சென்னை எழும்பூரில் ஓபிஎஸ் அதிமுக அணி மா.செக்கள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தின்போது, கொங்கு மண்டலத்தில் மாநாடு நடத்துவோம் என அறிவித்திருந்த நிலையில், அடுத்தாண்டு ஜனவரி மாதம் 6-ம் தேதி கோயம்புத்தூரில் மாநாடு நடத்த ஓபிஎஸ் அணி முடிவு செய்துள்ளது. மேலும் மாநாடு நடைபெறும் தேதியை ஓபிஎஸ் அதிமுக அணி அறிவித்துள்ளது . இதனால், தேர்தலை நோக்கிய அரசியல் பயணத்தை ஓபிஎஸ் அதிமுக அணி தொடங்கியுள்ளதாகவே தெரிகிறது.
இந்நிலையில் ஓபிஎஸ் அதிமுக அணியில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு ஓ பன்னீர்செல்வம், வைத்திலிங்கம், பண்ருட்டி ராமச்சந்திரன், ஜேசிடி பிரபாகர், கு.ப.கிருஷ்ணன், புகழேந்தி உள்ளிட்ட ஓபிஎஸ் அதிமுக அணியினர் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்து பேட்டி அளித்தனர். அப்போது ஓ.பன்னீர்செல்வத்திடம் செய்தியாளர்கள் பாஜக உடன் கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபடுகிறீர்களா என கேள்வி எழுப்பினர். அதற்கு, ஓபிஎஸ், பாஜக தேசிய தலைமையுடன் தொடர்பில் இருக்கிறோம் என்றார்.
அப்போது வைத்திலிங்கம் குறுக்கிட்டு, நட்பு ரீதியிலான தொடர்பில் இருக்கிறோம், தேர்தல் வரும்போதுதான் கூட்டணி என்றார். தொடர்ந்து செய்தியாளர், நட்பு கூட்டணியாக மாற வாய்ப்பு இருக்கிறதா என கேள்வி எழுப்பினார். அதற்கு ஓ.பன்னீர்செல்வம், “உங்கள் எண்ணம் பலிக்கட்டும்” என்றார். செய்தியாளர், சுற்றிச் சுற்றி பாஜக கூட்டணி குறித்துக் கேட்டதால் வைத்திலிங்கம் குலுங்கிக் குலுங்கிச் சிரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.