Rajnath Singh: “நாட்டுக்காக உழைத்துக் கொண்டிருக்கிறது மோடி அரசு…!”

நாமக்கல் மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் கே.பி.ராமலிங்கத்தை ஆதரித்து பாதுகாப்புத் துறை ராஜ்நாத் சிங் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது, “தமிழ் கலாச்சாரம் பழமையான பாரம்பரியத்தைக் கொண்டது. காங்கிரஸ் கட்சி 70 ஆண்டுகளாக செய்ய முடியாத சாதனைகளை கடந்த 10 ஆண்டுகளில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு செய்துள்ளது. கடந்த 2014-ம் ஆண்டுக்கு முன்பு இந்திய பொருளாதாரம் உலகளவில் 11-வது இடத்தில் இருந்தது. தற்போது இந்திய பொருளாதாரம் 5-வது இடத்தில் உள்ளது. 2027-ல் 3-வது இடத்தை அடையும் என நான் உறுதியளிக்கிறேன்.

கடந்த முறை தேர்தலில் 303 சீட்கள் பெற்று பாஜக பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைத்தோம். தற்போது நடைபெற உள்ள 2024-ம் ஆண்டு தேர்தலில் பிரதமர் மோடி தலைமையில் 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்று பாஜக பெரும்பான்மையாக ஆட்சி அமைக்கும் என உறுதியாக கூறுகிறேன். திமுகவும், காங்கிரஸ் கட்சியும் கூட்டணி அமைத்து இண்டியா கூட்டணி என்கின்றனர். நமது தேசிய ஜனநாயக கூட்டணி வேலை செய்யும் விதம் வேறு. அவர்கள் வேலை செய்யும் விதம் வேறு. நமது கூட்டணி முன்னோடியாக இருந்து தேர்தலை சந்திக்கிறது. பாஜக செய்வததையே சொல்லும். எனினும், சொல்லாததையும் பாஜக தலைமையிலான அரசு செய்து கொண்டுள்ளது.

தேர்தலில் அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றுப்பட்டன. அந்த வகையில் நாம் ராமர் கோயிலை கட்டி முடித்துள்ளோம். நாம் இப்போது ராம ராஜ்ஜியத்தை, ராமர் ஆட்சியை அமைத்துக் கொண்டுள்ளோம். அதுபோல் காஷ்மீரின் 370-வது சட்டப்பிரிவை தேர்தல் வாக்குறுதிபடி ரத்து செய்துவிட்டோம். தற்போது காஷ்மீர் நம் நாட்டின் ஓர் அங்கமாக உள்ளது.

குடியுரிமை சட்டத்திருத்தம் என்பது எந்த மத்தத்துக்கும் தீங்கானது இல்லை. எந்த மதத்தினரும் நாட்டை விட்டு வெளியேற அவசியமில்லை. அவர்கள் முஸ்ஸிமாக இருந்தாலும் சரி, கிறிஸ்தவர்களாக இருந்தாலும் சரி, அவர்கள் எந்த மதத்தை சார்ந்தவராக இருந்தாலும் சரி, அவர்கள் நாட்டை விட்டு வெளியேற அவசியமில்லை. குடியுரிமை சட்டம் என்பது நமது நாட்டுக்குரியது. முத்தலாக் தடை சட்டம் என்பது முஸ்லிம் சகோதரிகளுக்கும், தாய்மார்களுக்கும் நன்மை பயக்கும் சட்டமாகும்.

சுதந்திரத்துக்கு பின்பு எந்த பிரதமர் தலைமையிலும் நாடு முன்னேற்றேம் அடையவில்லை. ஆனால், பிரதமர் மோடி தலைமையில் கடந்த 10 ஆண்டுகளில் நாட்டின் பொருளாதாரம் மிகப் பெரிய அளவில் வலுவடைந்துள்ளது. 21-ம் நூற்றாண்டில் நமது நாட்டின் பொருளாதாரத்தை உலகம் உற்று நோக்கிக் கொண்டுள்ளது. தேர்தல் உத்தரவாதங்களை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறோம். இனிமேல் கொடுக்கும் உத்தரவாதங்களும் நிறைவேற்றப்படும். நாம் யாருக்கும் சளைத்தவர்கள் இல்லை.

நமது ராணுவம் மிக பலமாக உள்ளது என பாதுகாப்புத் துறை அமைச்சராக உறுதி கூறுகிறேன். நமது ராணுவ தளவாடங்கள் அது ஏவுகணை, புல்லட் என அனைத்தும் இதுவரை இறக்குமதி செய்து கொண்டிருந்தோம். தற்போது பிரதமர் மோடி தலைமையில் நாம் ராணுவ தளவாடங்களை இறக்குமதி செய்வதில்லை. மாறாக, நாமே தயாரித்து நாட்டின் பாதுகாப்பை வலுப்படுத்திக் கொண்டுள்ளோம். மேலும், அதை ஏற்றுமதி செய்யவும் தயாரித்துக் கொண்டுள்ளோம்.

ஆயுஷ்மான் திட்டத்தில் ஏழை மக்களுக்கு கான்கிரீட் வீடுகள் கட்டியுள்ளோம். ஸ்வட்ச் பாரத் திட்டத்தில் கழிவறைகள் கட்டிக் கொடுத்துள்ளோம். விவசாயிகளுக்கு 3 தவணைகளாக தலா ரூ.2 ஆயிரம் வழங்குகிறோம். சிறு சிறு வியாபாரிகளுக்கும் நல்லது செய்து கொண்டுள்ளோம். அவர்களுக்கு கடன் கொடுத்துக் கொண்டுள்ளோம். 2047-ம் ஆண்டு நாம் மிகப் பெரிய சக்தியாகவும், மிக சிறந்த நாடாகவும் விளக்கவும் முயற்சி செய்து கொண்டுள்ளோம்.

திமுகவும், காங்கிரஸ் கட்சியும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்காக உழைத்துக் கொண்டுள்ளனர். ஆனால், பிரதமர் மோடி தலைமையிலான அரசு நாட்டுக்காக உழைத்துக் கொண்டிருக்கிறது. தேசம்தான் முதலிடம் என நாம் உழைத்துக் கொண்டுள்ளோம்” என ராஜ்நாத் சிங் பேசினார்.