எஸ்.பி.வேலுமணி பங்கேற்ற கூட்டத்தில் அதிமுகவினர் அடிதடி, மோதலால் பரபரப்பு..!

எஸ்.பி.வேலுமணி பங்கேற்ற அதிமுக கள ஆய்வுக் கூட்டத்தில் ஏற்பட்ட அடிதடி, மோதலால் பரபரப்பு ஏற்பட்டது. திருநெல்வேலியில் மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் கள ஆய்வுக் கூட்டம் முன்னாள் அமைச்சர் வேலுமணி தலைமையில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாநகர் மாவட்ட செயலாளர் தச்சை கணேச ராஜா உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

கூட்டத்தில் முன்னாள் மாவட்ட செயலாளர் மற்றும் தற்போதைய அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் பாப்புலர் முத்தையா திருநெல்வேலி மாவட்டத்தில் அதிமுக தோல்வி அடைந்து வருவது குறித்து பேசிக் கொண்டிருந்தபோது சலசலப்பு ஏற்பட்டது.

இதையடுத்து மாவட்ட செயலாளர் கணேஷ் ராஜா தரப்பு ஆதரவாளர்களுக்கும் பாப்புலர் முத்தையா தரப்பு ஆதரவாளர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு மோதல் மூண்டு இருதரப்பினரும் கைகலப்பில் ஈடுபட்டதால் கூட்டத்தில் பரபரப்பு தொற்றியது. இதையடுத்து எஸ்.பி. வேலுமணி அவர்களை வெளியேறுமாறு உத்தரவிட்டார். மேலும் எஸ்.பி. வேலுமணி சமரசத்துக்கு பின்பு கூட்டத்தில் இயல்பு நிலைக்கு வந்தது.

பாஜக அலுவலகம் முன் கூட்டணி கட்சியினர் அடிதடி..!

வரும் நாடாளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இந்திய ஜனநாயக கட்சி இடம்பெற்றுள்ளது. இந்திய ஜனநாயக கட்சி தமிழகத்தில் ஒரு தொகுதியில் போட்டியிடுகிறது. மேலும் பாண்டிச்சேரியில் போட்டியிடும் தேஜ கூட்டணி கட்சி வேட்பாளர் நமச்சிவாயத்துக்கு இந்திய ஜனநாயக கட்சியினர் ஆதரவு தொிவித்துள்ளனர்.

அக்கட்சியின் மாநில தலைவரான அண்ணாதுரை மற்றும் நிர்வாகிகள் பாஜக அலுவலகத்துக்கு வந்தனர்.அப்போது பாஜக அலுவலக வாசலில் பிரசார வாகனம் ஒன்று நின்று கொண்டிருந்தது. அதில் இந்திய ஜனநாய கட்சியிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைப்பாளரான சத்தியவேல் படம் ஒட்டப்பட்டிருந்தது.

அருகில் சத்தியவேல் நின்று கொண்டிருந்த நிலையில், இதைப் பார்த்து ஆத்திரமடைந்த அண்ணாதுரை மற்றும் நிர்வாகிகள், ‘நாங்கள்தான் ஐஜேகே கட்சியின் நிர்வாகிகள். நீ எப்படி கட்சியின் பெயரை பயன்படுத்தலாம்’ எனக்கூறி பிரசார வாகனத்தில் இருந்த பேனரை கிழித்தனர். இதை தடுக்க வந்த சத்தியவேலை தாக்கினர். இதையடுத்து சத்தியவேல் அந்த வாகனத்தை அங்கிருந்து எடுத்துக் கொண்டு புறப்பட்டு சென்றது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.