எங்கே தங்குவது? பாதுகாப்பு இருக்குமா? போன்ற பல்வேறு அச்சங்கள் ஏற்படுகின்றன. அதற்காகவே பல பெண்கள் இன்றைக்கும் நகரங்களுக்கு வேலை செய்ய வருவதைத் தவிர்க்கிறார்கள். அந்த அச்சங்களுக்கு எல்லாம் தீர்வு கொடுக்கின்ற விதமாக இந்தத் தோழி விடுதிகளைத் தமிழக அரசு ஏற்படுத்தித் தந்துள்ளது. இதன்மூலம் பெண்களுக்குக் கூடுதல் தைரியம்,நம்பிக்கைப் பிறக்கும்.