என் பெயரை கேட்டாலே பெரம்பூரே நடுங்கும்…! காவல் ஆய்வாளரை தாக்க முயன்ற பாஜக நிர்வாகி கைது..!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, கடந்த வியாக்கிழமை அன்று சென்னை கொளத்தூர் தொகுதியில் ‘என் மண் என் மக்கள்’ யாத்திரை மேற்கொண்டார். கொளத்தூர் அகரம் சந்திப்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு அண்ணாமலை பேசினார். ‛அப்போது அண்ணாமலை பேசுகையில், “சிங்காரச் சென்னை என்று பெயர் மட்டும் வைத்துவிட்டு, ஒவ்வொரு ஆண்டும், மழை வெள்ளத்தில் சென்னையை தத்தளிக்க வைத்துக் கொண்டிருக்கும் ஊழல் கட்சிகள் அப்புறப்படுத்தப்பட வேண்டும். பல ஆயிரம் கோடி செலவு செய்திருக்கிறோம், 98% வடிகால் பணிகள் நிறைவடைந்து விட்டன என்று பொய் சொல்லி, மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கும் கட்சிகள் இல்லாமல், ஊழலற்ற, நேர்மையான, சாமானிய மக்களுக்கான அரசு அமைய வேண்டும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடம் இருக்கிறது.

வடசென்னையில் தரமான சாலைகள், சுத்தமான குடிநீர் வசதி, சுகாதார மேம்பாடு என எதுவுமே கிடைக்கப் பெறாமல் மக்கள் வஞ்சிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இந்த நிலை மாற வேண்டுமானால், எளிய மக்கள் படும் துன்பங்களை அறிந்தவர்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். சென்னையின் பாராளுமன்ற உறுப்பினர்களாக தென் சென்னையில் தமிழச்சி தங்கபாண்டியனும், மத்திய சென்னையில் தயாநிதி மாறனும், வடசென்னையில் கலாநிதி வீராசாமியும் பதவிக்கு வருவதற்கு அவர்களிடம் இருந்த ஒரே தகுதி வாரிசு என்பதுதான். ஏழை எளிய சாமானிய மக்களின் வலி இவர்களுக்கு எப்படித் தெரியும்? சென்னை பெருவெள்ளத்தின்போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு, மத்திய அரசின் அறிவுறுத்தலின்படி, ரூ.10,500 வழங்கப்பட்டிருக்க வேண்டும். பாஜக சார்பாக, ரூ.10,000 வழங்க வேண்டும் என்று திமுக அரசை வலியுறுத்தினோம். ஆனால், திமுக ரூ.6,000 மட்டுமே கொடுத்தது.

அந்தப் பணத்திலும், 75% பணம் மத்திய அரசின் பங்காகும். 25% மட்டுமே திமுக அரசின் பங்கு. சென்னை ஸ்மார்ட் சிட்டி திட்டத்துக்கு, ரூ.1,000 கோடி நிதி கொடுக்கப்பட்டுள்ளது. மழை நீர் வடிகாலுக்கு என தனியாக ரூ.1,300 கோடியும், மற்றும் நீர் நிலைகளின் கரைகளை மேம்படுத்த ரூ.560 கோடியும் மத்திய அரசு வழங்கியுள்ளது. ஆனால், இவை அனைத்தையும் தமிழக அரசு என்ன செய்தது என்பது கேள்விக்குறி தான். தரமான சாலைகள், சுத்தமான குடிநீர், சுகாதாரமான நகரம் என எந்த அடிப்படை வசதிகளும் நிறைவேற்றப்படவில்லை” என்று குற்றம்சாட்டினார்.

இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பாஜக நிர்வாகிககள் பங்கேற்றனர். இதில் பாஜக பிரமுகரும், அனைத்து இந்து அமைப்புகளின் மாநில ஒருங்கிணைப்பாளருமான சென்னை கொளத்தூர் வெற்றி நகரைச் சேர்ந்த ரவிச்சந்திரன் என்ற ரவி) பங்கேற்றார். பொதுக்கூட்டம் முடிந்த பின்னரும் பாஜக கட்சியினர் பயங்கர சத்தத்துடன் மேளங்களை இசைத்து போக்குவரத்துக்கு இடையூறு செய்ததாக கூறப்படுகிறது. இதனை அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த காவல்துறையினர் அனைவரையும் கலைந்து செல்லுமாறு கூறினர்.

அப்போது பாஜவில் நிர்வாகி, அனைத்து இந்து அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளரான ரவிச்சந்திரன் என்ற நபர், அங்கு பணியில் இருந்த வில்லிவாக்கம் காவல் நிலையத்தில் சட்டம் ஒழுங்கு பிரிவில் பணிபுரியும் கணேஷ்குமார் என்பவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். கணேஷ் குமார் சாலையின் நடுவே நின்று மேளம் அடிக்காதீர்கள், பொதுமக்களுக்கு வழிவிட்டு ஓரமாக நில்லுங்கள் எனக் கூறியுள்ளார். இதற்கு ரவிச்சந்திரன், கணேஷ் குமாரை தகாத வார்த்தைகளால் திட்டி அனைவரின் முன்னிலையிலும் அவமானப்படுத்தியுள்ளார்.

இதனையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த வில்லிவாக்கம் ஆய்வாளர் பிரிதிவிராஜ் சம்பவ இடத்திற்கு சென்று ரவிச்சந்திரனை கலைந்து போகும் படி கூறியுள்ளார். ஆனால் ரவிச்சந்திரன், ஆய்வாளரை பார்த்து நான் யார் என்று தெரியுமா நான் தாண்டா ரவிச்சந்திரன் எனது பெயரை கேட்டாலே பெரம்பூரே நடுங்கும் என ஒருமையில் பேசி, ஆய்வாளரை அடிக்க பாய்ந்துள்ளார். காவல்துறையினர் அவரை தடுத்து எச்சரித்ததால், ரவிச்சந்திரன் அந்த இடத்திலிருந்து ஓடிவிட்டார். இதுகுறித்து காவலர் கணேஷ்குமார் செம்பியம் காவல் நிலையத்தில் ரவிச்சந்திரன் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி வீடியோ மற்றும் புகைப்படத்துடன் கூடிய ஆதாரத்துடன் புகார் அளித்தார். ரவிச்சந்திரன் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

நகைக்கடை அதிபர்களிடம் ரூ.20 லட்சம் பாஜவினர் வசூலா..!?

தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் நடைபெற்று வரும் “என் மண் என் மக்கள்” பாதயாத்திரை குடியாத்தம் உட்பட்ட பகுதிகளில் நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை குடியாத்தம் நகர பாஜவினர் செய்திருந்தனர். குடியாத்தம் நேதாஜி சிலை சந்திப்பு முதல் பஸ் நிலையம் வரையில் நடை பயணத்திற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு, சாலையின் இருபுறமும் பாஜக மற்றும் கூட்டணி கட்சியின் ராட்சத பேனர் மற்றும் கொடிகளுடன் கம்பங்கள் நடப்பட்டது. இந்நிலையில், குடியாத்தம் நகர பாஜகவினர், அண்ணாமலை நடை பயணம் நிகழ்ச்சி ஏற்பாடுகளுக்கு நகைக்கடை உரிமையாளர்கள் மற்றும் பல்வேறு தரப்பினரிடம் ரூ.20 லட்சம் வரை நன்கொடையாக பெற்றுள்ளார்களாம்.

இதற்கிடையில் பாஜக நகர நிர்வாகிகள், நகர தலைவர் சாய் ஆனந்தனிடம் வசூல் செய்த நன்கொடை தொகையை பிரித்து வழங்குமாறு கேட்டுள்ளனர். இதற்கு நகரத்தலைவர் மாவட்டம், மாநில நிர்வாகிகளிடம் பணத்தை ஒப்படைத்து விட்டதாக தெரிவித்துள்ளார். இதனால் பாஜகவினர் வாட்ஸ் அப் குழு மற்றும் முகநூலில் பணம் வசூல் செய்தது சம்பந்தமாக ஒருவரை ஒருவர் தாக்கி பதிவு செய்து வருகின்றனர். நகைக்கடை அதிபர்களிடம் வசூல் வேட்டை நடத்தியது கட்சியினர் மூலமே அம்பலமாகி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கமல்ஹாசன் சாப்பிடும் பருக்கையில் உதயநிதி ஸ்டாலின் பெயர்..

தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் நடைபெற்று வரும் “என் மண் என் மக்கள்” பாதயாத்திரை கோயம்புத்தூர் தெற்கு தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெற்றது. இந்த பாதயாத்திரையில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை உடன், கோயம்புத்தூர் தெற்கு தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் பங்கேற்றார். ஏராளமான பாஜக நிர்வாகிகளும், தொண்டர்களும் இதில் கலந்து கொண்டனர்.

அப்போது மக்கள் மத்தியில் உரையாற்றிய அண்ணாமலை, “பாஜக ஒரு நாள் ஆட்சிக் கட்டிலில் அமரும். கோயம்புத்தூர் தேசியம், ஆன்மிகம், உண்மையின் பக்கம் இருக்கும் என்பதற்கு, கடந்த முறை கோயம்புத்தூர் தெற்கு தொகுதியில் பாஜக பெற்ற வெற்றியே சாட்சியாக உள்ளது. கோயம்புத்தூர் நாடாளுமன்றத் தொகுதி பாஜகவின் கோட்டை என்பதை நிரூபித்துக் காட்டுவோம். விக்ரம் படத்திற்கு கூட்டம் வருவதைப் போல நாடாளுமன்றத் தேர்தலில் நமக்கு கூட்டம் சேரும் என கமல்ஹாசன் பேசியதை போல நான் பேசவில்லை.

1996-ம் ஆண்டில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, கோயம்புத்தூர் கோரமான தீவிரவாத தாக்குதலுக்குள்ளாகி 25 ஆண்டுகள் பின்னால் போனது. 2006 திமுக ஆட்சியில் வரலாறு காணாத மின்வெட்டால் தொழில்கள் பாதிக்கப்பட்டன. மீண்டும் நடக்க வேண்டியிருந்த மாபெரும் விபத்தில் இருந்து கோட்டை ஈஸ்வரன் நம்மைக் காப்பாற்றினார். அதை முதலமைச்சர் ஸ்டாலின் சிலிண்டர் விபத்து என்றார். தீவிரவாத செயலில் ஈடுபட்ட 13 பேரை என்.ஐ.ஏ கைது செய்துள்ளது. வானதி சீனிவாசன் குரல் கொடுக்கவில்லை என்றால், இதில் உயிரிழந்த நபருக்கு 10 இலட்ச ரூபாய் கொடுத்து சுதந்திர போராட்ட தியாகி என்று சொல்லியிருப்பார்கள்.

திமுக வரும் போது கோயம்புத்தூருக்கு தீய சக்தி வந்தது போலாகி விடும். செந்தில் பாலாஜி சிறைக்கு சென்றதால் மற்றொரு ஆபத்தில் இருந்தும் கோயம்புத்தூர் மக்கள் தப்பியுள்ளார்கள். நாடாளுமன்ற தேர்தலில் திமுக என்ற தீய சக்தியை அப்புறப்படுத்த வேண்டும். மத்திய அரசு மற்றும் வானதி சீனிவாசன் என்ற டபுள் இன்ஜின் கோயம்புத்தூரை அடுத்த கட்ட வளர்ச்சிக்கு இழுத்துக் கொண்டுள்ளது.

பாஜக ஆட்சிக்கு வரும்போது சட்டமன்ற உறுப்பினர்கள் எப்படி இருப்பார்கள் என்பதற்கு வானதி சீனிவாசன் உதாரணம். சில அரசியல் தலைவர்களுக்கு வானதி சீனிவாசன் மீது தான் கண். 6 மாதத்திற்கு ஒருமுறை மக்கள் நீதி மய்யம் இங்கு ஆர்ப்பாட்டம் செய்ய வந்து விடுவார்கள். ஆடல் பாடல் நடத்தியும் மக்கள் ஏமாறவில்லை என்பதால், கோயம்புத்தூர் மீது கமல்ஹாசனுக்கு கண் உள்ளது. கமல்ஹாசனுக்கு காங்கிரசில் சேர்வதா? திமுக சேர்வதா? என்ற குழப்பத்திற்கு 6 மாதமாக விடை தேடிக் கொண்டிருக்கிறார்.

கமல்ஹாசன் சாப்பிடும் பருக்கையில் கூட உதயநிதி ஸ்டாலின் என்ற பெயர் ஒட்டிக் கொண்டிருக்கிறது. இது தான் கமல்ஹாசனின் வீரமா? தன்மானமா? நடிப்பிற்கு இலக்கணமாக உள்ள கமல்ஹாசன், உதயநிதி ஸ்டாலினை பார்த்து பம்முகிறார். கமல்ஹாசனின் தோலை கோயம்புத்தூர் மக்கள் முழுமையாக உரித்து வெளிச்சம் போட்டு காட்டியுள்ளார்கள் என தெரிவித்தார்.

1962- ல் திமுக ஆட்சி.. அண்ணாமலைக்கு என்ன ஆச்சி …

தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் நடைபெற்று வரும் “என் மண் என் மக்கள்” பாதயாத்திரை கோவை தெற்கு தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெற்றது. இந்த பாதயாத்திரையில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை உடன், கோவை தெற்கு தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் பங்கேற்றார். ஏராளமான பாஜக நிர்வாகிகளும், தொண்டர்களும் இதில் கலந்து கொண்டனர்.

அப்போது பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, கோயம்புத்தூரில் கவுண்டம்பாளையம் தொகுதியில் இருந்து கொண்டு மருதமலை முருகனை பற்றி பேசாமல் போனால் தப்பாகிவிடும். 1962 வரை மருதமலை முருகனை பார்க்க வேண்டும் என்றால் கரெண்ட் கிடையாது.. சாதாரண படிக்கெட்டில் ஏற வேண்டும்.

திமுக மருதமலை முருகன் கோயிலுக்கு மின்சாரம் கொடுக்கக்கூடாது என்பதை கொள்கையாக வைத்திருந்தார்கள். அதை உடைத்து மருதமலை முருகன் கோயிலுக்கு மின்சாரத்தை கொடுத்தவர் யார் என்றால் சின்னப்ப தேவர் ஐயாதான்.. உங்களுக்கு சின்னப்ப தேவர் ஐயாவை தெரியும். தமிழகத்திலேயே முக்கியமான சினிமா படைப்புகளை தயாரித்தவர்.

அவரே போய் மருதமலைக்கு மின்சாரம் தர வேண்டும் என்று ரிஜிஸ்டர் பணத்தை கட்டி புரட்சி தலைவர் எம்ஜிஆர் அவர்கள் ஆட்சி காலத்தில் மருத மலை முருகன் கோயிலுக்கு கரெண்ட் வந்தது. மருதமலை முருகன் கோவிலுக்கு திமுக ஆட்சியில் மின்சாரம் வழங்கப்படவில்லை என்று குற்றம்சாட்டினார். ஆகவே திமுக என்பது எப்போதுமே சனாதன தர்மத்திற்கும், இந்து தர்மத்திற்கும் எதிராகவே இருக்கும் என்பதற்கு இதுஒரு உதாரணம்” என்று கூறியிருந்தார். இந்த அண்ணாமலை பேசிய பேச்சு சர்ச்சையாக மாறி இருக்கிறது.

1962-ல் திமுக ஆட்சிக்கே வராத நிலையில் திமுகதான் மருதமலை முருகன் கோயிலுக்கு மின்சாரம் தரவில்லை என்று பேசியதாக நெட்டிசன்கள் குற்றம்சாட்டி உள்ளனர். இந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பதிவிட்டு பதிலடி கொடுத்து வரும் திமுக ஆதரவாளர்கள் பலர், திமுக ஆட்சிக்கு வந்ததே 1967ல் தான் என்றும், எப்படி 1962-ல் மின்சாரம் தராமல் திமுக இருந்திருக்க முடியும் என்றும் கூறி வருகிறார்கள்.