கலைஞர் கருணாநிதி 5-ம் ஆண்டு நினைவு நாள்: முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி

சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் உள்ள கருணாநிதி சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்திய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், பின்னர் அங்கிருந்து பேரணியை தொடங்கினார். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான இந்த பேரணியில் தமிழக அமைச்சர்கள் துரைமுருகன், நேரு, பொன்முடி, எ.வ.வேலு, உதயநிதி ஸ்டாலின், மஸ்தான், தங்கம் தென்னரசு, சேகர் பாபு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மக்களவை உறுப்பினர் டி.ஆர்.பாலு, தயாநிதி மாறன், கனிமொழி உட்பட திமுக அமைச்சர்கள், மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், திமுக மூத்த நிர்வாகிகள் என ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்த பேரணியில் பங்கேற்றனர். சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் தூரம் சென்ற இந்த பேரணி, சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள கருணாநிதி நினைவிடத்தில் நிறைவடைந்தது. அங்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உட்பட அனைவரும் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

கருணாநிதியின் புகழஞ்சலியில் மு.க. ஸ்டாலின்…. “இந்தியா”க்கு பாதை அமைத்ததே தமிழகம்..

2024 தேர்தல் இந்தியாவில் ஜனநாயகம் இருக்க வேண்டுமா..? இருக்கக்கூடாதா..? என்பதற்கான தேர்தல் என கருணாநிதிக்கு எழுதிய புகழஞ்சலியில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்து உள்ளார்.

அவர் எழுதியுதில்,
“வங்கக் கடலோரம் வாஞ்சை மிகு தென்றலின் தாலாட்டில்
தமிழ்த்தாயின் தலைமகன்
பேரறிஞர் அண்ணாவுக்கு பக்கத்தில்
கனிந்த இதயத்தோடு ஓய்வெடுக்கும் தலைவர் கலைஞரே!
நூற்றாண்டு விழா நாயகரே!
தந்தையே!
உங்களைக் காண ஆகஸ்டு 7
அதிகாலையில் அணி வகுத்து வருகிறோம்!

உங்களுக்கு சொல்ல ஒரு நல்ல செய்தி கொண்டு
வருகிறேன்…
“உங்கள் கனவுகளை எல்லாம்
நிறைவேற்றி வருகிறோம் தலைவரே!” –
என்பதுதான் அந்த நல்ல செய்தி!

நீங்கள் இருந்து செய்யவேண்டியத் தான்
நான் அமர்ந்து செய்து கொண்டிருக்கிறேன்.

“பாதிச் சரித்திரத்தை நான் எழுதிவிட்டேன்;
மீதியை என் தம்பி கருணாநிதி எழுதுவான்’ என்றார்
காலம் வழங்கிய
இரண்டாவது வள்ளுவன் எம் அண்ணா.
95 வயது வரை நாளெல்லாம் உழைத்தீர்கள்.
இனம் – மொழி – நாடு காக்க
ஓய்வெடுக்காமல் உழைத்தீர்கள்.
உங்கள் உழைப்பின் உருவக வடிவம் தான்
இந்த நவீன தமிழ்நாடு.

நீங்கள் உருவாக்கிய நவீன தமிழ்நாட்டை
இடையில் புகுந்த
கொத்தடிமைக் கூட்டம் சிதைத்தன் விளைவாக –
தாழ்வுற்றது தமிழ்நாடு.
தாழ்வுள்ள தமிழ்நாட்டை மீட்டெடுத்து
மீண்டும் உங்கள் ஆட்சி காலத் தமிழ்நாடாக
உருவாக்கி வளர்த்தெடுக்க
எந்நாளும் உழைத்து வருகிறேன்.

“ஸ்டாலின் என்றால் உழைப்பு.. உழைப்பு.. உழைப்பு”
என்றீர்கள்.
அந்த கரகரக் குரல் தான்,
கண்டிப்புக் குரலாக என்னை உழைக்க வைத்துக்
கொண்டிருக்கிறது.

“எனக்குப் பின்னால்,
இனமானப் பேராசிரியருக்குப் பின்னால்
யாரென்று கேட்டால்
இங்கே அமர்ந்திருக்கும் ஸ்டாலின்” என்று
எந்த நம்பிக்கை வைத்து சொன்னீர்களோ
அந்த நம்பிக்கையைக் காக்கவே உழைத்துக்
கொண்டிருக்கிறேன்.

எட்டுக் கோடித் தமிழ் மக்களும் ஏதாவது
ஒருவகையில் பயனடையும் திட்டத்தத் தீட்டி
திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியை
தித்திக்கும் மக்களாட்சி மாண்போடு நடத்தி வருகிறோம்.

ஒற்றைக் கையெழுத்து போட்டால்
அது கோடிக்கணக்கானவர்களை
மகிழ்விக்கிறது.
ஒரே ஒரு உத்தரவு
இலட்சக்கணக்கானவர்களை இரட்சிக்கிறது.
தமிழ்நாடு தலை நிமிர்கிறது.
இந்தியாவின் தலைசிறந்த மாநிலமான உயர்கிறது.
உங்கள் கனவுகள் நிறைவேறும் காலமாக ஆகிவிட்டது,
தலைவரே!

நீங்கள் இருந்து செய்ய வேண்டியதைத் தான்
நாம் அமர்ந்து செய்து கொண்டிருக்கிறேன்.
இதற்கு இடையில் –
2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல்
எங்களை எதிர்நோக்கி வந்து கொண்டிருக்கிறது.
வழக்கமாய்
ஐந்தாண்டுக்கு ஒரு முறை வரும் தேர்தல் அல்ல இது.
இந்தக் கட்சி ஆட்சியா?
அந்தக் கட்சி ஆட்சியா? – என்பதற்கான விடையல்ல
இந்த தேர்தல்.
இந்தியாவின் ஜனநாயகம் இருக்க வேண்டுமா?
இருக்க முடியாதா? – என்பதற்கான தேர்தக் இது.

நீங்கள் சொல்வீர்களே –
“தமிழ்நாட்டில் கால் பதித்து நின்று
இந்தியாவுக்காகக் குரல் எழுப்ப வேண்டும்’ – என்று!
அப்படித் தான் INDIA-வுக்கான குரலை எழுப்பத்
தொடங்கி இருக்கிறோம்!

அனைத்துக்கும் தொடக்கம் தமிழ்நாடு.
INDIA-வுக்கான பாதை அமைத்ததும் தமிழ்நாடு.
இந்து இந்தியா முழுமைக்கும் பரவி விட்டது.

சுயமரியாதை –
சமூக நீதி –
சமதர்மம் –
மொழி, இன உரிமை –
மாநில சுயாட்சி –
கூட்டாட்சி இந்தியா – என்ற எங்களாது விரிந்த
கனவுகளை
இந்தியா முழுமைக்கும் அகலமாக விரித்துள்ளோம்.

திமுக மாநிலக் கட்சி தான்!
அனைத்து மாநிலங்களுக்கும்
உரிமையைப் பெற்றுத் தரும் கட்சியாக
இருக்க வேண்டும் என்ற
உங்களது அந்தக் கனவும் நிறைவேறப் போகும்
காலம்..
வரும் காலம்!

உங்கள் நூற்றாண்டு –
உங்களாது கனவுகளை நிறைவேற்றி தரும் ஆண்டு.

நீங்கள் உருவாக்கி
நவீன தமிழ்நாட்டை
நீங்களே ஆள்கிறீர்கள்!
நீங்களே வாழ்கிறீர்கள்!
நீங்களே வழிநடத்துகிறீர்கள்!
உங்கள் வழி நடக்கும்
எங்கள் வெற்றிக்கு வாழ்த்துங்கள்!
வென்று வந்து காலடியில் அதனை வைக்கின்றோம்
தலைவரே!” என்று குறிப்பிட்டு உள்ளார்.

ரூ.50,000.. முதலமைச்சர் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம்..

மகளிர் முன்னேற்றத்திற்காகவும், பெண் குழந்தைகளின் பாதுகாப்புக்காகவும், முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் தலைமையிலான தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளையும், அறிவிப்புகளையும் முன்னெடுத்து வருகிறது.. அதில் ஒன்றுதான், பெண்கள் பாதுகாப்புத் திட்டமாகும். அதாவது, அரசின் நேரடி முதலீட்டின் மூலம், பெண் குழந்தைகளின் உரிமைகளை பாதுகாத்தல் மற்றும் அதிகாரம் அளித்தல் மூலம் பாலின பாகுபாட்டை தடுப்பதே இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

குறிப்பாக, பெண் குழந்தைகள் பள்ளியில் சேர்க்கை மற்றும் குறைந்தபட்சம் இடைநிலை வரையிலான கல்வியை உறுதி செய்தல், பெண் குழந்தைகளை 18 வயதுக்கு பிறகே திருமணம் செய்ய ஊக்குவித்தல், 2 பெண் குழந்தைகளுடன் குடும்பக் கட்டுப்பாடு நெறிமுறையை பின்பற்ற பெற்றோர்களை ஊக்குவித்தல், பெண் குழந்தைகளின் உரிமைகளைப் பாதுகாத்தல் மற்றும் பெண் குழந்தைகளுக்கு சமூக மற்றும் நிதி அதிகாரம் அளித்தல் போன்றவற்றை அடிப்படையாக கொண்டது.

ஒரு குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை மட்டுமே பிறந்திருந்தால், அந்த பெண் குழந்தையின் பெயரில் நிலையான வைப்புத்தொகையான ரூ.50,000/- தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்தில் முதலீடு செய்யப்படுகிறது. இந்த வைப்புத்தொகை ரசீது நகல் பெண் குழந்தையின் குடும்பத்திற்கு வழங்கப்படுகிறது.

ஒருவேளை, ஒரு குடும்பத்தில் 2 பெண் குழந்தைகள் மட்டுமே பிறந்திருந்தால், அந்த பெண் குழந்தைகளின் பெயரில் நிலையான வைப்புத்தொகையான தலா ரூ.25,000/- தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்தில் முதலீடு செய்யப்படுகிறது. இந்த வைப்புத்தொகை ரசீது நகல் பெண் குழந்தைகளின் குடும்பத்திற்கு வழங்கப்படுகிறது.

இந்த வைப்புத்தொகை ஒவ்வொரு 5 வருடங்களுக்கு ஒருமுறை புதுப்பிக்கப்பட்டு, 18 வயது நிறைவடைந்தவுடன், வட்டியுடன் சேர்த்து முதிர்வுத்தொகை பெண் குழந்தைக்கு வழங்கப்படும். ஆனால், இந்த பலனை பெற வேண்டுமானால், பெண் குழந்தைகள் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வெழுத வேண்டும். அப்போதுதான், முதிர்வு தொகையானது, பெண் குழந்தைகளின் உயர்கல்வியைத்தொடர உதவும். பெண் குழந்தைகளுக்கு கல்விச் செலவுகளை ஈடுகட்ட 6-வது ஆண்டு முதல் ஆண்டு ஊக்கத் தொகையாக ரூ.1800/- வழங்கப்படுகிறது.

கருணாநிதியின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம் குறித்து ஆகஸ்ட் 2023 முதல் 2024 ஜூன் வரை சிறப்பு முகாம்கள் ஒவ்வொரு மாதம் 2-வது செவ்வாய்க்கிழமைகளில் நடக்கவுள்ளது. இந்நிலையில், இதுகுறித்து மேலும் சில தகவல்கள் வெளியாகி உள்ளன.. அதாவது, சம்பந்தப்பட்ட குழந்தைகள், 10-ம் வகுப்பு தேர்வு எழுதி, 18 வயது வரை திருமணம் புரியாமல் இருக்கும்போது, அவர்களுக்கு வட்டியுடன் கூடிய வைப்பு தொகை, “முதிர்வு தொகை”யாக வழங்கப்படுகிறது.

கடந்த 2001 முதல் 2005ம் ஆண்டு வரை பதிவு செய்த, 1.40 லட்சம் பேருக்கு 350.28 கோடி ரூபாய் வழங்கப்பட்டு உள்ளது. மேலும், 1.50 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள், 18 வயது நிறைவடைந்தும், முதிர்வு தொகை பெற விண்ணப்பிக்காமல் இருக்கிறார்களாம். அவர்களுக்காக, கருணாநிதி நுாற்றாண்டு விழாவையொட்டி, அனைத்து மாவட்ட சமூக நலத்துறை அலுவலகங்களிலும், மாதந்தோறும் இரண்டாம் செவ்வாய்க்கிழமை, பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்ட சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது. தகுதியான அனைவரும், ஒரு மாதத்துக்குள் முதிர்வு தொகையை பெற்றுக்கொள்ளலாம் என்று தமிழக அரசு மீண்டும் அறிவித்துள்ளது. விண்ணப்பிக்க தகுதிகள்:

1. பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தின் கீழ் பயனடைய குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72,000/- க்குள் இருக்க வேண்டும்.

2. இரண்டாவது பெண் குழந்தை பிறந்து

3. வருடங்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

3. தமிழ்நாட்டில் பத்து வருடங்களுக்கு மேல் வசிப்பவராக இருக்க வேண்டும். 4

. பெற்றோரில் ஒருவர் 40 வயதுக்குள் குடும்ப கட்டுப்பாடு செய்து இருக்க வேண்டும்.

* இணையதளத்தின் வாயிலாக இ-சேவை மையத்தில் விண்ணப்பிக்க வேண்டும். கூடுதல் தகவல்களுக்கு: https://www.tnsocialwelfare.tn.gov.in/en/specilisationschild-welfare/chief-ministers-girl-child-protection-scheme

அண்ணாவை ஸ்டிக்கராக மட்டும் பார்க்கும் அதிமுக..!

கருணாநிதி நூற்றாண்டு விழா கொண்டாட்டங்கள் பற்றி திமுக தொண்டர்களுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், ”அண்ணாவைத் தங்கள் கட்சிக்கு ஒட்டும் லேபிளாக, கொடியில் ஒரு ஸ்டிக்கராக வைத்துக் கொண்டு, அவரது கொள்கைகளுக்கு முற்றிலும் எதிராகச் செயல்பட்டு வருபவர்கள் யார் என்பது உடன்பிறப்புகளான உங்களுக்கும் தமிழ்நாட்டு மக்களுக்கும் நன்றாகவே தெரியும்.’

”அவர்கள் அண்ணாவுக்குப் பெருமை சேர்க்கவில்லை என்பது மட்டுமல்ல, தங்கள் கட்சியை உருவாக்கிய தலைவரின் நூற்றாண்டைக் கூட மறந்துபோய், ஓராண்டு கழித்து திடீரென நினைவுக்கு வந்து, பெயரளவுக்குச் சில நிகழ்ச்சிகளை நடத்திவிட்டு, கழக ஆட்சியில் கட்டப்பட்ட இடங்களுக்கு எம்.ஜி.ஆர். அவர்களின் பெயரை வைத்து அவரது நூற்றாண்டை முடித்துவிட்டார்கள்.”

”அவர்கள் இயக்கத்தில் மூத்த தலைவராக வாழ்ந்து மறைந்த நாவலர் அவர்களின் நூற்றாண்டைக் கொண்டாடியது தி.மு.கழகம்தான். நாவலருக்குச் சிலை அமைத்ததும் கழக அரசுதான்.திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சி, கலைஞர் நூற்றாண்டை, அவரைப் போலவே மக்களுக்குப் பயனுள்ள திட்டங்களாகக் கொண்டாடிக் கொண்டிருக்கிறது.”

”’ஏ, தாழ்ந்த தமிழகமே!’ என வேதனையோடு பேரறிஞர் அண்ணா சொன்ன காலம் ஒன்று உண்டு. திராவிட இயக்கத்தின் கொள்கை வலிமையால், அதன் அர்ப்பணிப்பு மிகுந்த செயல்பாடுகளால், திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு மக்கள் அளித்த வெற்றியால், கலைஞரின் ஆட்சித் திறனால், அன்று தாழ்ந்திருந்த தமிழகம் இன்று தலைநிமிர்ந்த தமிழ்நாடாக, இந்தியாவின் முன்னோடி மாநிலமாகத் திகழ்வதுபோல, மாமதுரையில் திறக்கப்படவிருக்கும் கலைஞர் நூற்றாண்டு நூலகம் இன்னும் பல நூற்றாண்டுகளுக்கு அறிவுச் செல்வத்தை வாரி வாரி வழங்கி, தமிழர்களின் வாழ்வை உயர்த்தும்.”