கனிமங்கள், சுரங்கங்கள் மீது ஒன்றிய அரசு வரிகளை விதித்து வருவாயை ஈட்டி வருகிறது. இந்நிலையில், கனிம வளங்கள், கனிம வளம் நிறைந்த நிலங்கள் மீது வரி விதிக்க மாநில அரசுகளுக்கு அதிகாரம் இருக்கிறது என்று உச்ச நீதிமன்றம் கடந்த மாதம் 25-ல் தீர்ப்பளித்தது. தமிழக அரசுக்கும், இந்தியா சிமென்ட் நிறுவனத்துக்கும் இடையேயான வழக்கில் உச்ச நீதிமன்றம் முதலில் இந்த தீர்ப்பை வழங்கியது. இதைத் தொடர்ந்து, உச்ச நீதிமன்ற தீர்ப்பை முன் தேதியிட்டு அமல்படுத்தக் கூடாது என்று ஒன்றிய அரசு ஆட்சேபம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், ஒன்றிய அரசின் தீர்ப்பை நிராகரித்த உச்சநீதிமன்றம், “கனிம வளங்களுக்கு வரி விதிக்க ஒன்றிய அரசுக்கு அனுமதி இல்லை என்றும் மாநில அரசுகளுக்கே அனுமதி உள்ளது என்ற தீர்ப்பை 2005-ஆம் ஆண்டு ஏப்ரல் 1-ஆம் தேதி தொடங்கி முன் தேதியிட்டு அமலாகும். 2005 ஏப்ரல் மாதத்தில் இருந்து கனிமவள வரியை மாநிலங்கள் முன் தேதியிட்டு வசூலிக்கலாம். 2005 முதல் வசூலான கனிமவள வரியை ஒன்றிய அரசிடம் இருந்து மாநிலங்கள் பெற்றுக் கொள்ளலாம். 2024 ஜூலை 25-ஆம் தேதிக்கு முன்புள்ள காலத்துக்கான கனிம வள வரி நிலுவைத் தொகைக்கு வட்டி, அபராதம் விதிக்கக் கூடாது, என மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டது.