நாட்டின் பதினெட்டாவது மக்களவைத் தேர்தல் 2024 -ஆம் தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி அதாவது 7 கட்டமாக நடைபெற்று ஜூன் 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதன் விளைவாக அரசியல் கட்சிகளின் பிரசாரம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.
இந்நிலையில், மக்களவை தேர்தலுக்கு இன்னும் இரு வாரங்களே உள்ளன. பாஜக இன்னும் தேர்தல் அறிக்கையை வெளியிடாத நிலையில், பெண்கள், இளைஞர்கள், முதியோர், மாற்றுத்திறனாளிகள், விவசாயிகளை ஈர்க்கும் வகையில் பல்வேறு வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ன. அதன் 25 முக்கிய அம்சங்களுடன் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியிட்டது.
காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை முஸ்லீம் லீக் சிந்தனையை பிரதிபலிக்கிறது என்றும், காங்கிரஸ் தலைவர்களின் பேச்சு தேசிய ஒருமைப்பாடு மற்றும் சனாதன தர்மத்துக்கு எதிரானதாக உள்ளது என்றும் பிரதமர் மோடி குற்றம் சாட்டி இருந்த நிலையில், அதற்கு பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் பதிலடிகொடுத்துள்ளார்.
இதையடுத்து, பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் கட்சி புகாரளித்தது. இந்நிலையில், பிரதமர் மோடிக்கு பதிலடி கொடுக்கும் விதமாக ராகுல் காந்தி தனது எக்ஸ் தளத்தில், “வரவிருக்கும் மக்களவைத் தேர்தல் இரு கொள்கைகளுக்கு இடையேயான யுத்தம். ஒரு பக்கத்தில் அனைவரையும் ஒருங்கிணைக்கும் சக்தியாக காங்கிரஸ் கட்சி உள்ளது. மற்றொரு பக்கத்தில் எப்போதும் மக்களை பிளவுபடுத்த நினைக்கும் பாஜக இருக்கிறது.
நாட்டை பிளவுபடுத்தும் சக்தியின் பக்கம் நின்றவர்கள் யார்? மக்களின் ஒற்றுமை, சுதந்திரத்திற்கு பாடுபட்டவர்கள் யார் என்பது வரலாற்றில் பதிவு செய்யப்படும். ஆங்கிலேயர் காலத்தில் ஒத்துழையாமை இயக்கத்தில் சிறை சென்றவர்களுக்கு ஆதரவாக நின்றவர்கள் யார்? அரசுக்கு ஆதரவாக நடந்துகொண்டவர்கள் யார் என்பதும் நமக்கு தெரியும். அரசியல் தளங்களில் இருந்து பொய்களை அள்ளி வீசுவதன்மூலம் வரலாற்றை மாற்ற முடியாது” என ராகுல் காந்தி பதிவிட்டுள்ளார்.