நாட்டின் 78-வது சுதந்திர தினம் இன்று 15-ஆம் தேதி நாட்டு மக்களால் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி, சென்னை, புனித ஜார்ஜ் கோட்டையில் காலை 9 மணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசியக்கொடி ஏற்றியேற்றினார்.
முன்னதாக, காலை 8.45 மணிக்கு சுதந்திர தின விழா நிகழ்ச்சிக்கு கோட்டை கொத்தளத்திற்கு வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா வரவேற்றார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு முப்படை அதிகாரிகள், டிஜிபி சங்கர் ஜிவால், சட்டம்-ஒழுங்கு கூடுதல் டிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம், சென்னை காவல் ஆணையர் அருண் ஆகியோரை தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா அறிமுகம் செய்து வைத்தார்.
அதனைத்தொடர்ந்து, சென்னை கோட்டையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், காவல்துறை அணிவகுப்பு மரியாதையை ஏற்றார். பிறகு, கோட்டை கொத்தளத்தின் மேல் உள்ள கொடியேற்றும் இடத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வந்து, தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
இதையடுத்து, தமிழக மக்களுக்கு சுதந்திர தின உரை நிகழ்த்துகிறார். இதனை தொடர்ந்து பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களை கவுரவிக்கும் விதமாக விருதுகள் வழங்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கவுரவித்தார். அந்தவகையில், நர்ஸ் சபீனாவுக்கு கல்பனா சாவ்லா விருதும், மூத்த தலைவர் குமரி அனந்தனுக்கு தகைசால் விருதும் வழங்கினார் தமிழக முதல்வர். அந்தவகையில், தமிழ்நாட்டிற்கும், தமிழின வளர்ச்சிக்கும் பங்காற்றியவர்களை பெருமைப்படுத்த “தகைசால் தமிழர்” என்ற பெயரிலான விருது, ரூ.10 லட்சத்துக்கான காசோலை மற்றும் பாராட்டு சான்று வழங்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டுக்கான விருதுக்கு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், இலக்கியவாதியுமான மூத்த தலைவர் குமரி அனந்தன் தேர்வு செய்யப்பட்ட நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் கையால், இந்த விருதினை குமரி அனந்தன் பெற்றார்.
அதேபோல, கல்பனா சாவ்லா விருது, செவிலியர் சபீனாவுக்கு வழங்கப்பட்டது. வயநாடு நிலச்சரிவில் சிக்கியவர்களுக்கு தமிழகத்தின் கூடலூரை சேர்ந்த செவிலியர் சபீனா, ஜிப்லைன் மூலம் ஆற்றைக் கடந்து சென்று சிகிச்சை அளித்தது குறித்த குறித்த குறும்படம் ஒளிபரப்பப்பட்டது. செவிலியர் சபீனாவின் இந்த வீர செயலுக்காக அவருக்கு தொடர்ந்து பாராட்டுகள் குவிந்து வரும் நிலையில், செவிலியர் சபீனாவிற்கு கல்பனா சாவ்லா விருதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.