தமிழகத்துக்கு காவிரியில் உரிய தண்ணீரை விட மறுக்கும் கர்நாடக அரசை கண்டித்தும், இதில் உரிய நடவடிக்கை எடுக்காத மத்திய அரசை கண்டித்தும் காவிரி டெல்டா மாவட்டங்களில் முழு அடைப்பு போராட்டமும், மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு மறியல் போராட்டமும் நடைபெற்றன.
காவிரிப் படுகை பாதுகாப்பு கூட்டியக்கம் சார்பில் நடைபெற்ற இந்த போராட்டத்துக்கு திமுக, விடுதலை சிறுத்தைகள், தமிழக வாழ்வுரிமைக் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மதிமுக, மனிதநேய மக்கள் கட்சி உட்பட பல்வேறு அரசியல் கட்சிகள், வணிகர் சங்கங்கள், தொழிற்சங்கங்கள் ஆதரவு தெரிவித்து, முழு அளவில் பங்கேற்றன. இதனால் டெல்டா மாவட்டங்களில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டு, ஆட்கள் நடமாட்டமின்றி கடைவீதிகள், முக்கிய சாலைகள் வெறிச்சோடி இருந்தன.