கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனை மருத்துவருக்கு கத்திக்குத்து..!

“சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனைக்கு நான்கு பேர் சிகிச்சைக்காக இன்று வந்துள்ளனர். அங்கு புற்றுநோய் பிரிவில் சிகிச்சையளித்து வந்த மருத்துவர் பாலாஜி என்பவரை கத்தியால் குத்தி தாக்குதல் நடத்தியுள்ளனர். இச்சம்பவத்தில் தொடர்புடைய இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர் என தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்தார். அப்போது, “சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக நான்கு பேர் சிகிச்சைக்காக வந்துள்ளனர். அங்கு புற்றுநோய் பிரிவில் சிகிச்சையளித்து வந்த மருத்துவர் பாலாஜி என்பவரை கத்தியால் குத்தி தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இந்த சம்பவத்தில் தொடர்புடைய இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். காவல்துறை விரைவாக நடவடிக்கை எடுத்து இந்த சம்பவத்தில் தொடர்புடைய மற்றவர்களையும் கைது செய்து சட்ட ரீதியான நடவடிக்கையை எடுப்பார்கள் என மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனைக்கு இன்று வழக்கம்போல் நோயாளிகள் சிகிச்சைக்காக வந்திருந்தனர். இம்மருத்துவமனையின் புற்றுநோய் பிரிவின் சிறப்பு மருத்துவர் பாலாஜி பணியில் இருந்தார்.

இந்நிலையில், மருத்துவமனைக்கு வந்த சிலர் மருத்துவர் பாலாஜியிடம் தகராறு ஏற்பட்டுள்ளது. இதன்தொடர்ச்சியாக, அவர்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால் மருத்துவர் பாலாஜியை குத்தி தாக்குதல் நடத்தியதில் ரத்தவெள்ளத்தில் மருத்துவர் பாலாஜி சம்பவ இடத்திலேயே சரிந்து விழுந்துள்ளார். இந்த சம்பவத்தால் மருத்துவமனை வளாகம் மிகுந்த பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து கிண்டி காவல்துறைக்கு உடனடியாக தகவல் அளிக்கப்பட்டது. தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். மருத்துவர் பாலாஜியை தாக்கிய நபர்களை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

சாலையில் சடலத்தை வைத்து பொதுமக்கள் மறியல்..!

விழுப்புரம் அருகே சுடுகாடு வசதி இல்லாததால் சாலையில் சடலத்தை வைத்து பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டதால் விழுப்புரம்-புதுச்சேரி சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. விழுப்புரம் மாவட்டம், கோலியனுார் அடுத்த பனங்குப்பம், புதுநகர் பகுதியை சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் கருணாநிதி உடல்நலம் குறைவால் நேற்று முன்தினம் உயிரிழந்த நிலையில் அவரது சடலத்தை அடக்கம் செய்வதற்காக சுடுகாட்டுக்கு கொண்டு சென்றனர்.

அப்போது சுடுகாடு வசதி இல்லாததால் ஆத்திரமடைந்த அவரது குடும்பத்தினர், உறவினர்கள் திடீரென கோலியனூர் கூட்ரோடு பகுதியில் சாலையிலேயே சடலத்தை வைத்து மறியலில் ஈடுபட்டதால் விழுப்புரம்-புதுச்சேரி சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தகவலறிந்த வளவனூர் காவல்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறுகையில், பனங்குப்பம் புதிய காலனியில் இறந்தவர்களுக்கு சுடுகாடு இல்லாததால், வாய்க்காலுக்கு அருகே புதைத்து வருகிறோம். இதனால், இறந்தோரை புதைக்க தோண்டும் போது, வாய்க்காலில் இருந்து வெளியேறும் விஷவாயு தாக்கி, பலருக்கு ஆபத்து ஏற்படும் சூழல் உள்ளது. இந்த பிரச்னை சம்பந்தமாக நாங்கள் பல முறை, தாசில்தார் உட்பட பல அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை. இதனால், இப்பிரச்னை சம்பந்தமாக நாங்கள் முதலமைச்சருக்கு வேண்டுகோள் வைத்து போஸ்டர் வைத்து கொண்டு சடலத்தோடு ஊர்வலமாக வந்ததோடு, மறியலில் ஈடுபட்டதாக தெரிவித்தனர்.

தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்திய காவல்துறை, நீங்கள் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் போராட்டம் செய்யக்கூடாது என்றும், உங்களின் கோரிக்கையை அதிகாரிகளிடம் முறையாக கொண்டு செல்லுங்கள், நாங்களும் இந்த பிரச்னையை அதிகாரிகளிடம் தெரிவிப்பதாக கூறியதன் பேரில் மறியலை கைவிட்டு, சடலத்தை பழைய இடத்திலேயே புதைக்க பொதுமக்கள் கொண்டு சென்றனர். இதனால் அப்பகுதியில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

தாராபுரத்தில் புகையிலை பொருட்கள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி..! நீதிபதி சி. எம். சரவணன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்..!

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் வட்ட சட்டப்பணிகள் குழு சார்பில் புகையிலை மற்றும் போதை பொருட்கள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி CSI ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இந்த பேரணியை மூன்றாவது கூடுதல் மாவட்ட நீதிபதி சி. எம். சரவணன் தலைமை தாங்கி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இந்த பேரணி பொள்ளாச்சி சாலையில் கடைவீதி வழியாக அமராவதி ரவுண்டானா சென்று மீண்டும் CSI ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகம் வந்தடைந்தது. அப்போது பள்ளி மாணவர்கள் போதைப் பொருட்களை பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகளை விளக்கும் வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை கைகளில் ஏந்தியவாறு போதையை ஒழிப்போம், போதைப் பொருட்களை தவிர்ப்போம் என கோஷமிட்டவாறு மாணவர்கள் சென்றனர்.

மேலும் இந்த பேரணியின் முடிவில் சார்பு நீதிபதியும் வட்ட சட்டப் பணிகள் குழு, தலைவரும்மான சக்திவேல். மூத்த வழக்கறிஞர் கார்வேந்தன் ஆகியோர் மாணவர்களிடையே பேசுகையில், பீடி, சிகரெட், புகையிலை பான் மசாலா, குட்கா உள்ளிட்ட பொருட்கள் உபயோகிப்பதால் உயிர் கொல்லி நோய்களான கேன்சர், ஆஸ்துமா உள்ளிட்ட நோய்கள் ஏற்பாடு என்ன தெரிவித்தனர்.

மேலும் தொடர்ந்து பேசுகையில், பள்ளி மாணவர்களின் பெற்றோர்கள் சிலர் போதைப் பொருட்கள் பயன்படுத்தும் பட்சத்தில் அவர்களுக்கு போதைப் பொருட்களின் தீமைகள் குறித்து எடுத்துரைத்து தகுந்த மருத்துவ சிகிச்சைகள் பெற்று நலவாழ்வு வாழ அவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும் என அறிவுறுத்தினர்.

மேலும் போதைப்பொருட்களை உபயோகிக்க மாட்டோம் போதைப் பொருட்களை ஒழிக்க உறுதுணையாக இருப்போம் என அனைத்து மாணவர்களும் உறுதிமொழி எடுத்து கொண்டனர். பேரணியில், தாராபுரம் காவல்துறை கண்காணிப்பாளர் சுரேஷ்குமார், வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் கலைச்செழியன், சங்கச் செயலாளர் ராஜேந்திரன், பள்ளியின் தலைமை ஆசிரியர் உள்பட 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.

தமிழிசை செளந்தரராஜன்: திமுகவின் மிரட்டல்..! கமல்ஹாசன் தன் உலக நாயகன் பட்டம் துறவு..!

உதயநிதி ஸ்டாலின் என்ற நாயகனுக்கு போட்டியாக உலக நாயகன் இருக்கக்கூடாது என்பதற்காக உலக நாயகனின் பெயரையே திமுகவினர் மாற்றி விட்டார்கள் என பாஜக மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்தார்.

சென்னை மயிலாப்பூரில் பாஜக மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் மத்திய அரசின் திட்டமான 70 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு இலவச மருத்துவ காப்பீட்டு அட்டை வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டார். பின்னர் தமிழிசை செளந்தரராஜன் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்தார். அப்போது, “மழை பெய்ய தொடங்கினால், துணை முதலமைச்சர் உடனடியாக மாநில கட்டுப்பாட்டு மையத்திற்கு வருவார், ஆய்வு செய்வார் அப்புறம் சென்று விடுவார். பிறகு இந்த மழை நேரத்தில் பொதுமக்களாகிய நாம் தான் கஷ்டப்பட வேண்டிய சூழல் நிலவி வருகிறது.

சிறிய மழை பெய்தாலும் கூட உடனடியாக ஆய்வுப் பணிகளை மேற்கொள்வதாக கூறி கட்டுப்பாட்டு மையத்திற்கு வந்து விடுவார். துணை முதலமைச்சர் ஆய்வு செய்த விளம்பரம் இன்று மாலை வரை சேனல்களில் ஒளிபரப்பப்படும். அந்த வகையில் விளம்பரத்திற்கான ஆட்சியே தமிழ்நாட்டில் தற்பொழுது நடைபெற்று வருகிறது. தற்போது முதலமைச்சர் உள்ள மு.க.ஸ்டாலின் மேயராக இருந்த போதில் இருந்து தற்போது வரை சிறுமழை வந்தாலும் சென்னை தத்தளித்து கொண்டுதான் இருக்கிறது.

மேலும், உதயநிதி ஸ்டாலின் என்ற நாயகனுக்கு போட்டியாக உலக நாயகன் இருக்கக்கூடாது என்பதற்காக உலக நாயகனின் பெயரையே திமுகவினர் மாற்றி விட்டார்கள். கமலஹாசன் முழுவதும் திமுகவாக மாறி விட்டார் என தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்தார்.

31 ஏக்கர் நிலத்தை போலி பத்திரம் மூலம் விற்பனை …! கேட்டா ஐ. பெரியசாமி பேரை சொல்ராங்க..!

போலி ஆவணங்கள் மூலம் தங்களது சொத்துக்களை அபகரித்துக் கொண்டவர்களிம் இருந்து மீட்டுத் தருமாறு பாதிக்கப்பட்டவர்கள் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு கொடுத்துள்ளனர். போலி பத்திரப்பதிவு மூலம் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நாளுக்கு நாள் நில மோசடி சம்பவங்களும், அரங்கேறி வருகின்றது. இதனால் பாதிக்கபட்ட மக்கள் செய்வதறியாது விழிபிதுங்கி நிற்கின்றனர்.

அந்த வகையில், திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் மட்டும் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 25-க்கும் மேற்பட்டோர் ஒன்றாக சேர்ந்து வந்து மனு கொடுத்தனர். அந்த மனுவில் வேடசந்தூர் பகுதியில் உள்ள தங்களது பல கோடி ரூபாய் மதிப்புள்ள 31 ஏக்கர் சொத்துக்களை சிலர் கூட்டு சதி செய்து முறைகேடான ஆவணங்கள் மூலம் பத்திரம் தயார் செய்து விற்பனை செய்ததாக குறிப்பிட்டுள்ளனர். குறிப்பாக ஜமால் முகமது, ஜெய்னுல் ஆபிதீன், வசிம் ராஜா, ஜாகிர் நியாஸ், சண்முகம் செட்டியார் ஆகிய ஐந்து பேர் தான் இந்த மோசடியில் ஈடுபட்டதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து தங்களுடைய நிலத்தை மீட்டு தர வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளது.

இந்நிலையில் பாதிக்கப்பட்டவர்கள் இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசுகையில், எங்கள் நிலங்களை ஜமான் முகமது, வசீம் ராஜா உள்ளிட்டோர் போலி ஆவணங்கள் மூலம் பல கோடி ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளனர். மோசடி செய்த நிலத்தை தங்களுக்கு மீட்டுத் தருமாறு கேட்டால் கொலை மிரட்டல் விடுக்கின்றனர். மேலும் தங்களுக்கு அமைச்சர் ஐ.பெரியசாமி வரை அனைவரையும் தெரியும், எங்களை ஒன்றும் செய்ய முடியாது என மிரட்டல் விடுகின்றனர்.

மேலும் நீங்கள் நீதிமன்றத்திற்கு சென்றாலும் நாங்கள் பணத்தை கொடுத்து சரி செய்து விடுவோம் என மிரட்டுவதாக கூறியுள்ளனர். 128 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், எனவே முதலமைச்சர் ஸ்டாலின் தலையிட்டு தங்களுடைய சொத்துக்களை மீட்டு தர வேண்டும்” என அவர்கள் தெரிவித்தனர்.

மீனாட்சி மகளிர் கல்லூரி சாரதாம்பாள் கோவிலில் விழாவுக்கு வராவிட்டால் மதிப்பெண் கிடையாது..!

இந்துவாக இருந்து கொண்டு கோவில் விழாவில் பங்கேற்காமல் இருப்பது நல்லது இல்லை. விழாவில் பங்கேற்காவிட்டால் மதிப்பெண்ணை வெளியிடமாட்டார்கள். பின்விளைவுகளை சந்தித்தே ஆக வேண்டும் என்று கோவில் விழாவில் பங்கேற்க மறுத்த மாணவிகளை சென்னை கல்லூரி பேராசிரியை மிரட்டிய ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை கோடம்பாக்கத்தில் மீனாட்சி மகளிர் கல்லூரி இயங்கி வருகிறது. இந்த கல்லூரி வளாகத்தில் கர்நாடகா சிருங்கேரி மடத்தின் கீழ் செயல்பட்டு வரும் சாரதாம்பாள் கோவில் அமைந்துள்ளது. இந்த சாரதாம்பாள் கோவிலில் விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த விழாவில் பங்கேற்கும்படி கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்கு நிர்வாகம் சார்பில் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

கல்லூரியையொட்டி உள்ள கோவில் என்பதாலும், விழா கல்லூரி வளாகத்தில் நடப்பதாலும் மாணவிகள் பங்கேற்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் சாரதாம்பாள் கோவிலில் விழா மாலை 3 மணிக்கு தொடங்குவதால், விழா முடிந்து வீட்டுக்கு செல்ல நேரம் ஆகும் என்பதை மனதில் கொண்டு மாணவிகள் பங்கேற்க மறுத்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், கல்லூரி மாணவிகள் விழாவில் பங்கேற்க விரும்பாதது அறிந்த பேராசிரியை மாணவிகள் உள்ள வாட்ஸ் அப் குழுவில் ஆடியோவை பகிர்ந்துள்ளார். அந்த ஆடியோவில், ‛‛குட் ஈவினிங் கேர்ள்ஸ். நாளைக்கு மாலை 3 மணிக்கு எல்லாரும் அசெம்பிள் ஆக வேண்டும். அட்டென்டென்ஸ் சீட்டில் அட்டென்டென்ஸ் எடுப்போம். எம்எஸ் ஆடிட்டோரியத்தில் அசெம்பிள் ஆக வேண்டும். இதனை செயலாளர் ரொம்ப் ஸ்ட்ரிக்ட்டாக சொல்லி இருக்காங்க. லேட்டாகும் என்பதால் உங்களின் பெற்றோரை வந்து கூட பிக்அப் செய்து கொள்ள சொல்லலாம். இல்லை நீங்கள் வரவில்லை என்றால் ஒரு கேர்ஸ் கூட வரவில்லை என்றால் ரிசல்ட்டை வெளியே விடமாட்டார்கள்.

நீங்களே டிசைட் பண்ணிக்கோங்க என்ன செய்ய வேண்டும் என்று. என்னால் ஒன்றுமே பண்ண முடியாது. ஏன் இந்த கிளாஸ் வரவில்லை என்று கேட்டால் யாருக்குமே விருப்பம் இல்லை என்று நான் சொல்லிவிடுவேன். என்னைக்கோ ஒருநாள் தானே இந்த மாதிரி கொஞ்சம் வெயிட் பண்ண சொல்றாங்க. அந்த ஒருநாள் கூட கல்லூரிக்காக Volunteer பண்ணலைனா. அப்புறம் இந்த கல்லூரியில் நீங்கள் படித்து என்ன பிரயோஜனம். கிறிஸ்தவ, முஸ்லிம்மா இருந்தா கூட நான் புரிந்து கொள்வேன். இந்துவாக இருந்து கொண்டு வர முடியாது என்று சொன்னீர்கள் என்றால் நாளைக்கு அதற்கான பின்விளைவுகளை சந்தித்து தான் ஆக வேண்டும்’’ என பேராசிரி ஆடியோ வெளியிட்டு உள்ளார். பேராசிரியை வெளியாட்ட ஆடியோ பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கே.பி. முனுசாமி: டாஸ்மாக் கடைகளாக செயல்படும் திமுகவினர்..! அரசு வருமானம், திமுகவினர் பையில்..!

டாஸ்மாக் கடைகளில் விற்னை செய்ய வேண்டிய மது வகைகளை திமுகவினர் கள்ளத்தனமாக விற்பனை செய்து பணம் சம்பாதிக்கின்றனர் என அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி கூறியுள்ளார். திருவண்ணாமலையில் நேற்று இரவு நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி சிறப்புரையாற்றினார்.

அதற்கு முன்னதாக செய்தியாளர்களின் கேள்விகளுக்கு கே.பி.முனுசாமி பதிலளித்தார். தமிழகத்தில் 2026-ல் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தல் பணியில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதற்காக அதிமுக பொதுச் செயலாளர் கே.பழனிசாமி குழு அமைத்துள்ளார். அரசியல் களப் பணியை மாவட்ட வாரியாக செய்வதற்கு உந்து சக்தியாக, கள ஆய்வு அமையும்.

தேர்தலில் வெற்றி பெறுவதற்கான அனைத்து சாத்திய கூறுகளையும் ஆய்வு செய்து, கிளை நிர்வாகிகள், தொண்டர்களை ஒருங்கிணைத்து, திமுக ஆட்சியில் உள்ள தவறுகள் மற்றும் இயலாமைகளை மக்களிடத்தில் எடுத்து சொல்லி, மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். இதற்கு கள ஆய்வு துணையாக இருக்கும். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு முழுமையாக செயலிழந்து இருக்கிறது.

இதற்கு முக்கிய காரணம், ஒரு இடத்தில் வன்முறை உருவாகிறது என்றால், சமூக விரோத சக்திகள் ஆதாயம் தேடும் அளவில் எதாவது செய்யும். அதன்படி, சமூக விரோத சக்திகள் மூலமாக கஞ்சா, போதை பொருள், அபின் அதிகளவில் புழக்கத்தில் உள்ளன. டாஸ்மாக் கடைகளில் விற்னை செய்ய வேண்டிய மது வகைகளை திமுகவினர் கள்ளத்தனமாக விற்பனை செய்து பணம் சம்பாதிக்கின்றனர். டாஸ்மாக் மூலம் அரசுக்கு வர வேண்டிய வருமானம், திமுகவினருக்கு சென்று கொண்டிருக்கிறது ன கே.பி.முனுசாமி தெரிவித்தார்.

மு.க.ஸ்டாலின் கடிதம்: மக்கள் வரவேற்பிற்கு சிலர் வயிறு எரிகிறார்கள்…!”

“திராவிட மாடல் ஆட்சியில் ஒவ்வொரு நாளும் மக்களின் நலன் காக்கும் நாட்களேயாகும். அதனால்தான் ஒவ்வொரு மாவட்டச் சுற்றுப் பயணத்திலும் மக்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்கிறார்கள். அதைப் பார்த்துச் சிலர் வயிறு எரிகிறார்கள். ஏதேதோ பேசுகிறார்கள். அவர்கள் பேசட்டும். நாம் சாதிப்போம். திமுக ஆட்சியின் வெற்றிச் சரித்திரம் தொடரட்டும்.” என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

திமுக கழக உடன்பிறப்புக்கு மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தில், இந்த ஆட்சியைப் பற்றி அரசியல் களத்தில் வைக்கப்படும் விமர்சனங்களுக்கு, தமிழகத்தின் முதல்வர் என்ற பொறுப்பில் உள்ள உங்களில் ஒருவனான நான் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லாத வகையில், ஆட்சியின் தன்மையை மக்களின் முகமலர்ச்சியே பதிலாகச் சொல்லிவிடுகிறது.

அந்த முகமலர்ச்சியானது அவர்களின் உள்ளத்தில் உள்ள மகிழ்ச்சியின் மொழிபெயர்ப்பு. விருதுநகர் மாவட்டத்தின் பட்டாசு ஆலைகளில் எதிர்பாராத வகையில் விபத்தில் இறந்துபோகும் தொழிலாளர்களுடைய குழந்தைகள் உயர்கல்வி கற்பதற்கான செலவுகளை அரசே ஏற்க வேண்டும் என்ற கோரிக்கையையும் அவர்கள் வைத்தனர். அதில் உள்ள நியாயத்தை உணர்ந்து, பட்டாசு ஆலை விபத்தில் பெற்றோரை இழந்த குழந்தைகளின் உயர்கல்விச் செலவை அரசே ஏற்கும் வகையில், மாவட்ட நிர்வாக அளவிலேயே ஒரு நிதியம் உருவாக்கவும், அந்த நிதியத்திற்கு முதல் கட்டமாக 5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியும் அறிவிப்பு வெளியிட்டேன்.

நியாயமாகக் கிடைக்க வேண்டிய நலத்திட்ட உதவிகளைப் பெறுவதில் ஒருவர்கூட விடுபடுதல் கூடாது என்ற அக்கறை முதல்வரான எனக்கு மட்டுமல்ல, அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் வரை இருப்பதால் மக்களின் தேவையறிந்து நிறைவேற்ற முடிகிறது. இதனைப் பொறுக்க முடியாமல்தான் அரசியலில் எதிர்முகாமில் இருப்பவர்கள் வன்மத்துடன் வார்த்தைகளை வெளிப்படுத்துகிறார்கள்.

வதந்திகளைப் பரப்புகிறார்கள். வயிற்றெரிச்சலில் புலம்புகிறார்கள். எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் எடப்பாடி பழனிசாமி தன் நிலை மறந்து விமர்சிக்கிறார். மறைந்த முதல்வர் கருணாநிதி பெயரிலான திட்டங்களும், கட்டடங்களும் மக்களுக்குப் பெரும்பயன் அளிப்பதைக் கண்டு பொறுக்க முடியாமல், அநாவசியமாகப் பொங்குகிறார்.

பெரியார் பிறந்தநாளைச் சமூகநீதி நாளாகவும், அம்பேத்கர் பிறந்தநாளைச் சமத்துவ நாளாகவும், வள்ளலார் பிறந்தநாளைத் தனிப்பெருங்கருணை நாளாகவும் கடைப்பிடிக்கிறது திராவிட மாடல் அரசு. அயோத்திதாசப் பண்டிதர் பெயரில் மேம்பாட்டுத் திட்டம், அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம் என அரும்பெரும் தலைவர்கள் பெயரில் பல திட்டங்கள் தொடங்கப்பட்டு, செயல்படுத்தப்பட்டு வருகின்றன. எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமிக்குப் புரியும் வகையில் சொல்ல வேண்டுமானால், அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட அம்மா உணவகத்தையும் முன்பை விடச் சிறப்பாக நடத்தி வருவது திராவிட மாடல் ஆட்சிதான்.

விருதுநகரில் நான் சென்று பார்வையிட்ட அரசு காப்பகத்துக்கு அன்னை சத்யா காப்பகம் எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. தலைவர் கருணாநிதியின் 40 ஆண்டுகால நண்பரான எம்ஜிஆரின் தாயார்தான் அன்னை சத்யா. அவர் பெயரில்தான் அரசு காப்பகம் இன்னமும் இயங்கி வருகிறது.

இந்த அடிப்படை கூட எதிர்க்கட்சித் தலைவருக்கு எப்படிப் புரியாமல் போனதோ, பண்பாடே இல்லாமல் அநாகரிகமாகப் பேசுவதையே கொள்கையாகக் கொண்டிருக்கும் ஒரு சில அரசியல் கட்சித் தலைவர்களைப் போல எதிர்க்கட்சித் தலைவர் என்ற பொறுப்பில் இருப்பவர் பேசுவதையும், இப்படிப்பட்டவருடன் ஜனநாயக மாண்புமிக்க சட்டமன்றத்திலும் விவாதிக்க வேண்டியிருக்கிறதே என்பதையும் எண்ணி வேதனைப்படுகிறேன். வன்மம் கக்கும் வயிற்றெரிச்சல்காரர்களைக் கடந்து செல்வதையே வழக்கமாகக் கொண்டிருக்கிறேன்.

விருதுநகர் மாவட்ட ஆய்வுப் பயணத்திலும் அந்த மாவட்டத்தின் இளைஞர்களுக்கும் பெண்களுக்கும் வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் புதிய சிப்காட் தொழிற்பேட்டை அமைப்பதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ளவர்கள் அந்தந்த மாவட்டத்திலேயே நல்ல வேலையைப் பெறுகிற வகையில் தொழிற்பேட்டைகளை உருவாக்கி வருகிறோம்.

கோவை, விருதுநகர் மாவட்டங்களைத் தொடர்ந்து நவம்பர் 14, 15 தேதிகளில் பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் கள ஆய்வுப் பணிகளை நான் மேற்கொள்ளவிருக்கிறேன். தைவான் நாட்டைச் சேர்ந்த டீன் ஷூஸ் நிறுவனம் தனது தொழிற்சாலையை அங்கே தொடங்க இருப்பதால் இரு மாவட்ட மக்களுக்கும் வேலைவாய்ப்பு கிடைக்கவிருக்கிறது.

திராவிட மாடல் ஆட்சியில் ஒவ்வொரு நாளும் மக்களின் நலன் காக்கும் நாட்களேயாகும். அதனால்தான் ஒவ்வொரு மாவட்டச் சுற்றுப் பயணத்திலும் மக்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்கிறார்கள். அதைப் பார்த்துச் சிலர் வயிறு எரிகிறார்கள். ஏதேதோ பேசுகிறார்கள். அவர்கள் பேசட்டும். நாம் சாதிப்போம். திமுக ஆட்சியின் வெற்றிச் சரித்திரம் தொடரட்டும் என அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

சீமான்: அதிமுக, திமுக கட்சிகளுக்கும் இடையே தெருச்சண்டை நடக்கிறது..!

அதிமுக, திமுக இரண்டு கட்சிகளுக்கும் இடையே தெருச்சண்டை தான் நடக்கிறது என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார். என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார். “இலங்கை மீது இந்தியா பொருளாதார தடை விதிக்க வேண்டும்” என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தினார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சென்னையில் இருந்து விமானம் மூலம் நேற்று மதியம் தூத்துக்குடிக்கு சென்றார். தூத்துக்குடி விமான நிலையத்தில் சீமான் செய்தியாளர்களுக்கு பதிலளித்தார்.

அப்போது, “இந்திய மீனவர்கள் சட்டவிரோதமாக எல்லை தாண்டி மீன் பிடிக்கின்றனர். அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை அதிபர் அனுரகுமார திசநாயக்க கூறியுள்ளார். இலங்கையில் தமிழர்களை சுட்டு கொன்றார்கள், வலைகளை கிழித்து எறிந்தார்கள், இதற்கு மேல் என்ன நடவடிக்கை எடுக்க போகிறார்கள். இதற்கு மேல் என்ன நடவடிக்கை உள்ளது.

இந்திய பெருங்கடல் என்றால் போதுமா? மீன் பிடிப்பதற்கு உரிமை இல்லையா?. இலங்கையை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு இலங்கை மீது இந்திய அரசு பொருளாதார தடை விதிக்க வேண்டும். கட்சத்தீவை மீட்க வேண்டும். அதிமுக ஆட்சியில், அடிக்கல் நாட்டப்பட்ட திட்டங்கள் திமுக ஆட்சியில் முடிக்கப்பட்டுள்ளன. பேருந்து நிலையத்தில் உதயசூரியன் சின்னம் தான் உள்ளது. அதிகாரம் நிலையானது என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அதிகாரம் தமிழன் கைக்கு வரும் போது அனைத்தும் மாறும். வசதியாக பதுங்க பாதுகாப்பாக கொண்டு வரப்பட்டது தான் திராவிடம்.

தமிழ் தேசியமும், திராவிடமும் ஒன்றல்ல. வேளாண் கல்லூரி மாணவர்களை நில அளவைக்கு பயன்படுத்துவது தவறு. 2026 சட்டப்பேரவை தேர்தலுக்கான கட்டமைப்பு நடைபெறுகிறது. அனைத்து கட்சியும் என் பின்னால் தான் ஓடி வருகிறார்கள். நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடும். என் பயணம் என் கால்களை நம்பிதான் உள்ளது. அடுத்தவர் கால்களை நம்பி பயணத்தை தொடங்காதீர்கள். என் கொள்கை யாரோடும் ஒத்து போகவில்லை. வியாபாரத்துக்காக கல்வி, மருத்துவத்தை தரம் குறைக்கிறார்கள். அவர்களுடன் எப்படி நாங்கள் சேர முடியும்.

அரசியல் அதிகாரம் இல்லாத, எளிய மக்கள் உள்ள இடங்களில் தான் நச்சு ஆலைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஊழல் செய்யும் அமைச்சர்கள் பட்டியலை வெளியிடுவோம் என்று அதிமுக பொதுச் செயலாளர் கூறியுள்ளார். திமுகவும் இதையே கூறியது. ஆனால் எந்த நடவடிக்கையும் இல்லை. இந்த அதிமுக, திமுக இரண்டு கட்சிகளுக்கும் இடையே தெருச்சண்டை தான் நடக்கிறது. இதை ஒழிக்க வேண்டும்” என சீமான் தெரிவித்தார்.

எடப்பாடி பழனிசாமி சாடல்: திமுகவினர் கபட நாடகம் ஆடுவதில் பி.எச்டி பட்டம் பெற்றவர்கள்..!

எதிர்க்கட்சி என்பது ஒரு நிழல் அரசைப் போன்றது. அது சுட்டிக்காட்டும் குறைகளை, நேர்மையான ஆட்சியாளர்களாக இருந்தால் ஏற்றுக்கொண்டு தங்களின் செயல்பாடுகளை திருத்திக்கொள்வார்கள். நேர்மையற்ற முறையில், நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளைத் தந்து ஆட்சிக்கு வந்த இந்த திமுகவிடம் நேர்மையை எதிர்பார்க்க முடியாது. கபட நாடகம் ஆடுவதில் பி.எச்டி பட்டம் பெற்றவர்கள் திமுக ஆட்சியாளர்கள்” என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடுமையாக சாடியுள்ளார்.

இதுதொடர்பாக எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த 42 மாதகால நிர்வாகத் திறனற்ற திமுக ஆட்சியில், அனைத்துத் தரப்பு மக்களும் அவதியுறுவது உள்ளங்கை நெல்லிக்கனி. எல்லாவற்றிற்கும் மேலாக முத்தாய்ப்பு வைப்பதுபோல் தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், சுகாதாரத் துறையினர் உள்ளிட்ட அனைவரும், அவர்களது கோரிக்கைகள் எதுவும் இந்த அரசால் நிறைவேற்றப்படாத காரணத்தால் வெகுண்டெழுந்து பல்வேறு கருத்துகளைத் தெரிவித்திருக்கின்றனர்.

“தற்போதைய முதல்வர் ஸ்டாலினுக்கு, எதிர்க்கட்சித் தலைவராக இருந்தால்தான் அரசு ஊழியர்கள் மீது கரிசனம் வரும் என்றால், 2026 தமிழக சட்டமன்றப் பொதுத் தேர்தலில் அவருக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவியை அளிக்க நாங்கள் தயார்” என்று அரசு ஊழியர் சங்க நிர்வாகிகள் வெளிப்படையாக தெரிவித்திருந்ததாக ஊடகங்கள் மற்றும் நாளிதழ்களில் செய்திகள் வந்திருந்தன.

இதுகுறித்து, நவம்பர் 10-ஆம் தேதியன்று திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்கள் என்னிடம் கேள்வி எழுப்பியபோது, 42 மாதகால திமுக ஆட்சியில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், மின்வாரியம், போக்குவரத்துத் துறை, கூட்டுறவுத் துறை போன்ற வாரியப் பணியாளர்கள் உள்ளிட்ட அனைவரின் கோரிக்கைகள் தீர்க்கப்படாத நிலையில், அவர்களின் உணர்வுகள்தான் வெளிப்பட்டுள்ளன என்று பதில் அளித்தேன்.

என்னுடைய இந்த கருத்தில் உள்ள உண்மைகள் சுட்டதால், 7 பக்க மொட்டைக் காகித அறிக்கையை இந்த ஆட்சியாளர்கள் ஊடகங்களுக்கு அனுப்பி உள்ளதாகத் தெரிகிறது. யாருடைய பெயரும் இல்லாமல், கையெழுத்தும் இல்லாமல், ஊடகங்களுக்கு முக்கிய குடும்பத்தின் மருமகன் தலைமையில் இயங்கும் PEN என்ற நிறுவனம் இந்த அறிக்கையை அனுப்பி உள்ளதாகத் தெரிகிறது.

கபட நாடகம் ஆடுவதில் Ph.D., பட்டம் பெற்ற ஆட்சியாளர்கள், நான் கபட நாடகம் ஆடுவதாக ஓலமிடுகிறார்கள். எந்தச் சூழ்நிலையிலும் நாடகமோ, கபட நாடகமோ, சூழ்ச்சியோ செய்ய வேண்டிய அவசியம் எனக்கில்லை. 2021 தேர்தல் நேரத்தில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்காக அதைச் செய்வோம். இதைச் செய்வோம் என்று வாக்குறுதி அளித்துவிட்டு, அவர்களின் வாக்குகளைப் பெற்று ஆட்சிக்கு வந்தபிறகு, இன்றைக்கு அவர்களுக்கு பட்டை நாமம் போட்டதை பொறுத்துக்கொள்ள முடியாமல் தங்களின் ஆற்றாமையை அரசு ஊழியர்கள்தான் வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.

2021 பொதுத் தேர்தலின்போது திமுக, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அளித்த வாக்குறுதிகளில்,புதிய ஓய்வூதியத் திட்டம் கைவிடப்பட்டு, பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் நடைமுறைக்கு கொண்டுவரப்படும். 20,000 இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கையை ஏற்று சம வேலை – சம ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். ஆசிரியர் பணிக் காலத்தில், மேற்படிப்பு முடித்த ஆசிரியர்களுக்கு ஊக்கத் தொகை வழங்கப்படும். ஊதிய உயர்வு – பணி உயர்வு முரண்பாடுகள் குறித்த கோரிக்கைகள் ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டு, விரைவில் நிவாரணம் கிடைத்திட ஆவன செய்யப்படும்.

இந்த வாக்குறுதிகளைத் தவிர, சுமார் 520-க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளை மக்களுக்கு அளித்துவிட்டு, 90 சதவீத வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டோம் என்று பொய் சொல்லி வரும் இந்த ஆட்சியாளர்கள் மக்களை ஏமாற்றுகின்றனர். அதிமுக ஆட்சியிலோ, எனது தலைமையிலான அரசிலோ நாங்கள் மக்களை ஏமாற்றவில்லை என்பது மக்களுக்கே தெரியும்.

அரசு ஊழியர்களுக்கு புதிய மருத்துவக் காப்பீடு திட்டம் மூலம் ரூ. 4 லட்சம் வரை சிகிச்சை பெற வழிவகை செய்யப்பட்டது. மேலும், ஒரு சில சிகிச்சைகளுக்கான உச்சவரம்பு ரூ. 7.50 லட்சம் வரை உயர்த்தப்பட்டது. கோவிட் காலத்தில் அரசு ஊழியர்களுக்கு முழு சம்பளத்துடன் கூடிய விடுப்பு வழங்கப்பட்டது. மகளிர் அரசு ஊழியர்களுக்கு பேறுகால விடுமுறை, 9 மாதமாக உயர்த்தப்பட்டது. மத்திய அரசு தனது ஊழியர்களுக்கு புதிய ஊதிய விகிதத்தை அறிவித்தவுடன், அம்மாவின் அரசும் 2017-ஆம் ஆண்டு 7-ஆவது ஊதியக் குழு அமைத்து, இந்தியாவிலேயே முதல் மாநிலமாக, 1.10.2017 முதல் பணப் பயனுடன் ஊதிய உயர்வினை வழங்கியது. தொடர்ந்து அகவிலைப்படி உயர்வும், மத்திய அரசு உயர்த்தும்போதெல்லாம் நிலுவையுடன் வழங்கப்பட்டது.

ஆனால், 2021-ல் ஆட்சிக்கு வந்த திமுக-வோ, பலமுறை அகவிலைப்படி உயர்வை, 6 மாதகால அரியர்ஸ் இல்லாமல் வழங்கியதுதான் அரசு ஊழியர்கள் சந்தித்த வேதனையின் உச்சம். அனைத்திற்கும் மேலாக, எங்களது ஆட்சிக் காலத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தங்களது கோரிக்கைகளை முன்வைத்துப் போராட்டம் நடத்த முடியும். ஆனால்,ஸ்டாலினின் திமுக ஆட்சியில், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், சுகாதாரத் துறையினர், போக்குவரத்துத் துறையினர், மின்சாரத் துறையினர் என பாதிக்கப்பட்ட துறையினர் ஸ்டாலினின் திமுக அளித்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரி போராட்டம் நடத்த முற்பட்டால் அவர்களை, காவல் துறையை ஏவிவிட்டு கைது செய்து, அவர்களது குரல்வளையை இந்த அரசு எப்படி நெரிக்கிறது என்பதை அனைவரும் நன்கு அறிவர்.

ஏன், பிரதான எதிர்க்கட்சியான நாங்களே, எங்களது கட்சி நிறுவனரின் பிறந்த நாள் பொதுக்கூட்டங்களை நடத்துவதற்கு நீதிமன்றம் சென்று அனுமதி வாங்கிதான் நடத்தினோம். தெரிந்தோ, தெரியாமலோ கடந்த 42 மாதகால திமுக ஆட்சியில், அரசு ஊழியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும், பொதுமக்களுக்கும் எதுவுமே செய்யவில்லை என்பதை மொட்டை அறிக்கை வெளியிட்ட பேர்வழிகள் ஒப்புக்கொண்டிருக்கிறார்கள். 18 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த கருணாநிதி அதைச் செய்தார்; இதைச் செய்தார் என்ற புலம்பல்கள்தான் அந்த அறிக்கையில் அதிகமாக இருக்கிறதே தவிர, மு.க. ஸ்டாலின் அரசு என்ன செய்தது என்று எதுவும் இல்லை.

பிரதான எதிர்க்கட்சி என்பது ஒரு நிழல் அரசைப் (Shadow Government) போன்றது. அது சுட்டிக்காட்டும் குறைகளை, நேர்மையான ஆட்சியாளர்களாக இருந்தால் ஏற்றுக்கொண்டு தங்களின் செயல்பாடுகளை திருத்திக் கொள்வார்கள். நேர்மையற்ற முறையில், நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளைத் தந்து ஆட்சிக்கு வந்த இந்த திமுக-விடம் நேர்மையை எதிர்பார்க்க முடியாது. இனியும் உண்மை நிலைகளை உணராமல், இதய சுத்தியோடு செயல்படும் எங்கள் மீது பாய்ந்து பிராண்டினால், மக்கள் தக்க பதிலடி தருவார்கள்” என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.