தாலுகா அலுவலகத்தில் வீட்டுமனை பட்டா கேட்டு பொதுமக்கள் தர்ணா…!

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் தாலுகா பவானிசாகர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட கோடம்பாளையம், அம்மாபாளையம், தொப்பம்பாளையம் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் என சுமார் 100 பேர் சத்தியமங்கலம் தாலுகா அலுவலகம் முன்பு ஒன்று திரண்டனர். அதன்பின்னர் அங்கு அவர்கள் உட்கார்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்த தகவல் அறிந்த வருவாய்த்துறை முதல் நிலை வருவாய் ஆய்வாளர், சத்தியமங்கலம் கிராம நிர்வாக அலுவலர், நில வருவாய் ஆய்வாளர் அங்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது ‘நாங்கள் பல ஆண்டுகளாக வீட்டுமனை பட்டா இல்லாமல் உள்ளோம். பலமுறை கோரிக்கை வைத்தும் நிறைவேற்றப்படவில்லை. எனவே இன்று இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்’ என தெரிவித்தனர்.

கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டம்..!

ஈரோடு மாவட்டம் சென்னிமலை பேரூராட்சியில் 15 வார்டுகளில் 15-வது வார்டு உறுப்பினரை தவிர மற்ற 14 வார்டு உறுப்பினர்களும் தி.மு.க.வில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்கள். சென்னிமலை பேரூராட்சியில் பேரூராட்சி மன்ற கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், கடந்த 26-7-2023 அன்று இரு சக்கர வாகன நிறுத்துமிடம் குறித்த ஏலத்திற்கு அங்கீகாரம் செய்து கொடுக்கப்பட்டது.

அந்த அங்கீகாரத்துக்கு இதுவரை பேரூராட்சி செயல் அலுவலர் சம்பந்தப்பட்ட குத்தகைதாரருக்கு உத்தரவு நகல் தரவில்லை எனக்கூறி கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இரவு 10 மணிக்கு மேல் ஆகியும் தொடர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் கவுன்சிலர்கள் ஈடுபட்டதால் சென்னிமலை பேரூராட்சி அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

லஞ்சம் கேட்டு டிரைவரை தாக்கிய வன ஊழியர்..

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம்-மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் தமிழக, கர்நாடக எல்லையில் உள்ள பண்ணாரியில் சத்தியமங்கலம் வனத்துறைக்கு சொந்தமான சோதனைச்சாவடி உள்ளது. வனப்பகுதியில் பயணிக்கும் வாகனங்களுக்கு நுழைவு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. கட்டணம் வசூலிக்காமல் இருப்பதற்காக வனத்துறை ஊழியர்கள் லஞ்சம் கேட்பதாக அடிக்கடி குற்றச்சாட்டு எழுந்தது.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு பண்ணாரி வன சோதனைச்சாவடி வழியாக வாகனத்தில் சென்ற கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த டிரைவரிடம் வனத்துறை ஊழியர் லஞ்சம் கேட்டுள்ளார். அவர் தரமறுக்கவே வனத்துறை ஊழியர், அந்த டிரைவரை சோதனைச்சாவடி கட்டிடத்துக்குள் அழைத்துச் சென்று சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. தகவல் அறிந்த வாகன ஓட்டுனர்கள் சோதனைச்சாவடியை முற்றுகையிட்டு வனத்துறை ஊழியர்களிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டது, தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.