Nitin Gadkari : சாலையில் சிறிய பள்ளம் ஏற்பட்டாலும் சரி செய்ய வேண்டியது கடமை..! ஆனால் இங்கு அது நடக்கிறதா..!?

நெடுஞ்சாலையில் சிறிய பள்ளங்கள் ஏற்பட்டால் அதை சரி செய்ய வேண்டிய அதிகாரி, தனக்குதான் யாரும் உத்தரவிடவில்லையே என்று நினைத்து சும்மா இருந்து விடுகிறார்கள். குழியை சரிசெய்ய வேண்டும் என்று உயரதிகாரி உத்தரவிட்ட பிறகுதான் பணியை செய்கிறார்கள் என நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரை சேர்ந்த நிதின் கட்கரி பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசில் சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் . நிதின் கட்கரி அரசு நடைமுறைகளையும், மோடி அரசையும் பற்றி பகிரங்கமாக பேசுவது வழக்கம். இந்நிலையில் மத்திய அரசில் லஞ்சம் கொடுத்தால் தான் அதிகாரிகள் வேலை செய்கிறார்கள். லஞ்சம் கொடுக்காவிட்டால் இங்கே ஒன்றும் நடக்காது என்று பரபரப்பாக பேசியுள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் உள்ள புனே பொறியியல் தொழில்நுட்ப கல்லூரியில் பொறியாளர் தினத்தை முன்னிட்டு நடந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் நிதின்கட்கரி கலந்து கொண்டு பேசினார். அப்போது அரசு அலுவலகங்களில் லஞ்சம் தந்தால்தான் வேலை நடக்கிறது. லஞ்சம் கொடுத்தால் அதிகாரிகள் வேகமாக பணியாற்றுகின்றனர். இல்லாவிட்டால் ஒன்றும் நடக்காது. நமது அமைப்பில் ஏராளமான விஞ்ஞானி நியூட்டனின் தந்தையர்கள் சிலர் உள்ளனர். ஆவணங்கள் மேல் லஞ்சம் வைத்தால் அது வேகமாக நகரும். எவ்வளவு பணம் லஞ்சமாக தரப்படுகிறதோ அதற்கு தகுந்தாற் போல் வேலை நடக்கிறது.

தற்போது உள்ள நடைமுறையில் இருந்து இளைஞர்கள் பாடம் கற்க வேண்டும். பொறியாளர்கள் வெளிப்படைத்தன்மை மற்றும் செயல்திறனுடன் பணியாற்ற வேண்டும். தேவையற்ற தாமதங்களைத் தடுக்க தங்களால் முடிந்த அனைத்தையும் செய்ய வேண்டும். அரசு துறைகளில் வெளிப்படைத்தன்மை, துரித முடிவு எடுக்கப்பட வேண்டியது காலத்தின் கட்டாயம். உதாரணமாக எனது தேசிய நெடுஞ்சாலை துறையின் திட்டங்கள் பற்றி குறிப்பிட விரும்புகிறேன்.

தேசிய நெடுஞ்சாலை திட்டங்கள் தாமதமாவதற்கும், விபத்துக்கள் அதிகம் நடப்பது, உயிரிழப்புகள் அதிகம் ஏற்படுவதற்கு காரணம் தவறுதலாக தயாரிக்கப்பட்ட விரிவான திட்ட அறிக்கைகள்தான். விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பதில் கவனம் தயாரித்தால் விபத்துக்களை தவிர்க்கலாம். திட்டங்கள் தாமதமாவதை குறைக்கலாம்.

ஒரு சில அதிகாரிகள் மேலதிகாரிகள் உத்தரவிட்டால்தான் தங்கள் வேலையை கூட செய்கிறார்கள். நெடுஞ்சாலையில் சிறிய பள்ளங்கள் ஏற்பட்டால் அதை சரி செய்ய வேண்டிய அதிகாரி, தனக்குதான் யாரும் உத்தரவிடவில்லையே என்று நினைத்து சும்மா இருந்து விடுகிறார்கள். குழியை சரிசெய்ய வேண்டும் என்று உயரதிகாரி உத்தரவிட்ட பிறகுதான் பணியை செய்கிறார்கள்.

விதிப்படி உயர்அதிகாரி உத்தரவிட வேண்டும். சட்டப்படி சாலை குண்டும் குழியுமாக இல்லாமல் சமமாக இருக்க வேண்டியது அவசியது. இதனால், குழியை உயர் அதிகாரி உத்தரவிடாவிட்டாலும் சீர் செய்வது அதிகாரிகள் கடமை. ஆனால், அதை அதிகாரிகள் உணரவில்லை என நிதின் கட்கரி பேசினார்.