தமிழக அரசு விளக்கம்: ஆக்கிரமிப்பு இடிக்கப்பட்ட வீடுகளுக்கு ரூ. 17 லட்சத்தில் 390 சதுர அடியில் மாற்று வீடு..!

அனகாபுத்தூரில் அடையாறு ஆற்றங்கரையோரம் வசித்து வரும் 593 குடும்பங்களுக்கு தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் தைலாவரம், கீரப்பாக்கம், பெரும்பாக்கம் மற்றும் நாவலுர் ஆகிய இடங்களில் 390 சதுர அடியில் (ஒரு வீடு 17 லட்சம் ; 390 சதுர அடி) இலவசமாக வீடுகள் கட்டப்பட்டு வழங்கப்பட உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

சென்னை பல்லாவரம் அடுத்த அனகாபுத்தூரில் அடையார் ஆற்றங்கரை உள்ள டோபிகானா, தாய் மூகாம்பிகை நகர், சாந்தி நகர், காயிதே மில்லத் நகர், ஸ்டாலின் நகர், எம்.ஜி.ஆர் நகர் பகுதிகளில் பலத்த எதிர்ப்புகளுக்கு இடையே, ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் இடிக்கப்படுகிறது.

மேலும் அசம்பாவிதங்கள் எதுவும் நடக்காமல் இருக்க தாம்பரம் மாநகர துணை ஆணையர் பவன் குமார் ரெட்டி தலைமையில் 300-க்கும் மேற்பட்ட காவலர்கள் நேற்று பாதுகாப்பு பணியில் குவிக்கப்பட்டனர். இந்த நிலையில், அனகாபுத்தூர் மக்களுக்கு மாற்று வீடு வழங்கி அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில், அடையாறு நதியை சீரமைக்க தமிழ்நாடு அரசின் புதிய நிறுவனமான சென்னை நதிகள் புனரமைப்பு நிறுவனம் (CRTCL) மூலம் ரூபாய் 1,500 கோடி செலவில் பணிகள் மேற்கொள்ள வரவு செலவு திட்டத்தில் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் அறிவிக்கப்பட்டது.

இந்த திட்டத்தினை செயல்படுத்த நடப்பு ஆண்டில் தமிழக அரசு ரூபாய் 300 கோடி நிதி ஒதுக்கீடு செய்து பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அடையாறு நதியை முழுவதுமாக புனரமைத்து கரையோரம் உள்ள பகுதிகளில் கழிவுநீர் கலப்பதை அறவே தடுத்து, நீர்வாழ் உயிரினங்கள் வாழும் சிறந்த சூழலை உருவாக்க வேண்டும் என்றால், கரையோரம் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றியும் அதன் மூலம் மாசுபடுவதை தடுக்கவும் கரையோரம் உள்ள குடியிருப்புகளை மறுகுடியமர்வு செய்வது அவசியமாகும்.

இதன் ஒரு பகுதியாக அனகாபுத்துரில் அடையாறு ஆற்றங்கரையோரம் உள்ள காயிதே மில்லத் நகர், தாய் மூகாம்பிகை நகர், சாந்தி நகர், எம்ஜிஆர் நகர் 3-வது தெரு ஆகிய இடங்களில் வசித்து வரும் 593 குடும்பங்களுக்கு தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் தைலாவரம், கீரப்பாக்கம், பெரும்பாக்கம் மற்றும் நாவலுர் ஆகிய இடங்களில் 390 சதுர அடியில் இலவசமாக வீடுகள் கட்டப்பட்டு வழங்கப்பட உள்ளன. (ஒரு வீடு 17 லட்சம் ; 390 சதுர அடி)

மேலும், அடையாறு ஆற்றங்கரையில் உள்ள ஜோதி ராமலிங்கம் நகர், திடீர் நகர், ஜோதி அம்மாள் நகர், சூர்யா நகர், மல்லிகைப்பூ நகர் ஆகிய 5 இடங்களில் வசித்து வரும் குடும்பங்களுக்கு 390 சதுர அடி பரப்பளவில் அனைத்து வசதிகளுடன் கூடிய வீடுகள் தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலமாக சுமார் ரூபாய் 17 லட்சம் மதிப்பிலான வீடுகள் கட்டப்பட்டு இலவசமாக வழங்கப்பட உள்ளன. மேலும், பயனாளிகளுக்கு குடும்பம் ஒன்றுக்கு இடமாற்றுப்படியாக ஒருமுறை ரூபாய் 5,000, வாழ்வாதார உதவிக்காக மாதம் ரூபாய் 2,500 என்ற அடிப்படையில் ஒரு வருடத்திற்கு ரூபாய் 30,000, மின்சார இணைப்பு கட்டணம் ரூபாய் 2,500 என்ற அடிப்படையிலும் ஒவ்வொரு குடியமர்விற்கும் வழங்கப்பட்டு வருகிறது.

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலமாக விரிவான சமுதாய வளர்ச்சி திட்டங்கள், உடனடி குடும்ப அட்டை மாற்றம் செய்தல், விதவை, முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு உடனடி சமூக பாதுகாப்பு திட்ட உதவி மாற்றம் செய்தல், கல்வி, அங்கன்வாடி, தொடக்க, நடுநிலை மற்றும் மேல்நிலை பள்ளி சேர்க்கை போன்ற அனைத்து திட்ட உதவிகளும் வழங்கப்பட்டு வருகிறது. மேலும், மாண்பமை உயர்நீதிமன்ற நீதிமன்ற உத்தரவின்படி ஆற்றங்கரையில் வசித்து வரும் ஆக்கிரமிப்பாளர்கள் மறு குடியமர்வு செய்யப்பட்டு வருகின்றனர்.

மறு குடியமர்விற்கு ஒப்புதல் தராத ஆக்கிரமிப்பாளர்களை உடனடியாக அப்புறப்படுத்த உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நதிநீர்சீரமைப்பு திட்டம் என்பதாலும், மழைக்கால வெள்ளத்தடுப்பு காரணங்களுக்காக ஆற்றங்கரையில் வசிக்கும் ஆக்கிரமிப்பாளர்களை அரசு உரிய உதவிகளுடன் மறு குடியமர்வு செய்து வரும் அரசின் இந்த செயலுக்கு அனைவரும் ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது என அரசு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீமான்: மதுரை உயநீதிமன்ற கிளை, திருவள்ளூர் நீதிமன்றம்… நீர் நிலைகளில் தான் கட்டப்பட்டிருக்கு..!

மதுரை உயநீதிமன்ற கிளை, திருவள்ளூர் நீதிமன்றம் என பல நீதிமன்றங்களே நீர் நிலைகளில் தான் கட்டப்பட்டிருக்கு என சீமான் தெரிவித்தார். சென்னை பல்லாவரத்தை அடுத்த அனகாபுத்தூரில் அடையாறு ஆற்றங்கரையோரம் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த குடியிருப்புகள் கவலைதுறை பாதுகாப்புடன் அகற்றப்பட்டது. அடையாறு ஆற்றங்கரையோரம் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த குடியிருப்புகள் அகற்றப்பட்ட நிலையில், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அங்கு சென்று மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். பின்னர் செய்தியாளர்களின் கேள்விக்கு சீமான் பதிலளித்தார்.

அப்போது, மக்களுடைய வாழ்விடங்களை இடிப்பதை நீங்க பார்த்து இருப்பீங்க.. இந்த பிரச்சினை இப்போது இல்லை. ஏற்கனவே இருந்து வந்தது தான். அப்போது நாங்க தான் இதே இடத்தில் நின்று போராடி தடுத்தோம். கொஞ்ச நாள் தடுத்து வச்சுருந்தோம். இப்போ மீண்டும் அதே பிரச்சினை. பல்லாவரம் அனாகபுத்தூர் மட்டுமில்லை. சென்னையில் பல இடங்களில் நம் மக்களின் வாழ்விடங்களை ஆக்கிரமிப்பு என்று சொல்லி அப்புறப்படுத்தியது எல்லாருக்கும் தெரியும்.

இப்போ இங்க ஆக்கிரமிப்பு பண்ணிட்டாங்கன்னு சொல்லி அப்புறப்படுத்துறாங்க.. எனக்கு ஒரே ஒரு கேள்வி தான் வருகிறது. அந்த மக்களுக்கும் அந்த கேள்வி தான்.. இது நீர் நிலைப் பகுதி என்று தெரிகிறது. அப்போது அதை ஆக்கிரமித்து கட்டும்போது யாரும் ஏன் தடுக்கவில்லை. அப்போது எல்லாரும் என்ன பண்ணிக்கொண்டு இருந்தீங்க.. ஆக்கிரமிக்கும் போதே தடுத்திருந்து இருக்கலாம்.

அவங்க கஷ்டப்பட்டு வீடு கட்டு, மின் இணைப்பு பொருத்தி, வீட்டு வரி செலுத்தி, ஓட்டுரிமை வாங்கி, சாலைகள் கூட அவர்களே அமைத்தார்கள் என்று சொல்கிறார்கள். ஒரு 60 ஆண்டுகளாக இங்கு வசித்து வருகிறார்கள். இப்போது திடீரென்று ஒரே நாளில் வேறு ஒரு இடத்தில் போட்டால் எப்படி?.. இவங்க குழந்தைகள் எல்லாரும் இங்க படிக்கிறாங்க. திடீரென மாறும் போது என்ன செய்வார்கள்..

ஆ.. ஊன்னா அதிகாரம் படைத்தவர்கள் நீதிமன்றத்தை கை காட்டி விடுகிறார்கள். உங்கள் பலருக்கும், மனசாட்சி உள்ள எல்லாருக்கும் தெரியும். பல நீதிமன்றங்களே நீர் நிலைகளில் தான் கட்டப்பட்டிருக்கு. குறிப்பாக மதுரை உயநீதிமன்ற கிளை, திருவள்ளூர் நீதிமன்றம் என பல இடங்கள், பல அரசு குடியிருப்புகள்.. வள்ளுவர் கோட்டமே.. இதையெல்லாம் ஆக்கிரமிப்பு இடி என்று சொல்கிறீர்களே.. கடற்கரையில் 4 சமாதிகள் இருக்கிறதே அதை யார் இடிப்பது?

அது ஆக்கிரமிப்பா இல்லையா.. மனசான்று இருக்க யாராவது சொல்லுங்க பார்ப்போம். ஒவ்வொருத்தரும் இரண்டு ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்து இருக்கிறீர்களே?.. கடற்கரை தானே.. இது எப்படி கல்லறைகளாக மாறியது.. இதை ஏன் யாரும் கேட்கவில்லை.. உலகின் தலைசிறந்த கடற்கரையில் 2-வது கடற்கரை.. ஆஸ்திரேலியாவுக்கு பிறகு சென்னை கடற்கரை.. எப்படி சில பேருக்கு இது கல்லறையாக மாறியது. MMDA காலனி மாதிரி பல அரசு கட்டிடங்களே நீர்நிலைகளில் தான் கட்டப்பட்டிருக்கிறது.. வேண்டும் என்றால் வாங்க காட்டுகிறேன் என சீமான் தெரிவித்தார்.