பி.தங்கமணி: அதிமுக இல்லைனா..! பெண்களுக்கு ரூ.1,000 உரிமைத்தொகை இல்லை..!

அதிமுக இல்லாவிட்டால் பெண்களுக்கு தற்போது ரூ.1,000 உரிமைத்தொகை கூட வந்திருக்காது என முன்னாள் அமைச்சர் பி.தங்கமணி கேள்வி எழுப்பியுள்ளார்.

மதுரை மாநகராட்சியில் பெரியார் கூட்டுக் குடிநீர் திட்டம், பாதாளசாக்கடை திட்டத்தை நிறைவேற்றாததை கண்டித்தும், மோசமான சாலைகள், வண்டில் மண் என்ற போர்வையில் கனிம கொள்ளையை கண்டித்தும் புறநகர் கிழக்கு மாவட்ட அதிமுக சார்பில் திருப்பரங்குன்றத்தில் முன்னாள் அமைச்சர் பி.தங்கமணி தலைமை கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் கலந்துக்கொண்டு பேசிய முன்னாள் அமைச்சர் பி.தங்கமணி, அதிமுக சட்டமன்ற தொகுதி என்பதால் முதல் படை வீடான திருப்பரங்குன்றத்தில் மக்கள் பாதுகாப்பாக பயணம் செய்ய பழுதடைந்த சாலையை சீரமைக்கவில்லை.

பாதுகாப்பான குடிநீர் வழங்க அதிமுக ஆட்சியில் கொண்டு வந்த பெரியார் கூட்டுக் குடிநீர் திட்டத்தை மூன்றை ஆண்டு காலமாக முடக்கி வைத்துள்ளனர். பாதாளசாக்கடை அமைக்கவில்லை. 10 ஆண்டு சொத்து வரி, குடிநீர் கட்டணம் உயரவில்லை. ஆனால், திமுக அரசு குப்பை வரி, சொத்து வரி, மின் கட்டணத்தை உயர்த்திவிட்டனர். அதிமுக ஆட்சியில் வரியை உயர்த்தாமலே மக்குளுக்கு தேவையான அடிப்படை வசதிகளை நிறைவேற்றிக் கொடுத்தது. மக்களுக்கான பல்வேறு திட்டங்களை கொண்டு வந்துள்ளது. ஆனால், திமுக ஆட்சியில் வரியை உயர்த்திவிட்டு அடிப்படை வசதிகளை கூட செய்து கொடுக்க மறுக்கிறது. அப்படியென்றால் மக்கள் வரிப்பணம் எங்கே செல்கிறது?

அதிமுக இல்லாவிட்டால் பெண்களுக்கு தற்போது ரூ.1,000 உரிமைத்தொகை கூட வந்திருக்காது. அனைத்து பெண்களுக்கும் ரூ.1,000 உரிமை தொகையை வழங்குவதாக வாக்குறுதி அறிவித்துவிட்டு ஆட்சிக்கு வந்ததும் திமுக அரசு அதனை நிறைவேற்றவில்லை. அதிமுக பொதுச்செயலாளர் கே.பழனிசாமி, தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தியதால் தகுதியுள்ளவர்களுக்கு என்று மட்டும் கூறி பாராபட்டசமாக 1 கோடியே 13 லட்சம் பேருக்கு மட்டும் வழங்குகிறார்கள். தகுதியானவர்களுக்கு வழங்கப்படும் என்று தேர்தல் பிரச்சாரத்திலே அவர்கள் அறிவித்து இருந்தால் பொதுமக்களும் தகுதியானவர்களுக்கே வாக்களித்து இருப்பார்கள்.

வாக்குறுதிகள் என்பது மக்கள் வாழ்வாதாரம், பொருளாதாரத்தை உயர்த்தக்கூடியதாக இருக்க வேண்டும் என்று ஜெயலலிதா சொல்வார். அந்த அடிப்டையில் அவர், பெண்கள், மாணவர்கள், முதியவர்கள், இளைஞர்களுக்கு ஏராளமான திட்டங்களை கொண்ட வந்தார். 10 ஆண்டு அதிமுக ஆட்சியில் கள்ளச்சாராயம், போதைப்பொருள் விற்பனை நடக்கவில்லை. அதே காவல் துறைதான் தற்போதும் உள்ளது.

ஆனால், அவர்கள் கைகள் கட்டப்பட்டுள்ளதால் போதைப்பொருள், கள்ளச்சாராயம் விற்பனை தாராளமாக நடக்கிறது. பள்ளிகள், கல்லூரிகளுக்கு குழந்தைகளை பாதுகாப்பாக அனுப்பி வைக்க முடியவில்லை. அதிமுக ஆன்மீகத்தில் நம்பிக்கை உள்ள இயக்கும். அதனால், திருப்பரங்குன்றத்தில் நடக்கும் இந்த ஆர்ப்பாட்டம், அதிமுகவிற்கும் திருப்புமுனையை ஏற்படுத்தும்” என பி.தங்கமணி தெரிவித்தார்.