இரா. முத்தரசன் எரியும் அதிமுகவை முதலில் அணைக்க ஏற்பாடு செய்யுங்கள்..!

அதிமுக எரிந்து கொண்டிருக்கிறது அதை அணைக்க எடப்பாடி பழனிசாமி ஏற்பாடு செய்யட்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் இரா. முத்தரசன் தெரிவித்துள்ளார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு விழா ஆசிரியர் பயிலரங்க கூட்டம் கட்சியின் மாநில செயலாளர் இரா. முத்தரசன் தலைமையில் திருச்சியில் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு முன்னதாக செய்தியாளர்களின் கேள்விகளுக்கு இரா. முத்தரசன் பதிலளித்தார். அப்போது, 1925 -ஆம் ஆண்டு டிசம்பர் 26 -ஆம் தேதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தொடங்கப்பட்டது. கட்சி தொடங்கப்பட்டு நூறாண்டுகள் ஆன நிலையில் நூற்றாண்டு விழாவை கொண்டாட முடிவெடுத்துள்ளோம்.

அதன் ஒரு பகுதியாக திருச்சியில் பயிலரங்கம் ஏற்பாடு செய்துள்ளோம். இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வரலாறு குறித்து புத்தகம் வெளியிடப்படுகிறது. கட்சியின் வரலாறு குறித்து மூத்த தலைவர்கள் எடுத்துரைப்பார்கள்.

நூற்றாண்டு விழாவை கொண்டாடும் வகையில் ஆண்டு முழுவதும் கருத்தரங்குகள், பொதுக்கூட்டங்கள், கலை நிகழ்சிகள், விளையாட்டு போட்டிகள் போன்ற பல்வேறு நிகழ்வுகள் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடைபெற இருக்கிறது. கட்சியின் வரலாறுகள் முழுவதும் தொகுக்கப்பட்டு நூல்களாக வெளியிடப்பட உள்ளன என இரா. முத்தரசன் தெரிவித்தார்.

மேலும் இரா. முத்தரசன் பேசுகையில், திமுக கூட்டணியிலிருந்து கூட்டணி கட்சிகள் வெளியேற வேண்டும் என்பது எடப்பாடி பழனிச்சாமியின் ஆசை. முதலில் அதிமுக எரிந்து கொண்டு இருக்கிறது, அதை அணைக்க எடப்பாடி பழனிச்சாமி ஏற்பாடு செய்யட்டும். தி.மு.க கூட்டணியில் குழப்பம் நீடிக்கிறது என கூறுபவர்கள் யார்? எங்கள் கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை, நாங்கள் தெளிவாக இருக்கிறோம், ஒற்றுமையோடு இருக்கிறோம். இந்த அணி தொடரும், மேலும் பலப்படும் என இரா. முத்தரசன் தெரிவித்தார்.

கவுதமி அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளராகிறார்..!

அதிமுகவில் கொள்கை பரப்பு துணை செயலாளராக நடிகை கவுதமி நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த 25 ஆண்டுகளாக பாஜகவில் இருந்து வந்த நடிகை கவுதமி கருத்து வேறுபாடுகள் காரணமாக அக்கட்சியில் இருந்து விலகி, கடந்த பிப்ரவரி மாதம் அதிமுகவில் இணைந்தார். இந்நிலையில் கட்சியில் சேர்ந்து 8 மாதங்களுக்கு பிறகு அவருக்கு மாநில நிர்வாகி பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில், “நடிகை கவுதமி அதிமுகவின் கொள்கை பரப்பு துணைச் செயலாளராக நியமிக்கப்படுகிறார். கடலூர் மாவட்டம் திட்டக்குடியை சேர்ந்த தடா து.பெரியசாமி MGR மன்ற துணைச் செயலாளராகவும், சென்னையை சேர்ந்த ஃபாத்திமா அலி, கட்சியின் சிறுபான்மையினர் நலப்பிரிவு துணைச் செயலாளராகவும் நியமிக்கப்படுகின்றனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் விவசாய பிரிவு செயலாளராக இருந்த பி.சன்னாசி அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுகிறார். இவர், கட்சியின் மாநில விவசாயப் பிரிவு துணை செயலாளராக நியமிக்கப்படுகிறார்” என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிமுக சரியாக இல்லை என வி.கே.சசிகலா விமர்சனம்

வி.கே.சசிகலா அதிமுக தற்போது சரியாக இல்லை என விமர்சனம் செய்தார். அதிமுகவின் 53-வது ஆண்டு விழாவை கொண்டாடிய பிறகு செய்தியாளர்களின் கேள்விக்கு எடப்பாடி பழனிசாமி பதிலளித்தார். அப்போது, எடப்பாடி பழனிசாமி அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்கள் இனி நீக்கப்பட்டவர்கள்தான். ஓ.பி.எஸ்., வி.கே.சசிகலா ஆகியோரை மீண்டும் சேர்த்துக்கொள்ளும் பேச்சுக்கே இடமில்லை. அதுபற்றி இனி எந்த செய்தியும் போடாதீர்கள் என்று கோபமாக கூறினார்.

இதுகுறித்து வி.கே.சசிகலாவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது பேசிய வி.கே.சசிகலா அதிமுக தற்போது சரியாக இல்லை. அதிமுகவில் நிறைய மாற்றங்கள் கொண்டு வர வேண்டியுள்ளன. கட்சியை வலுப்படுத்த நிறைய செய்ய வேண்டியிருருக்கிறது. கட்சியை வலுப்படுத்தி 2026-ல் மக்களாட்சி அமைக்கப் போகிறோம் என வி.கே.சசிகலா தெரிவித்தார்.

எடப்பாடி பழனிசாமி: அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்கள் இனி சேர்க்க வாய்ப்பு இல்லை..!”

கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர்களை இனி மீண்டும் சேர்க்க வாய்ப்பு இல்லை என எடப்பாடி பழனிசாமி சரவெடி வெடித்தார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் அதிமுகவின் 53-ம் ஆண்டு ஆண்டு விழா நடைபெற்றது. அந்த வளாகத்தில் உள்ள எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிலைகளுக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இதைத் தொடர்ந்து செய்தியாளர்கள் கேள்விக்கு எடப்பாடி பழனிசாமி பதிலளித்தார். அப்போது, அதிமுக இரண்டாகிவிட்டது, அதிமுக பிரிந்து கிடக்கிறது என்ற வார்த்தையை கூட இனி உபயோகிக்க வேண்டாம். பிரிந்து சென்றவர்கள் இன்று எத்தனையோ அவதாரங்களை எடுக்கிறார்கள். ஒன்றாக இருப்பதால்தான் இத்தனை பேர் இங்கு நிற்கின்றோம். அதிமுக பிரிந்து கிடக்கிறது என சொல்லாதீர்கள்.

அதிமுக ஒன்று தான். கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர்களை இனி மீண்டும் சேர்க்க வாய்ப்பு இல்லை. எங்கள் தரப்பில் இருப்பதுதான் அதிமுக. கட்சிக்கு விரோதமாக செயல்பட்டவர்கள் அனைவரும் நீக்கப்பட்டு விட்டார்கள் என எடப்பாடி பழனிசாமி சரவெடி வெடித்தார்.

எடப்பாடி பழனிசாமி: “முதிர்ச்சி இல்லாமல் உதயநிதி ஸ்டாலின் பதில் அளிக்கிறார்..!”

வெள்ளை அறிக்கை கேட்டால் முதிர்ச்சி இல்லாமல் பதில் அளிக்கிறார் உதயநிதி ஸ்டாலின்” என எடப்பாடி பழனிசாமி சாடினார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் அதிமுகவின் 53-ம் ஆண்டு ஆண்டு விழா நடைபெற்றது. அந்த வளாகத்தில் உள்ள எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிலைகளுக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இதைத் தொடர்ந்து செய்தியாளர்கள் கேள்விக்கு எடப்பாடி பழனிசாமி பதிலளித்தார். அப்போது, பேசிய எடப்பாடி பழனிசாமி, “பொன்விழா கண்ட கட்சி அதிமுக. இக்கட்சி பல்வேறு சாதனைகளை புரிந்திருக்கிறது. சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் கொடுத்தது. ஆனால், மழை அதிகளவில் பெய்யவில்லை. வெயில்தான் அடிக்கிறது.

இன்னும் பல பகுதிகளில் தண்ணீர் வடியாமல் மக்கள் தவிப்பதை பார்க்க முடிகிறது. 20 செ.மீ. மழை பெய்தால் கூட தண்ணீர் தேங்காது என முதலமைச்சரும், அமைச்சர்களும் கூறினர். தற்போது முதலமைச்சர், துணை முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் உட்பட அனைவரும் மழைநீர் எங்கும் தேங்கவில்லை என பொய் கூறிவருகிறார்கள்.

தமிழகத்தில் மழை மட்டும்தான் பெய்துள்ளது. அதற்கே இந்த அரசு மிகவும் அலறுகிறது. அதிமுக பல புயல்களை கண்டது, தானே புயல், ஒக்கி புயல், வர்தா புயல், கஜா புயல் என பல புயல்களை கண்டுள்ளது. அதேவேளையில் புயல் வேகத்தில் மக்களுக்காக பணியாற்றி, அவர்களின் பிரச்சினையை தீர்த்ததுள்ளது. அதிமுகவை குறை சொல்வதற்கு யாருக்கும் தகுதி கிடையாது.

தூய்மைப் பணியாளர்களுக்கு டீ வாங்கி கொடுத்தால் எல்லாம் முடிந்து விடுமா? தூய்மை பணியாளர்களின் வாழ்வை கேள்விக்குறியாக்கிய அரசாங்கம் இந்த அரசாங்கம். அதிமுக ஆட்சியில்தான் தூய்மை பணியாளர்களுக்கு மரியாதை கிடைத்தது. மழைக் காலத்திலும், வெள்ளம் ஏற்பட்ட போதிலும் தூய்மை பணியாளர்களுக்கு போதுமான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டது. அவர்களுக்கு இழப்பு ஏற்படும்போது உரிய நிவாரணமும் கொடுக்கப்பட்டது. மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு ஆளுநர் அரசைப் பாராட்டியது குறித்து அவரிடம்தான் கருத்து கேட்க வேண்டும். நான் எதுவும் சொல்ல முடியாது என எடப்பாடி பழனிசாமி பேசினார்.

மேலும் எடப்பாடி பழனிசாமி பேசுகையில்,  அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட வடிகால் பணிகளை முடிக்காததால் சென்னையில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. எஞ்சிய மழைநீர் வடிகால் பணிகளை திமுக அரசு முழுமையாக செய்திருந்தால் சென்னையில் இப்பிரச்சினை இருந்திருக்காது. அதிமுக பணிகளை திமுக தொடர்ந்திருந்தால் மழைநீர் தேங்கி இருக்காது. திருப்புகழ் கமிட்டி அறிக்கையின்படி எடுத்த நடவடிக்கைகள் பற்றி வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.

வெள்ளை அறிக்கை கேட்டால் முதிர்ச்சி இல்லாமல் பதில் அளிக்கிறார் உதயநிதி ஸ்டாலின். பெரிதாக மழை பெய்யாததால் ஆங்காங்கே தண்ணீர் தேங்கவில்லை, ஒருவேளை தொடர்ந்து மழை பெய்திருந்தால் நம்மால் வெளியேகூட சென்றிருக்க முடியாது. பல்வேறு அமைச்சர்கள் கவனிக்க வேண்டிய துறைகளை துணை முதல்வர் ஒருவரே கவனிக்கிறார். அனுபவம் வாய்ந்த அமைச்சர்களுக்கு பதில் துணை முதல்வர் மட்டுமே வேலை செய்கிறார். நீர்வளத் துறை, பொதுப்பணித் துறை என அனைத்து துறைகளையும் உதயநிதி ஸ்டாலினே கவனிக்கிறார்.

அனுபவம் பெற்ற அமைச்சர்களின் அறிவுரைகளை கேட்காமல், உதயநிதியை முன்னிலைப்படுத்தவே திமுக முயல்கிறது. குடும்பத்தின் நலனை கருத்தில் கொண்டு செயல்படுகிறது. முதல்வர் ஸ்டானின் தொகுதியில் தேங்கியுள்ள நீரே வடியாமல் கிடக்கிறது. அப்படி இருக்கும்பட்சத்தில் சென்னையில் உள்ள நீரை எப்படி இவர்கள் வடிய வைக்கப் போகிறார்கள்” என எடப்பாடி பழனிசாமி கூறினார்.

எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு: திமுக ஆட்சியில் அதிமுக நிர்வாகிகள் மீது தொடர்ந்து தாக்குதல்..!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, திமுக ஆட்சியில் அதிமுக நிர்வாகிகள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தப்படுவதாக குறறம் சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்து, போதைப்பொருள் நடமாட்டம், பெண்கள்,குழந்தைகளுக்கு எதிராக அதிகரிக்கும் பாலியல் வன்கொடுமைகள், அரசியல் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் மீதான கொலை வெறித் தாக்குதல் அதிகரித்த வண்ணம் உள்ளது.

சொத்து வரி உயர்வு, சட்டம்-ஒழுங்கு சீர்கேடு உள்ளிட்ட மக்கள் விரோத செயல்களில் ஈடுபடும் ஸ்டாலினின் திமுக அரசைக்கண்டித்து அக்.8-ஆம் தேதி மனிதசங்கிலி போராட்டம் நடைபெற்றது. இதில் கோயம்புத்தூர் மாநகராட்சி, குனியமுத்தூர் பகுதி அதிமுக 92-பி வட்டச் செயலாளர் என். ராஜா அவரது வட்டத்திலிருந்து திரளான பொதுமக்களை அழைத்துச் சென்று பங்கேற்றுள்ளார்.

பின்னர் அன்று மாலை சுமார் 5.30 மணியளவில் ராஜா, தனது இருசக்கர வாகனத்தில் மக்கள் நடமாட்டம் உள்ள பி.கே.புதூர், இந்திரா நகர் ரேஷன் கடை அருகில் சென்று கொண்டிருந்தபோது, எதிரே இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் ராஜாவின் வாகனத்தை மறித்து சர்வ சாதாரணமாக, மறைத்து வைத்திருந்த அரிவாளால் கொடூரமாக வெட்டிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். ராஜாவின் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்த பொதுமக்கள் அவரை காப்பாற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

குனியமுத்தூர் பகுதியில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் நடமாட்டம் மிக அதிகமாக உள்ள காரணமாகவும், அரசியல் காரணமாகவும் ராஜாவுக்கு எதிராக தாக்குதல் நடைபெற்றிருக்கலாம் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.

இதேபோல், மயிலாடுதுறை மாவட்டம், அதிமுக வைத்தீஸ்வரன்கோவில் பேரூராட்சி செயலாளர் போகர் சி.ரவி மனித சங்கிலி போராட்டத்தின்போது, பேரூராட்சியின் அவலங்களை எடுத்துரைத்துள்ளார். இதன் காரணமாக நேற்று,பேரூராட்சி செயல் அலுவலரை வேலை நிமித்தமாக பார்க்க சென்ற ரவிவை, திமுக பேருராட்சி மன்றத் தலைவியின் கணவர் மற்றும் துணைத் தலைவர் மற்றும் சிலர் ஆயுதங்களால் கடுமையாக தாக்கினர்.

இத்தாக்குதலில் காயமடைந்த ரவி சிதம்பரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில் இதுவரை முதல் தகவல் அறிக்கை கூட பதிவு செய்யவில்லை. திமுக அரசில் தொடர்ந்து அதிமுக நிர்வாகிகள் மற்றும் எதிர்க்கட்சியினர் மீது கொலை வெறித் தாக்குதல் நடைபெறுவது மிகுந்த கண்டனத்துக்குரியது.

இந்த ஆட்சியில் பொதுமக்கள், பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவது தொடர்கதையாக உள்ளது. தாக்குதலுக்குள்ளான நிர்வாகிகள் அளித்த புகாரை பதிவு செய்து, தாக்குதல் நடத்திய சமூக விரோதிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த அறிக்கையில் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

RSS ஊர்வலத்தை தொடங்கி வைத்ததால் தளவாய்சுந்தரம் கட்சி பொறுப்புகளில் இருந்து நீக்கம்..!

கன்னியாகுமரியில் நடந்த RSS ஊர்வலத்தை தொடங்கி வைத்த தளவாய்சுந்தரத்தை மாவட்ட செயலாளர், அமைப்பு செயலாளர் பொறுப்புகளில் இருந்து நீக்கி எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

அதிமுக, பாஜக இடையே கூட்டணி உடைந்து, தற்போது இரு கட்சிகளை சேர்ந்தவர்களும் மாறி, மாறி விமர்சித்து வரும் நிலையில், சமீபத்தில் நாகர்கோவில் அருகே ஈசாந்திமங்கலத்தில் RSS சார்பில், ஊர்வலம் நடைப்பெற்றது. இந்த ஊர்வலத்தை தளவாய்சுந்தரம் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இந்நிலையில், RSS ஊர்வலத்தை தளவாய்சுந்தரம் தொடங்கி வைத்தது அதிமுக வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பாஜகவுடன் இனி கூட்டணி இல்லை என எடப்பாடி பழனிசாமி மற்றும் அதிமுக மூத்த நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள் பேசி வரும் நிலையில், RSS ஊர்வலத்தை அவர் தொடங்கி வைத்தது பெரும் விமர்சனத்துக்கு உள்ளாகியது.

இந்நிலையில், எடப்பாடி பழனிசாமிக்கு மிகவும் நெருக்கமானவரும், அதிமுகவின் முக்கிய தலைவர்களில் ஒருவராக இருந்த வந்த முன்னாள் அமைச்சர் தளவாய்சுந்தரம். தற்போது கன்னியாகுமரி எம்எல்ஏவாக உள்ள தளவாய்சுந்தரம், கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட செயலாளராகவும், அதிமுக மாநில அமைப்பு செயலாளராகவும் இருந்தார்.

கன்னியாகுமரி மாவட்ட அதிமுக தளவாய்சுந்தரத்தை மையப்படுத்தி அதிமுக நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டு வந்த நிலையில், திடீரென கட்சியின் அமைப்பு செயலாளர் மற்றும் மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து தளவாய்சுந்தரம் நீக்கப்பட்டுள்ளார்.

இதுதொடர்பாக எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘அதிமுகவின் கொள்கை, குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணாக, மாறுபட்ட வகையில் செயல்பட்டதாகவும், அதிமுகவின் சட்ட திட்டங்களுக்கு மாறுபட்டு நடந்து கொண்டதாகவும் கிடைத்த தகவலின் அடிப்படையில், இது குறித்து விசாரணை மேற்கொள்ள வேண்டி இருக்கிறது.

ஆகவே கன்னியாகுமரி கிழக்கு மாவட்டத்தை சேர்ந்த தளவாய்சுந்தரம், தான் வகித்து வரும் அமைப்பு செயலாளர், கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட செயலாளர் ஆகிய பொறுப்புகளில் இருந்து தற்காலிகமாக விடுவிக்கப்படுகிறார்’ என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்படுள்ளது.

எடப்பாடி பழனிசாமி: சென்னை விமான சாகச நிகழ்வு..! விடியா திமுக அரசுக்கு எனது கடும் கண்டனங்கள்..!

சென்னை மெரினா கடற்கரையில் இந்திய விமானப் படையின் 92-ம் ஆண்டு நிறைவு விழாவையொட்டி, நேற்று நடைபெற்ற விமான சாகச நிகழ்ச்சிக்காக 15 லட்சத்துக்கும் மேற்பட்டோர் குவிந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது. வெயில், நெரிசலால் 240 பேர் மயக்கம் அடைந்த நிலையில், சிகிச்சை பலனின்றி 5 பேர் உயிரிழந்தனர்.  இந்த சம்பவம் குறித்து மக்கள் கூட்டத்தை கண்காணிக்க தமிழக காவல் துறை தவறியதாக அதிமுகவும், பாஜகவும் குற்றம் சாட்டியுள்ளன.

சென்னை மெரினாவில் நேற்று இந்திய விமானப் படையின் 92 -ஆவது ஆண்டு தினத்தை முன்னிட்டு, விமானப் படையினரின் சாகச நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், முப்படைகளின் தளபதி அனில் சவுரா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இந்திய விமானப்படை கடந்த 1932-ஆம் ஆண்டு அக்டோபர் 8-ஆம் தேதி தொடங்கப்பட்டது. விமானப் படை தொடங்கப்பட்டு 92 ஆண்டுகள் நிறைவடைந்து 93-ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. இதைக் கொண்டாடும் வகையில், சென்னையில் இன்று மிகப் பெரிய விமான வான் சாகச நிகழ்ச்சி நடைபெற்றது. மெரினா கடற்கரையில் காலை 11 மணிக்கு தொடங்கிய இந்த சாகச நிகழ்ச்சி மதியம் 1 மணிக்கு நிறைவடைந்தது. விமான சாகச கண்காட்சியில் இந்திய விமானப் படையின் பல்வேறு வகையான 72 விமானங்கள் காண்போரைக் கவர்ந்திழுக்கும் வகையில், ஏரோபாட்டிக் வான் சாகசங்களில் ஈடுபட்டன.

விமான சாகச நிகழ்ச்சியில் இந்திய வான்படையினர் பாராஷூட், ஹெலிகாப்டர், இலகு ரக விமானம், போர் விமானம் என இந்திய வான்படைக்கு சொந்தமான விமானங்களில் சாகசங்களை செய்து காண்பித்து மெரினாவில் கூடியவர்களை வியப்பில் ஆழ்த்தினர்.

சென்னையில் இன்று நடைபெறும் சாகச நிகழ்ச்சியைக் காண 15 லட்சம் பேர் வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இதனை லிம்கா சாதனை புத்தகத்தில் இடம் பெறச் செய்ய வேண்டும் என விமானப் படை விரும்பியது. இதற்காக, பொதுமக்கள் அதிகளவில் வந்து பார்வையிட வர வேண்டும் என விமானப் படை பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்திருந்தது.

இந்நிலையில் இந்த சாகச நிகழ்ச்சியை 15 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் நிகழ்ச்சியை கண்டுகளித்து விமானப்படையின் விருப்பதை பூர்த்தி செய்து, சாகச நிகழ்ச்சியை லிம்கா சாதனை புத்தகத்தில் இடம்பெறச் செய்துள்ளனர்.

இந்திய பாதுகாப்புத் துறையின் முக்கிய அங்கங்களுள் ஒன்றான இந்திய விமானப் படையின் 92வது துவக்க நாள் விழாவை முன்னிட்டு, விமானப் படையின் தீரத்தை பறைசாற்றும் வண்ணம் சென்னையில் இன்று வான் சாகச நிகழ்ச்சி அரங்கேறியது.

இந்நிலையில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் பக்கத்தில், லட்சக்கணக்கான மக்கள் பார்வையிடக் கூடுவர் என்பது அறிந்து, போக்குவரத்து, அடிப்படை வசதிகள் உள்ளிட்ட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக தமிழ்நாடு அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இருப்பினும், இன்றைய நிகழ்ச்சியில் நிர்வாக ரீதியிலான ஏற்பாடுகளும், கூட்டத்தையும்- போக்குவரத்தையும் ஒழுங்கு படுத்துவதற்கு காவல்துறையினரும் போதிய அளவில் இல்லாததால், மக்கள் கடும் கூட்ட நெரிசலில் சிக்கி, குடிநீர் கூட கிடைக்காத நிலை ஏற்பட்டு, மேலும் வெயிலின் தாக்கத்தால் பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அதில் இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளதாகவும் வரும் செய்திகள் அதிர்ச்சியும் , மிகுந்த வேதனையும் அளிக்கின்றன.

உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலும் வருத்தங்களும். இதுபோன்ற முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிகழ்வைக் கூட முறையாக ஒருங்கிணைக்கத் தவறிய நிர்வாகச் சீர்கேடே உருவான விடியா திமுக அரசுக்கு எனது கடும் கண்டனங்கள்.

இந்தியாவின் பல்வேறு நகரங்களில் ராணுவ விமானப் படையின் தீரத்தை பறைசாற்றும் நிகழ்வுகள் இதுவரையில் சிறப்பாக நடைபெற்று வந்துள்ளன,ஆனால் இன்று தமிழகத்தில் நிகழ்பெற்ற நிகழ்வில் உயிர்சேதம் ஏற்பட்டிருப்பது மிகவும் வருத்தத்துக்குரியது என எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

எடப்பாடி பழனிசாமி: எல்லோரையும் எப்பவுமே ஏமாற்ற முடியாது..! ‘சட்டியில் இருந்தால்தான் அகப்பையில் வரும்’

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் செயல்பாடு பூஜ்யம் என்பதால்தான், வெள்ளை அறிக்கையை வெளியிட மறுக்கிறார் எனவும், சிலரை சிலநாள் ஏமாற்றலாம், பலரை பலநாள் ஏமாற்றலாம், எல்லோரையும் எல்லா காலமும் ஏமாற்ற முடியாது என முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.

எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்,”திமுக ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்து வெளிநாட்டு முதலீட்டை ஈர்க்கிறேன் என்று, பதவியேற்ற 40 மாதங்களில் 4 முறை வெளிநாடுகளுக்கு குடும்பத்துடன் சுற்றுப்பயணம் மேற்கொண்ட திரு. ஸ்டாலின், இந்தியாவில் மற்ற மாநில முதலமைச்சர்கள், அமைச்சர்கள் ஈர்த்த முதலீட்டைவிட மிக, மிகக் குறைவான முதலீட்டைக் கொண்டு வந்துள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

உதாரணமாக, தெலுங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி ஆகஸ்ட் 2024-ல் அமெரிக்கா சென்று சுமார் ரூ.31,500 கோடி முதலீட்டினை ஈர்த்துள்ளதாகவும், கர்நாடக தொழில் துறை அமைச்சர் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் இருவரும் கடந்த ஆண்டு அக்டோபரில் அமெரிக்கா சென்று சுமார் ரூ. 25 ஆயிரம் கோடி முதலீடுகளை ஈர்த்ததாகவும் செய்திகள் வந்துள்ளன.

ஆனால், 17 நாட்கள் அமெரிக்காவில் தங்கி, சைக்கிள் ஒட்டி, சினிமா பார்த்து திரு. ஸ்டாலின் ஈர்த்த முதலீடு வெறும் ரூ. 7,618 கோடிதான். திரு. ஸ்டாலின், மார்ச் 2022-ல் துபாய்க்கு குடும்பச் சுற்றுலா மேற்கொண்டு ஈர்த்த முதலீடு ரூ.6,100 கோடி. மே மாதம் 2023-ல் சிங்கப்பூர், ஜப்பான் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஈர்த்த முதலீடு ரூ.3,233 கோடி. ஜனவரி மாதம் 2024-ல் ஸ்பெய்ன் சுற்றுப் பயணத்தில் ஈர்த்த முதலீடு ரூ. 3,440 கோடி. தற்போது, அமெரிக்கா சென்று ஈர்த்த முதலீடு ரூ. 7,618 கோடி ஆக, 4 முறை வெளிநாட்டு சுற்றுப்பயணத்தில் சுமார் ரூ.18 ஆயிரம் கோடி மட்டுமே முதலீடாக ஈர்க்கப்பட்டுள்ளது.

இதிலும், பெரும்பாலான முதலீட்டு ஒப்பந்தங்கள் தமிழகத்தில் தற்போது இயங்கிக் கொண்டிருக்கும் தொழிற்சாலைகளின் விரிவாக்கத்திற்காக போடப்பட்டவையே. இந்த முதலீடுகளை, விடியா திமுக அரசு ஜனவரி, 2024-ல் நடத்திய உலகத் தொழில் முதலீட்டாளர் மாநாட்டில் சென்னையிலேயே கையெழுத்திட்டிருக்கலாம்.

2019-ஆம் ஆண்டு இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் துபாய் நாடுகளுக்கு நான் பயணம் மேற்கொண்டபோது 46 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டு 8,835 கோடி ரூபாய் முதலீடு ஈர்க்கப்பட்டது. இதன் மூலம், 35,520 புதிய வேலை வாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டது. அதேபோல், கோவிட் தொற்றுநோய் காலத்தில் மட்டும், 60,674 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 1,00,721 நபர்களுக்கு வேலை வாய்ப்புடன், 73 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

அம்மாவின் அரசு ‘2019 உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தியபோது, அப்போதைய எதிர்க்கட்சித் தலைவராக இருந்த திரு. ஸ்டாலின், மாநாட்டிற்கு வந்தவர்களை கொச்சைப்படுத்தும் விதமாக கோட் சூட் அணிந்தவர்களை அழைத்து உட்கார வைத்து GIM 2019 நடத்தியதாக’ கேலி பேசினார். நாங்கள் தொழில் முனைவோர்களையும், ‘கோட்’ போட்ட திரு. ஸ்டாலினையும் அதுபோன்று கொச்சைப்படுத்த மாட்டோம்.

ஒரு மாநிலத்தின் தொழில் முதலீடுகள் மற்றும் தொழில் வளர்ச்சி என்பது ஒரு தொடர் நடவடிக்கைகள் ஆகும். திரு. ஸ்டாலின் அமெரிக்காவிலிருந்து திரும்பியவுடன் விமான நிலையத்தில் அளித்த பேட்டியில், எனது ஆட்சிக் காலத்தில் போடப்பட்ட ஒப்பந்தங்களில் 10 சதவீதம்கூட நிறைவேற்றப்படவில்லை என்று நச்சுக் கருத்தைக் கூறியுள்ளார்.

2019-ல் முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தியபோது, அதனை முன்னின்று நடத்தியவர் அப்போதைய தொழில்துறை செயலாளர் திரு. ஞானதேசிகன் அவர்கள். 2019 உலக முதலீட்டாளர் (ஜிம்) மாநாட்டின் சிறப்பு அலுவலராக (Special Officer) திறம்பட பணியாற்றியவர் கூடுதல் செயலாளராக இருந்த திரு. அருண்ராய், திரு. ஞானதேசிகன்-க்கு பிறகு தொழில் துறைச் செயலாளராக திரு. முருகானந்தம் பொறுப்பேற்றார்கள்.

எனது தலைமையில், தொழில் துறை அமைச்சர், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர், பால்வளத் துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகள் குழுவினர், வெளிநாட்டிற்குச் சென்று முதலீட்டினை ஈர்ப்பதற்கும் மற்றும் கொரோனா கால முதலீடுகளை ஈர்ப்பதற்குமான ஏற்பாடுகளை முன்னின்று செய்த அதிகாரிகள் திரு. முருகானந்தம், திரு. அருண்ராய் ஆகியோர்தான். 2020-ம் ஆண்டு இறுதியில் ஜிம்-1ல் போடப்பட்ட ஒப்பந்தங்களில் 72 சதவீத திட்டங்களும், ஜிம்-2ல் போடப்பட்ட ஒப்பந்தங்களில் 27 சதவீத திட்டங்களும் செயல்பாட்டிற்கு வந்தன.

எனது வெளிநாட்டுப் பயணத்தின்போது போடப்பட்ட ஒப்பந்தங்களில் 41 திட்டங்கள் செயல்பாட்டிற்கு வந்தது. கொரோனா காலத்தில் ஏப்ரல், மே மற்றும் ஜூன் 2020-ல் போடப்பட்ட ஒப்பந்தங்களில், 7 மாதத்திற்குள் ரூ. 24,458 கோடி முதலீட்டில், 24 திட்டங்களை, சென்னை, ஹோட்டல் லீலா பேலசில் நடைபெற்ற விழாவில் நானே தொடங்கி வைத்தேன். இந்த புள்ளி விவரங்களை அரசு கோப்பில் இருந்து தெரிந்து கொள்ளலாம்.

ஆட்சியாளர்கள் மாறினாலும், அதிகார வர்க்கம் அப்படியேதான் இருக்கும்’ ‘ஆட்சி அமைப்பு (அதிகாரிகள்) நிரந்தரமானது. ஆட்சியாளர்கள் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை மாறக்கூடியவர்கள்’. எனது தலைமையிலான அம்மாவின் அரசில், தொழில் துறையில் பணியாற்றியவர்கள்தான், தற்போது திரு. ஸ்டாலின் ஆட்சியிலும் தொடர்ந்து முக்கிய அதிகாரிகளாகப் பணிபுரிகின்றனர். எனது தலைமையிலான அம்மா ஆட்சியில் தொழில்துறையின் சிறப்பு செயலாளராக இருந்த திரு. அருண்ராய், இந்த ஆட்சியில் தொழில்துறை செயலாளராகப் பணியாற்றுகிறார்.

அன்றைய தொழில்துறை செயலாளராக இருந்த திரு. முருகானந்தம் அவர்களை, திரு. ஸ்டாலின் தொடர்ந்து தொழில்துறை செயலாளராகவும், நிதித் துறை செயலாளராகவும், தனது செயலாளராகவும் பணியமர்த்தியதுடன், தற்போது தமிழகத்தின் தலைமைச் செயலாளராகவும் நியமித்துள்ளார். இவர்கள் இருவரிடமும் எங்கள் ஆட்சியில் போடப்பட்ட ஒப்பந்தங்களில் எவ்வளவு நடைமுறைப்படுத்தப்பட்டன என்பதைக் கேட்டுத் தெரிந்திருந்தால் மனம்போன போக்கில் பேட்டியளித்திருக்க மாட்டார்.

இந்த 40 மாத கால திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட வெளிநாட்டு முதலீடுகளின் நிலை, துவங்கப்பட்ட தொழிற்சாலைகள், வேலைவாய்ப்பு பெற்றவர்களின் எண்ணிக்கை உள்ளிட்ட அனைத்து விவரங்களுக்கான வெள்ளை அறிக்கையினைக் கேட்டேன். இந்த முதலமைச்சரின் செயல்பாடு பூஜ்யம் என்பதால்தான், வெள்ளை அறிக்கையை வைக்க மறுக்கிறார்.

‘சட்டியில் இருந்தால்தான் அகப்பையில் வரும்’ என்ற கிராம பழமொழிதான் பொம்மை முதலமைச்சரின் செயல்பாடுகளைப் பார்க்கும்போது நினைவுக்கு வருகிறது. தன்னுடைய வார்த்தை ஜாலம் மூலம் அனைவரையும் ஏமாற்றிவிடலாம் என்ற கற்பனையில் திரு. ஸ்டாலின் மிதக்கிறார். சிலரை சிலநாள் ஏமாற்றலாம் – பலரை பலநாள் ஏமாற்றலாம். எல்லோரையும் எல்லா காலமும் ஏமாற்ற முடியாது என்பதை திரு. ஸ்டாலின் உணரும் காலம் விரைவில் வரும்.” என அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

எடப்பாடி பழனிசாமி அதிமுக தொண்டர்கள்தான் கட்சி…! அதிமுகவை யாராலும் அழிக்க முடியாது..!

அதிமுக சார்பில் திருவள்ளூர் மத்திய மாவட்ட மதுரவாயல், நொளம்பூரில் அண்ணாவின் 116 -வது பிறந்த நாள் விழா பொதுக் கூட்டமும், நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவும் நடந்தது. இந்த விழாவில் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். அப்போது, அதிமுக ஆட்சியில் இருந்தபோது காவேரி நதி நீர் பிரச்னை குறித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு கூறியது.

அந்த தீர்ப்பை பாஜக அமல்படுத்த காலம் தாழ்த்தியது. கூட்டணியில் இருந்த அதிமுக 37 எம்பிக்கள் நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்தனர். உச்ச நீதிமன்றம் தீர்ப்பை அமல்படுத்த வேண்டும் என 22 நாட்கள் நாடாளுமன்றத்தை அதிமுக எம்பிக்கள் முடக்கினர். காவிரி பிரச்னை குறித்து அம்மா உச்சநீதிமன்றம் சென்று வழக்கு தொடர்ந்தார். அதற்குள் ஜெயலலிதா மறைந்துவிட்டார். ஆனாலும் ஜெயலலிதாவின் அரசு காவிரி நதிநீர் பங்கீடு பிரச்னையில் உச்சநீதிமன்றம் மூலம் வெற்றி பெற்றது.

நீட் தேர்வு மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. நீட் தேர்வு விலக்கு என்பதும் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. அதிமுகவில் நீக்கப்பட்டவர்கள் பொதுக்குழு, செயற்குழு தீர்மானத்தின்படி நீக்கப்பட்டார்கள். நீக்கப்பட்டவர்கள் நீக்கப்பட்டவர்கள்தான். இணைப்பு என்ற பேச்சுக்கே இடம் இல்லை. அதிமுக தொண்டர்கள்தான் கட்சி. இந்த கட்சியை யாராலும் அழிக்க முடியாது என பேசினார். பிறகு அவருக்கு‌ மாவட்ட செயலாளர் பா.பென்ஜமின் வெள்ளி வீர வாள் மற்றும் நினைவு கேடயம் பரிசாக வழங்கினார்.