மு.க. ஸ்டாலின் அறிவிப்பு: அம்மா உணவகங்களில் இன்றும், நாளையும் இலவச உணவு..!

சென்னை மாநகரப் பகுதிகளில் உள்ள அம்மா உணவகங்களில் ஏழை, எளிய மக்களுக்காக இன்றும், நாளையும் இலவசமாக உணவு வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் எக்ஸ் பக்கத்தில், “நேற்று அதிக அளவில் பெய்த வடகிழக்குப் பருவமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில், அனைத்து நிவாரணப் பணிகளும் முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தாழ்வான பகுதிகளில் வாழும் மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு, அவர்களுக்குத் தேவையான உணவு மற்றும் இதர உதவிகள் பெருநகர சென்னை மாநகராட்சியால் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், சென்னை மாநகரத்தின் மற்ற பகுதிகளில் வாழக்கூடிய ஏழை – எளிய மக்கள் உணவு அருந்தக்கூடிய அம்மா உணவகங்களிலும், இன்றும் நாளையும் இலவசமாக உணவு வழங்கப்படும்.” எனத் தெரிவித்துள்ளார்.

வி.கே. சசிகலா: அண்ணாமலை அரசியல் அனுபவம் இல்லாத குழந்தை…!

அதிமுக விழும்போதெல்லாம்  ‘வீழ்வதைவிட விரைந்து எழுவதே மேல்’ என்று ஜெயலலிதா வேத வாக்கிற்கு ஏற்ப அதிமுகவை அதிக தேர்தலில், அதிக தொகுதிகளில் வெற்றி பெற வைத்து, அதிமுகவை அதிக தொண்டர்களைக் கொண்ட கட்சியாக மாற்றி,  தமிழக முதல்வராக ஆறு முறை பதவி வகித்த ஜெயலலிதா.  எம்.ஜி. ஆருக்குப் பின் அதிமுக துண்டு துண்டாக உடைந்துவிடும் என்ற கணக்கை உடைத்து, தனது தலைமையின் கீழ் சுமார் 28 ஆண்டுகள் கட்சியைக் கட்டுக்கோப்பாக ஜெயலலிதா வழிநடத்தி, புரட்சித்தலைவி, இரும்புப் பெண்மணி, அம்மா என்றெல்லாம் அதிமுக தொண்டர்களால் அழைக்கப்பட்ட, ‘மக்களுக்காக நான்… மக்களால் நான்’ எனும்  ஜெயலலிதா வாழ்ந்தவர்.

மத்தியில் ஆள்வோர் மக்களுக்கு சேவை செய்யாமல் உள்நாட்டு, வெளிநாட்டு கர்ப்பிரேட் முதலாளிகளுக்கு சேவை செய்து அவர்களின் கஜானாவை நிரப்புகின்றன. கடந்த 50 ஆண்டுகளாக மத்தியில் ஆள்வோருக்கு மாநில கட்சிகளின் ஆதரவு தேவை என்பதால், மாநிலத்தில் மக்கள் செல்வாக்கு மிக்க கட்சியுடன் தேர்தலில் கூட்டணி வைக்க மத்தியில் ஆள்வோர் ஆசைப்படுகின்றனர்.

ஆனால், மாநில கட்சிகள் கூட்டணிக்கு சம்மதிக்காமல் போனால் மத்தியில் ஆளும் கட்சிகள் ஆட்சியை எப்படியாவது தக்கவைக்க வேண்டும் என்ற ஆசையில், மாநில கட்சிக்கு மிகுந்த அழுத்தம் கொடுத்து அவர்களுக்குள்ளே வார்தைப்போர் முற்றுகிறது. இன்று மத்தியில் ஆட்சி செய்யும் பாஜக அரசு தொடர்ந்து மூன்றாவது முறை ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்ற பேராசையில், மாநில கட்சிகளின் கூட்டணி அமைக்க மும்முரம் காட்டி வருகிறது. அதனால் பாஜக கட்சியின் தலைவர்கள் கூட்டணி கட்சிகள், எதிர் கட்சிகள்  என்று பாராமல் யாருடன் கூட்டணி அமைத்தால் வெற்றி கிடைக்குமோ அவர்களுடன்  கூட்டணி பேரம் நடத்துகின்றனர்.  அவர்களின் கூட்டணி பேரத்திற்கு மசியாத கட்சிகளுடன் வார்த்தை போர் நடத்துகின்றனர்.

அதே நிலையில் இன்று ஜெயலலிதா பற்றி தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, அவதூறாக பேசியது குறித்து, அண்ணாமலை அரசியல் அனுபவம் இல்லாத குழந்தை என விமர்சனம் செய்துள்ளார். “மக்களால் நான் மக்களுக்காகவே நான்” என்று தன் வாழ்நாள் முழுவதும் வாழ்ந்துக் காட்டிய ஜெயலலிதா பற்றி தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, அவதூறாக பேசியிருப்பது மிகவும் துரதிருஷ்டவசமானது.

அண்ணாமலைக்கு ஜெயலலிதாவின் அரசியல் பயணம், அவர் மக்களுக்கு ஆற்றிய அரும்பணிகள் எதுவும் தெரியவில்லை. இன்றைக்கும் தமிழக மக்கள் குறிப்பாக பெண்கள் ஜெயலலிதாவை தங்களது முன் மாதிரியாக வைத்துக்கொண்டு தங்கள் வாழ்வில் ஒவ்வொரு படிகளையும் கடந்து பல்வேறு வெற்றிகளை ஈட்டி வருகிறார்கள்.

ஜெயலலிதா தமிழக மக்கள் ஒவ்வொருவரின் இதய சிம்மாசனத்தில் அமர்ந்து இருக்கிறார்கள். ஜெயலலிதாவை ஆறு முறை முதல்வராக்கி அழகு பார்த்தவர்கள் தமிழக மக்கள். ஜெயலலிதாவுக்கு தமிழக மக்கள் அளித்த இந்த நற்சான்றிதழே போதும். வேறு யாருடைய சான்றிதழும் தேவை இல்லை. ஒரு தாய் தன் பிள்ளைகளுக்கு என்னென்ன செய்வார்களோ அதேபோன்று இந்த தமிழக மக்களுக்கு ஜெயலலிதா தாய்க்கு தாயாக இருந்து பார்த்து, பார்த்து செய்து விட்டார்கள்.

தமிழக மக்களிடமிருந்து நம் ஜெயலலிதாவை யாராலும் பிரிக்க முடியாது. நம் ஜெயலலிதாவுக்கு என்றைக்கும் அழிவே இல்லை. அவர் உடலால் நம்மை விட்டு மறைந்து இருந்தாலும் தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு வீட்டிலும் ஒரு தாயாக, சகோதரியாக, மகளாக என்று ஏதாவது ஒரு ரூபத்தில் இன்றைக்கும் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்.

இனி யார் எத்தனை ஜென்மம் எடுத்தாலும் ஜெயலலிதா செய்த சாதனைகளை முறியடிக்க முடியாது என்பதனை தெரிவித்துக் கொள்கிறேன். இதைப்பற்றியெல்லாம் எதுவும் அறியாத, அரசியல் அனுபவம் இல்லாத ஒரு குழந்தையான அண்ணாமலையின் பேச்சுக்களுக்கெல்லாம் பதில் அளிக்கவேண்டிய தேவை இல்லை என்றே நான் கருதுகிறேன்.

ஆனால் அதே சமயம் அம்மா உணவகம் தந்து ஏழை எளிய சாமானிய மக்களின் பசியை போக்கி அன்னலட்சுமியாக விளங்கிய ஜெயலலிதாவின் பெயருக்கு களங்கம் ஏற்படுவதை பார்த்துக்கொண்டு இருக்க முடியாது. இதுபோன்ற சிறுபிள்ளைத்தனமான செயல்களால், அவர் சார்ந்த இயக்கத்திற்கே தமிழகத்தில் கெடுதலை ஏற்படுத்தும் என்பது தெளிவாகிறது. தமிழக மக்கள் யாரும் அண்ணாமலையின் பேச்சை ரசிக்கவில்லை.

ஜெயலலிதாவை அரசியல் ரீதியாக எதிர்கொள்ளமுடியாதவர்கள் தனிப்பட்ட முறையில் பொய்யாக புனைந்த வழக்குகளையெல்லாம் முறியடித்து மக்களின் நன்மதிப்பை ஜெயலலிதா பெற்றார் எனபதுதான் வரலாறு. எனவே, பொறுப்பற்றவர்கள் பேசும் இது போன்ற பயனற்ற பேச்சுக்களையெல்லாம் புறந்தள்ளிவிட்டு, “மக்கள் அளித்த தீர்ப்பே, மகேசன் தீர்ப்பு” எனபதை மனதில் வைத்து, மக்கள் பணிகளில் கவனம் செலுத்துவோம். ஒருங்கிணைந்த அதிமுகவை உருவாக்கி தமிழக மக்களை காத்திடுவோம் என்பதை மட்டும் இந்நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.