அர்விந்த் கெஜ்ரிவால்: டெல்லியில் பாஜகவால் முடக்கப்பட்ட பொது நலப்பணிகள் மீண்டும் தொடங்கப்படும்..!

டெல்லி மதுபான கொள்கை ஊழல் தொடர்பாக கைது செய்யப்பட்ட ஆம் ஆத்மி தேசிய ஒருங்கிணைப்பாளர் அர்விந்த் கெஜ்ரிவாலுக்கு உச்ச நீதிமன்றம் கடந்த 13-ஆம் தேதி ஜாமீன் வழங்கியது.

இந்நிலையில் வரும் 2025 பிப்ரவரியில் டெல்லியில் நடைபெறவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு மக்களிடம், ‘நேர்மைக்கான சான்றிதழ்’ பெற்று மீண்டும் பதவியில் அமர்வதாக சபதம் எடுத்து, முதலமைச்சர் பதவியை அவர் ராஜினாமா செய்தார். இதையடுத்து டெல்லியின் புதிய முதலமைச்சராக ஆம் ஆத்மி கட்சியின் அதிஷி மர்லினா சிங் பொறுப்பேற்றார்.

இதனையொட்டி அர்விந்த் கேஜ்ரிவால் அதிஷி மர்லினா சிங்குடன் இணைந்து டெல்லி நகரின் சாலைகளை நேற்று பார்வையிட்டார். மூத்த ஆம் ஆத்மி தலைவர் மணீஷ் சிசோடியா, எம்எல்ஏ திலீப் பான்டே உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

அப்போது அர்விந்த் கெஜ்ரிவால் பேசுகையில், நான் திரும்ப வந்துவிட்டேன் என்பதையும் முடக்கி வைக்கப்பட்ட பணிகள் மீண்டும் தொடங்கப்படும் என்பதையும் டெல்லி மக்களுக்கு உறுதிப்படுத்த விரும்புகிறேன். அவர்களின் அனைத்து சிக்கல்களும் தீர்க்கப்படும். நாள் முழுவதும் பம்பரம் போல் சுழன்று செயலாற்றிக் கொண்டிருக்கிறோம். சிறையில் அடைக்கப்பட்டிருந்தபோதும் நான் துடிப்புடன்தான் இருந்தேன்.

சில தினங்களுக்கு முன்பு அவர்களின் (பாஜக) பெரிய தலைவரை சந்தித்துப் பேசினேன். என்னை கைது செய்ததால் உங்களுக்கு என்ன கிடைத்துவிட்டது என்று அவரிடம் கேட்டேன். குறைந்தபட்சம் டெல்லி அரசை தடம்புரளச் செய்து நகரத்தை ஸ்தம்பிக்க வைத்தோம் இல்லையா என்று அதற்கு அவர் அளித்த பதில் என்னை அதிர்ச்சியில் ஆழ்த்தி சோகத்தில் மூழ்கடித்தது.

அவர்களது நோக்கம் ஆம் ஆத்மி அரசுக்கு அவப்பெயர் உண்டாக்கி டெல்லியில் நடைபெறும் பணிகளை முடக்குவதுதான். ஆனால், மக்களின் பணிகள் தடைப்பட ஒருபோதும் ஆம் ஆத்மி அரசு அனுமதிக்காது என அர்விந்த் கெஜ்ரிவால் பேசினார்.

Sunita Kejriwal: ‘‘திகார் சிறையில் இன்சுலின் வழங்காமல் கெஜ்ரிவாலை கொல்ல சதி’’

டெல்லி முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால் மற்றும் ஜார்க்கண்டு முதலமைச்சர ஹேமந்த் சோரன் ஆகியோர் கைதை கண்டித்து I.N.D.I.A. கூட்டணி கட்சியின் கூட்டம் ஜார்க்கண்ட் மாநிலத்தின் ராஞ்சியில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ளவிருந்த ராகுல் காந்தி திடீர் உடல்நலக்குறைவால் கூட்டத்தை தவிர்த்துள்ளார். இதனை அறிவித்து பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ், “ராகுல் காந்திக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதால், அவரால் இன்று டெல்லியை விட்டு வெளியே செல்ல முடியவில்லை. அதேநேரத்தில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கூட்டத்தில் பங்கேற்பார்” என தெரிவித்திருந்தார்.

I.N.D.I.A. கூட்டணி சார்பில் நடைபெற்ற இந்த பொதுக்கூட்டத்தில் சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவர் தேஜஸ்வி யாதவ், தேசிய மாநாட்டுக்கட்சித் தலைவர் ஃபரூக் அப்துல்லா, பஞ்சாப் முதலமைச்சர் பகவந் சிங் மான், அர்விந்த் கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா, ஹேமந்த் சோரனின் மனைவி கல்பனா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

டெல்லி முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால் மனைவி சுனிதா பேசுகையில், “சிறையில் கெஜ்ரிவால் சாப்பிடும் ஒவ்வொரு சோறும் கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படுகிறது. குற்றத்திற்கான ஆதாரம் இல்லாமல் கெஜ்ரிவாலை சிறையில் அடைத்தது சர்வாதிகாரம். கெஜ்ரிவாலையும், ஹேமந்த் சோரனையும் சிறையில் அடைத்துள்ளனர். அவர்கள் குற்றவாளிகள் என்று நிரூபிக்கப்படாமலேயே சிறையில் அடைத்துள்ளனர். இது ஒரு சர்வாதிகாரம். என் கணவரின் தவறு என்ன? நல்ல கல்வி, சுகாதார வசதிகளை வழங்கியதா?.

தேசபக்தி அவரது இரத்தத்தில் உள்ளது. அவர் ஒரு முன்னாள் ஐஐடி மாணவர். அவர் நினைத்திருந்தால் வெளிநாடு சென்றிருக்கலாம். ஆனால் அவர் தேசபக்திக்கு முன்னுரிமை கொடுத்தார். ஐஆர்எஸ் ஆக இருந்த அவர் பொது சேவை செய்ய பணியை ராஜினாமா செய்தார். தற்போது மக்களுக்காக தனது உயிரைப் பணயம் வைத்துள்ளார்.

கெஜ்ரிவாலுக்கு அதிகார ஆசை இல்லை. அவர் நாட்டுக்கு சேவை செய்யவே விரும்புகிறார். என் கணவர் சிங்கம். சிறையில் இருக்கும்போதும் நாட்டைப் பற்றி அவர் கவலைப்படுகிறார். கெஜ்ரிவால் ஒரு சர்க்கரை நோயாளி. அவர் கடந்த 12 ஆண்டுகளாக தினமும் 50 யூனிட் இன்சுலின் எடுத்து வருகிறார். ஆனால் அவருக்கு திகார் சிறையில் இன்சுலின் வழங்கப்படவில்லை. ஏனெனில் அவரை கொல்ல விரும்புகிறார்கள்” எனசுனிதா கெஜ்ரிவால் பேசினார்.