சீமான் அடாவடி பேச்சு: 3,000 ஓட்டு எந்த தொகுதியில் வாங்கினேன்னு சொல்லுங்க.. நான் தீக்குளிக்கிறேன்..

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கும்பகோணத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இந்த சந்திப்பின் போது, என்னுடன் கூடுகிற கூட்டம் இரண்டு கட்சியும் வேண்டாம் என வெறுத்துப் போய் கூடுகிற கூட்டம். என்னுடைய செல்வாக்கு என்பதே திராவிட கட்சிகளை ஒழிக்கனும்னு நினைக்கிற மக்கள்தான். 60 ஆண்டுகளாக ஆண்டு மக்களை இந்த நிலைக்கு தள்ளிட்டாங்களேன்னு வெறுக்கிற மக்கள்தான் என் பின்னாடி திரளுகிறார்கள் சீமான் என்றார்.

அப்போது குறுக்கிட்ட செய்தியாளர் ஒருவர், அப்ப தொகுதிக்கு 3,000 ஓட்டு மட்டும் வாங்கினா போதுமா சார் என கேள்வி கேட்டார். இதனையடுத்து சட்டென கோபமடைந்த சீமான், ஒரு தொகுதிக்கு 26,000 ஓட்டு வாங்கி இருக்கேன்.. நீங்க தூக்குல தொங்குறீங்களா? விஷம் குடிக்கிறீங்களா? 37,000 ஓட்டு வாங்கியிருக்கேன் தூத்துக்குடியில்..அப்புறம்… என தலையை தூக்கி கையை உயர்த்தி சொடக்குப் போட்டபடி, 3,000 ஓட்டு எந்த தொகுதியில் வாங்கினேன்னு சொல்லுங்க.. நான் தீக்குளிக்கிறேன்.. என்றார். அத்துடன் கையை நீட்டி மிரட்டும் தொனியில் தம்பி.. தம்பி.. ஏய்.. என சொல்ல அப்போதும் செய்தியாளர் குறுக்கிட, இதெல்லாம் பேசக் கூடாது என சீமான் எச்சரித்தார்.

மேலும் 30,000 ஓட்டு எப்படி வாங்கினேன்? என சீமான் கேட்க, அதை எப்படி உங்க தனிப்பட்ட செல்வாக்குன்னு சொல்ல முடியும் என மீண்டும் செய்தியாளர் குறுக்கு கேள்வி எழுப்பினார். அதற்கு அப்ப ‘உங்க செல்வாக்கா என கிண்டலடித்தார் சீமான். ஒழுங்கா பேசப் பாருங்க..: அத்துடன் நீங்க கேள்வி கேட்பதாக இல்லை; விதண்டவாதம் செய்யுறதா இருக்கீங்க.. பேட்டி முடிந்த உடன் ரெண்டு பேரும் பேசிப் பார்ப்போம். ஒழுங்கா பேசப் பாருங்க.. 3,000 ஓட்டு முதலில் வாங்கினேன்.. 30,000 ஓட்டு அப்புறம் எப்படி வந்தது? அடுத்த தேர்தலில்? என மீண்டும் சொன்னதையே திரும்ப சீமான் சொன்னார்.

அதற்கும் விடாத செய்தியாளர், தம்பிமார்களின் செயல்பாடுகள் காரணமாக இருக்கலாம் அல்லவா? என்றார். அப்போதும் தங்கச்சிமார்கள் எல்லாம் செயல்படலையா? என சீமான் நக்கலடித்தார். தம்பிமார் செயல்பட்டாலும் மக்கள் வாக்கு தரனும்ல.. மக்கள் வாக்கு தருகிறார்கள்தானே.. திமுக, அதிமுக காசு கொடுக்காம வாக்கு வாங்குனீங்களா? அதை நீ நேர்மையான பத்திரிகையாளன் கேள்வி கேட்பியா? கேட்டு இருக்கீகளா? என்றார். மேலும் எங்க கேட்டீங்க? என்றார்.

தொடர்ந்து, திராவிட கட்சிகள் காசு கொடுக்கிறாங்களா இல்லையா? என செய்தியாளரிடம் சீமான் கேள்வி கேட்க, நான் இதுவரை பார்த்தது இல்லை என பட்டென அந்த செய்தியாளர் பதில் சொன்னார். உடனே வேறு வேலையை பாருங்க என்ற சீமான், அந்த செய்தியாளரை அழைத்து நீங்க எந்த இதழில் வேலை செய்றீங்க என்றார். அவர் தாம் பணிபுரியும் பத்திரிகையின் பெயரை சொன்ன உடனே, அந்த பத்திரிகை அவ்வளவு கேவலமாக போய்விட்டது என்றார். பின்பு, உங்க பெயர் என்ன என சீமான் கேள்வி கேட்க, சிராஜூதீன் என்றார் அந்த செய்தியாளர். உடனே, அப்ப நீ பேசுவ? என மீண்டும் சீண்ட இருவருக்கும் இடையே வாக்குவாதம் நடைபெற்றது.

சிங்கப்பூரில் கார் ஓட்டுநர் இனவெறி பேச்சு..!

சிங்கப்பூரில் வசித்து வரும் ஜேனெல்லே ஹீடன் என்ற பெண் தன்னுடைய 9 வயது மகளுடன் வாடகை கார் ஒன்றில் புறப்பட்டார். ஆன்லைன் வழியே முன்பதிவு செய்து சென்ற அந்த வாடகை காரில், சீனாவை சேர்ந்த ஓட்டுநர் இருந்துள்ளார். அவர்கள் செல்லும்போது வழியில், பசீர் ரிஸ் என்ற இடத்தில், மெட்ரோ கட்டுமான பணி நடைபெற்று வந்துள்ளது. இதற்காக சாலை மூடப்பட்டு இருந்தது. இதனால், கோபமடைந்த அந்த ஓட்டுநர் பின்னால் திரும்பி, காரில் அமர்ந்திருந்த பெண்ணை நோக்கி கத்தி கூச்சலிட்டு உள்ளார். தவறான முகவரியை கொடுத்து, தவறான வழியை காட்டி விட்டாய் என கூறியுள்ளார்.

நீ ஒரு முட்டாள் என சத்தம் போட்டுள்ளார். இதுபற்றி வீடியோ ஒன்றை ஹீடன் எடுத்து வைத்து, அதனை தன்னுடைய பேஸ்புக்கில் பகிர்ந்துள்ளார். அதில், கார் ஓட்டுநர் ஹீடனிடம், உன்னுடைய மகள் உயரம் குறைவாக உள்ளார் என தொடர்ந்து கூறியதுடன், உன்னுடைய மகள் சட்டவிரோதம் ஆனவள் என அழைத்துள்ளார். தொடர்ந்து அவர், நீ ஓர் இந்தியர். நான் சீனர். நீ படுமோசம் கார் ஓட்டுநர் பேசினார் என தெரிவித்தார்.

பார் அமைக்க கிராம மக்கள் எதிர்ப்பு

திண்டுக்கல் நத்தம் அருகே வேலம்பட்டி ஊராட்சியில் நேருநகர், செல்லம்புதூர் ஆகிய கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். மேலும் இப்பகுதியில் தனியார் மருத்துவமனை மற்றும் குடியிருப்புகள் அதிகமாக உள்ளன. இந்த கிராமங்களுக்கு செல்லக்கூடிய செந்துறை சாலையோரத்தில் தனியார் மதுபான பார் அமைக்கும் பணி நடந்து வருகிறது.

இதற்கு கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் 300-க்கும் மேற்பட்ட கிராம மக்கள், வேலம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் கண்ணன் தலைமையில் ஊர்வலமாக நத்தம் தாலுகா அலுவலகத்துக்கு வந்தனர். பின்னர் அவர்கள், தாசில்தார் ராமையாவிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.

மின் இணைப்பு… “சிறப்பு பெயர் மாற்றம் முகாம்”…

மின் இணைப்புகளில் பெயர் மாற்றம் செய்யும்போது பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமங்களை நீக்கிட, கட்டணம் செலுத்திய அன்றே பெயர் மாற்றம் வழங்கிட வேண்டும் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சில நாட்களுக்கு முன்பு, சட்டசபையில் உத்தரவிட்டிருந்தார்.

மின்துறை அமைச்சர் இதற்கு பிறகு, மின்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, செய்தியாளர்களிடம் பேசும்போது, மாநிலம் முழுதும், 43,244 கம்பங்களை மாற்றுவது, 20,570 இடங்களில் மின் மின் கம்பியை சரிசெய்வது என்று மொத்தம், 3.89 லட்சம் பணிகள் நடக்க வேண்டும். அவற்றை முறையான திட்டமிடலுடன் மக்களுக்கு முன்கூட்டியே அறிவிப்பு செய்து, அதிக நேரம் மின் தடை ஏற்படாமல் செய்ய வேண்டும்.

மின் இணைப்புகளில் பெயர் மாற்றம் செய்யும்போது, பொது மக்களுக்கு ஏற்படும் சிரமங்களை நீக்க, கட்டணம் செலுத்திய அன்றே பெயர் மாற்றம் வழங்க, சிறப்பு பெயர் மாற்றம் முகாம், அனைத்துப் பிரிவு அலுவலகங்களிலும், வரும் 24ம் தேதி முதல் நடத்த வேண்டும்.. கட்டணம் செலுத்திய அன்றே உடனடியாக பெயர் மாற்றமும் வழங்க ஏற்பாடு செய்யப்படும்” என்று அறிவித்திருந்தார்.

அமைச்சர் இவ்வாறு அறிவித்திருந்த நிலையில், மின்வாரியமும் அதற்கான ஏற்பாடுகளில் இறங்கிவிட்டது.. அதன்படி, கடந்த 24ம் தேதி முதல், சிறப்பு முகாம்களையும் நடத்த தயாராகிவிட்டது. “சிறப்பு பெயர் மாற்றம் முகாம்” கடந்த 24.07.2023 முதல் ஆரம்பமானது.. ஒரு மாதகாலத்திற்கு தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் அனைத்து பிரிவு அலுவலகங்களிலும் நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

வீட்டு மின் இணைப்புகளில் பெயர் மாற்றம் பெறுவதற்கு, ஆன்லைன் மூலமாக விண்ணப்பித்து அங்கீகரிக்கப்பட்ட ஆவணங்களை பதிவேற்றம் செய்து, நிர்ணயிக்கப்பட்ட கட்டணங்களை செலுத்தி பெயர் மாற்றம் செய்துகொள்ளும் வசதி நடைமுறையில் உள்ளது என்றாலும், மின் இணைப்புகளில் பெயர் மாற்றம் செய்யும் போது பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமங்களை நீக்கி, கட்டணம் செலுத்திய அன்றே உடனடியாக பெயர் மாற்றம் வழங்க வேண்டும் என்பதற்காகவே, இந்த “சிறப்பு பெயர் மாற்றம் முகாம்” நடத்தப்பட்டு வருகிறது.

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் அனைத்து பிரிவு அலுவலகங்களிலும், இந்த சிறப்பு பெயர் மாற்றம் முகாம்கள், ஞாயிற்றுகிழமை மற்றும் பண்டிகை தினங்கள் தவிர்த்து, அனைத்து அலுவலுக வேலை நாட்களிலும் காலை 09.00 மணி முதல் மாலை 05.00 வரை செயல்பட்டு வருகிறது. இந்த மாதம் 11-ம் தேதி வரை, 1.08 லட்சம் பேருக்கு மின் இணைப்பு பெயர் மாற்றம் செய்யப்பட்டு உள்ள நிலையில், இந்த முகாம் முடிய இன்னும் ஒருவார காலமே உள்ளது.

வீட்டு மின் இணைப்பு மற்றும் பொது மின் இணைப்புக்கான பெயர் மாற்றம் தேவைப்படும் பொதுமக்கள் இந்த வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொண்டு சிறப்பு முகாம்களில் தங்களது வீட்டு மின் இணைப்புகள் மற்றும் பொது மின் இணைப்புகளில் பெயர் மாற்றம் செய்து, நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டணமான ரூ. 726/- (ரூ 615+GST ரூ 111) செலுத்தி இந்த “சிறப்பு பெயர் மாற்றம் முகாம்” மூலம் வீட்டு மின் இணைப்பு மற்றும் பொது மின் இணைப்புகளில் பெயர் மாற்றம் செய்ய கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

விண்ணப்பதாரர் கீழே குறிப்பிட்டுள்ள தேவையான ஆவணங்களுடன் பிரிவு அலுவலகத்தில் நேரிலோ அல்லது ஆன்லைன் மூலமாகவோ பெயர் மாற்றத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும்.
ஆவணங்கள்:

அ) வளாகத்தின் விற்பனையின் காரணமாக பெயர் மாற்றம் செய்யும் விண்ணப்பதாரர்கள் சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள்: ஆதார் அட்டை.

(அ) நகராட்சி, மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சமீபத்திய சொத்து வரி ரசீது நகல் (அல்லது) விற்பனைப் பத்திரத்தின் ஜெராக்ஸ் நகல் (அல்லது) ஏதேனும் செல்லுபடியாகும் ஆவணம் (பரிசு பத்திரம் / செட்டில்மென்ட் பத்திரம் போன்றவை) (அல்லது) நீதிமன்ற உத்தரவு.

(ஆ) நகராட்சி, மாநகராட்சி அல்லாத இதர பகுதிகளுக்கு விற்பனைப் பத்திரத்தின் ஜெராக்ஸ் நகல் (அல்லது) ஏதேனும் செல்லுபடியாகும் ஆவணம் (பரிசு பத்திரம் / செட்டில்மென்ட் பத்திரம் போன்றவை) (அல்லது) நீதிமன்ற உத்தரவு.

ஆ) இறப்பின் காரணமாக பெயர் மாற்றம் செய்யும் விண்ணப்பதாரர்கள் சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள்:

செட்டில்மென்ட் பத்திரம் (அல்லது) பகிர்வு பத்திரம் சமர்ப்பிக்கப்படாவிட்டால், சட்டப்பூர்வ வாரிசு சான்றிதழின்படி அனைத்து சட்டப்பூர்வ வாரிசுகளின் பெயர்களிலும் பெயர் மாற்றம் செய்யப்படும்.

(அ) நகராட்சி, மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சமீபத்திய சொத்து வரி ரசீது நகல் (அல்லது) உரிமை ஆவணத்தின் ஜெராக்ஸ் நகல்.

(ஆ) நகராட்சி, மாநகராட்சி அல்லாத இதர பகுதிகளுக்கு உரிமை ஆவணத்தின் ஜெராக்ஸ் நகல்.

இ) குழு வீடுகளில் பொது சேவைகளுக்கான மின் இணைப்புகளில் (வீதப்பட்டி ID) பெயர் மாற்றம் செய்யும் விண்ணப்பதாரர்கள் சமர்பிக்க வேண்டிய ஆவணங்கள்:

பில்டர்கள்/டெவலப்பர்கள் பெயரில் இருக்கும் பல குடியிருப்புகள்/ குடியிருப்பு வளாகங்கள்/ குரூப் ஹவுஸிங்கில் உள்ள பொது சேவைகளுக்கான மின் இணைப்புகளுக்கு பெயர் மாற்றம் செய்ய பின் வரும் ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

நலவாழ்வு சங்கத்தின் பெயரில் பதிவு சான்றிதழ் (அல்லது) வளாகம்/அப்பார்ட்மெண்ட் பெயருக்கு மாற்ற, விண்ணப்பத்தில் கையொப்பமிட குடியிருப்பாளர்களிடமிருந்து அதிகாரப்பூர்வ கடிதம் போன்ற ஆவணங்கள் அவசியம் என தெரிவிக்கப்படுள்ளது.

பாஜகவில் 46 காங்கிரஸ் கவுன்சிலர்கள் இணைந்தனர்

பஞ்சாப் மாநிலத்தின் உள்ள அபோஹர் சட்டப் பேரவை தொகுதி, காங்கிரஸ் கோட்டையாக இருந்தது வந்தது. இந்த தொகுதியில் காங்கிரஸ் 10 முறை வென்றுள்ளது. இதில் 8 முறை சுனில் ஜாக்கர் குடும்பத்தினர் வென்றுள்ளனர்.

இந்நிலையில் சுனில் ஜாக்கர், பஞ்சாப் மாநில பாஜக தலைவராக கடந்த மாதம் நியமிக்கப்பட்டார். இப்பதவியை ஏற்றபின் அவர் முதல் முறையாக நேற்று சொந்த ஊர் அபோஹர் திரும்பினார். அப்போது அபோஹர் மேயர் விமல் தத்தாய், மூத்த துணை மேயர் கன்பத் ராம், துணை மேயர் ராஜ்குமார் நிரணியன் மற்றும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கவுன்சிலர்கள் 46 பேர் பாஜகவில் இணைந்தனர்.

மகா மாரியம்மன் கோவில் 1.008 குத்து விளக்கு பூஜை…

நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் அருகே உள்ள நன்செய் இடையாரில் எழுந்தருளியுள்ள மகா மாரியம்மன் கோவில் பால்குட அபிஷேகத்தை முன்னிட்டு நேற்று காலை யாக வேள்வி பூஜை தொடங்கியது. அதனைத் தொடர்ந்து அம்மன் முக்கிய வீதி வழியாக திருவீதி உலா வரும் நிகழ்ச்சியும், இரவு 1008 குத்து விளக்கு பூஜையும் நடைபெற்றது. இதில் நன்செய் இடையாறு மற்றும் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு குத்து விளக்கு பூஜையில் கலந்து கொண்டனர்.

ஒப்பந்த பணிக்கு ரூ.3 லட்சத்து 9000 லஞ்சம் வாங்கிய அதிமுக ஒன்றிய சேர்மன்

கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே அண்ணா கிராமம் ஊராட்சி ஒன்றிய சேர்மனாக ஜானகிராமனும், துணை சேர்மனாக தேமுதிகவை சேர்ந்த ஜான்சிராணி உள்ளனர். இவர்கள் இருவருக்கும் பல்வேறு கருத்து வேறுபாடுகள் நிலவி வருகிறது. மேலும் ஒப்பந்த பணிகளில் பல்வேறு குறைபாடுகள் இருப்பதாகவும் கவுன்சிலர்கள் குற்றம் சாட்டி வந்தனர்.

இந்நிலையில் கோட்லாம்பாக்கம், கரும்பூர், சாத்திப்பட்டு, அவியனூர், கரும்பூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கு ரூ.1 கோடிக்கு மேல் வளர்ச்சி பணிகள் செய்ய தீர்மானிக்கப்பட்டது. அந்த பணிகளுக்கு கமிஷன் தொகையை அதிமுக சேர்மனுக்கு வழங்க நேற்று ஒப்பந்ததாரர்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு வந்தனர். அப்போது சேர்மன் தனக்கு வேண்டிய ஒப்பந்ததாரர்களுக்கு மட்டும் பணிகள் தருவதாக பேரம் பேசினார்.

அதன்படி, லஞ்ச பணத்தை அதிமுக சேர்மனுக்கு வழங்கினர். இது சம்பந்தமாக நேற்று கடலூர் லஞ்ச ஒழிப்பு பிரிவு கூடுதல் கண்காணிப்பாளர் தேவநாதனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவரது தலைமையில் 9 பேர் கொண்ட குழுவினர் நேற்று அண்ணா கிராமம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நுழைந்து அதிமுக சேர்மன் அறையில் அதிரடி சோதனை நடத்தினர்.

அப்போது காவல்துறை கேட்ட பல்வேறு கேள்விகளுக்கு பதில் கூற முடியாமல் சேர்மன் திணறினார். அவரது லாக்கரில் இருந்த லஞ்ச பணம் ரூ.3 லட்சத்து 9000-ஐ பறிமுதல் செய்தனர். அதிமுக சேர்மன் லஞ்சம் வாங்கிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நாமக்கல் உதவி ஆய்வாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை!

நாமக்கல் மோகனூர் சாலையில் இருக்கும் திருநகரில் வசித்து வரும் பூபதி நாமக்கல் நகர காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். பூபதி, ராசிபுரம் காவல் நிலையத்தில் பணிபுரிந்த போது, நிலப் பிரச்னை தொடர்பாக பணம் பெற்றிருக்கிறார் என்று இவர்மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டது.

அதேபோல், கடந்த 2020 – ம் ஆண்டு நாமக்கல் காவல் நிலையத்தில் பணிபுரிந்த போது, கஞ்சா வியாபாரிகளிடம் ரூ.40 லட்சம் வரை லஞ்சம் வாங்கியதாகவும் கூறப்பட்டது. பூபதி இப்படி சம்பாதித்த பணத்தில், சொகுசு கார் மற்றும் சொத்துக்கள் வாங்கி குவித்திருப்பதாக தெரிய வந்திருக்கிறது.

அதன் அடிப்படையில்தான் இன்று காலை முதல் நாமக்கல் லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி சுபாஷினி தலைமையில் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். அதேபோல, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள, மல்லசமுத்திரத்தில் இருக்கும் இவரது தந்தை மற்றும் மாமனார் வீடுகளிலும் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

டிடிவி தினகரன் கடுமையாக விமர்சனம்: அண்ணாமலைக்கு ஒன்னுமே தெரியாது..!

புதுக்கோட்டையில் கடந்த சில தினங்களுக்கு முன்னதாக பேராவூரணி சட்டமன்ற தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினரான அசோக்குமார் தனது பேரப் பிள்ளைகளுக்கு காது குத்து விழா வைத்து மொய் விருந்தளித்தார். இந்த பிரம்மாண்டமான மொய் விருந்து மூலம் சுமார் 11 கோடி ரூபாய் வசூல் ஆனதாக அப்பகுதியில் பேசுபொருளாக இருப்பது மட்டுமல்லாமல் சமூக வலைதளங்களிலும் இதுகுறித்த விவாதங்கள் எழுந்துள்ளது.

இந்நிலையில் திமுக எம்.எல்.ஏ. நடத்திய மொய் விருந்தில் 11 கோடி ரூபாய் வசூல் ஆனது குறித்து, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள், தனது ட்வீட்டர் பக்கத்தில், காதுகுத்தபட்டதா திமுக எம்எல்ஏ பேரப்பிள்ளைகளுக்கும், வருமானவரித்துறையினருக்கும் என்ற தலைப்பில் விமர்சித்து அறிக்கை வெளியிட்டிருந்தார்.மேலும், மொய் விருந்து என்பது கறுப்பு பணத்தை வெள்ளையாக்கும் முயற்சி என்றும் விமர்சித்திருந்தார்.

பேராவூரணி சட்டமன்ற தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினரான அசோக்குமார் நடத்திய மொய் விருந்து பேராவூரணி பகுதி மக்களின் பழக்க வழக்கங்களில் ஒன்று என்றும், பண்பாடு தெரியாமல் அண்ணாமலை அரசியல் செய்கிறார் என திமுகவினர் மட்டுமல்லாது பல்வேறு தரப்பினரும் அண்ணாமலையை கடுமையாக விமர்சித்தனர்.

இந்நிலையில் புதுக்கோட்டையில் நடக்கும் மொய் விருந்தை பாஜக தலைவர் அண்ணாமலை கொச்சைப்படுத்துவதாக அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கடுமையாக விமர்சித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு,”பேராவூரணி, புதுக்கோட்டை பகுதிகளில் ரொம்ப நாளாக இருக்கும் மொய் விருந்து நிகழ்ச்சியை பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கொச்சைப்படுத்துகிறார். அவர் சொல்வது தவறு, வட்டியில்லாத கடன் தருவது, ஒருவரை கைத் தூக்கிவிடுவது கர்நாடகாவில் ஐபிஎஸ் அதிகாரியாக இருந்தவர் அவருக்கு எதுவும் தெரியாது” என கூறியுள்ளார்.

தாமரை மலர வாய்ப்பில்லை…. வீண் கர்வம் பிடித்தவர்களால் தாமரை வாடி கருகி போகும்..!

நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இன்னமும் ஒரு சில ஆண்டுகள் இருக்கும் நிலையில் பாஜக தமிழகத்தில் கணிசமான வாக்குகளை பெறுவது மட்டுமல்லாது எப்படியாவது திமுகவுடன் கூட்டணி வைத்து கணிசமான தொகுதிகளை கைப்பற்ற வேண்டும் என்ற முனைப்பில் பாஜக தினமும் மக்களின் மனதில் இருக்க நல்லதோ, கொட்டதோ ஏதாவது செய்து தினம் தினம் பத்திரிகையில் செய்திகள் வெளிவர செய்து கொண்டுள்ளது.

அதனால் தமிழகத்தில் திமுக- பாஜக இடையே நாளுக்கு நாள் மோதல் அதிகரித்து வரும் நிலையில் திமுக அரசு மீது தொடர் குற்றச்சாட்டுக்களை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்து வருகிறார். மேலும் திமுக நிர்வாகிகளை பாஜகவிற்கு இழுக்கும் நடவடிக்கையில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். பாஜகவிற்கு திமுகவும் தக்க பதிலடி கொடுத்து மட்டுமல்லாமல் பாஜக நிர்வாகிகளை திமுக இழுத்து வருகிறது. கடந்த வாரம் மதுரை மாநகர மாவட்ட தலைவராக இருந்த டாக்டர் சரவணன் பாஜகவில் இருந்து விலகி, திமுகவில் இணையவுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த 20 ஆண்டுகளாக பாஜக பொறுப்பிலிருந்த மாநில மகளிர் அணி செயலாளர் மைதிலி வினோ திமுகவில் இணைந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளளார். இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பொள்ளாச்சியில் நடைபெறவுள்ள திமுக கூட்டத்தில் மாற்று கட்சியை சேர்ந்த 50 ஆயிரம் பேர் அமைச்சர் செந்தில் பாலாஜி மேற்பார்வையில் இணைய இருப்பதாக அரசால் புரசலாக பேசப்படுகிறது.

இந்நிலையில் பாஜக மாநில மகளிர் அணி செயலாளர் மைதிலி வினோ திமுகவில் இணைய இருப்பதாக தகவல் வெளியாக, இதனையடுத்து கட்சியின் கட்டுப்பாட்டை மீறியதால் மைதிலி வினோவை கட்சியில் இருந்து நீக்குவதாக கோவை மாவட்ட பாஜக தலைவர் பாலாஜி உத்தமராமசாமி அறிவித்திருந்தார்.

இந்த அறிவிப்பிற்கு பதில் அளித்து தனது முகநூல் பக்கத்தில் அறிக்கை வெளியிட்ட மைதிலி வினோ, பாரதீய ஜனதா கட்சியில் 22 ஆண்டுகளுக்கு முன்பு உறுப்பினராக இணைந்து கடின உழைப்பால் மாவட்ட மகளிரணி, மாநில மகளிரணி என பல்வேறு பொறுப்புகளில் சிறப்பாக பணியாற்றி வந்த நான் அண்மை காலமாக பாஜகவின் மாவட்ட தலைமையின் நடவடிக்கை சரியில்லாத காரணத்தால் கட்சியிலிருந்து விலகும் முடிவுக்கு வந்ததாக தெரிவித்துள்ளார்.

பாஜக என்றால் மக்களுக்கு என்னவென்றே தெரியாத காலகட்டத்தில் கட்சிக்காக பல போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் ஆகியவற்றை நடத்தி கட்சியில் பெண்கள் உள்ளிட்ட ஏராளமானோரை இணைத்து கோவையில் பாஜக வளர்ச்சிக்கு எப்படியெல்லாம் பாடுபட்டுள்ளேன் என்பது உண்மையான பாஜகவினருக்கு நன்றாக தெரியும் என கூறியுள்ளார். மேலும் பாஜகவில் பெண்கள் யாருமே இல்லாத காலகட்டத்தில் மகளிரணியை கட்டமைத்தவர்களில் எனது பங்கு அலாதி என்பது தாங்கள் அறியாததே என கூறியுள்ளார்.

பாஜகவிற்கு வந்த உடன் மாவட்ட தலைவர் பதவியை பிடித்ததால் அடிப்படை என்ன என்பது தெரியாமல் இருப்பது நியாயம் தான். பாஜகவில் உழைப்பவருக்கு பதவி என்ற நிலை மாறி இன்று பணம் படைத்தவருக்கே பதவி என்ற நிலையல்லவா நிலவுகிறது. ரியல் எஸ்டேட் மூலம் சம்பாதித்த 310 கோடி ரூபாய் சொத்து இருப்பதால் நீங்கள் இன்று மாவட்ட தலைவர் என்றால், நாளை ஒருவர் 320 கோடி சொத்து வைத்திருந்தால் அவர் தான் அடுத்த மாவட்ட தலைவரா? இப்படி இருந்தால் கட்சிக்காக அடிப்படையிலிருந்து உழைத்தவர்கள் கதி என்னாவது? என்னை போன்ற உண்மை விசுவாசிகள் பலரும் தங்களது தவறான ஏதேச்சதிகார போக்கால் சுயமான முடிவெடுக்க துவங்கியுள்ளனர் என்பது தெரியுமா தங்களுக்கு? கட்சியின் மூத்த நிர்வாகிகளை அவமதித்து புறந்தள்ளி பணம் படைத்தவர்களுக்கு பதவி வழங்கும் தங்களை போன்றவர்கள் மாவட்ட தலைமை பொறுப்பில் உள்ள வரை இங்கு தாமரை மலர வாய்ப்பில்லை.

தாமரை மலர தண்ணீர் ஊற்றியவர்கள் பலரும் இன்று தங்களின் செயல்பாட்டால், தொண்டர்களுக்கும் உண்மை விசுவாசிகளுக்கும் மதிப்பளிக்கும் திராவிட முன்னேற்ற கழகத்திற்கு செல்ல தயாராகி விட்டனர். எனவே மொட்டு வந்து மலர இருந்த தாமரை தங்களை போன்ற வீண் கர்வம் பிடித்தவர்களால் வாடி கருகி போகும் என்பது தான் நிதர்சனம்” எனத் தெரிவித்துள்ளார்.

மைதிலி வினோவின் குற்றச்சாட்டு பாஜகவினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் கோவையில் தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் சுற்றுபயணம் செய்து வரும் நிலையில், மைதிலி வினோ பொள்ளாச்சியில் நடைபெறும் விழாவில் திமுகவில் இணைவதுடன் கோவை மற்றும் பொள்ளாச்சி பகுதியை சேர்ந்த அதிமுகவின் முக்கிய நிர்வாகிகளும் இணைய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.