உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு: கனிமவள வரியை மாநிலங்கள் வசூலித்து கொள்ளலாம்..!

கனிமங்கள், சுரங்கங்கள் மீது ஒன்றிய அரசு வரிகளை விதித்து வருவாயை ஈட்டி வருகிறது. இந்நிலையில், கனிம வளங்கள், கனிம வளம் நிறைந்த நிலங்கள் மீது வரி விதிக்க மாநில அரசுகளுக்கு அதிகாரம் இருக்கிறது என்று உச்ச நீதிமன்றம் கடந்த மாதம் 25-ல் தீர்ப்பளித்தது. தமிழக அரசுக்கும், இந்தியா சிமென்ட் நிறுவனத்துக்கும் இடையேயான வழக்கில் உச்ச நீதிமன்றம் முதலில் இந்த தீர்ப்பை வழங்கியது. இதைத் தொடர்ந்து, உச்ச நீதிமன்ற தீர்ப்பை முன் தேதியிட்டு அமல்படுத்தக் கூடாது என்று ஒன்றிய அரசு ஆட்சேபம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், ஒன்றிய அரசின் தீர்ப்பை நிராகரித்த உச்சநீதிமன்றம், “கனிம வளங்களுக்கு வரி விதிக்க ஒன்றிய அரசுக்கு அனுமதி இல்லை என்றும் மாநில அரசுகளுக்கே அனுமதி உள்ளது என்ற தீர்ப்பை 2005-ஆம் ஆண்டு ஏப்ரல் 1-ஆம் தேதி தொடங்கி முன் தேதியிட்டு அமலாகும். 2005 ஏப்ரல் மாதத்தில் இருந்து கனிமவள வரியை மாநிலங்கள் முன் தேதியிட்டு வசூலிக்கலாம். 2005 முதல் வசூலான கனிமவள வரியை ஒன்றிய அரசிடம் இருந்து மாநிலங்கள் பெற்றுக் கொள்ளலாம். 2024 ஜூலை 25-ஆம் தேதிக்கு முன்புள்ள காலத்துக்கான கனிம வள வரி நிலுவைத் தொகைக்கு வட்டி, அபராதம் விதிக்கக் கூடாது, என மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டது.

ஆளுநர் வெறும் ‘நாமினி’ தான்..! ஆர்.என்.ரவிக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம்…!

தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட பல மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் ஆர்.என்.ரவி கிடப்பில் போட்டு வைத்திருந்தார். இதையடுத்து, ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தமிழ்நாடு அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் 2 ரிட் மனுக்கள் கடந்த மாதம் தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘‘தமிழ்நாடு சட்டப்பேரவை மற்றும் அரசு அனுப்பிய மசோதாக்களுக்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் வழங்காமல் பல மாதங்களாக கால தாமதம் செய்து வருகிறார்.

இதனால் அரசு திட்டங்கள் அனைத்தும் பாதிக்கிறது. அதனால் ஆளுநர் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் ஒரு காலக்கெடுவை நிர்ணயம் செய்ய வேண்டும் என கூறப்பட்டிருந்தது. இதே போன்று, மற்றொரு மனுவில், ‘‘தமிழ்நாடு ஆளுநர் தமிழ்நாடு பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் நியமனங்களில் தேவையில்லாத குழப்பங்களை ஏற்படுத்தி, சட்டத்திற்கு புறம்பான விஷயங்களை செய்கிறார்.

மாநில அரசின் கருத்துக்களை ஏற்க மறுக்கிறார். குறிப்பாக பல்கலைக்கழகங்களுக்கான துணைவேந்தர் தேடுதல் குழு போன்றவற்றில் தேவையில்லாமல் ஆளுநர் ஆர்.என். ரவி மூக்கை நுழைத்து அரசின் பரிந்துரைகளை ஏற்காமல் காலதாமதம் செய்கிறார் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், ‘‘தமிழ்நாடு அரசால் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு அனுப்பிய முக்கிய மசோதாக்களுக்கு கடந்த மூன்று ஆண்டுகளாக எந்த முடிவும் எடுக்காமல் அலட்சியம் காட்டியது ஏன்? என்று ஆளுநர் ஆர்.என். ரவிக்கு சரமாரி கேள்வியெழுப்பி வழக்கு விசாரணையை டிசம்பர் 1-ம் தேதிக்கு ஒத்திவைத்து இருந்தது.

இந்நிலையில், மேற்கண்ட வழக்கானது உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழ்நாடு அரசின் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் அபிஷேக் மனு சிங்வி, வில்சன் ஆகியோரின் வாதத்தில், ‘ஆளுநர் திருப்பி அனுப்பிய பத்து மசோதாக்களை சட்டப் பேரவையில் தமிழக அரசு மீண்டும் நிறைவேற்றியது. அந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர், அதனை ஜனாதிபதிக்கு அனுப்பி உள்ளார். அதுகுறித்து தமிழக அரசுக்கோ, சட்ட மன்றத்துக்கோ அவர் எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை.

குறிப்பாக பஞ்சாப் ஆளுநர் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தெளிவான உத்தரவுகளை பிறப்பித்துள்ள நிலையில், தமிழக ஆளுநர் இதுபோன்று செயல்படுகிறார். தமிழக ஆளுநர் நடவடிக்கைகள் அரசியல் சாசனத்திற்கு எதிராக உள்ளது என தெரிவித்தனர். இதன் போது குறுக்கிட்ட ஒன்றிய அரசின் தலைமை வழக்கறிஞர் வெங்கட் ரமணி, ‘அரசியல் சாசனத்தின் 200-வது விதிகளின் படி ஆளுநர் மசோதாவை நிறுத்தி வைக்கும் அதிகாரம் கொண்டவர். மேலும் ஜனாதிபதிக்கோ, திருப்பி அனுப்பவோ அவருக்கு அதிகாரம் உள்ளது என கூறினார்.

அப்போது மீண்டும் குறுக்கிட்ட தலைமை நீதிபதி, ‘குடியரசு தலைவருக்கு மசோதாவை ஆளுநர் அனுப்பியது தமிழ்நாடு அரசுக்கு தெரிவிக்கப்பட்டதா? இல்லையா?’ என்றார். அதற்கு பதிலளித்த ஒன்றிய அரசின் வழக்கறிஞர், ‘தமிழ்நாடு அரசுக்கு மசோதாவை ஜனாதிபதிக்கு அனுப்பியது குறித்து முறையாக தெரிவிக்கப்பட்டது. இந்த விவகாரத்தில் ஆளுநர் முதலில் சட்டமன்ற மசோதாக்களை மறு பரிசீலனை செய்ய திரும்ப அனுப்பினார். ஆனால் சட்டமன்றம் அவரது ஆலோசனையை ஏற்கவில்லை, எனவே தற்போது மசோதாக்களை ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ளார் என்றார்.

அப்போது மீண்டும் கேள்வியெழுப்பிய தலைமை நீதிபதி, ‘மீண்டும் நிறைவேற்றப்பட்ட மசோதாவை குடியரசு தலைவருக்கு அனுப்ப ஆளுநருக்கு அதிகாரம் இல்லை. அரசியலமைப்பு சட்டத்தின் 200-வது பிரிவின்படி, சட்டப்பேரவையில் மீண்டும் நிறைவேற்றப்பட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்தே ஆகவேண்டும். முதல் முறையே குடியரசு தலைவருக்கு அனுப்பியிருக்கலாம். கிடப்பில் வைத்து திருப்பி அனுப்பிவிட்டு, சட்டமன்றத்தில் மீண்டும் மசோதாவை நிறைவேற்றிய பின்னர் குடியரசு தலைவருக்கு எப்படி அனுப்பலாம்?

உண்மையை சொல்ல வேண்டும் என்றால் தமிழ்நாடு அரசின் மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்கும் விவகாரத்தில், ஆளுநர் தரப்பு குழப்பத்தில் உள்ளது. அதனால் இந்த விவகாரத்தில் ஆளுநர் தரப்பு தான் பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும். இதில் அரசியல் சாசன பதவியில் இருப்பவரை கையாளுகிறோம் என்பது எங்களுக்கு நன்றாக தெரியும். இருப்பினும் எதிலும் சட்ட நடைமுறைகள் அனைவருக்கும் சமமானதாகும். அதனால் தமிழ்நாடு அரசு – ஆளுநர் இடையிலான பிரச்னையை தீர்க்க, ஒன்றிய அரசு உடனடியாக தலையிட்டு தீர்வு காண வேண்டும்.

எனவே இந்த விவகாரம் தொடர்பாக ஒன்றிய அரசு ஆளுநரிடம் கலந்து ஆலோசனை நடத்த வேண்டும். ஆளுநருக்கு சட்டத்தை செயலழிக்க செய்யவோ, முடக்கி வைக்கவோ அதிகாரமில்லை என்பதை புரிந்து கொள்ளாமல் செயல்பட்டு வருகிறீர்கள். ஆளுநர் மக்களாலோ, மக்கள் பிரதிநிதிகளாலோ தேர்ந்தெடுக்கப்பட்டவர் கிடையாது; ஒன்றிய அரசால் நியமிக்கப்பட்டவர். அரசியலமைப்பு சட்டப்படிதான் அவர் செயல்பட வேண்டும். இந்தியாவின் ஜனாதிபதி மக்கள் பிரதிநிதிகளால் தேர்ந்தெடுக்கப்படுபவர்.

இதனால் அவருக்கான அதிகாரங்கள் விரிவானது. ஆனால், மாநிலங்களின் ஆளுநர்கள் ஒன்றிய அரசின் நாமினி தான். இதனை ஆளுநர்கள் புரிந்துகொள்ள வேண்டும். ஆளுநருக்கும் முதலமைச்சருக்கும் தனிப்பட்ட கருத்து வேறுபாடுகள் இருக்கலாம், அதற்காக சட்ட மசோதாக்கள் முடக்கி வைக்க முடியாது. தமிழ்நாடு ஆளுநர் ரவி, தமிழ்நாடு முதலமைச்சரை அழைத்து மசோதாக்கள் தொடர்பாக ஆலோசனை நடத்தி முடிவெடுக்க வேண்டும் என்று தலைமை நீதிபதி உத்தரவிட்டார்.