Rahul Gandhi: “செல்வந்த தொழிலதிபர்களின் கருவியாக மோடி இருக்கிறார்..! ”

நாட்டின் பதினெட்டாவது மக்களவைத் தேர்தல் 2024 -ஆம் தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி அதாவது 7 கட்டமாக நடைபெற்று ஜூன் 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. கேரளாவில் உள்ள 20 மக்களவைத் தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக ஏப்ரல் 26-ஆம் தேதி தேர்தல் நடைபெறயுள்ளது.

இந்நிலையில் கேரள மாநிலம், கோழிக்கோட்டில் நடைபெற்ற தேர்தல் பேரணியில் பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, “நாட்டில் உள்ள உண்மையான பிரச்சினைகளில் இருந்து மக்களை திசை திருப்புவதும், இந்தியாவில் உள்ள பணக்கார தொழிலதிபர்களை பாதுகாப்பதும், அவர்களின் வங்கிக் கடன்களை ரத்து செய்வதும்தான் பிரதமர் மோடியின் வேலை.

இந்தியாவின் மிகப் பெரிய, பணக்கார தொழிலதிபர்களின் கருவியாக பிரதமர் நரேந்திர மோடி இருக்கிறார். அதாவது, இந்தியாவின் மிகப் பெரிய 5 அல்லது 6 முதலாளிகளின் கருவியாக பிரதமர் மோடி செயல்பட்டு வருகிறார். உண்மையான பிரச்சினைகளில் இருந்து மக்களை திசைதிருப்புவதே அவரின் இலக்காக உள்ளது.

நாட்டில் விவசாயிகள் சந்திக்கும் பிரச்சினைகள், வேலையில்லா திண்டாட்டம் மற்றும் விலைவாசி உயர்வு ஆகியவை பற்றி பிரதமர் மோடி பேசுவதில்லை. தேர்தல் பத்திரங்கள் என்பது பிரதமர் மோடியின் ஒருவித மிரட்டி பணம் பறிக்கும் நடவடிக்கைதான்.

சிபிஐ, அமலாக்கத் துறை மற்றும் வருமான வரித்துறை போன்ற மத்திய அமைப்புகள் சில குறிப்பிட்ட தொழிலதிபர்களுக்கு எதிராக பயன்படுத்தப்படுகின்றன. பாஜகவும் ஆர்எஸ்எஸ்ஸும் அரசியல் சட்டத்தை அழிக்கவும், மாற்றவும் முயற்சிக்கின்றன. நாட்டை ஆட்சி புரிவதற்கான புரிதல் பிரதமர் மோடியிடம் இல்லை” என்றார் ராகுல் காந்தி.

வரும் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால், ஏழைப் பெண்களுக்கு ஆண்டுதோறும் ரூ.1 லட்சம் வழங்கப்படும் உள்ளிட்ட தேர்தல் வாக்குறுதிகளைச் சுட்டிகாட்டி மக்கள் மத்தியில் ராகுல் காந்தி பிரச்சாரம் மேற்கொண்டார்.