எஸ்வி சேகர்: “அண்ணாமலை தமிழ்நாட்டில் அரசியல் பூஜ்ஜியம்”

2024 -ம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு, ஜூலை மாதம் 28 -ம் தேதி  ‘என் மண் , என் மக்கள்’ என்ற பெயரில் நடைபயணத்தை ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடங்கி வைக்க, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். தொடர்ந்து, சிவகங்கை, மதுரை மாவட்டங்களைக் கடந்து ஒவ்வொரு தொகுதி வாரியாகச் சென்று மக்களை சந்தித்து அண்ணாமலை வருகிறார்.

இந்த பாதயாத்திரையில் அண்ணாமலை தினமும் 1 கி.மீ தூரம் கூட நடப்பதில்லை என்றும், அவருக்கான பிரத்யேக ஏ.சி பேருந்தில்தான் செல்கிறார் எனவும் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. இந்நிலையில் அண்ணாமலையின் பாதயாத்திரை குறித்து காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக பிரமுகர் எஸ்.வி.சேகர், “அண்ணாமலை இருக்கும்வரை பாஜகவிற்கு ஒரு சீட் கூட வராது. அதிமுகவின் ஒரு வாக்கு கூட பாஜகவிற்கு வராது.

நடைபயணத்தால் பாஜகவிற்கு நஷ்டம், அண்ணாமலைக்கு பெரிய லாபம்” எனக் கூறியுள்ளார். சாயம் வெளுக்குது.. வெறும் 5% மட்டும் நடந்த அண்ணாமலை.. எஸ்வி சேகர் மேலும், “தமிழ்நாடு பாஜக தலைமை சரியான நிலைமையில் இல்லை என்றால் எல்லாம் கீழே ஆடத்தான் செய்யும். தலைவருக்கு பேருந்தில் நடைபயணம் செல்லவே நேரம் இல்லை. சிங்கம் என அவரே சொல்கிறார். ஆனால் நடப்பதை எல்லாம் பார்த்தால் கிழ சிங்கம் ஆனது போல தெரிகிறது. இந்த நடைபயணத்தால் ஒரு தாக்கமும் நடக்காது.

“அண்ணாமலை என்பது தமிழ்நாட்டில் அரசியல் பூஜ்ஜியம்” எனத் தெரிவித்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர், “நான் 2 வாரமாக நாடகமே போடவில்லை. எனது டிராமா காமெடியை விட அண்ணாமலை நடைபயண காமெடி நன்றாக சிரிப்பு வருகிறது. அண்ணாமலை அதிமுக கூட்டணி வரக்கூடாது எனப் பேசி வருகிறார். அதிமுக இருந்தால் தான் பாஜகவிற்கு தமிழ்நாட்டில் பலம். நட்பு என்று சொல்லிக்கொண்டே காறித் துப்பினால் எப்படி கூட்டணி சரியாக இருக்கும்?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.