டிஜிட்டலுக்கு மாறிய லஞ்சம்..! சார் பதிவாளர் சாந்தி மீது துறை ரீதியாக நடவடிக்கைக்கு பரிந்துரை. ..!

தமிழ்நாடு முழுவதும் சார் பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு அடிக்கடி சோதனை நடத்தி கணக்கில்வராத பணம் பிடிப்பட்டால் அவர்களிடம் விசாரணை நடத்துவது வழக்கம். விசாரணையில் அவர்கள் மீது தவறுகள் இல்லை என்றால் எந்த ஒரு பிரச்சனைனும் இல்லை. ஆனால் மாறாக கணக்கில் வராத பணம் லஞ்சம் வாங்கி சேர்த்தவை என்று தெரியவந்தால், அவர்கள் மீது கைது, பணியிடைநீக்கம், துறைரீதியான நடவடிக்கைகளும் அதிரடியாக பாயும்.

அந்த வகையில் கடந்த இரண்டு ஒரு வாரமாக தமிழகம் முழுவதும் லஞ்ச ஒழிப்புதுறை, சார் பதிவாளர் அலுவலகங்களில் சோதனை நடத்தி வருகிறார்கள். அந்த வகையில், கோயம்புத்தூர் மாவட்டம், மேட்டுப்பாளையம் காரமடை சாலை பேருந்து நிலையம் அருகே சார் பதிவாளர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது, இங்கு சார் பதிவாளர்களாக ராமமூர்த்தி, சாந்தி ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள். இந்த சார் பதிவாளர் அலுவலகத்தில் முறைகேடுகள் நடைபெற்று வருவதாகவும், பத்திரப்பதிவு செய்ய வருவோரிடம் லஞ்சம் வாங்குவதாகவும் புகார்கள் லஞ்ச ஒழிப்புதுறைக்கு அதிக அளவில் பறந்தது.

இதைத்தொடர்ந்து கடந்த ஆகஸ்ட் 8-ம் தேதி மாலை கோயம்புத்தூர் லஞ்ச ஒழிப்புத்துறை துணைக் கண்காணிப்பாளர் திவ்யா தலைமையில் காவல்துறையினர், மேட்டுப்பாளையம் சார் பதிவாளர் அலுவலகத்தில் அதிரடி சோதனை நடத்தினார்கள். அப்போது நடந்த சோதனையின் போது, சார் பதிவாளர் சாந்தி மட்டும் இருந்தார். அவரிடமும், அலுவலகத்தில் இருந்தவர்களிடமும் விசாரணை நடத்தினார்கள். மேலும் அலுவலகம் முழுவதும் சோதனை செய்யப்பட்டது. இந்த சோதனை நேற்று மதியம் வரை தொடர்ந்தது.

அப்போது நடந்த கிடுக்கிப்பிடி விசாரணையில் சார் பதிவாளர் சாந்தி டிஜிட்டல் பண பரிவர்த்தனை மூலம் ரூ,25 லட்சத்து 33 ஆயிரத்து 880 லஞ்சம் பெற்றிருப்பதும், அதை குடும்பத்தினரின் வங்கி கணக்கிற்கு மாற்றி வாங்கியதையும் கண்டுபிடித்தனர். இவர்களுக்கு இடைத்தரகராக செயல்பட்ட நவீன்குமார் என்பவர் முன்கூட்டியே லஞ்ச பணத்துடன் தப்பி ஓடியதையும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் கண்டுபிடித்தனர். அவரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

இதற்கிடையில் மேட்டுப்பாளையம் சார் பதிவாளர் அலுவலக ஊழியர் பிரவீன்குமார், சார் பதிவாளரின் வாகன ஓட்டுநர் ராஜா ஆகியோரிடமும் விசாரணை நடத்தினார்கள். விசாரணைக்கு பிறகு சார் பதிவாளர் சாந்தி மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க லஞ்ச ஒழிப்புத்துறையினர் பரிந்துரைத்தனர்.

மின் இணைப்பை மாற்ற ரூ.1,000 லஞ்சம் பெற்ற போர்மென் கைது..!

கரூர் மாவட்டம், தாந்தோணி அருகேயுள்ள ஆச்சிமங்கலத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி கடந்த 2019-ம் ஆண்டு பிரதமர் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் வீடு கட்ட வணிக மின் இணைப்பு பெற்றுள்ளார். வீட்டின் கட்டுமான பணி நிறைவடைந்ததால் வணிக மின் இணைப்பை வீட்டு இணைப்பாக மாற்றுவதற்காக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக ராயனூர் உதவி மின் பொறியாளர் அலுவலகத்தை அணுகியுள்ளார்.

ராயனூர் உதவி மின் பொறியாளர் அலுவலகத்தில் பணிபுரியும் போர்மென் முருகானந்தம் வணிக மின் இணைப்பை வீட்டு இணைப்பாக மாற்றுவதற்காக ரூ.1,500 லஞ்சம் கேட்டுள்ளார். லஞ்சம் வழங்க விருப்பமில்லாத அந்நபர் இது குறித்து கரூர் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவில் புகார் அளித்தார். அதிகாரிகளின் அறிவுறுத்தலின் பேரில் போர்மென் முருகானந்தத்திடம் பேச்சுவார்த்தை நடத்தி ரூ.1,000 வழங்குவதாக தெரிவித்துள்ளார்.

ராயனூர் அலுவலகத்தில் போர்மென் முருகானந்தத்திடம் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவினர் வழங்கிய ரசாயனம் தடவிய ரூ.1000 அக்கூலித் தொழிலாளி வழங்கினார். அப்போது அங்கு மறைந்திருந்த ஊழல் தடுப்பு கண்காணிப்புப் பிரிவினர் முருகானந்தத்தை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர்.

விபத்து வழக்கை விசாரிக்க ரூ.5 ஆயிரம் லஞ்சம்

செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் காவல் ஆணையரக எல்லைக்கு உட்பட்ட மணிமங்கலம் பகுதியில், சாலையில் சென்று கொண்டிருந்த கார் மீது எதிர் திசையில் வந்த பைக் வேகமாக மோதியதாக கூறப்படுகிறது. இதனால் காரின் முன் பக்கம் முழுவதும் சேதம் அடைந்துள்ளது. இதனால் நொறுங்கிய காரை அங்கிருந்து பொத்தேரியில் இயங்கி வரும் தாம்பரம் போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு காவல் நிலையத்திற்கு பாதிக்கப்பட்டவர் எடுத்துச் சென்றுள்ளார்.

அப்போது அங்கிருந்த காவலர்கள் விபத்து குறித்து விசாரிக்க வேண்டுமென்றால் முதலில் பத்தாயிரம் ரூபாய் கொடுக்க வேண்டும் என கூறியுள்ளனர். இதில் பேரம் பேசப்பட்டதையடுத்து, கடைசியாக உரிமையாளர் ரூ.5 ஆயிரத்தை லஞ்சமாக காவலர் ஜெய்கணேஷ் என்பவருக்கு கொடுத்துள்ளார். இதில் காவலர் ஜெய்கணேஷ் லஞ்சம் பெறும் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.

ரூ.4,500 லஞ்சம் பெற்ற கிராம நிர்வாக அலுவலர் கைது..!

கடலூர் மாவட்டம், பெண்ணாடம் அருகே லஞ்சம் பெற்ற துறையூர் கிராம நிர்வாக அலுவலகத்திற்கு சென்ற மணிமொழி என்பவர் முதியோர் உதவித்தொகை, வாரிசு சான்று கேட்டு கிராம நிர்வாக அலுவலர் சம்பத்குமாரிடம் அணுகியுள்ளார். ஆனால் கிராம நிர்வாக அலுவலர் சம்பத்குமார் ரூ.6,000 ஆயிரம் லஞ்சம் கேட்க பின்னர் ரூ.4,500 ஆயிரம் கொடுத்தால் வேலையை முடித்து தருவதாக கூறியுள்ளனர்.

இந்நிலையில், லஞ்சம் கொடுக்க விரும்பாத மணிமொழி லஞ்ச ஒழிப்புதுறையில் புகார் அளித்தார். அதன்படி லஞ்ச ஒழிப்புதுறை ரசாயனம் தடவிய ரூ.4,500 ஆயிரம் மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளை சம்பத்குமாரிடம் கொடுத்து, லஞ்சம் கேட்ட அலுவலரிடம் கொடுக்கச் சொல்லியுள்ளனர். அதன்படி ரூ.4,500 ஆயிரத்தை சம்பத்குமாரிடம் கொடுத்தபோது மறைந்திருந்த, லஞ்ச ஒழிப்புதுறை சம்பத்குமாரை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.

பெயர் மாற்றம் செய்ய 10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வீட்டு வசதி வாரிய அலுவலர்கள் கைது

ராமநாதபுரம் நகர் சாலைத் தெருவில் ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களுக்கான வீட்டு வசதி வாரிய கோட்ட அலுவலகம் இயங்கி வருகிறது. இங்கு சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பகுதியை சேர்ந்த முன்னாள் அரசு வாகன ஓட்டுநர் பழனிச்சாமி, தேவகோட்டை ராம்நகர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் கடன் தவணை முறையில் தனது பெயரில் வீட்டுடன் கூடிய நிலத்தை வாங்கி அனுபவித்து வந்துள்ளார்.

இந்நிலையில், பழனிச்சாமி கடந்த 2018-ம் ஆண்டு இறந்துவிட்டதால், அற்கான பாக்கி தொகையை முழுவதையும் அவரது மகன் பிரவீன்குமார் செலுத்திவிட்டு தனது தாயார் பெயருக்கு மாற்ற ராமநாதபுரம் வீட்டு வசதி வாரிய அலுவலகத்தில் மனு செய்திருந்தார். இது சம்பந்தமாக செயற்பொறியாளர் மற்றும் நிர்வாக அதிகாரி பாண்டியராஜன் மற்றும் பதிவறை எழுத்தர் ரவிச்சந்திரன் ஆகியோரை பிரவீன்குமார் பலமுறை அணுகியுள்ளார்.

அப்போது இடத்தின் அளவு தவறாக குறிப்பிடப்பட்டுள்ளது, அந்த நிலத்தை அளக்க வேண்டும், அதற்கு எங்களை தனியாக கவனிக்க வேண்டும். மேலும் நிலத்தை அளப்பதற்கு வாகனத்தில் செல்வதற்கான தொகையினையும் செலுத்த வேண்டும் எனக் கூறி ரூ.15 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளனர். பின்னர் ரூ.10 ஆயிரம் கொடுத்தால் வேலையை முடித்து தருவதாக கூறியுள்ளனர்.

இந்நிலையில், லஞ்சம் கொடுக்க விரும்பாத பிரவீன்குமார் ராமநாதபுரம் லஞ்ச ஒழிப்புதுறையில் புகார் அளித்தார். அதன்படி லஞ்ச ஒழிப்புதுறை ரசாயனம் தடவிய ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளை பிரவீன்குமாரிடம் கொடுத்து, லஞ்சம் கேட்ட அலுவலர்களிடம் கொடுக்கச் சொல்லியுள்ளனர். அதன்படி நேற்றிரவு பிரவீன்குமார் லஞ்ச பணத்தை செயற்பொறியாளரிடம் கொடுக்கச் சென்றபோது, அவர் அங்குள்ள ஒப்பந்த பணியாளர் பாலாமணியிடம் கொடுக்கச் சொன்னார்.

அதன்பின் ரூ.10 ஆயிரத்தை பாலாமணியிடம் கொடுத்தபோது மறைந்திருந்த, லஞ்ச ஒழிப்புதுறை பாலாமணியை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். மேலும் லஞ்சம் வாங்கச் சொன்ன செயற்பொறியாளர் பாண்டியராஜன், பதிவறை எழுத்தர் ரவிச்சந்திரன் ஆகியோரையும் கைது செய்து அவர்களிடம் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.

ரூ.35 ஆயிரம் லஞ்சம் வாங்கிய சார் பதிவாளர் உட்பட 2 பேர் கைது..!

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அருகே உள்ள மத்தூர் கிராமத்தைச் சேர்ந்த நிலத் தரகர் ஜெய்சங்கர். இவர், கடந்த 22-ம் தேதி பத்திரப்பதிவு செய்யப்பட்ட ஆர்.கே.பேட்டை அடுத்த விளக்கணாம்பூடி புதூரில் உள்ள 70 சென்ட் நிலத்துக்கு வழிகாட்டி மதிப்பீடு செய்வதற்காக சமீபத்தில் திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அடுத்த ஆர்.கே.பேட்டை சார் பதிவாளர் அலுவலகத்தை அணுகினார்.

அப்போது, அந்த நில ஆவணத்தை வழிகாட்டி மதிப்பீடுக்காக மாவட்ட வருவாய் அலுவலர் அலுவலகத்துக்கு அனுப்பி வைக்க, ஆர்.கே.பேட்டை சார்பதிவாளரான, கடலூர் மாவட்டம், ஆலாடு கிராமத்தைச் சேர்ந்த செல்வராமச்சந்திரன் ரூ.50ஆயிரத்தை லஞ்சமாகக் கேட்டுள்ளார். அதற்கு ரூ.35 ஆயிரம்தருவதாக பேசப்பட்டது. ஆனால், லஞ்சம் கொடுக்கவிரும்பாத ஜெய்சங்கர், செல்வராமச்சந்திரன் மீது திருவள்ளூர் லஞ்ச ஒழிப்புத் துறைக்கு புகார் அளித்தார்.

இதனையடுத்து, லஞ்ச ஒழிப்புத் துறை ஆலோசனையின் படி, நேற்று செல்வராமச்சந்திரனிடம் ரசாயனபவுடர் தடவப்பட்ட ரூ.35 ஆயிரத்தை ஜெய்சங்கர் லஞ்சமாக அளிக்கச் சென்றார். அப்போது, செல்வராமச்சந்திரன் அறிவுறுத்தலின்படி, ஒப்பந்த ஊழியரான, கணினி இயக்கும் சிவலிங்கம் என்பவரிடம் ஜெய்சங்கர் ரூ.35 ஆயிரத்தை வழங்கினார். அப்போது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத் துறை செல்வராமச்சந்திரன், சிவலிங்கம் ஆகியோரை கைது செய்தனை தொடர்ந்து அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

கட்டிட அனுமதி பெற 40,000 லஞ்சம் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் ஒப்பந்தக்காரர் கைது..!

திருநெல்வேலி மாவட்டம், தென்காசி வட்டம், குத்துக்கல்வலசை ஊராட்சி ராஜா நகர் பகுதியில் நந்தனா என்பவர் வீடு கட்டும் பணியில் ஈடுபட்டுள்ளார். இவருக்காக கேரள மாநிலம் கொல்லத்தைச் சேர்ந்த ரஜினி பாபு என்பவர் கட்டுமான பணி செய்து வந்துள்ளார். ரஜினி வீட்டின் கட்டிட வரைபட அனுமதிக்காக விண்ணப்பித்த போது ஊராட்சி மன்ற தலைவராக உள்ள சத்யராஜ் ரூ.46 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக அவர் தென்காசி லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையில் புகார் தெரிவித்தார். அதன்பேரில் லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறை ரசாயனம் தடவிய ரூபாய் கொடுத்து அனுப்பினர். இதனை நேற்று குத்துக்கல்வலசை ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு சென்று ஊராட்சி மன்ற தலைவர் சத்யராஜிடம் ரூ.46 ஆயிரம் ரஜினி பாபு கொடுத்துள்ளார். அப்போது ரூ.40 ஆயிரம் கொடுத்தால் போதும் என்று ஊராட்சி மன்ற தலைவர் கூறியுள்ளார்.

இதையடுத்து ரூ.40 ஆயிரத்தை மட்டும் அவரது கையில் கொடுத்துள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு சத்யராஜை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர். மேலும் அவருக்கு உடந்தையாக இருந்த ஒப்பந்தக்காரர் சவுந்தர்ராஜன் என்பவரையும் காவல்துறை கைது செய்தனர்.

தாயாரின் வீடு, காலியிடம் பட்டா மாற்ற ரூ.25,000 லஞ்சம்..!

திருச்சி மாவட்டம், முசிறியை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவரது தாயாருக்கு சொந்தமான ஒரு வீடும், ஒரு காலியிடத்தையும் கிருஷ்ணன் பெயருக்கு மாற்ற கடந்த பிப்ரவரி மாதம் விண்ணப்பித்துளார். இதுதொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் அவர் முசிறி கிழக்கு பகுதி கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்திற்கு சென்று விஏஓ விஜயசேகரனிடம் கேட்டுள்ளார்.

பின்னர் கடந்த நவம்பர் மாதம் விஏஓ விஜயசேகர், நாமக்கல் மாவட்டம் பொட்டிரெட்டிபட்டி கிராமத்தை சேர்ந்த மண்டல துணை தாசில்தார் தங்கவேலு ஆகியோர் கிருஷ்ணனுக்கு சொந்தமான இடத்தை பார்வையிட்டுள்ளனர். பின்னர் மேல் விசாரணைக்காக தாலுகா அலுவலகம் வரும்படி தங்கவேலு, கிருஷ்ணனிடம் கூறிச்சென்றுள்ளனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை 6 மணியளவில் கிருஷ்ணன், முசிறி வட்டாட்சியர் அலுவலகம் சென்றார். அப்போது அவரிடம் பட்டா மாற்ற ரூ.30,000 லஞ்சமாக தங்கவேல் கேட்டுள்ளார். கிருஷ்ணன், தொகையை குறைக்கும்படி கேட்டதின் பேரில் ரூ.25,000 லஞ்சமாக தர வேண்டும் என்று தங்கவேல் கூறியுள்ளார். இதையடுத்து கிருஷ்ணன், திருச்சி மாவட்ட லஞ்சஒழிப்பு துறை அலுவலகத்தில் புகார் கொடுத்தார்.

இந்த புகாரின்பேரில் லஞ்ச ஒழிப்பு காவல்துறை ஆலோசனையின்படி நேற்று மாலை 5.30 மணியளவில் முசிறி வட்டாட்சியர் அலுவலகம் சென்ற கிருஷ்ணன், அங்கிருந்த மண்டல துணை தாசில்தார் தங்கவேலிடம் ரூ.25,000த்தை கொடுத்தார். அப்போது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு துறையினர் தங்கவேலை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.

பட்டு கூடு நாற்று வழங்க ரூ.20 ஆயிரம் லஞ்சம் வாங்கிய அதிகாரி கைது..!

நாமக்கல் மாவட்டம் பட்டு வளர்ச்சித் துறை உதவி இயக்குனராகவும், கரூர் மாவட்டம் பட்டு வளர்ச்சித் துறை உதவி இயக்குனராக முத்துபாண்டியன் என்பவர் கவனித்து வருகிறார். இந்நிலையில், ராசிபுரம் அருகே உள்ள கூனவேலம்பட்டிபுதூரைச் சோ்ந்த பட்டு வளா்ப்பு விவசாயி தேகதீஸ்வரன் என்பவரிடம் அரசின் மானியத் தொகை ரூ. 1 லட்சத்தை விடுவிக்க ரூ. ரூ. 25 ஆயிரம் லஞ்சம் தருமாறு உதவி இயக்குநா் முத்துபாண்டியன் கேட்டதாகத் தெரிய வருகிறது.

லஞ்ச ஒழிப்புத்துறை அளித்த அறிவுறுத்தலின்பேரில் ராசிபுரம், பட்டுக்கூடு ஏல விற்பனை மையத்தில் நடைபெற்ற விவசாயிகள் கூட்டத்தின்போது விவசாயி தேகதீஸ்வரன் ரூ. 20 ஆயிரம் பணத்தை உதவி இயக்குநா் முத்துபாண்டியனிடம் லஞ்சமாக அளித்தாா். அப்போது அங்கு மறைந்திருந்த நாமக்கல் லஞ்ச ஒழிப்புத் துறை துணைக் காவல் கண்காணிப்பாளர் சுபாஷினி, ஆய்வாளா் நல்லம்மாள் தலைமையிலான காவல்துறை பணத்தைப் பெற்ற உதவி இயக்குநா் முத்துபாண்டியனை சுற்றி வளைத்து கைது செய்தனா்.

பட்டா பெயர் மாற்றம் செய்ய ரூ.10 ஆயிரம் லஞ்சம்..! கிராம நிர்வாக அலுவலர் மற்றும் உதவியாளர் கைது..!

வேலூர் மாவட்டம் குடியாத்தத்தை அடுத்த அக்ராவரம் ஊராட்சி ரங்கசமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்த போர்வெல் மெக்கானிக் மேகநாதன். இவர் தனது வீட்டுமனை பட்டாவிற்கு பெயர் மாற்றம் செய்ய அக்ராவரம் கிராம நிர்வாக அலுவலகத்தில் மனு செய்தார். இதனை பரிசீலித்து பெயர் மாற்றம் செய்து தருவதாக அவரிடம் கிராம நிர்வாக அலுவலரான கவசம்பட்டு கிராமத்தை சேர்ந்த ஜெயமுருகன் தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து மேகநாதன் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்திற்கு பலமுறை சென்றும் பட்டா பெயர் மாற்றம் செய்து தரவில்லை. அது குறித்து கேட்டபோது கிராம நிர்வாக அலுவலர் ஜெயமுருகன் மற்றும் உதவியாளரான பெரும்பாடி கிராமத்தை சேர்ந்த தேன்மொழி ஆகியோர் ரூ.10 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. ஆனால் லஞ்ச பணம் கொடுக்க விரும்பாத மேகநாதன் அது குறித்து வேலூரில் உள்ள லஞ்ச ஒழிப்பு காவல்துறையில் புகார் செய்தார்.

இதனைத் தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு காவல்துறையினரின் ஆலோசனைப்படி ரசாயனம் தடவிய 500 ரூபாய் நோட்டுகள் 20 என மொத்தம் 10 ஆயிரம் ரூபாயை நேற்று மதியம் அக்ராவரம் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தில் வைத்து கிராம நிர்வாக அலுவலர் ஜெயமுருகன் மற்றும் தேன்மொழியிடம் மேகநாதன் வழங்கினார்.

அப்போது அங்கு மறைந்திருந்த வேலூர் லஞ்ச ஒழிப்பு காவல்துறை கிராம நிர்வாக அலுவலர் ஜெயமுருகன் மற்றும் உதவியாளர் தேன்மொழியை கையும் களவுமாக பிடித்து கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார். லஞ்சம் வாங்கியதாக கிராம நிர்வாக அலுவலர் மற்றும் பெண் உதவியாளர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.